October 07, 2010

தபால் தலை



சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன்பு சென்னை ஜி.பி,ஓ.வில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். முதல் நாள் உதவி போஸ்ட்மாஸ்டரிடம் அழைத்துப் போனார் ஹெட் கிளார்க். போகும்போது கட்டடத்தின் உயர்ந்த கூரையையும். பார்சல், மணீயார்டர், போஸ்டல் ஆர்டர்  செக்ஷன்களையும், ‘கவுன் டர்’களையும் மலைப்புடன் பார்த்தபடி சென்றேன். எங்கு பார்த்தாலும் பேப்பர் கட்டுகள்.. பீரோக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன..  மேஜை, நாற்காலிகள் கிளைவ் காலத்தைச் சேர்ந்தவைகளாக இருந்தன. ஒரே இரைச்சல். டமால்,. டமால் என்று முத்திரை குத்தும் ஓசை வேறு. பெரிய ஹாலில் சுமார் 50,60 தபால்காரர்கள், தபால்களைப் பிரித்துக் கொண்டும் ‘பீட்’ பிரகாரம் அடுக்கிக்கொண்டும் தமிழிலும், தெலுங்கிலும் பேசிக்கொண்டிருந்தார்கள்.(ஆம், தெலுங்கும் ஜி. பி. ஓ.வின் முக்கிய மொழியாக இருந்த காலகட்டம் அது! .”ஐயோ இந்த புராதன கட்டடத்தில், இந்த சத்தத்தில் எப்படி வேலை செய்யப் போகிறோம் என்று லேசான கவலை ஏற்பட்டது. சம்பளம் ரூபாய் 55 என்று தெரிந்தபோது இடிந்து போனது தனிக்கதை. மூன்று மாதத்திற்குப் பிறகு பயிற்சி காலம் முடிந்து விட்டது என்று கூறி சம்பளம் 125 ரூபாயாக ஆக்கப்பட்டது.
    வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குப் பிறகு ஜி. பி. ஓ.  வின் அகன்ற படிகளில் ஏறும் போது இடது பக்கம் தரை தளத்தில் பளிச்சென்று ஒரு அறை இருப்பதைப் பார்த்தேன். அந்த அறையின் மேஜை நாற்காலிகள் பள பள என்றிருந்தன. ட்யூப் லைட்டுகள் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன. கண்ணாடி போடப்பட்ட போர்ட்டுகளில் தபால் தலைகள் அழகாக வைக்கப்பட்டிருந்தன வெளியே போர்ட்டில்  PHILATELIC BUREAU  என்று எழுதப்பட்டிருந்தது. ஓஹோ,, இது  தபால் தலை சேகரிப்பவர்களுக்காக விசேஷ விற்பனை அறை என்று தெரிந்து கொண்டேன். அவர்களுக்கென்ன விசேஷ ராஜ மரியாதை என்று எண்ணிக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது. தபால் தலை சேகரிப்பது  KING OF HOBBIES AND HOBBY OF KINGS  என்று!. எனக்கென்னவோ தபால் தலை சேகரிப்பதில் ஆர்வம் ஏற்படவில்லை. ( நான் ராஜாவாக இல்லாததும் ஒரு காரணம்!) சில வருடம் ஜி. பி. ஓ. வில் குப்பை கொட்டிக்கொண்டிருந்து விட்டு டில்லி சென்றேன்.
அங்கு  பார்லிமென்ட் வீதி  தபால் நிலையம் எங்கள் அலுவலகத்தின் தரை தளத்தில் இருந்தது. புதிய தபால் தலைகள் வெளியிடும் போது அங்கு நல்ல கூட்டம் இருக்கும், தபால் நிலையத்தின் அகன்ற படிகளில் நிறைய பேர் பழைய தபால் தலைகளைப் பரப்பி வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள், அந்த  குவியல்களில் தேடித் தேடி தேவையான தபால் தலைகளை பலர்  வாங்கிக் கொள்வார்கள். ஆளைப் பார்த்து விலையைச் சொல்லுவார்கள் இந்த வியாபாரிகள். இவர்களில் பலர் மற்ற நாட்களில் அயல் நாட்டு தூதரகங்கள் உள்ள வீதிகளில்  சதா அலைந்து கோண்டிருப்பார்கள். தூதரகங்களின் அருகில்  உள்ள. குப்பைத்தொட்டிகளில் உள்ள தபால் உறைகளை எடுத்துக் கொண்டுபோய் தபால் தலைகளை ஜாக்கிரதையாக எடுத்துச் சேகரிப்பார்கள் என்று பின்னால் தெரிந்தது.
என்னுடன் பணி புரிந்து கொண்டிருந்தவர்கள் தபால் தலைகளையையும் முதல் நாள் கவர்களையும்  வாங்குவார்கள். இருந்தும் எனக்கு இந்த ஹாபியின் மீது ஆர்வம் ஏற்படவில்லை.
எழுத்துth துறையில் ஆர்வம் இருந்ததால்  புத்தகசாலைகளே கதி என்று இருந்தேன். குமுதம், தினமணி கதிர், கல்கி என்று பல பத்திரிகைகளில் என் எழுத்துகளுக்கு இடம் கிடைத்தது. டில்லியில் ஓரளவு பெயர் தெரிந்த ஆசாமியானேன்.
இந்த சமயத்தில் எங்கள் அலுவலகத்தில் இருந்த ஒரு உயர் அதிகாரி – அவர் தமிழர் – என்னைக் கூப்பிட்டு அனுப்பினார், போய்ப் பார்த்தேன்.
“ நீங்கள் தமிழ் பத்திரிகைகளில் எழுதுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்… ஒரு
  ஒரு சின்ன உதவி..” என்றார்.
“உதவியா?.. நான் செய்ய வேண்டுமா?” என்று கேட்டேன்.
“ பூட்டானிலிருந்து ஒரு பெரிய தபால் அதிகாரி வந்திருக்கிறார். அவர் நம்ம ஊர்தான்..அவர் பூட்டானில் புது விதமான தபால் தலைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவை 3-டி தபால் தலைகள். உலகிலேயே முதல் முறையாக இப்படிப்பட்ட தபால் தலைகள் வெளியாகி இருப்பதால், அவைகளுக்கு ஏகப்பட்ட டிமாண்ட். பூட்டான் தபால் இலாகா நினைத்துப் பார்த்திராத அளவு வருவாயாம்…அவரைப் பற்றி நீங்கள் எழுதவேண்டும்.. அவர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்…”
பிறகு அந்த அதிகாரியைப் பேட்டி கண்டு எழுதினேன். இந்த விவரங்கள் இந்தப் பதிவைப் பொருத்தவரை அவ்வளவு முக்கியமானவை அல்ல.  அவர் எனக்கு நாலைந்து 3-டி- தபால் தலைகளைக் கொடுத்தார்.. அதைப் பார்த்த தபால் தலைப் பித்தர்கள் ”இதை பத்திரமாக வைத்திருங்கள். பின்னால் விற்க விரும்பினால் நல்ல விலைக்குப் போகும்.” என்றார்கள். ஆகவே புதையலைப் பூதம் காப்பதுபோல் அவற்றைக் காத்து வருகிறேன்.
தபால்.தலை அத்துடன் என்னை விடவில்லை.  ஒரு நாள் ஒரு வங்காள அதிகாரி என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். “ அடுத்த மாதம் துர்கா பூஜை வருகிறது. ஆர்.கே புரம் கமிட்டியின் சேர்மன் நான். எனக்கு ஐந்தாறு போஸ்டர்கள் எழுதித் தரவேண்டும்..,நீங்கள் ஒரு லெட்டரிங்க் ஆர்ட்டிஸ்ட் என்று கேள்விப்பட்டேன்.” என்றார். “ அதற்கென்ன.. எழுதித் தருகிறேன்” என்றேன். (அந்த அதிகாரி போர்ட் மெம்பர்!).

பேப்பர், பெயிண்ட். பிரஷ் எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்.  நான் எழுதிக் கொடுத்தேன். என்னுடன்  வேலை செய்த மஜூம்தாரிடம் ஒரு போஸ்டரை வங்காள மொழியில் எழுதித் தரும்படி சொன்னேன்.. அவர் எழுதிக் கொடுத்ததைப் பார்த்து  ஒரு வங்காள மொழி போஸ்டரையும் நானாகவே  தயார் பண்ணிக் கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் பூரித்துப் போனார்.
சில வாரங்கள் கழித்து அவர் மறுபடியும் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.. மூக்கால் அழுது கொண்டே போனேன்..
“ நாளைக்கு ஒரு சர்க்குலர் வரும். தபால்தலை டிசைன் செய்ய ஒருத்தரை நியமிக்கப் போகிறோம். அதற்கு நீங்கள் அப்ளை செய்யுங்கள்.” என்றார். “ ரொம்ப தாங்க்ஸ் சார்.. நிச்சயமாகச் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு, துள்ளி குதித்து கொண்டே வந்தேன். வேலை கிடைத்தால் எந்தெந்த மாதிரி ஸ்டாம்ப்களை,. எப்படிப் போடலாம் என்று நான் கற்பனையில் இறங்கிவிட்டேன்.
அந்த வேலைக்கு விண்ணப்பம் அனுப்பினேன். சுமார்  ஒரு மாதம் கழித்து அறிவிப்பு வந்தது. அந்த வேலைக்கு வேறு ஒருவர் (சோப்ரா?) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.  எனக்கு ஏமாற்றம்.
ஆபீசர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.. “வெரி ஸாரி… உங்களை அப்பாயிண்ட் பண்ணமுடியவில்லை. மிஸ்டர் .(ஒரு மெம்பரின் பெயரைக் குறிப்பிட்டு)… இந்த வேலையை சோப்ராவுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்.  அவர் எனக்கு சீனியர் மெம்பர். .. அந்த ஆசாமி அவர் வீட்டுக் கலியாணத்தில் போட்டோ எடுத்துக் கொடுத்தாராம்.” என்று லேசான நக்கலுடன் சொன்னார்..
இந்த ஏமாற்றமே எழுத்துத்துறையில் தீவிரமாகச் செயல்படச் செய்தது. .ஏமாற் றத்திற்கு  நான் இப்போது  நன்றி தெரிவிக்கிறேன்!

தபால் தலை தொடர்பான இரண்டு  துணுக்குகளைக்   கீழே தருகிறேன்.

தலையில் தப்பா? மதிப்பு அதிகம்.தபால் தலைகளில் சில சமயம் தவறுகள் ஏற்படுவது உண்டு.. அச்சுப் பிழை, எழுத்துப் பிழை, படத்தில் தவறு என்று ஏதாவது இருந்து விட்டால் அந்த தபால் தலைகளுக்குத  அதிக பணம் கொடுத்து தபால்தலை சேகரிப்பவர்கள் வாங்கிக் கொள்வார்கள். சிலர் இப்படிப்பட்ட தபால் தலைகளை மட்டுமே சேகரிப்பார்கள்.. உதாரணத்திற்கு ஒரு தப்புடன்  அச்சான தபால் தலைப் படத்தை இங்கு தந்துள்ளேன். அதில் என்ன தவறு என்று கண்டு  பிடியுங்கள். (விடை கடைசியில்)
யார் அந்த பைத்தியக்கார ஆசாமி?
தபால் தலை சேர்க்கும் ஹாபியை HOBBY OF KINGS  என்பது சரி. எந்த மன்னராவது  ஆர்வமாக இதில் ஈடுபட்டிருக்கிறாரா என்றால் சட்டென்று யாரையும் சொல்லமுடியாது,  ஒருவரைத் தவிர. அவர் ஐந்தாம் ஜார்ஜ் விக்டோரியா மகாராணியின் பேரனும், பின்னால் பிரிட்டனின் மன்னராக  பதவி ஏற்ற ஜார்ஜ்.  1910 முதல் 1936 வரை ஆண்டவர்  இவர்.  இவர் தபால் தலைப் பித்தர்.   தான் சேகரித்தத் தபால் தலைகளை  328 ஆல்பங்களில் ஒட்டி வைத்திருந்தாராம்.
ஒரு சமயம் மன்னரிடம் அவருடைய முக்கியமான உதவியாளர் ஒரு செய்தியைச் சொன்னார்.
”பேப்பரில் இன்று ஒரு செய்தி வந்திருக்கிறது. மாரிஷியஸ் நாட்டின் அரிய  இரண்டு பென்ஸ் தபால்தலையை  ஒருவர் 1400 பவுண்ட் கொடுத்து வாங்கி இருக்கிறாராம்…. சரியான பைத்தியக்கார ஆசாமியாக  இருக்கவேண்டும்:” என்று அவர் சொன்னதும் ---
மன்னர் ஜார்ஜ்,: ”ஆமாம்….ஆமாம்.. நானும் அந்த செய்தியைப் பார்த்தேன்….அந்த பைத்தியக்கார ஆசாமி நான்தான்!”  என்று  குறும்புப் புன்னகையுடன் சொன்னாராம்!
பி.கு: இன்றைய தேதியில் அந்த தபால் தலையின் மதிப்பு” சுமார் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் பவுண்ட்டாம்


( தபால் தலையில் உள்ள தவறு:  கையில் ஆறு விரல்கள் உள்ளதைக் கவனியுங்கள்!)

10 comments:

  1. Sir,
    Stamping post (Muthirai article), could see your stamp behind story of stamps)

    Kothamalli

    ReplyDelete
  2. நீங்கள்தான் இந்த தகவலை நேரடியாக தட்டச்சு‍ செய்தீர்களா அல்லது‍ மண்டபத்தில் நீங்கள் சொல்ல வேறு‍ யாராவது‍ அதை செய்தார்களா? எனக்கு‍ தெரிந்தே நிறைய எழுத்துப் பிழை. சுட்டிக் காட்டியதற்கு‍ மன்னிக்கவும். எழுத்துப் பிழை என்றால் லேசான கோபம் வந்து‍ விடுகிறது.
    ஜெ.பாபு
    கோவை

    ReplyDelete
  3. பாபு அவர்களுக்கு, நன்றி. தட்டச்சு .. அல்ல அல்ல . தப்பச்சு செய்தது நான்தான். இப்போது திருத்தி இருக்கிறேன். இன்னமும் தவறுகள் இருந்தால் தெரிவிக்கவும். சரி செய்து விடுகிறேன்.

    ReplyDelete
  4. எவ்வளோ வேலை பாத்தீங்க?

    ReplyDelete
  5. எப்பவும் போல தகவல் களஞ்ஜியம்மான பதிவு! சுவாரசியமானதும். உங்களுக்கு தகுந்த போஸ்டிங் வாங்கித்தர முடியாத அதிகாரி வருத்தப் பட்டு மன்னிப்பு கேட்டது அவரையும் உயர்த்திவிட்டது.
    இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்துகொண்டு, இவ்வளவு சகஜமாக முகம் தெரியாத என்னைப் போன்றவர்களின் கருத்துகளையும் படித்து பதில் அளிக்கும் நீங்கள் க்ரேட்! (பூட்டான் 3டி ஸ்டாம்ப் இன்றைய பதிப்பு சில பல கோடிகள் இருக்கும் என்பது என் எண்ணம்!)
    - ஜெகன்னாதன்

    ReplyDelete
  6. Jagannathan said... அவர்களுக்கு,
    உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி. அதைப் போடாமல் இருந்துவிடலாம எண்று நினைத்தேன்...
    ஏதோ என் அனுபவங்களை எழுதி வருகிறேன். பெரிய இலக்கியம் படைத்து விடவில்லை.

    ReplyDelete
  7. உங்கள் பதிவை படித்தப்பின் எனக்கு சுஜாதாவின் ஒரு சிறுகதைதான் ஞாபகத்திற்கு வருகிறது...!(விக்டோரியா தலைகீழ்?)

    ReplyDelete
  8. வணக்கம் அய்யா!
    நலம்தானே! பார்த்து(அதாவது எழுதி) நாளாகின்றன!
    ஒரு சந்தேகம்...ஆறு விரல்கள், சாத்தியம்தானே?
    அதில் என்ன தவறு இருக்கமுடியும்?
    நான் என்ன கவனிக்க தவறுகிறேன்?

    Essex Siva

    ReplyDelete
  9. Essex Siva அவர்களுக்கு, எல்லாருக்கும் ஆறு விரல்கள் இருப்பதில்லயே. படத்தில் உள்ள பிரமுகருக்கு 6 விரல்கள் இருந்திருந்தால்,
    படத்தில் தவராக் வரைந்திருப்பதாக தபால் தலைப் பிரியர்கள் குறிப்பிட்டு இருக்கமாட்டார்களே!

    ReplyDelete
  10. அந்த 3D ஸ்டாம்ப்பை இன்னும் வைத்திருக்கிறீர்களா?

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!