October 24, 2010

மறக்க முடியாத ராபர்ட் - கடுகு

சில ஆண்டுகளுக்கு முன்பு  அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் உள்ள சேப்பல்ஹில் என்ற ஊரில் நான் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அங்குள்ள சர்வகலாசாலை மாணவர்கள் குடியிருப்பில் தங்கி இருந்தேன். அந்த சர்வகலாசாலையில் மிகப் பெரிய புத்தகசாலை இருந்தது. .மாணவர்கள் பல்வேறு ஹாஸ்டல்கள், டிபார்ட்மெண்டுகள் எல்லாம் போவதற்கு இலவச பஸ் சேவையும் இருந்தது.  பத்து பதினைந்து நிமிஷத்திற்கு ஒரு பஸ் வரும். அந்த பஸ்ஸில் நான் லைப்ரரிகளுக்கு  அடிக்கடி போவதுண்டு.
ஒரு நாள் கல்லூரி விடும் நேரம் புத்தகசாலையிலிருந்து வீட்டுக்கு வர ஒரு பஸ்ஸில் ஏறினேன்.

பஸ் கிளம்பியதும். பஸ்ஸிலிருந்த மைக்கில் ஒரு அறிவிப்பு வந்தது. மாணவர்கள் சட்டென்று பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். பஸ் திடீரென்று நிசப்தமாகி விட்டது.  மைக்கில் தொடர்ந்து வந்த அறிவிப்பு:” .. ஹலோ. நான் உங்கள் பஸ் டிரைவர் ராபர்ட் பேசுகிறேன்... CALL ME BOB...குட் ஈவினிங்” என்றார்.. உடனே எல்லா மாணவர்களும் ஒற்றைக் குரலில்  ”குட் ஈவினிங், பாப்” என்றார்கள்.
” உங்களுடைய ஐந்து நிமிஷத்தை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்... நீங்கள் எல்லாரும் நமது சர்வகலாசாலையில் படித்துப் பட்டம் பெற்று பல திசைகளுக்கும் செல்லப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தை நமது சர்வகலாசாலை அமைத்துத் தருகிறது.
 உங்கள் பெற்றோர்கள் பல தியாகங்களைச் செய்து உங்களைப் படிக்க வைக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில்  நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். வாழ்க்கையின் நல்ல பாதையிலிருந்து நீங்கள் விலகிச் செல்லாமல் இருப்பதில் உங்கள் கவனம் இருக்கவேண்டும். இன்றைய கால கட்டத்தில் உங்களுடய பெரிய விரோதியாக நீங்கள் கருத வேண்டியது போதைப் பொருட்களை. ஆமாம். டிரக்ஸ். அதை அண்டவே விடாதீர்கள்.  அது உங்களை அதல பாதாளத்தில் தள்ளிவிடும்... மீளவே முடியாத பள்ளத்தில்!  யோசியுங்கள்.. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இருக்கிறது. அதை வளப்படுத்துங்கள். வீணாக்காதீர்கள்.. டிரக்ஸ் வலையில் விழுந்தவர்கள்  மீளவே முடியாது..... இது வரை கேட்டதற்கு நன்றி.. ஒரு நிமிஷம்.. போதை பொருள்களை அண்டவே விடமாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்வீர்களா?” அப்படி என்றால் ‘யெஸ்’ என்று சொல்லுங்கள். இது உங்களுக்கு நீங்களே தரும் பரிசு” என்று சொல்லி முடித்தார். 
அமைதியாகக் கேட்டுகொண்டிருந்த  மாணவர்கள் ஒரே குரலில் “ யெஸ்.. பாப்.. தேங்க் யூ”: என்றார்கள்.

ஒரு பஸ் டிரைவரின் மனித நேயம்  புல்லரிக்கச் செய்தது. நம்ப மாட்டீர்கள், அடுத்த  நாலைந்து மாதம் ராபர்ட்டின் பஸ்ஸில் போனபோதெல்லாம் அவர் இப்படிச் சொல்வதையும் மாணவர்கள் ‘யெஸ்’ என்று சொல்வதையும் கேட்டேன். ஒவ்வொரு தடவை ராபர்ட் பேசும்போதும், முதல் தடவையாகப் பேசுவது போல் ஆர்வத்துடனும் கனிவுடனும் பேசுவதைக் கண்டு வியந்தேன். மாணவர்களும் “ஆரம்பிச்சுட்டார்யா..” என்று அலுத்துக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டதையும் கவனித்தேன்.
ராபர்ட்டின் அறிவுரை பல மாணவர்களை நல்வழிப்படுத்தி இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை!

7 comments:

 1. நம்ம ஊர் ஆட்டோ ஓட்டுனர்களை பொட்டலம் கட்டி‍ அங்கே அனுப்பி ராபர்ட்டிடம் டியூசன் எடுக்க சொல்ல வேண்டும்.
  ஜெ.பாபு
  கோவை 20‍

  ReplyDelete
 2. When someone speaks, LISTEN!
  - is the best character always...

  Dk

  ReplyDelete
 3. கடுகு ஸார்,

  அருமையான பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  ReplyDelete
 4. நம் நாட்டின் ஜனத்தொகை, ஏழ்மை, படிப்பறிவின்மை, மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கட்டாயப் பாடமாக படிப்பிக்காத ஆசிரியர்கள், வருமானம் கணக்கில்லாத பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளை கவனித்து நல்ல வழியில் செலுத்தாதது, அரசியல்வாதிகளின் சுயநலத்திற்கு பயன்படும் இளைஞர்கள், போலி மதவாதிகள் - இவற்றை வைத்துக்கொண்டு நம் நாட்டிலும் இதை எதிர்பார்ப்பது நம் தவறுதான். இன்று எங்கு பார்த்தாலும் ஊழல்வாதிகள், சுயநலவாதிகள், மற்றவரை ஒழித்து முன்னேறத் துடிப்பவர்கள் இவர்கள் தான் மலிந்து இருக்கிறார்கள். கொஞ்ஜம் தைரியமான நேர்மையாளர்களை தீர்த்துக்கட்டி விடுகிறார்கள். மற்றவர்கள் என்னைப் போல கோழைகளாய் தனிமையில் இதற்கு என்ன / என்று முடிவு என்று வருந்திக்கொண்டிருக்கிறோம். - ஜெ.

  ReplyDelete
 5. "ஒவ்வொரு தடவை ராபர்ட் பேசும்போதும், முதல் தடவையாகப் பேசுவது போல் ஆர்வத்துடனும் கனிவுடனும் பேசுவதைக் கண்டு வியந்தேன்.மாணவர்களும் “ஆரம்பிச்சுட்டார்யா..” என்று அலுத்துக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டதையும் கவனித்தேன்".

  The quality of a Society which realizes the significance of "Change".

  Excellently quoted. (Sorry to comment in English)

  ReplyDelete
 6. ராஜ சுப்ரமணியன்October 27, 2010 at 10:39 AM

  மிகப் பயனுள்ள நல்ல ஒரு பதிவு. நன்றிகள்.

  ReplyDelete
 7. நம் தமிழகத்துகு இன்றைய தேவை இதுதான். நல்ல பதிவு. நன்றி.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!