March 13, 2012

நானும் MAD மேகஸினும்


அமெரிக்காவிலிருந்து வெளியாகும் MAD magazine பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவைப் பத்திரிகை. அதன் நகைச்சுவையம் கார்ட்டூன்களும் மிகவும் பிரமாதமாக இருக்கும். கதைப் படங்களில் வரும் கதை மிகவும் சிறப்பான சாமர்த்தியமான நையாண்டியான ஒப்பரிய நடையில் இருக்கும்.

1966ல் டில்லி தாரியகஞ்ச் வீதியில் ஞாயிறுகளில் பரப்பப்படும் பழைய புத்தகச் சந்தையில் முதல்முதலாக ஒரு MAD Magazine பார்த்தேன். என்னதான் இருக்கிறது பார்க்கலாமே என்று எண்ணி (பேரம் பேசி !) 50 பைசா கொடு்தது வாங்கினேன். அந்தக் கணம் என்னை MAD Mag பித்து நன்றாகப் பிடித்துக் கொண்டது.

அதன் பிறகு பழைய MAD மேகஸின்களை எல்லாம் வாங்கிச் சேர்க்க ஆரம்பித்தேன். அந்த நடைபாதைக் கடைக்காரர் நான் MAD பைத்தியம் என்று ஞாபகத்தில் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்ததும் ”புதுசா(!) இரண்டு பழைய MAD பத்திரிகை கிடைச்சிருக்குஎன்று எடுத்துக் கொடுப்பார். அடுத்த 15 வருஷங்களுக்கு மேலாக MAD பத்திரிகையையும் MAD போடுகிற சிறப்பு மலர்களையும் சேர்க்க ஆரம்பித்தேன். அதை விடாமல் படித்துப் படித்து நகைச்சுவை எழுதும் ஃபார்முலாவை ஓரளவு புரிந்து கொண்டேன்.

என் நகைச்சுவை குருவாக அதை நான் கருதினேன். 1984க்குள் சுமார் 15-16 வருஷ பத்திரிகையை சேர்த்து விட்டேன். வைகளை பைண்ட் பண்ணி வைத்திருக்கிறேன். சமீபத்தில் MAD COMPANION என்ற ஆயிரப் பக்க புத்தகத்தை பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். MAD பத்திரிகையில் வந்த பல பக்கங்களைத் தொகுத்துப் போட்டிருக்கிறார்கள்.

ஆசிரியர் சாவிக்கும் MAD Mag ல் ஒரு ஈடுபாடு உண்டு. ஆகவே அந்தப் பத்திரிகையில் வந்த பல நகைச்சுவை அம்சங்களை ஒட்டி நான் தமிழில் தினமணி கதிருக்கு எழுதினேன். கலியாண ராமன், அவன் அவள் அது என்று சில திரைப் படங்களை சிரிப்பு படக் கதைகளாக எழுதினேன். MAD ஐடியாவைப் பின்பற்றி கடுகு காலண்டர்என்று ஜெயராஜுடன் சேர்ந்து மாதா மாதம் கதிரில் வெளியிட்டேன்.

இந்த சமயம் பிரபல விளம்பர நிறுவனமான HTA தங்கள் டில்லி அலுவலகத்திற்கு ஒரு காப்பிரைட்டர் தேவை என்று விளம்பரம் செய்திருந்தது. சுமார் 20 பக்கத்திற்கு என்னைப் பற்றியும் என் சாதனைகளையும் எழுதி விண்ணப்பம் அனுப்பினேன். ”இதில் பல தகவல்கள் பொய்யோ என்று நீங்கள் எண்ணக் கூடும். பொய் சொல்வதற்கு நிறையக் கற்பனைத் திறன் வேண்டும் என்பதால் அதுவும் எனக்கு ப்ளஸ் பாயிண்ட்தான் என்றும் எழுதினேன். பின்குறிப்பாக: விளம்பரத் துறையில் என் முன் அனுபவம், பெரிய ZERO என்று எழுதியிருந்தேன். அது மட்டுமல்ல, நான் MAD பைத்தியம் என்றும் 16 வருட MAD இதழ்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன் என்று (சம்பந்தமில்லாத) தகவலையும் எழுதி வைத்தேன்.

பேட்டிக்குக் கூப்பிட்டார்கள். காபி கொடுத்தார்கள். சொல்லி அனுப்புவதாகக் கூறி அனுப்பி விட்டார்கள். இரண்டு நாள் கழித்து தொலைபேசியில் கூப்பிட்டு சென்னை மானேஜர் வந்திருக்கிறார். அவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்றார்கள். (MAD MAGAZINE பற்றி எழுத ஆரம்பித்து சொந்தப் புராணத்திற்குப் போய் விட்டீர்களே என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை: Wait!)

மறுநாள் அவரைச் சந்தித்தேன். ஒரே ஒரு கேள்வி கேட்டார். ‘‘சென்னை அலுவலகத்தில் பணியாற்ற இயலுமா?’’ என்று கேட்டார். ‘‘முடியும்’’ என்றேன். உடனே இவ்வளவு சம்பளம் என்று விவரங்களைக் கூறினார். மறுநாளே வேலை உத்தரவை அனுப்புவதாகச் சொன்னார். நானும் அரசுப் பணியை உதறிவிட்டு (அதைப் பற்றி எனக்கும் வருத்தமில்லை. அரசிற்குக் கொஞ்சம் கூட வருத்தமில்லை என்பது வேறு விஷயம்!) சென்னைக்கு வந்தேன்.

சென்னையில் உள்ளவர்களுடன் சில நாட்கள் பழக்கம் ஆன பிறகு எனக்கு ஒரு ரகசியத்தைச் சொன்னார்கள்; ‘‘உங்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது எது தெரியுமா? MAD Magazine தான். மானேஜருக்கு MAD பத்திரிகையின் மேல் அபார ஈடுபாடு உண்டு. விளம்பரத் துறையில் உள்ளவர்கள் MAD படித்தால் நிறையத் திறமை பெறலாம் என்ற சொல்வார். 16 வருட MAD பத்திரிகைகள் நிறைய சேர்த்து வைத்திருப்பதாக உங்கள் அப்ளிகேஷனில் எழுதியிருந்தீர்கள். அதைப் பார்த்தே மானேஜர் கவிழ்ந்து போய்விட்டார்’’ என்றார்கள்.

ஆக MAD மேகஸினுக்கு நன்றி!

சில வருஷங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது நியுயார்க் நகருக்குப் போயிருந்தேன். MAD பத்திரிகை அலுவலகத்திற்குப் போய் பார்த்துவர விரும்பினேன். முக்கியமாக MAD பத்திரிகையின் ஓவியர் MORT DRUCKERஐப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை (அந்தக் காலத்திலேயே அதிக ஊதிகம் பெறும் கார்ட்டூனிஸ்ட் அவர் என்று படித்திருக்கிறேன்) MAD பத்திரிகை இருந்த MADISON அவென்யூவுக்குச் சென்றோம். உயர உயரமான கட்டிடங்கள். காரை நிறுத்தவோ முகவரியைச் சொல்லி விசாரிக்கவோ முடியவில்லை. வீதியோ போய்க் கொண்டே போய்க் கொண்டே இருந்தது. கடைசியில் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன்.
பிறகு MORT DRUUCKERஐத் தொடர்பு கொண்டு அவரைச் சந்திக்க முயற்சிகள் எடுத்தேன். அவருடைய தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து போன் செய்தேன். அவருடைய காரியதரிசி (பெண்) பேசினார். அவர் பேசியது பயங்கர அமெரிக்க உச்சரிப்பு. ஒன்றும் புரியவில்லை. (இந்த அழகில் ‘‘நீங்கள் பேசுவது எனக்குப் புரியவில்லை’’ என்று ஒரு சர்ட்டிபிகேட்டை எனக்குக் கொடுத்தார்) கடைசியில் ‘‘ஒரு கடிதம்- தபால் மூலம் எழுதி அனுப்புங்கள். உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்’’ என்றார். எழுதி அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து இந்தியா திரும்பினேன். சில நாட்கள் கழித்து ஒரு பெரிய கவர் மார்ட் டிரக்டரிடமிருந்து வந்திருந்தது. நீண்ட கடிதம் கைப்பட எழுதியிருந்தார். அத்துடன் அவர் போட்ட பல ஓவியங்களின் (MAD தவிர வேறுசில நிறுவனங்களுக்கும் படம் போடுவார் என்பது அப்போது தெரிந்தது) அச்சுப்பிரதிகளை எனக்கு அனுப்பி இருந்தார். ‘‘உங்களைச் சந்திக்க முடியாதுபோனதற்கு வருத்தம். முக்கியமாக நான் முடித்துக் கொடுக்க வேண்டிய ஓவியங்கள் நிறைய பாக்கி இருந்தன. அதைவிட முக்கியமானது என் மனைவி உடல் நலமின்றி இருந்தார்’’ என்று எழுதியிருந்தார்.. எண்பதாவது வயதிலும் ஓய்வு ஒழிச்சலில்லாமல் படம் வரைந்து கொண்டிருந்தார்! 

FAMILIAR FACES - The Art of Mort  Drucker எனும் 1988’ம் ஆண்டு வெளியான 96 பக்க புத்தகத்தின் இப்போதைய விலை  300 டாலர் ( 15000 ரூபாய்)

( இன்றைக்கும் ஏதாவது நகைச்சுவை கட்டுரை எழுத வேண்டுமென்றால்  MAD MAGAZINE-ஐ பத்து நிமிஷம் புரட்டுவேன். நகைச்சுவை ‘மூட்’ வந்துவிடும்!)

7 comments:

 1. Sir,
  Now i understood why i am MAD with your writing !!!!!!!

  Kothamalli

  ReplyDelete
 2. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  அருமையான பகிர்வு.

  கடுகு காலண்டர் மற்றும் சிரிப்பு படக் கதைகளை வெளியிடுவீர்களா? படிக்க ஆவலாக இருக்கிறது.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 3. A lesson for job seekers - how to apply for a job! Lucky the Chennai Manager of HTA was not a MAD-hater! I haven't read MAD but is it possible that some people may not like it? Let me browse if I can see MAD in the net! Thanks for sharing your experiences. - R. J.

  ReplyDelete
 4. The General Comments section is missing! The lollipop and the ants line is superb! - R. J.

  ReplyDelete
 5. MAD Magazine.... தில்லி தரியாகஞ்ச் வீதியில் நானும் தேடி சில புத்தகங்கள் வாங்கி படித்திருக்கிறேன்.... எத்தனை நகைச்சுவை....

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!