October 04, 2011

கோபி -- கேரக்டர்

புல்லாங்குழல் வித்வான் கோபாலன் என்னும் கோபிக்கு பெயர் பொருத்தம் அபாரம்! மனுஷனுக்கு எப்போது எதற்குத்தான் கோபம் வரும் என்பது தெரியாது. இவர் கோபமெல்லாம் தன் மனைவி, மக்களிடம் மட்டும் தான்! வீட்டை விட்டு வெளியே வந்தால் பரம சாந்த சொரூபி. மேடையில் உட்கார்ந்தால் இசை மன்னன் தான்!
கோபம் மட்டும் அவருடைய குறைபாடு அல்ல. தன் மனைவி, குழந்தை குட்டிகளின் நலனைப் புறக்கணிக்கும் அளவுக்கு, சொந்த சௌகரியம், சுகம் ஆகியவைகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் அளிப்பார்.
"ஊரெல்லாம் என்ன நல்ல பேர் இருந்து என்ன பிரயோஜனம்? வீட்டில் காலை வைத்தால் நரசிம்ம மூர்த்தி தான். "தோடியில் ஒரு கோடி காட்டும் போதே ஓடிப் போய் பாராட்டலாம்.' என்று சுப்புடு எழுதுகிறார். நீங்கள் உச்சி குளிர்ந்து போகிறீர்கள். இந்த தடவை நானே சுப்புடுவைப் பார்த்து சொல்கிறேன், உங்கள் குணத்தைப் பற்றி. அந்த அழகையும்தான் அவர் பத்திரிகையில் எழுதட்டுமே'' என்பாள் மனைவி.
"போய்ச் சொல்லேன்..  இன்னும் குடிகாரன், ஸ்திரீ லோலன், கடன்காரன், அப்பனைக் கொன்றவன், அண்ணன் வீட்டில் திருடியவன், குழந்தையின் கழுத்தை முறிக்கிறவன், கள்ளச் சாராயம் காச்சறவன் என்றெல்லாம் போய்ச் சொல்லு...... மூணு மணி நேரம் கச்சேரி பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்தால் ஒரு கப் பால், காபி என்று ஒரு மண்ணும் கிடையாது.....
உன்னை  என் தலையில் கட்டிவிட்டார்கள்..நான் சம்பாதிச்சு போடறேன். நல்லா சாப்பிட்டு விட்டு என்னை சபிக்கிறே..... இந்த வீட்டிலே சோறும் வேண்டாம்; தண்ணியும் வேண்டாம். நான் போகிறேன்......'' என்று கத்திவிட்டு செருப்பை மாட்டிக்கொண்டு புயல் வேகமாக வெளியே போவார்.
"எங்கே கிளம்பிப் போறீங்க'', என்று மனைவி கேட்டால், "தண்ணி இல்லா காட்டுக்கு! சந்தோஷம் தானே?'' என்று கத்துவார்.
"ராயர் ஓட்டலுக்குப் போகணும்னா போய் சாப்பிட்டுவிட்டு வாங்களேன். என் மேல் கோபித்துக்கொண்டுதான் போகவேண்டும் என்று ஒரு சட்டமும் இல்லை'' என்பாள் மனைவி.
அதென்ன கோபத்திற்கும் ராயர் ஓட்டலுக்கும் சம்பந்தம்?
கோபிக்கு கோபம் வந்தால் நேரே ராயர் ஓட்டலுக்குச் சென்று எக்ஸ்ட்ரா அப்பளம், இரண்டு கப் தயிர் என்று போட்டுக்கொண்டு ஒரு பிடி பிடித்துவிட்டு வருவார்! கோபம் என்றால் டபுள் தீனி தான் கோபிக்கு.
ஆரம்பகாலங்களில் கோபமாகப் போன கணவன் வந்து சாப்பிட்ட  பிறகு தான் சாப்பிடலாம் என்று. அவர் மனைவி சாப்பிடாமல் அவர் வரும் வரை காத்துக் கொண்டிருப்பாள் - இவரோ நன்றாகச் சாப்பிட்டுவிட்டு வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு  வருவார். ஆகவே அவரது மனைவி இப்போதெல்லாம் "சாயங்காலம் இட்லி சாப்பிட்டது எங்களுக்குப் பசிக்கவில்லை. நீங்கள் கோபித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வழக்கமாகப் போகும் இடத்துக்குப் போய்,  வெட்டி விட்டு வாருங்கள்,'' என்பாள். இதற்கும் அவர் கத்துவார். அவளுக்கு மரத்துப் போய் விட்டதால் கவலைப் படமாட்டாள்.

 சம்பாதிப்பதால் தனக்குத்தான் எல்லா சௌகரியங்களும் வசதிகளும் இருக்கவேண்டும் என்று கருதுகிறவர் கோபி. இவருடைய சட்டை, துணிகள் லாண்டிரியில் போட்டு சலவையாகி வரும். இவர் படுக்கை பெட்ஷீட் எல்லாம் புதுசாக இருக்கும்.
       *                                        *
பளபளவென்ற மஞ்சள் சில்க் முழுக்கை சட்டை. வெள்ளை வேட்டி. கையில் ஒரு மோதிரம். கழுத்தில் டாலர் மாட்டிய தங்கச் சங்கிலி. படு சுருட்டைத் தலை மயிர். நெற்றியில் குங்குமப் பொட்டு. கோபம் வருவதற்கு வசதியான கூர்மையான மூக்கு. இரு புருவங்களுக்கிடையே ஒரு சுருக்கம்! -- இதுதான் கோபி.
யாராவது நண்பர், "என்ன கோபி, பத்து ரூபாய் இருக்குமா?'' என்று கேட்டால் உடனே ஜேபியிலிருந்து எடுத்துக் கொடுத்து விடுவார். அதுவே வீட்டில் மனைவி கேட்டால் கத்துவார். "நான் என்ன பணம் காய்ச்சி மரமா? மனுஷன் வீட்டிற்குள் நுழைந்ததும் பணம், பணம் என்று பிய்ச்சல் பிடுங்கல்தானா?... ஏதாவது லட்சாதிபதிக்கு உன்னைக் கலியாணம் பண்ணி வைக்காமல் என் தலையில் கட்டிவிட்டார்கள்... உனக்கு சம்பாதித்துப் போடுவதற்குள் என் தாவு தீர்ந்து விடுகிறது... சரி, சரி. பசியாக இருக்கிறது. உருளைக் கிழங்கு பஜ்ஜி போடு.'' என்பார்.
"கடலை மாவு, உருளைக் கிழங்கு, எண்ணை மூன்றும் வாங்கி வந்தால்தான் முடியும்.''
". எப்போ பார்த்தாலும் இல்லை நாராயணா, எள்ளூ கோவிந்தாதானா?  எவ்வளவு வாங்கிப் போட்டாலும்   சம்பாதிக்கறவனுக்குக் காலி சட்டிதான்...  எங்கேயாவது ஒழிஞ்சி போறேன். எனக்குத் தலை முழுகிடு...'' என்று கத்திவிட்டு,  விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியே போவார்.
எங்கு?  நேரே ராயர் ஓட்டலுக்குத்தான்!

3 comments:

 1. ஹஹஹஹா இன்னும் இந்த மாதிரி மனுசாள் இருகங்களா?

  ReplyDelete
 2. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  மிக அருமை.

  இப்போதெல்லாம் எல்லோருமே ஒரே மாதிரி முகமூடி அணிந்து கொள்கிறோமோ என்று தோன்றுகிற்து எனக்கு.

  விதவிதமான குணாதிசயங்கள் உள்ள மனிதர்களையும் பார்க்க முடிவதில்லை. அவரவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 3. கடைசீல நாம எல்லாரும் அந்த கோபி மாமா மாதிரி தானா....
  எனக்கும் கோபம் வரும்..ஆனா கோபித்துக் கொண்டு நான் ஆதி குடி ஹோட்டல் போக மாட்டேன் ஏனென்றால், அது எங்க மாமனார் ஹோட்டல்!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :