ஒரு சில கார்ட்டூனிஸ்டுகள் போடும் படங்களைப் பார்க்கும்போது, "நாமும் இப்படிச் சுலபமாகப் படம் போடலாம்' என்று தோன்றும். அந்தப் படங்களைப் பார்த்து ஓரளவு போடக் கூட முடியும். ஆனால் நாமே சொந்தமாக ஒரு படம் போட ஆரம்பித்தால்தான் அது எத்தனை கஷ்டமான காரியம் என்பது தெரியும்.
இந்த மாதிரி பார்க்க, அல்லது கேட்க எளிதாக இருப்பது ஜம்பம். ஆனால் நாமே ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டுமானால் அதுவும் நாசுக்குடன், ஒரு சாமர்த்தியத்துடன், ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டுமென்றால், அது ஒரு கலை என்பதை உணர்வோம்.
சிறந்த முறையில் ஜம்பம் அடித்துக்கொள்வது என்பதன் இலக்கணம் என்ன?
சொல்ல வேண்டியவைகளை, சொந்தப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்ள வேண்டும்; ஆனால் ஜம்பமாகச் சொல்கிறான் என்பதைப் பிறர் உணராதபடி ஜம்பமாகச் சொல்ல வேண்டும்!
மாதிரிக்குச் சில ஜம்ப உரைகளை இங்கு தருகிறேன்: ஜம்பம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி டாக்டர் பாடம் பெற விரும்புவர்களுக்கு என்னால் இயன்ற சேவை!
* * * *
""சார். . . என்னைக் கேட்டால் பசங்களை என்ஜினீர், டாக்டர் என்று படிக்க வைக்கிறதை விட ஒரு டைப்பிஸ்டாக ஆக்குவதே மேல் என்பேன். பாருங்களேன், இவன் இருக்கிறானே ராஜ÷, எம்.பி.பி.எஸ் பாஸ் பண்ணினானே, அப்போ கிடைச்ச கோல்டு மெடலோடு திருப்தி அடைய வேண்டியதுதான். இப்போ அமெரிக்கா போகணும்னு குதிக்கிறான். ராமு இருக்கிறானே, அவன் பி.ஈ. படிச்சு இருபதாயிரம் சம்பாதிக்கிறது போறாதாம். சொந்தமாக இண்டஸ்ட்ரி ஆரம்பிக்கப் போகிறானாம். இதெல்லாம் பாஎக்கும்போது நானும் என் ஒய்ஃபும் என் பெண் கிட்டே பாரீஸ÷க்கே போய்விடலாமா என்று தோன்றுகிறது!''