October 18, 2010

ஆபீசுக்குள் பாம்பு! அடிப்பதா, வேண்டாமா?-கடுகு

    வேலை செய்யாத லிஃப்ட்டை சபித்துக் கொண்டே ஐந்து மாடிகளையும் கடந்து ஆறாவது மாடியில் உள்ள தன் டிபார்ட்மென்டிற்குள் நுழைந்தார் ஹெட்கிளார்க் தலசயனம்.

  ஒரு   அரசுத்துறை கட்டிடத்தில்  ஆறாவது மாடியில் உள்ள
அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்டில் தலைமை குமாஸ்தா அவர். \
அட்டென்டன்ஸ் ரிஜிஸ்தரில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சுற்று முற்றும் பார்த்தார். ஒரு குமாஸ்தா கூட வரவில்லை. மணி பத்தரை ஆகியிருந்தது. ஆபீஸ் நேரம் ஒன்பதரை.
"என்னய்யா அக்கிரமம்! ஏழு மாசமா பென்ஷன் கேஸ், ஜி.பி.எஃப் அக்கவுண்ட் எல்லாம் பெண்டிங்காக இருக்கிறது. எந்தப் பயலாவது நேரத்தில் வந்து வேலை செய்து, நேரத்தில் வீடு போவோம் என்று கிடையாது. ஓவர்டைம் பில் தவிர வேறு  எதையும் கவனிக்க மாட்டார்கள். மனச்சாட்சி என்று இருந்தால் தானே? நிதானமாக ஆடி அசைந்து வர வேண்டியது. காப்பி சாப்பிடுவது, லஞ்ச், டீ,  ... இன்றைக்கு எல்லோரையும்என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?"

தலசயனம் தனியாக இருக்கும்போது தன் கீழ் உள்ள குமாஸ்தாக்கள் மேலுள்ள கோபத்தை இப்படிப் பேசித் தீர்த்துக் கொள்வார்:
"அப்படித்தான் வருகிறார்களே, நாலு நிமிஷம் தொடர்ந்தாற்போல் ஸீட்டில் உட்கார்ந்திருப்பார்களா? பேசக் கூடாது. நான்அப்படி ஒரு லைட்டாக கண்ணை மூட வேண்டியதுதான். பாம்பு மாதிரி நழுவி விடுவார்கள். சரியான நல்ல பாம்புகள்... சரியான... ந..ல்..ல..பா..ம்........."
தலசயனம் முடிக்கவில்லை. மூலையில் பைல்களுக்கு இடையே ஏதோ பளபளவென்று மழமழவென்று தெரிந்தது. உற்றுப் பார்த்தார். அது நெளிந்தது. சரசரவென்று  ஊர்ந்து பைல் காடுகளில் புகுந்தது... பாம்புதான்...
"பாம்புதான் வந்திருக்கிறது." என்று தலசயனம், வேறு யாரிடமோ கூறுவது போல் உரக்கத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
கால்களைத் தூக்கி நாற்காலியில் வைத்துக் கொண்டு பாம்பு நுழைந்த மூலையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு பாம்பைக் கண்டு பயம் இல்லை; கவலைதான், அந்த மூலையில் இருக்கும் ஷெல்ஃபில் அவருடைய பிளாஸ்க்கும், டிபன் டப்பாவும் இருந்ததுதான் காரணம்.!
இரண்டு நிமிஷம்அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். அவரையறியாமல் உட்கார்ந்தபடியே தூங்கி விட்டார். (தலசயனம் நின்று கொண்டே தூங்கக் கூடியவர். ஏன், கண்களை திறந்து கொண்டு கூடத் தூங்குவார்!)
கண் விழித்த போது ஆபீஸ் அறையில் எல்லாக் குமாஸ்தாக்களும் `ஸீட்'டில் உட்கார்ந்து ஏதோ வேலையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தார்.
"இந்தாப்பா, பராங்குசம், கோபன்னா, கிருஷ்ணன் எல்லாரும் கவனியுங்க. அதோ அந்த மூலையில் ஒரு பாம்பு போயிருக்கிறது. நான் காலையில் பார்த்தேன்."
 பராங்குசம் வகையறா சட்டென்று எழுந்து ஜெட்டென்று ஓடி வந்து ஹெட் கிளார்க் மேஜைக்கருகில் நின்றனர்.
"எங்கே சார் பாம்பு? அர்ஜண்ட் பைல் வைக்கிற பீரோவுக்குப் பக்கத்திலேயா..."
"ஆமாம். அந்த பீரோவுக்கும்  என்னுடைய டிஃபன் ஷெல்ஃபுக்கும் கீழே பைல்களுக்கு நடுவே போய் விட்டது. நான் கண்ணாலே பார்த்தேன்."
"சார், நான் வாயாலே கேட்கிறேன். பாம்பு என்று நிச்சயமாகத் தெரியுமா?"
"ஐந்து அடி நீளப் பாம்பு. உடம்பெல்லாம் ஒரே மஞ்சளாக இருந்தது. கட்டு கட்டாகக்கூடத் தெரிந்தது."
"இப்போ என்ன செய்கிறது. பாம்பை அடிக்க வேண்டுமே... நாமே அடித்து விடலாம்..."
"கோபன்னா, என்ன சொல்கிறாய்? பாம்பை நாம் அடிக்கிறதா? மேல் அதிகாரிகள் உத்தரவில்லாமல் நாம் ஒன்றும் செய்யக் கூடாது. சப்போஸ், அது ஏழாவது மாடியில் குடி இருக்கிற ஆபீசர் வளர்க்கும் பாம்பாக இருக்கலாம். அல்லது லைசென்ஸ் வாங்கின பாம்பாக இருக்கலாம். அல்லது பிள்ளைத் தாய்ச்சியாக இருக்கும். அடித்தால் எஸ்.பி.சி.ஏ. நம்மை மாடு அடிக்கிற மாதிரி அடிக்க வர மாட்டானா? விளையாட்டுப் பிள்ளை மாதிரி சொல்லி விடுகிறாயே, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று..."
"யெஸ் ஸார்.  நீங்க சொல்கிறது கரெக்ட். இப்போது என்ன செய்யலாம்?"
"டெபுடி செகரட்டரிக்கு ஒரு நோட் எழுத வேண்டும். பராங்குசம், டேக் டவுன்,"என்று குறிப்பிட்டு ஹெட் கிளார்க் `டிக்டேட்' செய்தார்.

குறிப்பின் முக்கிய பகுதி, "....மேற்படி பாம்பை அடித்து விடுவது நல்லது என்று டெபுடி செகரட்டரி அன்புடன் ஏற்றுக் கொண்டால், இதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஜெனரல் பிராஞ்சு ஜி.செக் ஷனுக்குத் தகவல் தெரிவிக்கலாம். பாம்பு மஞ்சள் நிறமாக இருந்ததால் தண்ணீர் பாம்பு என்று கருத இடமுண்டு. இருந்தாலும் அஜாக்கிரதையாக இருப்பதற்கில்லை."
குறிப்பை டெபுடி செகரட்டிரிக்கு அனுப்பினார்.
* * *
அக்கவுண்ட் செக் ஷன் அனுப்பிய குறிப்பு பார்த்தேன்.
அதில் கீழ்க்கண்ட விஷயங்கள் தெளிவுபடுத்தப்படவில்ை`.
1. சாதாரண பாம்பு ஆறாவது மாடிக்கு எப்படி ஏறி வந்திருக்கக் கூடும்?
2. பாம்பு மஞ்சளாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பென்ஷன் கிளார்க் சில மாதங்களுக்கு முன்பு தன் உறவினருக்கோ நண்பருக்கோ அல்லது விரோதிக்கோ மஞ்சள் காமாலை என்று சொல்லி லீவு கேட்டதாக ஞாபகம். இவருக்கு மஞ்சள் .காமாலையா இல்லையா என்பது ஜெனரல் ஆஸ்பத்திரியில் சோதிக்கப்பட வேண்டும்.
3. தண்ணீர் பம்பு என்பதற்குப் பதில் தண்ணீர் பாம்பு என்று தவறாக டைப் அடிக்கப்பட்டிருக்கிறதா?
-டெபுடி செகரட்டரி.
* * *
டெபுடி செகரட்டரியின் கேள்விகளுக்குப் பதில்கள்:
1. பாம்பு ஆறாவது மாடிக்கு லிஃப்டு மூலமாக வந்திருக்க முடியாது. லிஃப்டு ஆறு மாதமாக வேலை செய்யவில்லை. (இது சம்பந்தமாக ஜி.ஏ.செக் ஷன் ஃபைல் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.)
2. பென்ஷன் கிளார்க் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் பரிசோதனைக்கு  அனுப்பப்படுகிறார். ஆஸ்பத்திரி சூபரின்டென்டுக்கு இது சம்பந்தமாக எழுதப்படும் நகல் கடிதம் வைக்கப்பட்டிருக்கிறது. டெபுடி செகரட்டரியின் கையெழுத்துக்காக.
3. பம்பு அல்ல பாம்புதான். எழுத்துப் பிழையல்ல. கால் போட்ட `ப' தான்.
- செக் ஷன் ஆபீசர்.

* * *
1. லிஃப்டு ஆறு மாதமாக வேலை செய்யாததற்கு என்ன காரணம்? லிஃப்டு ரிப்போர்ட்டில் காரணம் என்பதற்கு "காப்பிக் கொட்டை தட்டுப்பாடு" என்று எழுதியிருக்கிறதே, இதற்கும் லிஃப்டு மேன் லிங்கசாமிக்கும் என்ன சம்பந்தம்? லிஃப்டு வேலை செய்யாதது பற்றித் தக்க நடவடிக்கை எடுக்காததால் சம்பந்தப்பட்ட குமாஸ்தாவை உடனடியாக சஸ்பெண்ட் செய்யலாமா என்று தோன்றுகிறது. அவருடைய எக்ஸ்பிளனேஷனை வாங்கவும்.
2. பென்ஷன் கிளார்க் உடனடியாக ஜி.எச்.சுக்குப் போகட்டும்.
3. பாம்பு பிடிக்கத் தெரிந்த அல்லது அடிக்கக்கூடிய  ஆசாமிக்கு எங்கே போவது? இதற்கு ஆகும் செலவை  எந்த இனத்தில் போடுவது? ஐம்பது ரூபாய்க்கு மேல் போனால் செகரட்டரியின் அனுமதி தேவைப்படும்.
- டெபுடி செகரட்டரி.
* * *
1. காப்பிக் கொட்டை தட்டுப்பாடு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு காப்பிக்கொட்டை வாங்கப் போனார் லிஃப்ட்மேன் லிங்கசாமி, அண்டர் செகரட்டரி அனுப்பியதாகக் கூறுகிறான். போகும் போது லிஃப்ட் கைப்பிடியை வழக்கம் போல் ஜேபியில் போட்டுக் கொண்டு போனார். அங்கு கடையில் கூட்டத்தில் யாரோ அதை - நல்ல பித்தளை ஆயிற்றே - எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். அந்த மாதிரி கைப்பிடி ஸ்டாக்கில் இல்லையென்று லிஃப்ட் கம்பெனி தெரிவித்திருக்கிறது. (பார்க்க பக்கம்: 37)
2. பென்ஷன் கிளார்க் ஆஸ்பத்திரி போய் வந்தார். இன்னும் சில நாட்களில் ரிபோர்ட் அனுப்புவதாக ஆஸ்பத்திரியிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. (பார்க்க: அவர்களின் கடிதம் கே.-10826 எக்ஸ் - 1966-67-68.)
3. பாம்பு பிடிக்கப் பாம்பாட்டிக்காரர் யாரையாவது அழைக்கலாம். குறைந்தது ஐம்பது ரூபாய் கேட்பார், செகரட்டரிக்கு ஃபைலை அனுப்பலாம்.
- செக் ஷன் ஆபீசர்.

* * *
1. ஆறு மாதமாக லிங்கசாமி என்னதான் செய்கிறார்? லிஃப்டுதான் வேலை செய்யவில்லையே!
2. ஆஸ்பத்திரிக்கு ரிமைண்டர் எழுதவும்.
3. செகரட்டரிக்கு ஃபைல் அனுப்பப்படுகிறது.
-டெபுடி செகரட்டரி.
* * *
1. லிங்கசாமி அர்ஜன்ட் பைல்களைத் தூசி தட்டி அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.
2. ஆஸ்பத்திரியிலிருந்து ரிப்போர்ட் வந்தது. அது இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ரிப்போர்டைக் கண்டு ஒரே குழப்பம். தங்கள் உத்தரவு.
3. இணைப்பு; ஆஸ்பத்திரி ரிப்போர்ட். கேஸ் நம்பர்: கே 18026 எக்ஸ் 1966-67-68. மூளையில் கான்சர் நோய் ஏற்பட்டதால் நோயால் காலமானார்.
- செக் ஷன் ஆபீசர்.
* * *
1. அர்ஜண்ட் பைல்களுக்கு என்ன தலைமுழுகிப் போகிற அவசரம்? வெரி அர்ஜண்ட் பைல்களைத் தட்டி வைக்கச் சொல்லவும். லிங்கசாமியிடம்.
2.  பென்ஷன் கிளார்க்குக்கு மூளை கிடையாது என்பது தெரிந்த விஷயம். ஆகவே அவருக்கு மூளை கான்சர் ஏற்பட்டிருக்காது; அவரும் இறந்திருக்க முடியாது. ரிப்போர்ட் மாறி வந்திருக்கும்.
- டெபுடி செகரட்டரி.
* * *
பாம்பாட்டிக்காரருக்கு ஐம்பது ரூபாய் எதற்கு? எங்கள் ஊரில் மாணிக்கம் பத்து ரூபய்க்குப் பிடிப்பார்.அவரை  வரவழைத்தால் போகிறது. ஆபீஸ் ஊழியர்களின் நலனை முன்னிட்டு நானே ஊருக்குப் போய் கூட்டி வருகிறேன்.
நானும் என் காம்ப் கிளார்க்கும் போய் வரும் டி.ஏ. செலவை "பர்னிச்சர் வார்னிஷ் அடித்தது" என்ற செலவுத் தலைப்பில் போடலாம். டி.ஏ.அட்வான்ஸ் 300 ரூபாய் உடனே சாங் ஷன் செய்யப்பட்டிருக்கிறது.
- செகரட்டரி.
* * *
1. லிங்கசாமிக்கு வெரி அர்ஜண்ட் ஃபைல்களைத் தட்டி வைக்கும்படி உத்தரவு இடப்பட்டுள்ளது.
2. பென்ஷன் கிளார்க் தான் உயிருடன் இருப்பதாக கைப்பட ஒரு குறிப்பு எழுதி அனுப்பியுள்ளார். (காண்க: பக்கம் 624)
* * *
ஹெட் கிளார்க் உயிருடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. இருந்தாலும் ஆபீஸ் சட்டத்தின்படி  பிறப்பு-இறப்பு  ரிஜிஸ்டிராரிடமிருந்து அத்தாட்சிப் பத்திரமும், போலீஸ் கமிஷனரிடமிருந்து ஒரு சர்டிபிகேட்டும் ஏழு நாளைக்குள் அவர்  சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி அவர்  இறந்து போனவராகக் கருதப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
- டெபுடி செகரட்டரி.
* * *
உட்கார்ந்து கொண்டே சமாதியாகி விட்ட மகரிஷியைப்  போல், நாற்காலியில் அமர்ந்து, அர்ஜண்ட் பைல் கட்டுகளின் மேல் கைகளை ஊன்றிக் கொண்டு  நித்திரையில் சுகமாக ஆழ்ந்திருந்தார் ஹெட் கிளார்க் தலசயனம்.
அந்த சமயத்தில்,  `யம்மாவ்' என்று லிங்கசாமி குரல் கொடுத்தார். அதல சுதல விதல பாதாள  லோகங்களுக்கும் அவனுடைய யம்மோவ் எட்டியிருக்கும்.
"ஏம்பா, லிங்கசாமி என்னய்யா, ஒரே கூப்பாடு?"
"ஹெட்டு கிளார்க்கு சார். இந்த அர்ஜன்ட் பைல் பீரோவைத்  திறக்கிறேன். பாம்பு சும்மாப் படுத்துக்கிட்டு இருக்குது. டகால்னு கதவை மூடிட்டேன்" என்றார்.
"அந்த இரும்புப் பீரோவிலேயா? அடப்பாவமே! அந்தப் பாம்பு செத்துப் போயிருக்கும். அந்தப் பீரோவைத்  திறந்து மூணு வாரம் ஆச்சு." என்றார்  கோபன்னா.
தூரத்தில் எட்டி நின்றபடியே குச்சியால் பீரோவைத் திறந்தார் லிங்சாமி. பாவம், பாம்பு செத்துப்  போய் இருந்தது.
"அம்மாடி! ஒரு பெரிய தொல்லை` விட்டது. இந்த பாம்பு ஃபைலைக் கவனித்ததில் எல்லா வேலையும் நின்று  போய் விட்டது. டெய்லி நாலுமணி நேரம் ஓவர் டைம் போட்டு அட்லீஸ்ட் மூணு மாசம் செய்து எல்லாவற்றையும் `கிளியர்' செய்ய வேண்டும்." என்றார் ஹெட் கிளார்க்.
"சார். நல்ல காலம். இந்தப் பாம்பு மட்டும் வெரி அர்ஜண்ட் ஃபைலுங்க வைக்கிற பீரோவுக்குள்ளே போயிருந்தா இன்னும் இரண்டு மாசம் இந்தக் கேஸ் இழுத்துக்கிட்டு  போயிருக்கும்." என்றார் லிங்கசாமி!

6 comments:

  1. இருபத்தி நாலுமணி நேரமும் குறும்புத்தனமாகத்தான் யோசித்துக் கொண்டிருப்பீர்களா? -ஆர்

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    //நான் கண்ணால் பார்த்தேன்’’, சரி, நான் வாயால் கேட்கிறேன்//

    இனிமேல் யாராவது ‘நான் கண்ணால பார்த்தேன்’ன்னு சொன்னால், நான் குபீரென்று சிரித்து விடும் அபாயம் ஏற்பட்டு விட்டதே, என்ன செய்வது?

    நினைத்து நினைத்து சிரிக்கிற மாதிரி எழுதுகிறீர்கள். நகைச்சுவை உணர்வு என்ற அமுதத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள். நாங்களும் தேவர்கள் ஆகி விட்டோம். நன்றி!

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  3. திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு.
    நன்றி.

    ReplyDelete
  4. it is very old news item read insome tamil magazine but

    ReplyDelete
  5. Refer the 'jewel'- "Ambition: What will get you to the top if the Boss has no daughter!". I suggest you try to be worthy of his son-in-law! Then you can really top the situation! - R.J.

    ReplyDelete
  6. Anonymous said...

    it is very old news item read insome tamil magazine but...

    பின்னூட்டதை முடிக்கவில்லயே ... பழையதில் உள்ள் ருசிக்கு எதுவும் ஈடாகாது...ஹி...ஹி

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!