March 05, 2012

பயங்கர(வாதப்) பயணம்

    "ஆமாம்... கல்யாணம் ஆன அடுத்த வாரமே. ஹனிமூனுக்கு சோளிங்கபுரம் அழைச்சுண்டு போனவராச்சே நீங்க... உங்ககிட்ட போய் கேட்டேனே...'' என்று கமலா மூக்கால் அழுது கொண்டே சொன்னாள்.
   "இல்லை... கமலா...'' என்று நான் ஆரம்பித்தேன் சமாதானப்படுத்தும் குரலில்.
    "இல்லை கமலாவுமாச்சு... தொல்லை கமலாவுமாச்சு... இல்லை... இல்லை... இந்த பாட்டைத்தான் நான் எது கேட்டாலும் பாடுவீங்க... ஒவ்வொருத்தர் மாதிரி தீபாவளிக்குப் பட்டுப் புடவை கேட்கிறேனா...? புதுசா அவங்க அவங்க... போட்டு மினுக்கறாங்களே காப்பிக் கொட்டை செயின், அது கேட்கிறேனா...? உம்... நானும் கேட்கக் கூடாது... கேட்கக் கூடாது என்று தான் வாயை மூடிண்டு இருக்கேன். புத்தி பிசகிப் போய்க் கேட்டுட்டேன்... ஸ்வாமிக்குக் கோபம் வந்துடுத்து... வேறு எது இல்லாவிட்டாலும் கோபம் சட்னு வந்துடறது. பரம்பரையிலே ஊறியிருக்கிற குணம்...'' என்று கமலா எங்கள் பரம்பரைக்கே ஒரு "காண்டக்ட் சர்ட்டிபிகேட்' கொடுத்தாள்!
    "கமலா... ஒரே பயங்கரவாதம் தலைவிரித்தாடறது... இப்பப் போய்...''
    "அலை ஓய்ஞ்சு சமுத்திர ஸ்நானம் செய்யற கதை தான்... ஏதோ ஒரு சாக்கு'' என்றாள் கமலா. முகத்தை அஷ்டகோணலாக்கி உதட்டைப் பிதுக்கினாள். லேசாகக் கண்கலங்கினாள்.

 விஷயம் இதுதான். காஷ்மீருக்கு ஒரு டூர் போகச் சிலர் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதில் போக வேண்டும் என்பது கமலாவின் ஆசை.

    மூக்கால் அழுகை, உதடு பிதுக்கல், லேசான கண்கலங்கல்... அடுத்து என்னென்ன வரும் என்று எனக்குத் தெரியாததால், நான் வருமுன் காப்போனாக மாறினேன்.
    "சரி... எவ்வளவு சார்ஜாம்...?''
    "சார்ஜ்லே தள்ளுபடி கூடத் தர்றாங்க. ஏழு டிக்கெட் வாங்கினால்...'' என்று கமலா சொன்னாள்.
    "ஏழு டிக்கெட்டா?... நாம் இருக்கிறது இரண்டு பேர்தானே?''
    "நாம் இரண்டு பேர் மட்டும் போகிறதுக்கு இந்த வயசிலே ஹனிமூனா போறோம்...? தொச்சு, "அங்கச்சி, பசங்களையும் அழைச்சுண்டு வர்றேன் அக்கா... துணையாகவும் இருக்கும் உங்களுக்கு' என்றான். தொச்சுவை நீங்கள் எவ்வளவு கரிச்சுக் கொட்டினாலும் அவனுக்கு நீங்க பத்திரமா போகணும் வரணும்னு கரிசனம் இருக்கு... அவன் வேலையை விட்டு விட்டு (?) துணையாக வர்றேன்னு சொன்னான்.''
    "தொச்சு வர்றானா...? சபாஷ்... கவலை இல்லாமல் போய் வரலாம். சரி... இரண்டு டிக்கெட்டுக்குப் பணம் கட்டிவிடு'' என்றேன்.
    "ஏன் அவனைப் பிரிச்சுப் பேசறீங்க...? ஏழு டிக்கெட் வாங்கினால் என்ன...? அவன் பங்கைத் தந்துடறான்... உங்களுக்கு எல்லாத்துக்கும் கணக்கு... அதுவும் தொச்சு விஷயத்தில் மட்டும்... அதுவே உங்க அக்காவாக இருந்தால் அப்ப வேற கணக்கு... அது வராத கணக்கு... தொச்சு உங்கள் பாக்கியை எப்பவாவது நிறுத்தி வைச்சிருக்கானா?'' என்று காரமாகவும் அதிகாரமாகவும் கமலா கேட்டாள்.
    "இல்லை. கமலா வந்து...'' என்று இழுத்தேன். (தொச்சு எனக்குத் தர வேண்டிய பாக்கிகளை நிறுத்தி வைத்ததே இல்லை. சோபா போட்டு உட்கார்த்தி வைத்திருக்கிறான் - பல வருஷங்களாக!)
    "விடுங்கோ... காஷ்மீரும் வேண்டாம். காஷ் இல்லாத மீரும் வேண்டாம்'' என்று சொல்லியபடியே சமையலறைக்குள் சென்று விட்டாள். (கமலாவிற்குக் கோபம் அதிகம் ஆகிவிட்டால் இப்படிப் புது புது வார்த்தைகளை உபயோகிப்பாள்!)+
    தொச்சு பட்டாளத்திற்கும் சேர்த்து எட்டு டிக்கெட் வாங்கி டில்லி வந்து சேர்ந்து, காஷ்மீருக்குச் செல்ல பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாயிற்று. பஸ் புறப்பட்ட போது இரவு பதினோரு மணி. பஸ் புறப்பட்ட போது இரவு பதினொரு மணி. பஸ் டில்லியின் பல பேட்டைகளுக்குள் புகுந்து பலரைப் பிக்கப் செய்து கொண்டு புறப்பட்டது. (டில்லிக்குள்ளேயே சுமார் 4 மணி நேரம் சுற்றியிருப்போம்!)

    கடைசியாகப் பஸ் அதிபரின் வீட்டிற்குச் சென்று சொல்லிவிட்டு, பெட்ரோல் பங்கில் டீசலை நிரப்பிக் கொண்டு, இரண்டு பெரிய ஜெர்ரிகேனில் டீசலை வாங்கிக் கொண்டு பஸ் புறப்பட்ட போது பஸ்ஸில் எல்லோரும் தூங்கி வழிந்தார்கள். தொச்சு பஸ் உறுமலையும் மிஞ்சும்படி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். கவலையில்லாத மனிதன் 

  "டமார்' என்று எதிலோ ஏறி இறங்கி பஸ் நின்றது. தூங்கி வழிந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தார்கள். தொச்சு சாவதானமாக...  "எங்கே வந்திருக்கிறோம்'' என்று கொட்டாவிகளுக்கிடையே கேட்டான். கண்டக்டர் இந்தியில், "காஷ்மீர் கேட் வந்திருக்கிறோம்'' என்றார். (டில்லியில் ஒரு பேட்டையின் பெயர் காஷ்மீர் கேட் என்பது பின்னால் தெரிந்தது.) தொச்சு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, "அடியே, அங்கச்சி... காஷ்மீர் கேட் வந்துடுத்து...'' என்று பரபரப்பாகச் சொல்லி இறங்கப் பார்த்தான்.
    கண்டக்டர், "என்னய்யா தேளு கொட்டிட்ட மாதிரி துள்ளறே...? எங்கே இறங்கறே?'' என்று கேட்டதை ஒருவாறாகப் புரிந்து கொண்டு, "காஷ்மீர் வந்துவிட்டது இல்லையா?...'' என்று தொச்சு கேட்டான்.
    "இன்னும் டில்லியை விட்டே வெளியில வரலை... இப்படியா தூங்கி வழி வாங்க..?.''
    இந்த சமயம் அத்துடன் 50 காலி வயிறுகளும் உறுமின.
    பஸ்ஸில் உள்ள ஸீட் மெத்தைகளை ஸ்டீலில் செய்திருக்க வேண்டும். அவ்வளவு கடினம். ஸீட்களுக்கிடையே இடைவெளியின் அளவை அங்குலத்திலோ சென்டிமீட்டரிலோ சொல்ல முடியாது. மயிரிழை கணக்கில் தான் சொல்ல வேண்டும். இதன் பலன் முழங்கால், கால் எல்லாம் மனிதனுக்குத் தேவைதானா என்ற விரக்தியே ஏற்பட்டது.  அங்கச்சி பாடிக் கொண்டிருந்த சமயம் நீங்கலாக!

    "ஷேர்-ஈ-காஷ்மீர்' என்ற அந்த ஓட்டலில் எங்களை அடைத்தார்கள். ஆம். காஷ்மீர் சிங்கம் என்று பெயரை வைத்ததாலோ, என்னவோ ஹோட்டல் அறைகள் எல்லாம் குகை மாதிரி இருந்தன. (காஷ்மீர் ஹோட்டல் அறையில் ஜன்னல் வைக்கக் கூடாது என்று சட்டமா என்பதை விசாரிக்க வேண்டும்!)

    சோன்மார்க்கிற்கு மறுநாள் புறப்பட்டோம். சுமார் ஏழெட்டு மணி பயணம். சோன்மார்க் மலைகளிலே ஐஸ் உறைந்து இருப்பதாகவும் பார்க்கப் பிரமாதமாக இருக்கும் என்று சொன்னார்கள்.
    "அம்மா... எனக்குக் குச்சி ஐஸ் வேண்டும்'' என்று தொச்சுவின் செல்லம் கேட்க,
    "குச்சி என்னடா... மலையே ஐஸ்தான். வயிறு பிடிக்கிற அளவு சாப்பிடு... காசா பணமா?'' என்றான் தொச்சு.
    "ஐஸ் இருக்கிற இடத்திற்கு மலையிலே அரை மணி ஏறணும்... பசங்களை எல்லாம் அழைச்சுண்டு போகறது நல்லதில்லை'' என்று யாரோ ஒரு பெரியவர் கூற ---
    "அதெல்லாம் முடியாது. நான் வருவேன்'' என்று அது பிடிவாதமாகக் கூற ----
    தொச்சு ஓர் அறை கொடுக்க, தேமதுரத் தமிழ் அழுகைக் குரலோசை இமயமெல்லாம் பரவியது!

    சோன்மார்க்கில் பஸ் நின்றதும், சுமார் நூறு கோவேறு கழுதைகள் சூழ்ந்து கொண்டன. "மலை மேலே கழுதை மேல் தான் போக முடியும்'' என்றார்கள். கழுதைகளின் சொந்தக்காரர்கள் தூரத்தில் உட்கார்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே சமயத்தில் மூன்று பஸ்கள் வந்துவிடவே, அவர்களுக்கு இ அதாவது கழுதைகளுக்கு டிமாண்ட் இ என்று தெரியும்.

    மேலே போய் வர 50 ரூபாய் என்றார் ஒரு கழுதைக்காரர்.
    "ஐம்பது ரூபாயா?'' கழுதை விலையே ஐம்பது ரூபாய் இருக்காதே'' என்றேன் நான்.
    "விலையைப் பற்றி என்ன பேச்சு... கழுதை வாங்கவா வந்திருக்கிறோம்... ஏண்டாப்பா... கழுதைவாலா?... உனக்கும் வேண்டாம்... எனக்கும் வேண்டாம்... 25 ரூபாய் தர்றோம்'' என்று கமலா தமிழில் சொன்னதை நான் மொழி பெயர்த்துக் கூற, அவன் என் முழியைப் பெயர்த்து விடுகிற மாதிரி ஏதோ இந்தியில் திட்டினான். பிறகு அவன் சொன்னது புரிந்தது.
    "25 ரூபாய்க்கு ஒரு ட்ரிப்... மேலே போய்'' என்று கேட்டான்.
    "என்னடா இது அபசகுனம் மாதிரி கேட்கிறான்... சரி... அவன் கேட்கிறதை அழுதுடுவோம்'' என்றான் தொச்சு. (தொச்சு இலக்கண மேதை. அழுதுவிடுகிறேன் என்று சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள்.)
    மட்டக்குதிரை மேல் ஏறி உட்காருவது ஒரு கலை என்றால் அது ஆடி அசைந்து ஏறி இறங்கிப் போகும் போது அதன் மேலிருந்து விழாமல் உட்கார்ந்து போவதும் ஒரு கலை.
    "ஏன்னா... பாருங்களேன்... என் குதிரை எங்கேயோ போறது... சனியன்'' என்று கமலா பரிதாபமாகக் கத்தினாள். (கழுதையாக இருந்தது, அவள் ஏறி உட்கார்ந்ததும் குதிரையாகிவிட்டது)
    அந்தச் சமயத்தில் தொச்சு ஏறி உட்கார்ந்த பஞ்ச கல்யாணிக்கு என்ன கோபமோ, (தொச்சு மேல் அல்ல. என் மேல்தான் அதற்குக் கோபம் இருந்திருக்க வேண்டும் என்பது பின்னால் நடந்தவை எனக்கு நிரூபித்தன.) அது நாலு கால் பாய்ச்சலில் ஒட ஆரம்பித்தது. தன் கழுதை ஓடியே பார்த்திராத கழுதைக்காரர் வியப்பால் உறைந்து விட்டார்.

    "அய்யோ... கழுதை, யாராவது பிடியுங்களேன்...'' என்று அங்கச்சி தமிழில் அலறினாள். (தமிழ் புரியாதவர்களும் அவள் அலறலிலிருந்து விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியும்.)

    கழுதைக்காரர்கள் நாலைந்து பேர். அதைப் பிடிக்க ஓடினார்கள். கழுதைக்குக் குஷி பிறந்து விட்டது. அது ஆட்டம் காட்டியது. எங்கெங்கோ ஓடியது. காச், மூச்சென்று காஷ்மீரி மொழியில் கத்திக் கொண்டு கழுதைக்காரர்கள் ஓட, "செத்தேன் , தொலைந்தேன்'' என்று தமிழில் தொச்சு கத்த, கழுதை உற்சாகமாக காள் காள் என்று கத்தி ஹாப், ஸ்டெப் ஜம்ப், லாங்க் ஜம்ப், ஹை ஜம்ப் ஆகியவற்றை மாறி மாறிச் செய்து கொண்டே ஓட,
    சினிமா கிளைமாக்ஸ் காட்சிக்கு ரிகர்சல் போலிருக்கிறது என்று பலர் கண்களை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
    துரதிர்ஷ்டம், கிளைமாக்ஸுக்குப் பிறகு எல்லாம் சுலபமாக முடியும். இங்கு அப்படி இல்லை.

    தொச்சுவின் அலறலில் கழுதை மேலும் பயந்து ஓட, ஏதோ ஒரு பள்ளத்திலே அதன் கால் இடற, மேலே இருந்த தொச்ச ஒரு மூட்டை மாதிரி தூக்கி எறியப்பட்டான் - ஒரு சரிவில்.
    தொச்சுவுக்கு நாலைந்து இடத்தில் எலும்பு முறிவு. பல இடத்தில் சிராய்ப்பு. காயம்.

    தொச்சுவை சோன்மார்க்கிலிருந்து ஸ்ரீநகருக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வந்தது, எக்ஸ்ரேக்கள் எடுத்தது, செலவைப் பார்க்காமல் (!) "விமானத்தில் எல்லாரையும் அழைத்து வந்தது போன்ற விவரங்களை எல்லாம் எழுதினால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

என்னைச் "சனி' பிடித்தது போதும். பைத்தியமும் பிடிக்க வேண்டாம்.

17 comments:

  1. //தொச்சு ஓர் அறை கொடுக்க, தேமதுரத் தமிழ் அழுகைக் குரலோசை இமயமெல்லாம் பரவியது!//
    முதலில் வாய்விட்டுச் சிரித்த இடம். அதன் பிறகு கடைசி வரி வரையில் சிரித்துக் கொண்டே ....!

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    சதாபிஷேகம் கண்ட தம்பதிகள் காஷ்மீர் பயணம் சென்று வந்த விவரமோ என்று ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன்.

    உள்ளூர் சுற்றுப்பயணமாக இருந்தாலும் சரி, உலக சுற்றுப்பயணமாக இருந்தாலும் சரி, தொச்சு குடும்பத்தினர் இருந்தால்தான் சுவை!

    நன்றி

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  3. Extremely humorous piece! Read some sentences twice and more as I enjoyed them so much! I leave it to other readers to quote line by line where they enjoyed and even without reading them, I will concur with them. (My strong feeling is that you don't have a brother-in-law at all!) - R. J.

    ReplyDelete
  4. உங்கள் தொச்சு கதையை படித்ததில் சிரித்து மனசு பஞ்ச கல்யாணியாக பற்ந்து விட்டது சார்.வரிக்கு வரி நகைச்சுவை..அருமையோ அருமை.

    ReplyDelete
  5. வரிக்கு வரி நகைச்சுவை! ‘அது கிடக்குது கழுதை’ என்போம். கழுதையால் பட்ட பாடு இங்கே சிரிப்பாய்ச் சிரிக்க வைத்திருக்கிறது. தேமதுரத் தமிழ் அழுகைக் குரலோசை - அக்மார்க் ‘கடுகு’ டச்!

    ReplyDelete
  6. சிரித்து சிரித்து மாளவில்லை. வரிக்கு வரி நகைச்சுவை. பத்ரி-கேதார் செல்லும் போது கேதார் செல்ல இந்த கழுதைகள் தான். ஒரு பக்கம் மலை - இன்னொரு பக்கம் கிடுகிடு பள்ளம் - மொத்த பாதையே மூன்றடி தான். இந்த கழுதை பள்ளம் இருக்கிற ஓரத்திலே போய் பல பேருக்கு பீதீ ஏற்படுத்தும். அது தான் நினைவுக்கு வந்தது...

    ReplyDelete
  7. மிக்க நன்றி, நிறையத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்.பாராட்டுகள் -கடுகு

    ReplyDelete
  8. முதன் முதலாக உங்கள் பக்கம் வருகிறேன் ஐயா.எல்லோராலும் சிரிக்க வைக்க முடியாது.உங்களிடம் அந்த அதிஷ்டம் நிறையவே இருக்கிறது.சில பதிவுகள் மட்டும் படித்து மனம் இலாசாகிப் போகிறேன்.நன்றி.மீண்டும் வருவேன்.சிரிப்பு மருந்துக்காக !

    ReplyDelete
  9. நன்றி,, இரண்டு வருஷ தாளிப்பு மேட்டரை இரவு பகலாகப் படித்து விடுங்கள்! - கடுகு

    ReplyDelete
  10. Nice sir..Read about your 80th birthday in "The Hindu"..Wishing you a happy birthday, Kadugu sir!

    http://www.thehindu.com/arts/books/article2973828.ece?homepage=true

    ReplyDelete
  11. பரம்பரைக்கே ஒரு "காண்டக்ட் சர்ட்டிபிகேட்' கொடுத்தாள்!

    உங்கள் நகைச்சுவைத் திறனுக்கு எங்கள் இடை விடாத சிரிப்பே சர்டிபிகேட்.

    ReplyDelete
  12. தொச்சுவை கீழே தள்ளி உருட்டிய அந்த கழுதையை ரகசியமாய் ஃபோட்டோ எடுத்து, சின்னப் பையன்கள் சினிமா நடிகையின் போட்டோவை பாடப்புத்தகத்தில்
    வைத்து அடிக்கடி பார்ப்பது போல், நீங்கள் அந்த கழுதையின் போட்டோவை கதை புஸ்தகத்தில் வைத்து பார்ப்பதாகக் கேள்வி பட்டேன்..உண்மையா ஸார் அது?

    ReplyDelete
  13. அட ராமா.. அந்தக் கழுதையே நான்தான்! இது நமக்குள் இருக்கட்டும்!-- கடுகு

    ReplyDelete
  14. தங்கள் சதாபிஷேக விஷயம் நண்பன் ரிஷபன் மூலம் அறிந்தேன்..வாழ்த்துக்களுடன்..வணக்கங்களும்..அந்த கால கல்கியில் உங்கள் அகஸ்தியன் எழுத்துக்களின் ரசிகன்..
    நீங்க தான் வாண்டு மாமவா?

    ReplyDelete
  15. நீங்க தான் வாண்டு மாமாவா?>>

    இல்லை,BORE பண்ணுவதால்
    வண்டு மாமா என்று சிலர் சொல்லுவார்கள்!

    ReplyDelete
  16. இன்றைய காலத்திற்கு தேவைதான் இந்த நகைகள் மகிழ்தேன் படிக்க படிக்க சுவாரசியம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!