July 14, 2012

பெசன்ட் நகர் ஒலிம்பிக்ஸ்


சிங்கப்பூரில் தேள் கொட்டினால் பெசன்ட் நகரில் நெறிகட்டுமா? என்ற கேள்வியை என்னிடம் யாராவது கேட்டால், "நிச்சயமாக, சந்தேகமில்லாமல் கொட்டும்' என்பேன். இது அனுபவ பூர்வமாக நான் அறிந்த உண்மை. இந்த உண்மைக் (கண்ணீர்) கதையை உங்களிடம் சொல்லாவிடில் என் துக்கம் தீராது.

காலையில் நான் பேப்பரை எடுத்தால் போதும், அது ஒரு ரிமோட் கண்ட்ரோல் மாதிரி வேலை செய்து உடனே என் அருமை மனைவி கமலாவைக் கத்தச் செய்து விடும்! அடுத்த கணம், அதைக் கீழே வைத்து விட்டு உள்ளே போய், "என்ன கமலா, மிக்ஸி சுவிட்சைப் போடணுமா?'' என்று கேட்டால் கத்தல் கொஞ்சம் குறையும்.
அப்படித்தான் அன்றொரு நாள் -- (பஞ்சாங்கத்தைப் பார்க்க வேண்டும், அன்று எட்டுக் கிரகங்கள் ஒன்று கூடி இருந்தனவா என்று!) -- நான் பேப்பரை எடுக்க, கமலா ஹை-ஃபியாக (அல்லது ஹை-பிசாசாக) மாறி "ஏன்னா... உங்களைத்தான். என்னதான் பேப்பரிலே இருக்குமோ! கத்தறது காதில் விழுந்தால்தானே'' என்று கத்தினாள். அதைத் தொடர்ந்து "நாசமாய்ப் போக'' என்று சபித்தாள். யாருக்கு 'ஆசீர்வாதம்' வழங்குகிறாள் என்று யோசித்துக் கொண்டே சமையலறைப் பக்கம் சென்றேன். என்னை எத்தனையோ விதமாகத் திட்டியிருந்தாலும், 'நாசமாய்ப் போக' என்று திட்டமாட்டாள். காரணம், அவளுக்கு என் மேல் அளவு கடந்த ஆசை!
"என்ன கமலா, யாரைத் திட்டறே?''
"யாரையாவது கீரையாவது... எல்லாம் எதிர் வீட்டுப் பசங்களைத்தான்... கிரிக்கெட் ஆடறாங்களாம்... நம்ப வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைச்சுடுத்தூங்க... பெரிய விளையாட்டு வீரர்கள்னு நினைப்பு...'' என்றாள் நிஷ்டூரமாக.
"போகட்டும் கமலா, ஐந்து ரூபாய் கண்ணாடி'' என்றேன்.
"இன்னிக்கு உடைச்சாங்க அம்பது ரூபாய் கண்ணாடியை... நாளைக்கு அம்பதாயிரம் ரூபாய் கண்ணாடி...''
மைசூர் மகாராஜா மாளிகையில் கூட ஐம்பதாயிரம் ரூபாய் கண்ணாடி இருக்குமா? என்று சந்தேகம். இந்த மாதிரி சந்தேகங்களை நான் சந்தேகங்களாகவே வைத்திருப்பது வழக்கம்!
"பசங்கதானே...போகட்டும் விடு. விளையாட்டிலே இருக்கிற ஆர்வத்திற்கு நாம் ஊக்கப்படுத்தணும். இப்போ சிங்கப்பூர் ஒலிம்பிக் கேம்ஸ்லே பாரு சின்ன சின்ன நாடெல்லாம் எப்படி பிரமாதப்படுத்தறது...''
நான் முடிக்கவில்லை. காரணம், பெட்ரூமிலிருந்து வந்த "டமால்' ஓசை. அதைத் தொடர்ந்து சலிங், சலிங் என்று கண்ணாடிகள் உடையும் ஓசை!
"நாசமா...'' என்று ஆரம்பித்தவன், சட்டென்று நாவை அடக்கிக் கொண்டு பெட்ரூமிற்குப் போய்ப் பார்த்தேன். முறிந்த காதலர்களின் இதயம் போல நூறு சுக்கல்களாகக் கண்ணாடி உடைந்திருந்தது. வெளியே சில சிறுவர்கள் பி.டி. உஷாவை மிஞ்சும் வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள்! எனக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது.
இந்தச் சமயம் என் வீட்டுக் காலிங்பெல் விடாமல் அலறியது. இப்படிச் சிறிதும் நாசுக்கு இல்லாமல் மணியை என் மைத்துனன் தொச்சுதான் அடிப்பான். கமலா ஓடிப் போய்க் கதவைத் திறந்தாள்.
"ஹலோ அத்திம்பேர்..ஹௌ ஆர் யூ...'' என்று அட்டகாசமாகக் கேட்டான்.
"ஜாக்கிரதைடா தொச்சு...கிட்டே போகாதே. அத்திம்பேருக்கு இருக்கிற கோபத்திலே குதறிக் கிழிச்சுடப் போறார்'' என்றாள் கமலா.
"கோபமா..எனக்கு என்ன கோபம்? நான்சென்ஸ்'' என்றேன், சட்டென்று முகத்தில் போலியாகப் புன்னகையை வரவழைத்தபடி, (நான் முற்பிறவியில் "ஆயிரம் முகம்' ராம்குமார்!)
"இல்லைடா தொச்சு... தெருவிலே இருக்கிற பசங்க கிரிக்கெட் விளையாடி, கண்ணாடியை உடைச்சிடுத்துங்க... அதனாலே உன் அருமை அத்திம்பேர் நரசிம்மமூர்த்தியாய்...''

"நிறுத்துக் கமலா... விளையாடற வயசில விளையாடணும். பசங்களுக்கு ஊக்கம் கொடுத்தால்தான் பெரிய ஸ்போர்ட்ஸ்மென்னா வருவாங்க. நாட்டிற்கு முதுகெலும்பே அவங்கதான். ஒரு நாடு முன்னேறணும்னா...''
"சபாஷ்... அத்திம்பேர்... சபாஷ்... ஒலிம்பிக் தொடக்கவிழாவில் பேசற மாதிரி பிச்சு உதறித் தள்றீங்களே... அடேடே... இதென்னம்மா காபி கொண்டு வந்திட்டே.. சரி பரவாயில்லை கொடு'' என்றான்.
காபியைக் குடித்துவிட்டு... "அத்திம்பேரே, நான் சரியான சமயத்தில்தான் வந்திருக்கிறேன். இப்போ பெசன்ட் நகரில் ஒரு விளையாட்டு விழா நடத்தலாமான்னு யோசனை இருக்குது... ஒரு பிசினஸ் விஷயமா மூணாவது மெயின்ரோட்லே இருக்கற பூவராகனைப் பார்க்கப் போனேன். அங்கே சில பேர் பேசிண்டிருந்தாங்க. பெசன்ட் நகரில் ஒரு மினி ஒலிம்பிக் நடத்தணும்னு சிங்கப்பூர்லே நடக்கிறதை டிவியிலே பார்த்ததாலே ஏற்பட்ட ஆர்வம்...''
"தொச்சு ! யாருடா பூவராகன்? பவநகர் சமஸ்தான திவானாக இருந்தாரே அவர்தானே...அடேயப்பா, பெரிய பெரிய ஆசாமியெல்லாம் உனக்கு வேண்டியவங்க'' என்று சொன்னேன்.
அப்போது என் அருமை மாமியார், கதவுக்குப் பின்னால் இருந்து கொண்டு, "யாருடா, உன்னோட படிச்சானே கோடி வீட்டுப் பூவராகன் தானே... ÷ம்... இரண்டு பேரும் ஒண்ணாதான் திண்ணைப் பள்ளிக் கூடத்திலே படிச்சிங்க...உனக்குக் கெட்டிக்காரத்தனம் இருந்தது. அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தது... அதனால் தான் திவானாகப் போனான்'' என்று தன் பிள்ளைக்குச் சர்டிபிகேட் வழங்கினாள்.
தொச்சு மட்டும் திவானாகப் போயிருந்தால், பவநகர் சமஸ்தானம் திவாலாகப் போயிருக்கும்!
அம்மா தந்த ஆளூயரப் புகழ் மாலையைக் கண்டு கொள்ளாததுபோல் தொச்சு, "பூவராகனுக்கு ஃபைனான்ஸ் பிரச்னை, மூணு லட்சம் தேவை. ஏற்பாடு பண்ணிக் கொடுத்தேன்... அந்தச் சமயத்தில் அவர் வீட்டிலே சில பேர் இங்கே ஒரு மினி ஒலிம்பிக் நடத்தணும்னு பேசிண்டிருந்தாங்க.. .யாரைத் தலைவராகப் போடலாம்னு கேட்டாங்க... நான் உங்க பேரைச் சொன்னேன் அத்திம்பேர்'' என்றான்.
"என்னப்பா தொச்சு, என்னைப் போய் மாட்டி விடறே?'' என்றேன் பரிதாபமாக.
"அத்திம்பேர்.. நீங்க பெரிய எழுத்தாளர்... பெசன்ட் நகரில் முக்கிய புள்ளி...''
(பல சமயங்கள் "ள்' இல்லாத புள்ளி என்றும் என்னைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறான் தொச்சு)
இந்தச் சமயம் டெலிபோன் மணி அடித்தது தாவிப் போய் அதை எடுத்தான் தொச்சு . இங்கிதம் என்ற வார்த்தை தொச்சுவின் அகராதியில் கிடையாது.
"ஹல்லோ... ஆமாம்... யார் பேசறது... ஆமாம்... பிரபல எழுத்தாளர் அகஸ்தியன் வீடுதான்... ... நீங்களா?... மினி ஒலிம்பிக்ஸ் தானே. அவர் சம்மதிச்சுட்டார்... ஸ்போர்ட்ஸ் என்றால் அவர்  உயிரை விடுவார்... இப்போ வர்றீங்களா.. நோ... நோ... அதெல்லாம் தட்டிக் கழிக்க மாட்டார்'' என்று கூறி விட்டு "அத்திம்பேரே... பூவராகன் நாலைஞ்சு... பிரண்ட்ஸோ வர்றாராம், உங்களோட பேச...'' என்றான் என்னிடம்.
"தொச்சு... இதெல்லாம் என்னப்பா வம்பு?'' என்று முனகினேன்
உடனே கமலா, "ஆமாம்... வம்புதான்... ஹும்... உங்களை ஒரு பெரிய மனுஷனாக்கணும்னு அவனுக்கு அடிச்சுக்கிறது, என்னதான் நீங்க ஆயிரம் கரிச்சுக் கொட்டினாலும்...''
"போதும்.. போதும், கமலா'' என்று ஆத்திரமாக இரைந்தேன்.
"ஏண்டி கமலா, நீ ஏதாவது சொல்றே அவருக்குக் கோபம் வர்றது.. கமிட்டியிலே தானே இருக்கச் சொல்றா.. யாரையாவது கொலை செய்யச் சொல்றாளா என்ன?'' என்று என் மாமியார் திலகம் வார்த்தைகளால் எனக்குச் சூடு போட்டாள்.
நான் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனேன்.
"
"பெசன்ட் நகர் இளைஞர் விளையாட்டு முன்னேற்ற வளர்ச்சிச் சங்கம் என்று பெயரிடப்பட்ட சங்கத்தின் கமிட்டிக்கு என்னைத் தலைவராகப் போட்டார்கள், கமிட்டி மெம்பர்களைத் திருப்திப்படுத்த அவரவர் சொன்ன வார்த்தைகளையெல்லாம் பெயரில் போட வேண்டியதாயிற்று!
"என்ன சார், இளைஞர் சங்கத்திற்கு என்னைப் போய்...''  என்று இழுத்தேன்.
"அந்த மாதிரி பொருத்தமெல்லாம் பார்க்க முடியாது அத்திம்பேர். அப்படிப் பார்த்தால், தமிழைக் கரைச்சுக் குடித்த அகஸ்தியன் பெயரை நீங்கள்...'' என்று தொச்சு ஆரம்பித்தான்.
நான் இடைமறித்துச் சற்று உரத்த குரலில், "எந்த இடத்தில் போட்டிகளை நடத்தறது? செலவுக்குப் பணம்?'' என்று கேட்டேன்.
"இடம் தானே? எதிரே பாங்க் காலனியில் பெரிய மைதானம் இருக்கிறது'' என்று சொல்லி, பெரிய கடமையைச் செய்து விட்டது போல் கைக் குட்டையால் நெற்றியைத் துடைத்துக் கொண்டார், பூவராகன்
(பண விஷயத்தை நைசாக வேறொருவர் மேல் தள்ளி விட்டோம் என்ற ரகசிய மகிழ்ச்சியை அவரால் முழுவதுமாக மறைக்க முடியவில்லை?)
அப்போது ராஜன் என்பவர், "பணம் வசூல் செய்வதில் பூவராகன் எக்ஸ்பர்ட். ஒரு பட்ஜெட் போடலாம்... அந்த அளவு பணத்தைத் திரட்டலாம்'' என்றார்.
"ஆமாம்.. ஆமாம்.. அவர் பெயரிலேயே பூவராகன் இருக்குதே.. பொன் பெயர்ச் செம்மல்'' என்று நான் ஜோக்கடித்தேன்.
"வராகன் என்ற பெயருக்கு முன்னால் பூதான் இருக்கிறது. ஆகவே பொன் வைப்பதற்கு முன்பு பூவைத்தான் வைப்பார்'' என்றார்  ஒரு ஆசாமி.
பூவராகனுக்குக் கோபம் வந்து விட்டது. "ஆமாம். நான் கஞ்சன்தான்.. கமிட்டியிலிருந்து நான் ராஜினாமா செய்து விடறேன். பணம் கொடுக்கப் பயந்து நான் ஓடறேன்னு யாரும் சொல்ல வேண்டாம்... இந்தாங்க என் டொனேஷன்'' என்று சொல்லி 10 பாகமாய் மடிக்கப்பட்டிருந்த இரண்டு ரூபாய் நோட்டை மேஜையில் போட்டு விட்டுக் கிளம்பினார்.
பிறகு அவரைச் சமாதானப்படுத்தியது ஒரு தனிக் கதை. கமலா சூடாகக் காபி கொண்டு வந்து கொடுத்தாள். அதைக் குடித்து விட்டு, "நான் போய் ராஜினாமா செய்கிறேன் என்கிறேனே... பெரிய முட்டாள் .... கமிட்டியில் இருந்தால் அப்பப்போ மிஸஸ் கமலாவின் அருமையான டிகிரி காபி கிடைக்கும்'' என்று கூறி கமலாவிற்கு ஐஸ் வைத்தார்.  
கமலா போடுவது டிகிரி காப்பியுமில்லை, டிப்ளமா காப்பியுமில்லை. போட்டோ காபிதான்!
 பூவராகனும், தொச்சு "ஜாதி"தான் ! ஓசியில் கிடைத்தால் தண்ணீரும் பன்னீர்தான், பினாயிலும் பால்தான்!
அதன் பிறகு கமிட்டி பல விஷயங்களை விவாதித்தது. யார் யார் என்ன வேலை செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டார்கள் எல்லா கமிட்டியிலும் "தலைவர்' இருக்க வேண்டும் என் பெயரைப் போட்டார்கள்... "அவர் தான் பத்திரிகைகளிலே பிரமாதமா எழுதுவார்... நினைச்சா, சி.எம்.மைக்கூட அழைச்சிண்டு வருவார்'' என்று பலவித வார்த்தைகள் உதிர்க்கப்பட்டன. ஐஸ் கட்டிகள் வைக்கப்பட்டன.
 =                                =                                         =
பாங்க் காலனியின் காரியதரிசியைப் பார்க்கப் போனோம். "காலனி மைதானத்தில் மினி ஒலிம்பிக் நடத்தப் போகிறோம்' என்று சொன்னதும், "வெரிகுட்... இப்படித் தான் நமது பசங்களுக்கு ஒரு ஆப்பர்சூனிட்டி தரணும்... செய்யுங்க.. என் சப்போர்ட் உண்டு... மைதானம் தானே... அதுக்கென்ன கமிட்டியில் ஒரு வார்த்தை கேட்டுட்டுக் கொடுத்துடறேன்'' என்றார்.
கமிட்டி மெம்பர்கள் சரியான கல்லுளிமங்கர்கள். ஆயிரம் ஆட்சேபனை சொன்னார்கள். "இன்னிக்கு ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸுக்கு என்று கொடுத்தால், நாளைக்கு ’அம்மனுக்குக் கூழ் வார்க்கிறோம்’ என்று வந்து விடுவார்கள். இல்லை, பாம்பே சேல் நடத்தறோம்னு சொல்வாங்க... இல்லைன்னா வாராந்திர சந்தை நடத்தக் கேப்பாங்க... அப்புறம் ரிகார்ட் டான்ஸ் போடறோம்பாங்க...நோ... நோ...'' என்று தலையாட்டினார்கள். மைதானத்தை என்னவோ வினோபாபாவேக்குப் பூதானம் செய்வது போல் எண்ணிக் கொண்டார்கள்! ஒவ்வொருவரும் தாங்கள்தான் பாங்க் சேர்மன் என்று நினைத்து உதட்டைப் பிதுக்கினார்கள்.
பூவராகன், "சார்...உங்க மைதானத்திற்காக ஒரு சின்ன அன்பளிப்பு 500 ரூபாய் கொடுத்துடறோம்'' என்றார். இன்னும் 50 பைசா கூட சேராத நிலையில்.
தொச்சு, "பூவராகன் ஸார் சொல்றது ரொம்ப கரெக்ட்'' என்றார். (அவனுக்கு இன்னும் பூவராகனிடம் காரியம் ஆக வேண்டிருந்தது!)
காலனி காரியதரிசி  விளக்கெண்ணெய் குடிப்பதுபோல் முகத்தை வைத்துக் கொண்டு, "ஓகே! எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று பெரிய கொடை வள்ளல் போல் சொன்னார்.
அடுத்த பதினைந்து நாள் என் வீடு கலியாண வீடு மாதிரி ஒரே கலகலப்பாகவும், பலர் வருவதும் போவதுமாகவும் இருந்தது. சொல்லக்கூடாது, உண்மையிலேயே ஏகப்பட்ட உற்சாகத்துடன் பல பி.டி. உஷாக்களும், கார்ல் லூயிகளும் பலரும் கலந்து கொள்ள முன் வந்தனர்.
கமலாவுக்கு ஒரே பெருமை.
"உங்களுடைய பெருமை இனிமேல் பெசன்ட் நகர் பூரா பரவி விடும்...'' என்று எனக்கு ஐஸ் வைத்தாள். வருபவர்களுக்கெல்லாம் காபி வேறு வழங்கினாள்.
அக்காவிற்குக் கூடமாட "ஒத்தாசையாக'' இருக்க அங்கச்சி முகாம் போட்டாள். தொச்சு அவ்வப்போது தலை காட்டும் போதெல்லாம் அவன் வயிற்றையும் நிரப்பி, பையையும் நிரப்பி அனுப்பினாள். அடிக்கடி என் காரை எடுத்துக் கொண்டு காட்டாங்கொளத்தூர், கும்மிடிப் பூண்டி என்று ஒலிம்பிக் விஷயமாக (?) போய் வந்தான், தொச்சு.
என் வீட்டு போன் ஓயாமல் சுழன்று கொண்டிருந்தது. (பில் வரும்போது என் தலை சுழலப்போவது நிச்சயம்!)
ஒலிம்பிக்கை நடத்த பல குட்டிக் கமிட்டிகள் போடப்பட்டன. உணவுக் கமிட்டியில் மறக்காமல் தொச்சு தன் பிரஜை ஒன்றைப் போட்டான். (அப்பாடா, எனக்கு ஒரு கவலை விட்டது. உணவுப் பொட்டலங்கள் மீந்து விடுமோ என்று கவலை  இல்லை!)
ஒலிம்பிற்கு இரண்டு தினம் முன்பு குடும்பத்துடன் என் வீட்டிற்குத் தொச்சு வந்து விட்டான்! வீட்டை கிட்டத்தட்ட அன்னதான சமாஜமாக மாற்றி விட்டான்!
**                      ***                                 ***
ஒலிம்பிக் அட்டகாசமாகத் துவங்கியது. அஷ்ட லட்சுமி கோவிலிலிருந்து "ஜோதி' எடுத்து ஓடிவந்து ’ஒலிம்பிக் ஜோதி' கொளுத்தி, ரிடையர்ட் நீதிபதி கே.ஜே. யிடம் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு, விளையாட்டு விழா ஆரம்பமாவதாக அறிவித்தார் -- கிட்டத்தட்ட அரைமணி நேர உரைக்குப் பிறகு!
விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு துவங்கியது. சிறிது தூரம் வந்திருப்பார்கள். அதற்குள் அங்கு ஒரு கசாமுசா... ஏதோ ஒரு குழந்தை ""வென்று அழ ஆரம்பித்தது. முன்வரிசையில் இருந்த ஒருவர் அவளுடைய காலை மிதித்து விடவே அது ஒலிபெருக்கியாக மாறி ""வென்று அழ ஆரம்பித்தது. ஒரு கணம், இவ்வளவு சின்னப் பெண்ணிடமா இத்தனை "வால்யூம்' இருக்கிறது என்று பலர் வியந்தார்கள். எனக்கு வியப்பு ஏற்படவில்லை. காரணம், அந்தக் கத்தல் திலகம், தொச்சுவின் வாரிசுகளில் ஒன்று. அலறல் கேட்ட அடுத்த நிமிஷம் அங்கச்சி அங்கு பாய்ந்து சென்று, "ஐயோ உனக்கு என்னடா கண்ணா ஆச்சு!' என்று பயங்கர முகாரியில் ஓலமிட ஆரம்பித்தாள். அத்துடன் முன் வரிசைப் பையனை "ஏண்டா மிதித்தாய்?' என்று அவன் காதைப் பிடித்தாள். இதைத் தொடர்ந்து பலர் மைதானத்திற்குள் நுழைய அங்கு சின்ன குருக்ஷேத்திரம் உருவாயிற்று. ஒலிம்பிக் கமிட்டி மெம்பர்கள் புகுந்து சமாதானப் பணியில் ஈடுபட்டனர். அரைமணி தாமதத்திற்குப் பிறகு போட்டிகள் ஆரம்பமாயின.
நாலைந்து போட்டிகள் நடந்து கொண்டிருக்கும்போது பிரம்மாண்ட லாரி ஒன்று காம்பவுண்டிற்குள் நுழைந்தது. அது ரயில்வே "கன்டெய்னர்களை"க் கொண்டு வரும் லாரி. யாரோ மாற்றல் ஆகி வந்துள்ளவரின் சாமான்களைக் கொண்ட கன்டெய்னர்கள். லாரி மைதானத்திற்குள் நுழைந்தது.
"நிறுத்தப்பா... ஒலிம்பிக் நடத்தறது தெரியலை'' என்று தொச்சு கத்தினான்.
"எந்த ஒலிம்பிக் நடந்தால் என்னா? சாமானை அன்லோட் பண்ணிட்டு நான் தண்டையார் பேட்டை போவணும்... யாருப்பா கன்டெய்னரைத் தொரங்கப்பா...'' என்று டிரைவர் கத்தினார். திரைப்படங்களில் வரும் அடியாட்களை இவரைப் போலவே மேக்கப் செய்தால், பிரமாத பயங்கரமாக இருக்கும்.
உடனே கமிட்டி அங்கத்தினர்கள் டிரைவரிடம் போய் கெஞ்சினோம். "அதெப்படி சார் நாலு ’அவர்’ களிச்சு அன்லோட் பண்ணச் சொல்றே... நம்ப பார்சல் இன்ஸ்பெக்டர் பெரிய கஸ்மாலம். லேட்டாயிடுச்சுன்னா யாருய்யா ஓவர் டைம் தருவாங்கன்னு கத்துவாருங்க'' என்றார் டிரைவர்.
டிரைவர் போகும் "லைன்' புரியவே, கமிட்டி அவசரமாக ஒரு கிசு கிசு கூட்டத்தைக் கூட்டி, "200 ரூபாய்' "டீ செலவுக்கு' (அதாவது ’ஓ. டீசெலவுக்கு)த் தருவதாகச் சொன்னதால், லாரியை மைதானத்திலிருந்து வெளியே ஓட்டிச் சென்றார்.
இதற்கிடையில் யாரோ இலவச இனிப்புகளை வழங்க ஆரம்பித்து விட்டார்கள். இடைவேளையில் தருவதற்காக வாங்கி வைத்திருந்தது. ஒரு கமிட்டி அங்கத்தினரின் குழந்தை "அப்பா டாஃபீ'' என்று கேட்டதும் தந்தைப் பாசமே உருவான அவர் இரண்டு டாஃபீஸைக் கொடுக்க, விளையாட்டு வீரர்கள் அனைவரும் விளை ’ஈட்டு' (EAT) வீரர்களாக மாறி டாஃபீ மட் டுமல்ல, வடை, மிக்சர், கூல்ட்ரிங் என்று எல்லாவற்றையும் தீர்த்து விட்டார்கள். ஒரே குழப்பம். "எனக்குக் கிடைக்கலை. என் பையனுக்குத் தரலைஎன்று பலர் உரிமையுடன் சண்டை போட்டு வாங்கிக் கொண்டார்கள். இந்தக் கத்தலுக்கிடையே ஒரு கீச்சுக்குரல் "ஏண்டா சனியங்களா, ஆளுக்கு மூணு பொட்டலம் வாங்கிண்டும் பறக்கிறீங்க?'' என்று கத்துவதும், "அடி சனியனே... நீ என்னமோ பணம் போட்டு வாங்கினது போல் பசங்களைத் திட்டறயே'' என்று பாய்ந்ததும் கேட்டது. தொச்சு குடும்பம்!
திரும்பவும் போட்டிகளை ஆரம்பித்தோம். ஒழுங்காக நாலைந்து போட்டிகள் நடந்தன. ஷாட்-புட் போட்டியின் போதுதான் தொல்லை வந்தது. அதை வீசிய பையன் திசை தவறி கூட்டத்தை நோக்கி எறிய, அங்கிருந்தவர்கள் அலறிப் பிடித்து ஓடினார்கள்.. ஒரு திடீர்ப் பணக்காரன் தான் புதிதாக வாங்கிய மாருதி காரை அங்கேயா நிறுத்தியிருக்க வேண்டும்?... ஒரு ஷாட்-புட் உருண்டை மாருதியின் கண்ணாடியின் மேல் விழ அங்கு "தூள்' பறந்தது! அதை ஒட்டி அடுத்த வினாடி சொந்தக்காரரின் வாள், வாள் பிறந்தது!  
கண்டெய்னர் லாரி டிரைவருக்கும், இவருக்கும் ஒரே வித்தியாசம்: மொழிதான்! அவர் தமிழில் கத்தினார். இவர் இங்கிலீஷில்!
கார் கண்ணாடியை ஒலிம்பிக் கமிட்டி செலவில் போட்டுத் தருவதாகச் சொன்ன பிறகுதான் சமாதானமடைந்தார்!
போட்டிகள் ஒருவாறாக ஏழு மணி வாக்கில் முடிந்தன. பரிசுகள் வழங்கப்பட்டபோது நிறைய கப்கள் குறைந்திருந்தன. அவரவர் நான்காவதாக வந்த தங்கள் பெண் அல்லது பிள்ளைக்கும் ஒரு ஆறுதல் பரிசு தர வேண்டுமெனச் சண்டை பிடிக்க "பிரைஸ் கமிட்டி"யின் தலைவனாகிய தொச்சு, " யெஸ்... கொடுத்துடலாம்' என்று சொல்லிவிட்டான். (அவன் வாரிசுகள் மட்டும் ஏழு ஆறுதல் பரிசுகளைப் பெற்றதற்கும் தொச்சுவின் தாராள மனப்பான்மைக்கும் நான் முடிச்சுப் போட்டால், கமலா என்னைக் "கடிச்சுப்' போடுவாள்!)
போட்டியில் வெற்றி  பெற்றும்,  "கப்"கள் கிடைக்காதவர்களுக்கு பின்னால் தருவதாக நான் மைக்கில் அறிவித்தேன். "வாழ்க தலைவர்' என்று பதினெட்டுப் பேர் கத்தினார்கள். அதிலிருந்து பதினெட்டு கப்கள் வாங்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்தது.
லாரி டிரைவர்  டீ செலவு, மாருதி கண்ணாடி செலவு, கப் செலவு, பட்ஜெட்டிற்கு மேல் போய்விட்ட செலவுகள் எல்லாவற்றையும் "அழுத' போதுதான் எனக்கு நெறி கட்டியிருப்பதை உணர்ந்தேன். ஆம், அது தேள் கொட்டியதால் வந்த வினை. சிங்கப்பூரில் தேள் கொட்டியதால் வந்த வினை!

11 comments:

  1. I never get tired of these Thochu, Kamala stories. I have lost count of the number of times I have read abt your earlier two Kamala series.......great stress buster

    Bharath Kumar

    ReplyDelete
  2. அம்மாடி, வரிக்கு வரி இத்தனை நகைச்சுவையா! புன்சிரிப்புடன் படிக்க ஆரம்பித்து, கொஞ்ஜம் வாய்விட்டு சிரிக்கத் தொடங்கி, பிறகு கண்ணில் நீர் வரும்படி சிரித்து, கடைசியில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு விழுந்து புரண்டு சிரிக்கப்போய், வீட்டில் உள்ளவ்ர் எல்லோரும் என்னமோ, ஏதோ என்று பாட ஆரம்பித்துவிட்டார்கள். பேனாவில் வெறும் மை ஊற்றுகிறீர்களா, அல்லது கிச்சு கிச்சு மை ஊற்றுகிறீர்களா! வற்றாத நகைச்சுவை ஊற்று தான். நன்றி. - ஜெ.

    ReplyDelete
  3. அன்புள்ள நண்பர் வல்லபன் அவர்களுக்கு, அகஸ்தியன் என்று உங்கள் கைப்பட எழுதிக்கொடுத்த கமலாவும் கத்தரிக்காய் கூட்டும் என்ற நூல் வல்லபன் அவர்களால் நூல்நன்கொடையாகக் கொடுக்கப்பட்டு(1989) தில்லித் தமிழ்ச் சங்க நூலகத்தில் உள்ளது. அந்தத் தொகுதியில் இடம்பெற்றதுதான் இந்த பெசன்ட் நகர் ஒலிம்பிக்ஸ்.
    ஓர் எச்சரிக்கை/வேண்டுகோள்
    இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்காதீர்கள், மிகவும் போரடிக்கும். விட்டு விட்டு படியுங்கள். கொஞ்சமாக போரடிக்கும். என்ற எச்சரிக்கையையும் மீறி அடிக்கடி எடுத்துப் படித்து புத்துணர்ச்சி கொள்வேன்.

    ReplyDelete
  4. ஷமிம் அன்வர் அவர்களுக்கு: மிக்க சந்தோஷம். வல்லபன் அவர்கள் டில்லித் தமிழ்ச் சங்க நூலகத்திற்குப் பல வருஷங்கள் தீவிர ஈடுபாட்டுடன் சேவை செய்தார். ’வல்லபன் நூலகம்’ என்று கூட பெயர் வைத்து அவர் சேவையையும் நினைவையும் போற்றலாம்.
    பெசன்ட் நகர் ஒலிம்பிக்ஸ் கட்டுரை 25 வருஷத்திற்கு முன்பு எழுதியது. இன்னும் நகைச்சுவை குன்றாது இருக்கிறதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    நூலகத்தில் என்னுடைய ‘கமலாவும் நானும்” புத்தகம் இருக்கிறதா? -- கடுகு

    ReplyDelete
  5. மதிப்பிற்குரிய அகஸ்தியன் அவர்களுக்கு,
    தில்லித் தமிழ்ச் சங்க நூலகம் தீரர் சத்தியமூர்த்தி நூலகம் என்று வழங்கப்பட்டு வருகிறது. வல்லபன் போன்றோர் பாடுபட்டு உருவாக்கிய நூலகம் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது. தங்களுடைய கமலாவும் கத்தரிக்காயும், கமலா கல்யாண வைபோகமே, கேரக்டரோ கேரக்டர் ஆகிய நூல்கள் மட்டுமே உள்ளன. கமலாவும் நானும் இல்லை. தில்லியில் யாரிடமாவது இருக்குமானால் கேட்டுப் பார்க்கிறேன். உங்களுக்காக மட்டுமல்ல,எனக்கு உடனே படிக்கவேண்டுமென ஆவல் ஏற்படுவதால். நன்றி.

    ReplyDelete
  6. ஷமிம் அன்வர் அவர்களுக்கு உங்கள் ஈ-மெயில் விவரங்களை எனக்கு அனுப்பவும். அதை நான் வெளியிட மாட்டேன்.

    ReplyDelete
  7. Can't control laughing while reading this in office. Very good hilarious article. Hope to read out for my children after reaching home.

    ReplyDelete
  8. I was laughing that much loud in office ...my colleagues asked to translate the article ... Struggled a lot to translate this to Swedish people :-)

    ReplyDelete
  9. :)))) Crazy boys of the game சினிமா பார்ப்பது போல இருந்தது, இதைப் படிக்கும்பொழுது!

    ReplyDelete
  10. இது அல்லவோ கதை!

    முசுட்டு குரங்குகளிடம் படித்துக் காண்பித்தால் கூட பல்லைக் காட்டும்

    நகைச்சுவை நடை!!

    அது சரி ! இப்போது ஒலிம்பிக்ஸ் எங்கு நடக்கிறது?

    எல்லாமே ஒலிம்FIX தான் !!!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!