October 24, 2010

அருமைநாயகம் - கேரக்டர்

அருமைநாயகம் நன்றாகப் படித்தவர். திறமையை விட. சர்வீஸ் காரணமாகப் பதவி உயர்வு பெற்று பம்பாய் அணு கமிஷனில் ஓர் உயர் அதிகாரியாக இருக்கிறவர். வெள்ளை மனது ஆசாமி. தலை முடியும் வெள்ளை. பக்திமான். கிறிஸ்துவும் கிருஷ்ணனும் மேரியும் மாரியம்மனும் அவர் வணங்கும் தெய்வங்கள்.
"என்னைப் பொறுத்த வரை எல்லா சாமியும் ஒன்றுதான்.'' என்பார். அவரது அறையில் சுவரை மறைத்துக் கொண்டு பலவித தெய்வப் படங்கள் மாட்டப்பட்டிருக்கும்.
அருமைநாயகம் அப்பாவி மனிதராகக் காட்சி அளிப்பார். "இவர் எப்படி இந்த பதவிக்கு வந்தார்?'' என்று பலருக்கு அவ்வப்போது சந்தேகம் எழும். "போகிறார், நல்ல மனிதர். சமயத்தில் சிறு பிள்ளை மாதிரி  ஏதாவது பேசுவார். தொலைந்து போகட்டும். புரமோஷன் கொடுக்கலாம்,'' என்று சொல்லியே பதவி உயர்வுகள் தரப்பட்டனவே தவிர, இவர் திறமைக்காக அல்ல!
சாதாரண பியூனிடம் கூட "ஏம்பா, இந்த பைலைக் கொண்டுபோய் கொடுக்கிறியா?... இல்லை, வேண்டாம், நீ உட்கார்ந்துகிட்டு இரு. நான் அந்தப் பக்கம் போகும்போது கொடுக்கிறேன்... சரி, பொடி இருந்தால் கொடு, என்பார்''
"இன்னா, ஸார்.. நீயே ஒரு டப்பா வாங்கி வெச்சுக்கக் கூடாதா? தெனத்திக்கும் என்னைக் கேக்கறியே'' என்பான் அந்த மராத்தி பியூன். படு கிழவன். ஆகவே உரிமையுடன் பேசுவான்.
இவ்வளவு நல்லவரான அருமைநாயகம் ஒரே ஒரு தவறு செய்தார். தனது ஐம்பதாவது வயதில் இருபத்திரண்டு வயது பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
"பேச்சலராகவே இருந்திடணும்னு நினைச்சேன். அவன் அன்றி அணுவும் அசையாது என்பாங்க. அணு கமிஷன்லே இருக்கிற நான் மட்டும் விதி விலக்கா? அவன் சித்தம் இப்படி இருக்கிறப்போ நான் என்ன செய்ய முடியும்.? அம்மாளை ரெயிலில் பார்த்தேன். ஒரே பெட்டியில் போனோம். அம்மாவுக்கு மனுஷங்க யாரும் இல்லை. எங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. கர்த்தர் என்னை கிரகஸ்தனாக்கி விட்டார். இத்தனைக்கும் அவங்க இந்து,'' என்பார்.
இந்த வயதில் அவர் கலியாணம் செய்து கொண்டதைப் பார்த்து ஆச்சரியப்படுவதைவிட, இவரை எப்படி திருமணம் செய்துகொள்ள அந்த அம்மா முன் வந்தார் என்பதை நினைத்துதான் வியப்படைய வேண்டும்.
வயதான காலத்தில் கிடைத்த புதிய மனைவியாதலால்  வார்த்தைக்கு வார்த்தை அருமைநாயகம், "வீட்லே” "வீட்லே” என்று தான் பேசுவார்.
"நேற்று பாருங்க, வீட்லே பிறந்த நாள். சரி, செம்பூர் கோவிலுக்குப் போகலாம் என்று கிளம்பினோம். கிங் சர்க்கிள் காந்தி மார்க்கெட்டில் ஒரு புடவை வாங்கலாம் என்று வீட்லே சொன்னாங்க.அறுநூற்று எழுபது ரூபாய் ஆச்சு. கையிலே முப்பது ரூபாய் குறைஞ்சுது. வீட்லே தான் கொடுத்தாங்க. அப்புறம் பாருங்க, வீட்லே தலைவலி வந்திடுச்சு. சரின்னு மாத்திரை வாங்கிக் கொடுத்தேன் வீட்டுக்கு வந்ததும் அப்படியே வீட்லே படுத்துட்டாங்க. நான் அடுப்பைப் பற்ற வைத்து காப்பி போட்டுக் கொடுத்தேன். காலையிலே லேசா வலி இருந்தது. கன்சர்ன்ஸ்லே போய் சாப்பாடு எடுத்து வந்து  சாப்பிட்டோம்.''
சில சமயம் வேட்டி கட்டுவார். வெறும் மல்  பனியனுடன் செருப்புக் கூட இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் போவார்.
"வீட்லே நேற்று கோவிச்சுகிட்டாங்க, கிழிசல் வேட்டியைக் கட்டிக்கிட்டு ஏன் வெளியே போறீங்கன்னு. உடனே நான் ஊசியை எடுத்து தைத்துப்புட்டேன். ..... பம்பாய் மழை, வீட்லே ஒத்துக்கல்லே. அதனாலே இரண்டு மாசம் ஊருக்கு அனுப்பிடப் போறேன். எனக்கு என்ன, அரை ஆழாக்கு சோறு பொங்கி வச்சிக்கிடுவேன். தயிர் இருக்கவே இருக்கிறது...
..ஆமாம் உங்களை ஒண்ணு கேட்கணும், மாதுங்கா மாணவர் மன்றத்திலே அஜந்தா, எல்லோரா டூர் போகிறாங்களாமே? விவரம் விசாரித்துச் சொல்லுங்க. வீட்லே போய்வர ஆசைப்படுவாங்க!"
அருமைநாயகத்துக்கு இருபத்துநாலு மணி நேரமும் "வீட்லே' நினைவாகவே இருப்பார், பேசுவார்.
அவருடைய உலகம் "வீட்லே தான்" இருக்கிறது!

2 comments:

  1. வாக்குத் தவறாமல் இன்று பதிவிட்டு என்னைப் போன்ற வாசகர்களுக்கு தீனி கொடுத்ததற்கு நன்றியும், சந்தோஷமும்.கட்டுரை என்னை 30 வருஷம் பின்னோக்கி பார்த்து சந்தோஷிக்க வைத்தது - கிங் சர்க்கிள், கன்ஸர்ண்ஸ் (மேனேஜர் த்யாகு) ,BARC (73-81),முதல் முதல் வேலை பார்த்த ப்ரைவேட் கம்பனியின் மராட்டி ப்யூன் எல்லொரையும் நினைத்து மகிழ்கிறேன்! - ஜெ.

    ReplyDelete
  2. கடுகு சார்,
    நான் மணி. மும்பையில் தாமசம்.

    கேட்டீங்களா !, அருமை நாயகம் ரொம்ப பிரமாதம் !.

    இதுபோல சில கேரக்டர்கள் அரசு அலுவலகத்தில் தான் கிடைக்கும்..

    mani@techopt.com

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!