October 30, 2010

புள்ளிகள்: இந்திரா காந்தி

புது டில்லியில் பஹார்கஞ்ச் என்ற பகுதியில் ( நம்ம ஊர் கொத்தவால் சாவடி மாதிரி) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் உள்ளது, அங்கு  விசாலமான ஆடிட்டோரியம், புத்தகசாலை எல்லாம்  இருக்கிறது.\

அவ்வப்போது நாங்கள் புத்தகசாலைக்குப் போவோம்.
 ஒரு நாள் மாலை போனபோது, அங்கு ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. “ மாலை 6 மணிக்கு  சுவாமி ரங்கநாதானந்தா பேசுகிறார்....” என்று அதில்  எழுதப்பட்டு இருந்தது..
ரங்கநாதானந்தா உரையைக் கேட்கும் ஆர்வம் எனக்கு இல்லை. அவரைப் பற்றி எனக்குத் தெரியாததும் ஒரு காரணம்.
 நாங்கள் புத்தகசாலைக்குள் போய் படிக்க ஆரம்பித்து விட்டோம்.
 சுமார் 6 மணி வாக்கில்  புத்தகசாலைக்கு வெளியே  பரபரப்பு எற்பட்டது தெரிந்தது. எட்டிப் பார்த்தோம்.
சர்ரென்று நாலைந்து கார்கள் வந்தன. சில போலீஸ்காரர்கள் தலைகளும் தெரிந்தன. விசில், சைரன், “ சலோ, சலோ”  அதட்டல்கள் எதுவும் இல்லை.   துறவிகள் சிலர் காரிலிருந்து இறங்குபவரை வரவேற்றனர்.. காரிலிருந்து இறங்கியவர்”: பிரதம மந்திரி இந்திரா காந்தி!

’அட, இந்திரா காந்தியே உரையைக் கேட்க வருகிறர் என்றால் சுவாமி ரங்கநாதானந்தா சாதாரணத் துறவி அல்ல. நாமும் போய் அவரது உரையைக் கேட்கலாம்’  என்று எண்ணி ஆடிட்டோரியத்திற்குள் போய் உட்கார்ந்தோம்.

இந்திரா காந்தி முதல் வரிசையில் உட்காந்திருந்தார். நாலைந்து வரிசைகள் தள்ளி நாங்கள் உட்கார்ந்தோம். சுவாமி  ரங்கநாதானந்தா உரையைத் துவக்கினார். தெளிவான ஆங்கில உச்சரிப்புடன்,  சரளமாகத் தங்கு தடையில்லாமல் சொற்களைப் பொழிந்தார். கேட்டுக் கொண்டே இருக்கலாம்போல் இருந்தது!
சுவாமி  ரங்கநாதானந்தா பேசி முடித்ததும், இந்திரா காந்தி எழுந்து நின்று அவருக்கு ஒரு ‘நமஸ்தே’ போட்டுவிட்டுப் புறப்பட்டு விட்டார். ஒரு பந்தா, ஒரு அலட்டல், ஒரு கெடுபிடி,எதுவும் இல்லை!
தினசரிப் பத்திரிகையில்வந்த “ இன்றைய நிகழ்ச்சிகள்” பத்தியைப் பார்த்து இந்திராகாந்தி அவராகவே சுவாமி  ரங்கநாதானந்தாவின் உரையைக் கேட்க வந்தார் என்பது சிலர் பேசிக்கொண்டதிலிருந்து தெரிந்தது!

ஹூம்.. ( பெருமூச்சு!)

7 comments:

 1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  நல்லவற்றைத் தேடிச் சென்று கேட்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்று புரிகிறது.

  அதனால்தான் நாங்க எல்லாரும் உங்க ப்ளாக் தவறாமல் படிக்கிறோம், சரிதானே!

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 2. அன்புள்ள திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு,
  இப்ப்டி நீங்கள் எழுதி இருப்பதால்,பொருப்புடன் செயல் படவேண்டும் என்ற என் கொள்கையை உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டே இருப்பேன்.

  ReplyDelete
 3. ஒரு குறுக்கெழுத்துப் போட்டி போட்டிருந்தீர்கள். அதனை நான் முழுவதும் போட்டு விட்டேன். அந்த பதிவையே காணவில்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியும் தெரியவில்லை. விடைகளை உங்களுக்கு எப்படி அனுப்ப?

  ReplyDelete
 4. குறுக்கெழுத்துப் போட்டி தவறாகப் பிரசுரம் ஆகிவிட்டது. படம் தெளிவாக இல்லை. அடுத்த சில தினங்களில் வரும். அதுவரை அன்புகூர்ந்து காத்திருங்கள் FREE MASON அவர்களே!

  ReplyDelete
 5. நீங்கள் தந்த படத்தினை வைத்து அந்தப் புதிரின் விடையை கண்டுபிடித்துவிட்டேன். அதே புதிர்தான் மீண்டும் வருகிறதா? இல்லை வேறா? இதனை உங்களுக்கு அனுப்ப என்ன வழி? :)

  ReplyDelete
 6. //அன்புள்ள திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு,
  இப்ப்டி நீங்கள் எழுதி இருப்பதால்,பொருப்புடன் செயல் படவேண்டும் என்ற என் கொள்கையை உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டே இருப்பேன்.//

  பொருப்புடன் இல்லை சார் பொறுப்புட்ன் இப்ப்டி ஹி ஹி

  ReplyDelete
 7. Hi my dear Thatha! Love this blog!

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!