ஒவ்வொரு மனிதனும் ஒரு தீவு அல்ல. அவனுக்கு யாருடைய உதவி எப்போது தேவைப்படும் என்பது தெரியாது. மற்றவர் உதவி இல்லாமல் வாழ முடியாது. பல் குத்த உதவும் சிறு துரும்பு போல் மிக எளியவரின் உதவியைக் கூட பல சமயம் நாம் நாட வேண்டி வரும்.
அப்படி நாம் உதவி பெறும்போது நமது நன்றியைத் தெரிவிப்பது அவசியம். ஒப்புக்கு நன்றி கூறுவது தவறு. உளமாரச் சொல்லுங்கள். அப்போதே சொல்லுங்கள். இன்று பெற்ற உதவிக்கு நாளைக்கு நன்றி சொல்வது உங்கள் நன்றியை நீர்த்துப் போகச் செய்து விடும்.
அது மட்டுமல்ல; மற்றவர் நமக்குச் செய்த உதவியைப் பற்றி வெளியே சொல்லாமல் கமுக்கமாக இருந்து விடாதீர்கள். மற்றவர்களுக்குச் சொல்வதால் லாபம் நமக்குத்தான். இது ஒரு முதலீடு மாதிரி. பின்னால் நிச்சயமாகப் பலன் தரும் முதலீடு.. இவை எல்லாம் என் கருத்துகள் அல்ல. பல சிந்தனையாளர்கள் கூறியவை.
சொந்த அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன்:
நான் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன்.
ஒரு சமயம் `ஸாப்ட் டிரிங்'குக்கு விளம்பரப் படம் எடுக்க வேண்டி இருந்தது. இருபது செகண்ட் வரக்கூடிய படம்தான். இருந்தாலும் அதில் சிறியதாக ஒரு கதை இருக்க வேண்டும். நகைச்சுவை இருக்க வேண்டும். குறிப்பிட்ட குளிர்பானத்தின் பெயர் படம் பார்ப்பவரின் மனதில் பதிய வேண்டும். இது தவிர இன்னும் சில நிபந்தனைகளும் இருந்தன.
அலுவலகத்தில் நான்கு பேரிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது. ஒவ்வொருவரும் 10, 15 கதைகளைக் கொடுத்தோம். அவற்றை எல்லாம் அழகான படங்களுடன் (படக்கதை மாதிரி போட்டு) கம்பெனியின் விளம்பர மானேஜரிடம் எடுத்துக் கொண்டு போனார் எங்கள் கிரியேட்டிவ் டைரக்டர். (விளம்பர ஏஜன்சியில் இது பெரிய பதவி.)
குளிர்பான நிறுவனத்தின் தலைமை அதிகாரி எல்லாக் கதைகளையும் நிராகரித்து விட்டார். ``என்ன செய்வீர்களோ தெரியாது. இன்னும் ஒரு வாரத்தில் மூன்று படங்கள் வேண்டும்'' என்று அவர் கூற, திரும்பவும் நாங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு இன்னொரு செட் கதைகளை ஒரே நாளில் தந்தோம். , அவற்றிலிருந்து மூன்று கதைகளை ) கம்பெனியின் விளம்பர மானேஜர் ஓ.கே. சொன்னார். அதிlல் ஒரு கதை நான் எழுதியது., எங்கள் கிரியேட்டிவ் டைரக்டர் படம் எடுத்துவர உடனே பம்பாய் பறந்தார். . போகுமுன் எனக்கு ஒரு கடிதம் தந்தார். ”உங்கள் கதை ஓ.கே. ஆகியுள்ளது. எங்களைக் காப்பாற்றினீர்கள். ரொம்ப தாங்க்ஸ்!' என்று கைப்பட ஒரு நியூஸ் பேப்பர் அளவு காகிதத்தில் பெரிய எழுத்தில் எழுதி என் மேஜைக்கு அனுப்பியிருந்தார். அத்தனை டென்ஷனிலும் ஒரு தாங்க்ஸ் சொல்ல அவர் மறக்கவில்லை!
படத்தை எடுத்துக் கொண்டு அவர் வந்தபோது அந்தப் படத்தை எடுத்த விளம்பரப்படத் துறையின் முன்னணி தயாரிப்பாளரையும் அழைத்து வந்தார். அவரை என்னிடம் அழைத்து வந்து, ``இவர் எழுதியதுதான் அந்த டி.வி. ஸ்பாட்'' என்று கூறி அறிமுகப்படுத்தி வைத்தார். எனக்கு உச்சி குளிர்ந்து விட்டது.
இது நடந்து சில வருடங்கள் கழிந்தன. பணியிலிருந்து ஓய்வு பெற ஒரு வாரமே இருந்த சமயம். சில அலவன்ஸ்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்பதற்காக ஆபீஸில் என்னை ஒரு வாரம் லீவில் இருக்கச் சொன்னார்கள்.
ஒரு நாள். இரவு பத்து மணி இருக்கும். உறங்கச் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது ஆபீஸிலிருந்து போன்.
``உங்கள் உதவி அவசரமாகத் தேவைப்படுகிறது. கம்ப்யூட்டரில் உடனடியாக சில கிராஃபிக்ஸ் தயார் செய்ய வேண்டும்'' என்றார் ஸ்டூடியோ மானேஜர்..
``கம்ப்யூட்டர் வேலை என்னுடையது அல்ல. நான் ஒரு ரைட்டர். ஏதோ என் ஆர்வம் காரணமாக கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டுள்ளேன். நான் லீவில் இருக்கிறேன். இன்னும் நாலு நாளில் ரிடையர் ஆகப் போகிறேன். மேலும் இப்போது மணி என்ன? ''
``இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்த விஷயம்தான்! கிரியேட்டிவ் டைரக்டர்தான் உங்களிடம் தொடர்பு கொள்ளச் சொன்னார். நாளைக் காலை எட்டு மணிக்கு பிரசன்டேஷன். அரை மணி நேரம்தான் வேலை. பம்பாயிலிருந்து சீஃப் வருகிறார். அவருக்கு இவைகளைக் காலை ஆறு மணிக்குக் கொடுக்க வேண்டும்''
`கிரியேட்டிவ் டைரக்டர் சொன்னார்' என்ற வார்த்தைகள் என்னைப் புதிய ஆளாக மாற்றி விட்டன. ``சரி, இப்போதே கிளம்புகிறேன்'' என்று சொல்லிப் புறப்பட்டேன்.
அரை மணி நேர வேலை என்பது விடியற்காலை ஐந்தரை மணி வரை நடந்தது. எங்கள் அலுவலகம் இருந்த இடத்தில் இரவு நேரத்தில் ஒரு டீ கூடக் கிடைக்காது. எனக்குச் சற்று `அஸிடிடி' தொல்லை உண்டு. ஆகவே அடிக்கடி ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும். அன்றைய இரவு எதுவும் சாப்பிட இயலவில்லை; குடிதண்ணீர் கூட கூலரில் தீர்ந்து விட்டிருந்தது. இருந்தாலும் `அஸிடிடி' தொல்லை எதுவும் இல்லை. வேலை மும்முரத்தில் அது தலை காட்டவில்லை!
அன்றிரவு அலுவலகத்துக்குப் புறப்பட்ட போது கிரியேட்டிவ் டைரக்டர் சில வருஷங்களுக்கு முன்பு எழுதிய `தாங்க்ஸ்' கடிதமோ, தயாரிப்பாளரிடம் `ஓஹோ' என்று புகழ்ந்து அறிமுகப்படுத்தியதோ என் நினைவில் வரவில்லை. கிட்டத்தட்ட மறந்தே போய் விட்டிருந்தேன். ஆனாலும் அந்த நன்றியறிவிப்பு என் மனத்தின் ஆழத்தில் அவர் மீது மதிப்பையும் நட்பையும் என்னை அறியாமலேயே விதைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல சிரமங்களுக்கிடையில் அந்த இரவில் நான் வேலை செய்திருப்பேனா?
நன்றி கூறுவது, காசு செலவு இல்லாமல் செய்யப்படும் முதலீடாகும். இந்த முதலீடு என்றும் திவாலாகிப் போகாது.
( இது என் சுயப் பிரதாபம் தான். ஆனால் சத்தியமான சம்பவம்!)
True Sir,
ReplyDeleteA smile... a thanks... an appreciation... an acknoweledgement... a compliment... a sorry (in the right time)... all of these when done in a positive note and tone are energizers that will stay with us forever.
- Sri
நன்றி மறப்பது நன்றன்று என்றுதான் வள்ளுவர் கூறினார். நீங்கள் ஒருபடி மேலே போய் நான்றி சொன்னதை மறக்கக் கூடாது என உணர்த்தி இருக்கிறீர்கள். நன்றி.
ReplyDeleteஜெ.பாபு
கோவை
நன்றி.நன்றி.
ReplyDeleteThank you very much for this post sir..
ReplyDeletedevi
நன்றி! எதற்கு? இந்த அறிவுரைக்கும், அநுபவப் பகிர்தலுக்கும்! உங்கள் Creative Director நீங்கள் கடைசியாக செய்த உதவிக்கு எப்படி, எவ்வளவு பெரியதாக நன்றி தெரிவித்திருப்பார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்! - ஜெ.
ReplyDeleteYes.. Sir... I agree with you.. I have also experienced it...
ReplyDeleteRegards
Ranga