September 09, 2010

ஒரு ஹீரோ வில்லனாகப் பார்க்கிறார் -கடுகு

அன்று நான் பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த போது என் அருமை நண்பர் எழுத்தாளர் ஏகாம்பரம், "என்னய்யா சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருக்கிறீர்?  என்னுடைய கட்டுரையையா?" என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

"இல்லை சுவாமி.. சினிமாவினால் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று பேராசிரியர் பரிவிராஜக சர்மா, ஆசிரியர் கடிதத்தில் வெளுத்துக் கட்டிப் பிய்த்துக் உதறியிருக்கிறார்" என்றேன்.

"சர்மாவுக்கு வேறு வேலை இல்லை. சரியான பேத்தல் ஆசாமி. சினிமாவினால் கெட்டுப் போவது என்னவோ சுலபமான காரியம் மாதிரி எழுதுகிறார், அவருக்கு மோகன் குமாரைப் பற்றித் தெரிந்திருந்தால் இப்படி எழுதமாட்டார்" என்று கதையை தொடர்ந்தார்.

எழுத்தாளர் ஏகாம்பரம் சொன்ன கதை
      மோகன்குமார் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை, சென்னையில் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான். சினிமாப் பைத்தியம். ஒரு நாளில் இரண்டு படம் கூடப் பார்ப்பான். இப்படித் தொடர்ந்து பல படங்களைப் பார்க்கப் பார்க்க அவனுள் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டன. சினிமாவில் வரும் வில்லன்களும் ரௌடிகளும் கடைசி சீன்வரை அட்டகாசமாகவும் உல்லாசமாகவும் இருப்பதையும் கண்டு தானும் ஒரு ரௌடியாக வேண்டும் என்று முடிவெடுத்தான். அப்போது ஆரம்பித்தது அவனது தொல்லைகள்.

முதலாவது தனது மோகன்குமார் என்கிற பெயரை ஜம்புலிங்கம் அல்லது கபாலி என்று படுவில்லத்தனமான பெயராக மாற்ற விரும்பினான்.

எப்படி மாற்றுவது? எங்கெங்கோ விசாரித்தான். கோர்ட்டில்தான் மாற்றுவார்கள் என்றார்கள் சிலர்.  பிறப்பு-இறப்பு  பதிவு  அலுவலகத்திற்குப்  போகச் சொன்னார்கள் வேறு சிலர்.

கடைசியில் வக்கீல் ஒருவரைப் பிடித்தான். அவர் ஏதோ அஃபிடவிட், நோட்டரி பப்ளிக் என்று பெரிய வார்த்தைகளைப் போட்டு, வக்கீல் ஃபீஸ், காப்பிச் செலவு, இனாம், பக்ஷீஸ், விளம்பர சார்ஜ், அது இது என்று மூவாயிரம் ரூபாய் கறந்துவிட்டார். கடைசியில் அவன் பெயர்   கபாலியாக மாற்றப்பட்டது.

சினிமா ரௌடிகள் நெற்றியிலோ கன்னத்திலோ ஒரு காயத் தழும்பு இருப்பதை பார்த்த மோகன்குமார் அதாவது கபாலி தன் முகத்திலும் அப்படி ஒரு தழும்பு இருக்க வேண்டும் என்று விரும்பினான். பிளாஸ்டிக் சர்ஜரியில் முடியும் என்று யாரோ சொன்னதைக் கேட்டு, மெடிகல் ரெப்ரஸென்டேட்டிவ் மாதிரி பல டாக்டர்களின் கன்ஸல்டிங் அறைகளைப் படையெடுத்தான். ஃபீஸ் செலவானதுதான் மிச்சம். நிஜமான காயம் ஏற்பட்டால்தான் தழும்பு இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.

மனதைத் திடப்படுத்திக் கொண்டு தன் முகத்தில் தானே கத்தியால் கீறிக் கொள்ள முயன்றான். பயத்தில் மயக்கம் போட்டு விழுந்து அடிப்பட்டுக் கொண்டான். எப்படியும் ரௌடியாக வேண்டும் என்ற தீவிரம் கடைசியில் வென்றது. ஒரு நாள் கத்தியால் கீறிக் கொண்டான். துரதிர்ஷ்டம், அது ஸெப்டிக் ஆகிவிடவே ஆறு மாதம் படுக்கையில் படுத்தான். நர்சிங் ஹோம் செலவு எக்கசக்கமாக ஆயிற்று. இருந்தும் அவனுக்கு திருப்தி தரும் வகையில் தழும்பு அமைந்தது.

வில்லன் என்றால் பம்பையாக நிற்கும் கிராப் இருக்க வேண்டும். பாவம், கபாலிக்கு ஷாம்பு விளம்பரங்களில் வருவது போல் அழகான நீளமான சில்க் முடி.

"டேய், இது ஹீரோ ஹேர் ஸ்டைல். பம்பாயில் முடிசந்த் ஹேராலால் என்கிறவர் இருக்கிறார். அவர்தான் இந்தியாவிலேயே பெரிய ஹேர் ஸ்பெஷலிஸ்ட். அவரைக் கேட்டுப் பார்" என்றார்கள்.

பம்பாய் போய், பர்ஸை பிக்பாக்கெட் விட்டு அவதிப்பட்டு,  முடிசந்த் ஹேராலாலை  ஒரு சந்தில் கண்டுபிடித்து மூன்று மாதம் சிகிச்சை பெற்றான். சொல்லக் கூடாது. முடிசந்த் அபாரக் கலைஞர். ஜம்புவின் தலையைப் பயங்கரமாக மாற்றி அமைத்தார்.

சென்னை வந்தததும் ஜம்புவின் நண்பர்கள் ஒரு கணம் அசந்து போய்விட்டார்கள்.

"சரி, ஜம்பு கையில் ஏதாவது படம் பச்சை குத்திக் கொள்வதுதான் ரௌடிகளின் லட்சணம். சினிமாவில் பார்த்திருப்பாயே.. தேள், பாம்பு, கத்தி, கபாலம், புலி போன்று ஏதாவது பச்சை குத்தியிருக்குமே" என்றதும், "ஆமாம், மறந்து போய்விட்டேன்" என்று சொல்லிவிட்டு பச்சை குத்துபவர்களைத் தேடி அலைந்தான். சுலபத்தில் அகப்படுவார்களா? கடைசியில் ஒரு ஆசாமி `செந்தேள் படம்' பச்சை குத்த ஒத்துக் கொண்டார்.

"சாம்மி... இதும்மாதிரிப் படங்களை பச்சே குத்தோணமின்னா நம்ப குலதெய்வம் பச்சியம்மனுக்கு வாத்து, ஆடு, கோளி கொடுக்கணும். ரொம்ப ஸெலவு ஆவும்."

முன்வைத்த காலைப் பின்வாங்க விரும்பாத ஜம்பு சுமார் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து கையில் செந்தேள் படத்தைப் பச்சை குத்திக் கொண்டான்.

சிங்கப்பூரில் இருந்த நண்பருக்கு கடிதம் எழுதி ட்ரேகன் மாதிரி பயங்கரப் படங்களை அச்சிட்ட லுங்கியை வரவழைத்தான். ரௌடிக்கு முக்கியமானது இம்மாதிரி லுங்கியாயிற்றே! கஸ்டம்ஸில், `லுங்கி' சைனாவிலிருந்து வந்தது என்று சந்தேகப்பட்டு ஆயிரம் விசாரணை செய்து, லுங்கி விலையை விட அதிகப் பணம் சுங்க வரியாக வசூலித்தனர். சிவப்பு பனியன் விலை அதிகமாக இருந்தாலும் சுலபமாகக் கிடைத்துவிட்டது.

"தாயத்து ஒன்றுதான் பாக்கி. நீ நுறு சதவிகிதம் வில்லனாகிவிடுவாய்" என்று நண்பர்கள் சொல்ல, தாயத்து வேட்டை துவங்கினான்.

"தாயத்து செய்யணுமின்னா சுடுகாட்டுலே ராத்திரி பன்னிரண்டு மணிக்கு பூசை பண்ணி மை எடுத்து வந்து செய்யணும்" என்று சொல்லி ஏகப்பட்ட பணத்தைக் கறந்து ஒரு தாயத்தைச் செய்து கொடுத்தார் ஒருவர்.

கபாலிக்கு ஒரே குஷி. கண்ணாடி முன் நின்று பார்த்தான். அசல் நுறு சதவிகித ரௌடிதான்.

"ஆஹா! நான் ஒரு ரௌடி.. ரௌடி" என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டே அறையில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த போது, அவனுடைய நண்பன் ஒருவன் அங்கு வந்து, "ஜம்பு, நீ ரௌடியாக உருவம் பெற்றால் போதுமா? உன் குரல் மாறவேண்டும். கொட்டாங்கச்சியைத் தரையில் தேய்ப்பது போல் குரல் இருப்பவன்தான் சினிமாவில் ரௌடியாக இருப்பான். தொண்டை கட்டிய தவளைக் குரலாவது இருக்க வேண்டும். இரும்பை ராவுகிற குரலினிமை கூட இல்லாவிட்டால் எப்படி?" என்றான்.

`வாய்ஸ் தெரபிஸ்ட்' என்கிற   குரல் டாக்டர் டில்லியில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு டில்லி சென்றான்.

"கரகரப்புக் குரலாக மாற்றுவது சுலபமில்லை. ஆஸிட் மிக்சர், கிளாஸ் மாத்திரை, கருங்கல் பவுடர் தெரபி என்கிற பலவித ட்ரீட்மெண்ட் செய்யணும். பத்தாயிரம் ரூபாய் செலவாகும்" என்றார்.

அவ்வளவுதான். ஜம்பு ஒரே ஓட்டமாகச் சென்னைக்கு ஓடி வந்துவிட்டான். "ரௌடியாவது இவ்வளவு கஷ்டமா? சினிமாவைப் பார்த்து ரௌடியாக வேண்டும் என்று சுலபமாக நினைத்து விட்டோமே. போதுமடா சாமி. நாம் நல்லவனாகவே இருந்துவிடலாம்" என்று முடிவெடுத்தான். பழையபடி மோகன் குமாராகிவிட்டான்.
*                *                  *
எழுத்தாளர் ஏகாம்பரம் கூறிய மோகன்குமாரின் கதையைக் கேட்ட பரிவிராஜக சர்மாக்களே! இனிமேலும் நீங்கள் சொல்லுவீர்களா, சினிமாவை பார்த்து இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று?

அது அவ்வளவு சுலபமான காரியமில்லை!

12 comments:

  1. இது கதையா...அல்லது உங்கள் சொந்தக்கதையா....?

    ReplyDelete
  2. ஹே நானும் ரவுடிதான், ரவுடிதான் என கூவ ஆசைப்பட்டவரின் பில்டிங் ஸ்ட்ராங்காக இருந்தாலும், பேஸ்மெண்ட் படு‍ வீ்க்காக இருந்தது‍ தமிழக மக்களின் துரதிர்‌ஷ்டம்தான்.
    ஜெ. பாபு
    கோவை 20.

    ReplyDelete
  3. VENG said... இது கதையா...அல்லது உங்கள் சொந்தக்கதையா....? ==

    ஆமாம்...சொந்தக் கதைதான். ஹீரோவாகவே நடிக்க தயார்.
    எந்த தயாரிப்பாளர்க்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதோ!

    ReplyDelete
  4. அட! ப்ளாகுக்கு வந்துட்டீங்களா கடுகு.காம்லே தேடிண்டு இருக்கேன்!

    ReplyDelete
  5. திவா said...அட! ப்ளாகுக்கு வந்துட்டீங்களா கடுகு.காம்லே தேடிண்டு இருக்கேன்! >>

    ஆமாம்,. இப்பதான் தெரியுமா? எல்லா போஸ்டிங்கையும் படியுங்கள்.

    ReplyDelete
  6. //ஆமாம்,. இப்பதான் தெரியுமா? எல்லா போஸ்டிங்கையும் படியுங்கள். //
    ஆமாம். இப்பதான் தெர்ரியும்.
    ஆனா அதுக்கு இவ்வளவு பெர்ரிய தண்டனையா? :-))
    ஏன் வலைத்தளத்தை விட்டுட்டீங்க?

    ReplyDelete
  7. ஆமாம்,. இப்பதான் தெரியுமா? எல்லா போஸ்டிங்கையும் படியுங்கள்.
    // இது!!! . கடுகு சார். நிறைய எழுதுங்கோ. நல்ல எழுத்தைப் பார்த்து நாளாச்சு. தம்பி திவா சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

    ReplyDelete
  8. திவா அவர்களுக்கு,
    கடுகு.காம் என் தளம் இல்லை.

    ReplyDelete
  9. // கடுகு.காம் என் தளம் இல்லை. //
    :-O
    மர்மமா இருக்கே!
    நீங்க நகைச்சுவை கதை மட்டும்தான் எழுதுவீங்கன்னு நினைச்சா மர்மக்கதைகூட எழுதறீங்க!

    ReplyDelete
  10. //தம்பி திவா சொல்லித்தான் எனக்குத் தெரியும். //
    ஆமாம். பஸ்ஸிலே உங்க தலை கொஞ்சம் உருண்டது! :-))

    ReplyDelete
  11. kadugu.com is available now. Anyway we all get you here.

    Shan

    ReplyDelete
  12. shan,
    you did a google search. did you click the link?

    This domain name expired on Aug 27 2010 11:58PM hihihihihhi!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!