January 17, 2011

அர்ச்சனை-1 --ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சகஸ்ர அர்ச்சனை

வீட்டு வேலையெல்லாம் முடித்து விட்டு முகத்தைத் துடைத்தபடியே இரவு பத்து மணிக்கு படுக்கை அறைக்குள் வந்தாள் அம்புஜம். லேசாகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள். அவள் வந்ததைக் கவனிக்காத மாதிரி பேப்பரை படிப்பது போல் பஞ்சு பாவ்னை செய்துகொண்டிருந்தார்.


.``என்ன உங்களைத்தான்..பேப்பர் படிச்சாச்சா? இன்னும் வரி விளம்பரம், மணமகள் தேவை, ஏல நோட்டீஸ் எல்லாம் பாக்கி இருக்கா? ஜில் ஜில் ரமாமணி காதல் விவகாரம் பற்றியெல்லாம் ஒரு எழுத்து விடாமல் படிச்சு ஆச்சா?  ஆமாம், பெரிய பொண்ணு உமா நீல-வெள்ளை சல்வார் கமீஸ் கேட்டாளாம்.  இந்த மாசம் முடியாதுன்னு சொன்னீங்களாமே... நேற்று உங்க பர்ஸில் 200 ரூபாய் இருந்ததைப் பார்த்தேனே... என்ன, கடுவம்பூனை மாதிரி பாக்கறிங்க? உங்க பர்ஸை எடுத்துப் பார்க்க எனக்கு உரிமை இல்லையா? அந்த பேப்பரைத் தூக்கி எறியுங்க... முதல்லே என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க...

”இருநூறு ரூபாய்க்கு கணக்குச் சொல்லுங்க. மம்மியா, ரம்மியா? அம்மா கேட்டார்; இவர் மணியார்டர் அனுப்பினாரா? இல்லே, ஆபீஸ்ல கிளப்பில் ரம்மியில் மொய் எழுதியாச்சா?  சரி, சரி, மம்மியோ, ரம்மியோ... பர்ஸ் காலி!
ஏதோ ஸ்காலர்ஷிப்புக்காக  இன்டர்வியூவிற்குப் போகணுமாம். புது டிரஸ் கேட்டாள். அவள் கிட்ட சொல்லிடறேன். நாலு எவர்சில்வர் டம்ளரைப் போட்டு பழைய பாத்திரக்காரன் கிட்ட இருந்து சல்வார் கமீஸ் வாங்கிக் கொடுத்துடறேன்னு!.

”என்னது... என்னது... நீ இதுவும் செய்வே, இன்னமும் செய்வேன்னு சொல்றீங்களா?  நூற்றுக்கு நூறு உண்மையான பேச்சு. பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரம் ஏறித்தான் ஆகணும். வேறு ஒருத்தியாக இருந்தால் எப்பவோ குடும்பநலக் கோர்ட்டுக்குப் போயிருப்பா.
`குழந்தை, நீ இன்டர்வியூவிற்குப் போக வேண்டாம்'னு சொல்லிடறேன். ஏன், படிப்புக்கே தலைமுழுகிடச் சொல்லிடறேன். ஊரெல்லாம் அப்பளம், கைமுறுக்கு, சீடை இதுக்கெல்லாம் நல்ல டிமாண்ட் இருக்கே... ஏதாவது பண்ணி பொழைச்சுக்கட்டும்! அவள் தலையிலே , வாணலி, ஜாரணின்னு பிரம்மா படம் போட்டிருந்தால் யாரால அழிக்க முடியும்? அடி, உங்கப்பாவால   பணத்தை மட்டும்தான் அழிக்க முடியும்னு சொல்லிடறேன்.வேறு எதையும் அழிக்க முடியாதுன்னு சொல்லிடறேன்.

ஜன்னலுக்குக் கொசுவலை அடிக்கணும்னு சொன்னேன். இப்ப பணத்திற்கு எங்கே போகிறதுன்னு தெரியலை.  ஊரெல்லாம் டெங்கு.  கொசு கடிச்சு நம்ப பசங்களுக்கு டெங்கு வந்தால் என்ன ஆகிறது?  சே, நான் ஒரு பைத்தியக்காரி. சில பேருக்குக் குடும்பம்னு ஒண்ணு இருக்கிறதே மறந்துடும்! அவங்களுக்கு ஜீவராசிகள் பேரில அபார பிரியம். கொசுக்கள் நன்னா ரத்தம் உறிஞ்சி பிழைச்சுப் போகட்டும்னு நினைப்பாங்க. டெங்கு வந்தால் இருக்கவே இருக்குது கவர்மெண்ட் ஆஸ்பத்திரி, தண்ணி மருந்து. ஆயுசு கெட்டியாக இருந்தால் பொழைக்கட்டும்.

”பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியவள் தாயாரா, மகளா? என்று பட்டிமன்றம் வைத்து அதில் நடுவராக இருந்தால் என்ன தீர்ப்பு சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும்.

”நான் கத்தறதுதான் காதில் விழலை. டமால், டமால்னு ஜன்னல் கதவு அறையறதாவது காதில் விழறதா? அதை ரிப்பேர் பண்ணணும். அதுக்குப் பணம் வேண்டுமே? கலியுக கர்ணப் பிரபுதான் தாரை வார்த்துட்டாரே... ஜன்னல் கதவு ரிப்பேர் பண்ணாவிட்டால் உடைஞ்சு விழுந்துடப் போறது. விழட்டும்,... நானும் பசங்களும் ஆளுக்கு ஒரு  ஜமக்காளத்தின் மூலையைப் பிடிச்சிண்டு ஜன்னல் பக்கத்திலேயே  நிற்கிறோம். என்ன செய்யறது..?  திறந்திருக்கிற ஜன்னல் வழியா திருடன் வந்தால் ஒதுங்கிக்கறோம்.
”சின்னப் பொண்ணு சுந்தரிக்கு ஒரு பல் கோணலாக முளைச்சு வெளியே வந்திருக்கு.அதுக்கு டாகடரைப் பார்க்கணும்..

“என்னது.? .. கோணல் புத்திப்  பசங்களின்  பல் கோணலாக இருப்பது ஆச்சரியமில்லைன்னு சொல்றீங்களா? உண்மைதான். ஆனா ஒரு சந்தேகம்... அப்ப உங்க 32 பல், கண், கால், கை எல்லாம் மகா கோணலாக இருக்க வேண்டுமே. உங்க தத்துவத்தின்பட!.

“இத்தனை செலவு இருக்கு, ஆயிரம் ரூபாய் இல்லாமல் முடியாது..

”என்னது,சொல்லிக் கொண்டே இருக்கேன். தலைகாணியை இழுத்துப் போட்டுக் கொண்டு சுகமாகத் தூங்கப் போறீங்களே... வீடு, வாசல், குழந்தை, குட்டி என்று கவலை இருந்தால் தூக்கமா வரும்? துக்கம்தான் வரும்!''

தலையணையின் கீழ் கையை விட்டு பஞ்சு இரண்டு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார், ஒரு கேலிச் சிரிப்புடன். ``நீ சொன்ன எல்லாச் செலவுக்கும் இதை வெச்சுக்க. மீதி ஐம்பதோ, நூறு இருந்தால் எனக்குக் கொடு. ரம்மி விளையாடறேன். என் அம்மாவுக்கும் மணியார்டர்  பண்ணறேன் '' என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்து குறட்டைவிட ஆரம்பித்தார்.            (தொடரும்)

2 comments:

  1. அதெப்படி எங்கள் வீட்டு விஷயங்களை எல்லாம் நீங்கள் எழுதலாம்? ஹி..ஹி..:) -- கபாலி

    ReplyDelete
  2. அர்த்த ஜாம பூஜை என்பது இதுதானோ? ‘ஜம்; என்று இருந்தது அம்புஜம செய்த அர்ச்சனை --ஜக்கு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!