October 28, 2011

பாப்பாவுக்கு சில கதைகள்

இந்த வலைப்பூவில் குழைந்தகளுக்காக கதைகள் போடுவதில்லையே என்று  ஒருவர் எழுதி இருந்தார். அந்தக்  குறை யாருக்கும் இருக்க வேண்டாம் என்று  ’பாப்பாவுக்கு சில கதை'களை’ இப்போது தந்துள்ளேன்.
குறிப்பு: : To protect the innocent, I am withholding the name of the reader!

நத்தையின் கர்வ பங்கம்
.

ஒரு ஊரில் ஒரு நத்தை இருந்தது.உலகிலேயே மெதுவாக ஊர்ந்து செல்லும் ஜீவன் என்ற பட்டத்தை அது பெற்றிருந்தது.
என்னை விட மெதுவாக எவனாலும் போகமுடியாது" என்று ஜம்பம் அடித்துக்கொண்டிருந்தது.
ஒரு நாள்,  அது  குடியிருந்த மரத்திற்கு அருகில் நிறைய ஆட்கள் வந்து பூமியைத்தோண்ட ஆரம்பித்தார்கள். 'சர்க்கார் அலுவலகக் கட்டடம்' என்ற போர்டைப் போட்டார்கள். அங்கு பெரிய  கட்டடம் கட்டப் போகிறர்கள் என்று நத்தைக்குப் புரிந்து விட்டது. அதற்கு ஒரே குஷி.  கட்டடம் கட்டும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் தமாஷாகபொழுதுபோகும் என்று  எண்ணியது. சில நாள் கழித்து கட்டட வேலையும் ஆரம்பமாயிற்று.
செங்கல், மணல், கலவை ஆகியவற்றை சிற்றாட்கள் எடுத்து போவதை பார்த்தது. அப்போதுதான் அதன் கர்வத்திற்குப் பங்கம் ஏற்பட்டது. 'கட்டட சிற்றாட்கள் என்ற ஜீவராசிகளைப் பற்றி அறியாமலேயே ’நம்மை விட யாரும் மெதுவாகப் போகமுடியாது என்று நினைத்திருந்தோமே!' என்று மனதிற்குள் கூறிக் கொண்டது. அன்று முதல் அது ஜம்பம் அடித்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டது!

எல்லாம் நன்மைக்கே


ஒரு முயல் இருந்தது. அதற்குத் எப்போதும் தூக்கமே வருவதில்லை. இதனால் மிகவும் அவதி பட்டுக்கொண்டிருந்தது. "இது ஏதோ வியாதி. முதலில் டாக்டரிடம் போய்க் காட்டுங்கள்:" என்று திருமதி  முயல் சொல்லியது. டாக்டர் கரடியிடம் சென்று, தன் வியாதியைப் பற்றி முயல் சொல்லியது.
" பைத்தியக்காரா! தூக்கம் வராவிட்டால் என்ன? அதற்காகக் கவலைப்படுவார்களா? மருந்து சாப்பிடுவார்களா? தூக்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லையே என்று  உலகில் பலர் ஏங்குகிறார்கள். இது வியாதியுமில்லை, ஒண்ணுமில்லை. அப்படியே வியாதி என்று நினைத்தால் 'எல்லாம் நனமைக்கே' என்று சும்மா இருந்துவிடு" என்று கரடியார் கூறினார்.


சில நாட்கள் கழித்து காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது..”ஓட்டப் பந்தயத்தில் என்னை ஜெயிக்க முடியாது" என்று முயல் சவால் விட்டது. பழைய பஞ்ச தந்திரக் கதையைப் படித்திருந்த ஆமை, "எங்கிட்டே உன் சவால் எல்லாம் நடக்காது" என்றது. " அப்ப்டியானால் பந்தயம் வைத்துப் பார்த்து விடுவோம்" என்றது முயல்.
பந்தயம் ஆரம்பமானது. முயல் சிட்டாய், 'ஜெட்' போல்  பறந்தது. வெகு தூரம் சென்று திரும்பிப் பார்த்தது. ஆமை வருகிற அடையாளமே இல்லை. 'சரி, சற்று நேரம் மரத்தடியில் தூங்கலாம்' என்று படுத்தது. தூக்கம் வந்தால்தானே,

டாக்டர் கரடியை சபித்தது முயல். . சரி, தூக்கம்தான் வரவில்லையே, மீதி தூரத்தையும் ஓடி விடலாம்' என்று ஓடியது. பந்தயத்தில் ஆமையை வென்றது. அன்றிரவு டிவி.யில் 'முதல் பரிசு பெற்ற முயல்' என்று முயலின் படத்தைக் காட்டினார்கள். அதைப் பார்த்தபோதுதான் 'தூக்கம் வராத வியாதியும் ஒரு நன்மைக்கே என்று முயல் உணர்ந்தது.
நீதி: ஆகவே எல்லா வியாதிகளையும் ஆண்டவன் நமது நன்மைக்காத்தான் தருகிறார்.

பயந்தால் பிழைக்கலாம்

'எதற்கும் அஞ்சா நெஞ்சன் ' என்ற பெயர் பெறுவதற்காக நீங்கள் உயிரை விட வேண்டாம். பயப்படுவதிலும் பயன் உண்டு. எப்படியென்று கேடக்றிர்களா? இந்தக் கதையைகேளுங்கள்.

ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது.
அதைக் கண்டால் எல்லா மிருகங்களுக்கும் குலை நடுக்கம். 'நான்தான் காட்டின் ராஜா' என்று ஒரு நாள் அறிவித்தது. மிருகங்களைக் கண்டபடி அடித்துக் கொல்ல ஆரம்பித்தது
மிருகங்கள் ஒரு மாநாடு போட்டு, ஒரு தூதுக் குழுவைச் சிங்கத்திடம் அனுப்பின. ஆகாரத்திற்காக தினாமும் ஒரு பிராணியை அனுப்புவதாகவும், மற்றவற்றைக் கொல்ல வேண்டாம் என்றும் தூதுக்குழு சிங்கத்திடம் கூறியது. சிங்கமும் ஒப்புக் கொண்டது.
இதன்படி மிருகங்களைச் சிங்கம் சாப்பிட்டுக் கொண்டு வந்தது. சாமர்த்தியக்கார நரியின்  முறை வந்தது. அது  வேண்டுமென்றே தமாதமாக நேரம் கழித்து சிங்கத்திடம் சென்றது. " ஐயா, வரும் வழியில் என்னை ஒரு சிங்கம் வழி மறித்தது. அதனால்தான் நேரமாகிவிட்டது" என்றது." அத்தனை துணிச்சல் உள்ளவனைக் காட்டு. கொன்று போடுகிறேன்" என்று சிங்கம் சொல்ல, நரி அதை ஒரு பாழும்கிணற்றுக்கு  அழைத்துச் சென்றது. சிங்கம் எட்டிப் பர்த்தது. தண்ணீரில் சிங்கத்தின் பிம்பம் தெரிந்தது. அதுவரை தன்னுடைய பயங்கர முகத்தையே பார்த்தறியாத சிங்கத்திற்கு உதறல் எடுத்தது. பயத்தால் நெஞ்சு பட பட என்று அடித்துக் கொண்டது. அவ்வளவுதான், ஒரே ஓட்டம் எடுத்தது. அடுத்த காட்டிற்குச் சென்று அங்கு சுகமாக வாழ்ந்தது.
அந்த சிங்கம் மட்டும் பயப்படாமல் தண்ணீர் பிம்ப சிங்கத்தின்மீது பாய்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். பாழும் கிணற்றில் அகப்பட்டு செத்துப் போயிருக்கும். பயந்ததால் அதன் உயிர் தப்பியது அல்லவா? பயப்படவே பிழைத்தது.

குறும்பை விரும்பு

ஒரு யானைப்பாகன் தினமும் தன் யானையைக் குளிப்பாட்ட ஆற்றுக்கு அழைத்துச் செல்வான். போகும் வழியில் கடைத்தெருவில் தனது நண்பனான ஒரு தையற்காரரிடம் பேசிவிட்டுப் போவான். . தையற்காரர் சில சமயம் யானைக்கு வாழைப்பழம் கொடுப்பார்.
ஒரு நாள் யானை துதிக்கையை நீட்டியபோது ஊசியால் லேசாகக் குத்திவிட்டார். யனை இதனால் கோபம் அடைந்தது.
ஆற்றில் குளித்துவிட்டு திரும்பி வரும்போது தும்பிக்கையில் சேற்று நீரை உறிஞ்சிக்கொண்டு வந்தது. அங்கிருந்த புதிய துணிகளின் மேல் சேற்றுத் தண்ணீரை வீசியது. துணிகள் யாவும் பாழாயின.
எல்லா கல்லூரி மாண்வர்களுக்காக தைத்த டிரஸ். சேற்று நீரால் கன்னா பின்னா என்று டிசன் போட்ட மாதிரி அவை இருக்கவே, மாணவர்கள் டிசைன் போட்டதற்காக எக்ஸ்டிரா பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு போனார்கள்.
தையல் காரர் ஒரே நாளில் பணக்காரர் ஆனார்..  அவருடைய குறும்பே அவரை பணக்காரர் ஆக்கியது.

3 comments:

  1. என்ன lovely humor சார்!!
    மிகவும் ரசித்தேன்!!

    ReplyDelete
  2. இதெல்லாம் சொல்லித்தானே பேத்தியை வளர்க்கிறீர்கள்?!
    நத்தை இன்னும் கொஞ்ஜநாள் இல்லை கொஞ்ஜ வருஷங்கள் கழித்து அதாவது அரசு ஆஃபீஸ் கட்டிமுடித்து அரசு ஊழியர்கள் வந்து செய்யும் வேலையைப் பார்த்திருந்தால் இந்த கட்டிட வேலையாட்கள் ரொம்ப சுறுசுறுப்பு என்று நினைத்திருக்குமோ? - ஜெ.

    ReplyDelete
  3. எல்லாக் கதைகளும் சூப்பர். அஞ்சா நெஞ்சன் கதை தான் யாரையோ நினைவு படுத்துகிறது :-)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!