October 12, 2010

தடை செய்யத் தடை ஏதுமில்லை -கடுகு


அவ்வப்போது சில புத்தகங்கள் அல்லது கட்டுரைகள் மீது தடை விதிக்கப் பட்டிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி படிக்கிறோம். ஏன் தடை விதிக்கப்பட்டது என்று சில சமயம் காரணங்களும் தரப்படுகின்றன. அரசாங்கத்திற்குப் பிடிக்காத கட்டுரையையோ, கவிதையையோ தடை செய்வது கடினமான காரியமல்ல. ஆனால் அதற்கு ஒரு காரணம் அல்லது சப்பைக் கட்டுத் தேடுவதுதான் கஷ்டமான வேலையாகப் போய்விடும். சற்று யோசித்தால் இதையும் சுலபமாகச் செய்து விடலாம் என்று புரியும். எப்படி? இதோ ஒரு சாம்பிள்!

தடை உத்தரவு
தமிழ்நாட்டில் பல இடங்களில் கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டு வருகிறது.
நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா
மலை மேல் ஏறி வா, மல்லிகைப் பூ கொண்டு வா

இப்பாடல் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது.  தடைக்கான காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
.
இப்பாடல் நம்முடைய குழந்தைகளின் மனதில் தோல்வி மனப்பான்மையையும், கோழைத் தனத்தையும் வளர்ப்பதுடன் தைரியம், ஊக்கம், துணி ஆகியவைகளைக் குன்றச் செய்யும் என்பது தெளிவாகிறது.
`நிலா நிலா ஓடி வா' என்னும் போது நிலவுதான் தன்னிடம் வர வேண்டும் என்று குழந்தை கருதுமே தவிர, தான் நிலவிற்குச் செல்ல வேண்டும் என்று விஞ்ஞான மனப்பான்மையோ, அதற்கான துணிவோ வராது.
`நில்லாமல் ஓடி வா' என்ற வரி நிலவைப் பார்த்து சொல்லப்படுகிறது. நிலவு எப்படி வர முடியும்? அதுவும் நில்லாமல் எப்படி வர முடியும்? நிலவு பூமிக்கு வரும் என்ற தவறான வானசாஸ்திர அறிவு குழந்தைக்கு ஏற்படக் கூடும். மேலும் `நில்லாமல் வா' என்று சொல்லும் போது அதில் ஒரு அவசரமும் காணப்படுகிறது. அவசரப்படுவது நல்ல குணம் அல்ல. இப்பாடல் காரணமாகக் குழந்தைகளுக்கு அவசர குணங்கள் வரக் கூடும்.

`மலை மேல் ஏறி வா' -இதுதான் இந்தப் பாடலில் மிகவும் ஆட்சேபகரமான வரி. அவரவர்கள் இமயமலை ஏறுகிறார்கள். ஆல்ப்ஸ் மலையில் ஏறுகிறார்கள். வீரம், இன்னல்களைச் சமாளிக்கும் மனத்திடம், விடா முயற்சி ஆகியவைகளை மலையேறுதல் வளர்க்கிறது. இப்படியிருக்க, தான் மலை ஏறாமல் தனக்குப் பதில் நிலாவை ஏறி வரும்படி செய்வது கோழைத்தனத்தையல்லவா இளம் நெஞ்சத்தில் வளர்க்கும்? இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் எப்படி வீரமுள்ள பிரஜைகளாக விளங்க முடியும்?
இவைகளையாவது போனால் போகட்டும் என்று விட்டு விடலாம் என்றால், கடைசி வரி- `மல்லிகைப் பூ கொண்டு வா' என்ற வரி நிச்சயம் தடை செய்யப்பட வேண்டிய வரியாகும்.

மலை மீது மல்லிகை ஏது? சந்திர மண்டலத்திலிருந்து சூரியக் கற்களையும், மண் படிவங்களையும் மிகச் சிரமத்துடன் கொண்டு வந்து பெரும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கும் இன்று நிலாவைப் பூ கேட்கிறதாம் குழந்தை! நிலாவிலும் மல்லிகைப் பூ கிடையாது, மலை மேலும் மல்லிகைப் பூ கிடையாது.

அறியாக் குழந்தைகளுக்கு இப்படித் தவறான கருத்துக்களையும், ஆசைகளையும் உருவாக்குவது சரியா? மேலும் நமது தேசிய மலர் அல்லி. அல்லியைக் கேட்காமல் மல்லியைக் கேட்கும் விருப்பத்தை வளர்த்தால் நாளைக்கு குழந்தைக்கு எப்படி தேசத்தின் மேல் பற்று ஏற்படும்? தேச விரோதக் கருத்துக்களை வளர்க்கும் இப்பாடலை உடனடியாகத் தடை செய்ய இக்காரணங்கள் போதும் என்று அரசு கருதுகிறது.

7 comments:

  1. இதை கூட தடை செய்யலாம் .அம்மா இங்கே வாவா.---குழந்தைக்கு தன்னம்பிக்கை வளர்க்காது
    ஆசை முத்தம் தாதா இலையில் சாதம் போட்டு ஈயை தூர ஓட்டு---சுகாதரமற்ற சூழலில் வளர வழி வகுக்கும்

    ReplyDelete
  2. ரொம்பத்தான் குறும்பு உங்களுக்கு‍
    ஜெ.பாபு
    கோவை

    ReplyDelete
  3. குறும்பு என் உடன்பிறப்பு.

    ReplyDelete
  4. hahhaa..nalla creativity sir...

    devi

    ReplyDelete
  5. Dear Sir,

    This is regarding your announcement for the story you propose to publish and the sketch by Mr. Vijay. I am sure Mr. Vijay will add colours to your pen sketch.
    Seeing the published drawing, I was reminded of my days in BARC where I had a friend transferred from the Central PWD. He used to say the trend in Delhi offices - there will be two paper trays on the desk, one will be marked Ábhi Nahi'and the other 'Kabhi Nahi'! (The one with the spider web in Mr. Vijay's sketch!)
    Another one is about my Operations Manager in Doha - who was a bully. He always kept his desk clean and will never allow any papers to be left behind. He will not allow the office boy to leave after he keeps the papers! He will ask him to wait and will see the subject of each paper and mark the initials of the junior sub-ordinate and thus clear his desk immediately!
    - R. J.

    ReplyDelete
  6. utkaarnthu yosipaangalo??

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!