January 27, 2011

ஜம்பம் ஒரு கலை

   ஒரு சில கார்ட்டூனிஸ்டுகள் போடும் படங்களைப் பார்க்கும்போது, "நாமும் இப்படிச் சுலபமாகப் படம் போடலாம்' என்று தோன்றும்.  அந்தப் படங்களைப் பார்த்து ஓரளவு போடக் கூட முடியும். ஆனால் நாமே சொந்தமாக ஒரு படம் போட ஆரம்பித்தால்தான் அது எத்தனை கஷ்டமான காரியம் என்பது தெரியும்.
      இந்த மாதிரி பார்க்க, அல்லது கேட்க எளிதாக இருப்பது ஜம்பம்.  ஆனால் நாமே ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டுமானால் அதுவும் நாசுக்குடன், ஒரு சாமர்த்தியத்துடன், ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டுமென்றால், அது ஒரு கலை என்பதை உணர்வோம்.
       சிறந்த முறையில் ஜம்பம் அடித்துக்கொள்வது என்பதன் இலக்கணம் என்ன?
      சொல்ல வேண்டியவைகளை, சொந்தப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்ள வேண்டும்; ஆனால் ஜம்பமாகச் சொல்கிறான் என்பதைப் பிறர் உணராதபடி ஜம்பமாகச் சொல்ல வேண்டும்!
      மாதிரிக்குச் சில ஜம்ப உரைகளை இங்கு தருகிறேன்:  ஜம்பம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி டாக்டர் பாடம் பெற விரும்புவர்களுக்கு என்னால் இயன்ற சேவை!
*               *                     *                      *

      ""சார். . . என்னைக் கேட்டால் பசங்களை என்ஜினீர், டாக்டர் என்று படிக்க வைக்கிறதை விட ஒரு டைப்பிஸ்டாக ஆக்குவதே மேல் என்பேன்.  பாருங்களேன், இவன் இருக்கிறானே ராஜ÷, எம்.பி.பி.எஸ் பாஸ் பண்ணினானே, அப்போ கிடைச்ச கோல்டு மெடலோடு திருப்தி அடைய வேண்டியதுதான்.  இப்போ அமெரிக்கா போகணும்னு  குதிக்கிறான். ராமு இருக்கிறானே, அவன் பி.ஈ. படிச்சு இருபதாயிரம் சம்பாதிக்கிறது போறாதாம். சொந்தமாக இண்டஸ்ட்ரி ஆரம்பிக்கப் போகிறானாம். இதெல்லாம் பாஎக்கும்போது நானும் என் ஒய்ஃபும் என் பெண் கிட்டே பாரீஸ÷க்கே போய்விடலாமா என்று தோன்றுகிறது!''
      ""எங்க ஜலஜா இருக்கிறாளே படிப்பு பூஜ்யம்.  "என்னடி, இப்படி மார்க் வாங்கினால் எப்படி உருப்படுவே' என்று கேட்டால் என்ன சொல்லுகிறாள் தெரியுமா?  "இதோடு மேடைப் பேச்சிலே பதினேழு கப் வாங்கி இருக்கிறேன். டேபிள் டென்னிஸ் சாம்பியன் என்று காலேஜில் பேர் வாங்கி இருக்கிறேன்.  போம்மா, நான் அரசியல்வாதியாகவோ இல்லை புகழ் பெற்ற விளையாட்டுக்காரியாகவோ ஆகிறேன்' என்கிறாள்...  ஹ÷ம் அவள் தலையிலே என்ன எழுதியிருக்கிறதோ!''

      ""மணி பத்தடிக்கப் போகிறது இன்னும் என் வீட்டுக்காரர் வரவில்லை மாமி... அவரவர்கள் ஆபீஸ் முடிந்ததும் வீட்டுக்கு  வரவில்லையோ? இவருக்கு சதா நாடகம்தான். இதோடு இரண்டாயிரம் தரம் மேடை ஏறியாச்சு, என்ன லாபம்? என் கழுத்திலே குந்துமணி பொன் ஏறித்தா? இந்த அழகிலே இவருக்குக் "கலைமாமணி' பட்டம் கொடுக்கப் போறாங்களாம்.  மலேசியாவில் நாடகம் போடக் கூப்பிடறாங்களாம். டிராமா என்ன வேண்டியிருக்கு, வெங்கட்ராமா! நான் பண்ணின புண்ணியம் அவ்வளவுதான்!''

      ""அதை ஏன் கேக்கறே, மருக்கொழுந்து. என் மச்சான் இருக்குதே அல்லா போலீஸ்காரனுக்கும் டாவு காட்டிட்டு தனக்கும் இருபது படி அரிசி நெல்லூர்லேருந்து கொண்டாந்துடுது!  இதைப் பார்த்து என் கொளுந்தியாளுக்கு வயித்தெரிச்சல்.  வவுறு எரியறேயே போவச் சொல்லேன் உன் புருஷனையும்! அகப்பட்டுக்கிட்டு முழிப்பான்.  அவனுக்கு இன்னா தெரியும்ஆபீஸ் வாட்ச்மேன் வேலை பாத்து முந்நூறு ரூபா சம்பாதிக்கத் தெரியும்!  அது என்ன பெரிய பீதாம்பரய்யர் வித்தையா?''

      ""ஏண்டா டயர் ஏஜென்ஸி எடுத்தோம் என்று இருக்கிறது.  நாலைந்து மாசமா ஓடவே இல்லை, ஏழு குமாஸ்தா, இரண்டு பியூன் இவர்களுக்குச் சம்பளமே நாற்பத்து மூவாயிரம் ரூபா ஆகிறது.  இப்படிப் போனால் எத்தனை நாளைக்குத் தாக்குப் படிக்க முடியும்ஒரு வருஷம் இரண்டு வருஷங்கள் முடியலாம்.  இதை மூட்டைகட்டிவிட்டுப் பழையபடி வைர வியாபாரத்துக்கே போய்விடப் போகிறேன்.''

      சிலருக்குத்தான் இயற்கையாக ஜம்பம் அடித்துக் கொள்ள தெரியும். அது ஒரு கலை. ஆகவே வேறு சிலருக்குத் தெரியாது.

7 comments:

  1. உங்களுக்கு இந்த மாதிரி ஜம்பம் அடித்துக்கொள்ளத் தெரியாதா?! அழகாக கார்ட்டூன் வரைகிறீர்கள், சூப்பர் நகைச்சுவைக் காட்டுரைகள் எழுதுகிறீர்கள், விளம்பர உலகிலும் கொடி நாட்டியுள்ளீர்கள் - என்ன புண்னியம்! கமலா மாமியை விட்டு அவாத்துக்காரரைப் பற்றி ‘குறைப்’ பட்டுக் கொள்ள்ச் சொல்லுங்கள்! - ஜெ.

    ReplyDelete
  2. நகைப் பெட்டி யில் “ Man will occasionally stumble over the truth, but most of the time he will pick himself up and continue on" படித்ததும், இப்போதைய ஊழல்களெல்லாம் (ஸ்பெக்ட்ரம்) அப்படியே ஆகிவிடும் என்றுதான் தோன்றுகிறது. - ஜெ.

    ReplyDelete
  3. நீங்க பெரிய 'ஜம்பவான்' னு இப்பதான் தெரிகிறது.
    ஆமா பீதாம்பரய்யர் யாரு? அந்த காலத்து மாஜிக் நிபுணரா?

    ReplyDelete
  4. <<<திவா said...ஆமா பீதாம்பரய்யர் யாரு? அந்த காலத்து மாஜிக் நிபுணரா?
    ஆமாம். அவர் எழுதிய மேஜிக் புத்தகத்தை படித்திருக்கிறேன். பீதாம்பரய்யர் ஜாலத்திரட்டு என்று பெயர் என்று ஞாபகம்.

    ReplyDelete
  5. இதை படிக்க ஒரு வாரம் ஆகிவிட்டதேன்னு வருத்தமா இருக்கு ஐயா, என்ன செய்ய ஒரே வேலை ஏன்டா இந்த ஸாஃப்ட்வேர் தொழிலுக்கு வந்தோம்னு தோனுது , போதாக்குறைக்கு, போன மாசம் ப்ர்மோஷன் வேற, படிக்கவோ ஜம்பமடிக்கவோ நேரமே கெடைக்கிறதில்லை ஐயா.

    பி.கு: என் ஜம்பத்துக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் ? :-)

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. <<< பாரதசாரி said... என் ஜம்பத்துக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் ? :-)>>>
    நீஙகள் படித்தக் கட்டுரையை நானும் படித்துப் படித்து, சிரித்து சிரித்து வயிற்று வலியால் அவதிப் பட்டுகொண்டிருக்கிறேன்..இந்த சமய்த்தில் நல்ல கேள்வி கேட்டீர்கள்..உஙகள் ஜமப்த்திற்கு மார்க போடற நிலமையிலா இருக்கிறேன்!! :)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!