February 01, 2011

காகமும் வடையும் - கடுகு

இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் பிரபல தத்துவ மேதையாகப் புகழ் பெற்றுள்ள டாக்டர் தத்துப்பித்து சாமி (பத்மஸ்ரீ) தன் பேரக் குழந்தைக்குக் கதை சொல்கிறார்:
அம்பிப் பயலே, இன்று ஒரு கதை சொல்லப் போகிறேன். தலைப்பு: `காகமும் வடையும்'.

காகம் என்பது என்ன என்று உனக்குத் தெரியாதிருக்கலாம். கறுத்த நிறத்துடன் காகா, காகா என்று கத்தும் பறவை காகம். கறுப்பாக இருப்பவை எல்லாம் காகம் ஆகாது. கா, கா என்று கத்துவதெல்லாம் காகம் இல்லை. இம்மாதிரி பறப்பது எல்லாவற்றையும் காகம் எனக் கூற இயலாது. கன்ஃபூஷியஸ் என்ன சொல்லியிருக்கிறான் தெரியுமா? உனக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது? `ரிடக்ஷியோ அட் அப்ஸரிடம்' என்று கேள்விப்பட்டு இருக்கிறாயா? நல்லது. கதையை மேலே தொடர்வோம்:


காகத்திற்கு ஒரு நாள் பசி எடுத்தது. மற்ற தினங்களிலும் பசி எடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்தக் குறிப்பிட்ட தினத்தில் அதற்குப் பசி எடுத்ததோ அந்த தினத்தில் அது என்ன செய்தது என்பதுதான் நம் கதைக்கு முக்கியம்.
எங்கெங்கேயோ பறந்து சென்றது. பல இடங்களில் அலைந்தது. பலன்? பூஜ்யம். உணவு அகப்படவே இல்லை. கீதையில் பகவான் கூறுகிறார்: `கர்மண்யேவாதி காரஸ்தே மா பனேஷு கதாசன'.
அதாவது, நாம் செய்ய வேண்டிய பணியைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பசியால் அவதிப்படும் நேரத்தில் கீதையின் உரையில் ஆழமான அர்த்தத்தையோ தத்துவத்தையோ யாரும் உணர மாட்டார்கள். அதுவும் எழுத்தறிவில்லாத காகம் உணரும் என்று நம்புவது மடத்தனம் ஆகும். இதே கருத்தை சுவாமி சின்மயானந்தா அழகாகக் கூறியிருக்கிறார். `கல்யாண கல்பதரு' 1941-ம் வருஷ மலரில் ஒரு கட்டுரையில் இதை நான் வலியுறுத்தி தெளிவாக எழுதியிருந்தேன். உம். எங்கே படித்திருக்கப் போகிறாய்? சரி... காகம் அலைந்து அலைந்து ஓய்ந்து விட்டது. உணவு அகப்படவே இல்லை. இதுதான் வாழ்க்கை. ஒரு புத்தகத்தைத் தேடுவோம். அது பெட்டியில் எல்லாப் புத்தகங்களுக்கும் அடியில் கடைசி கடைசியாக இருக்கும். நாம தேடும் புத்தகம் ஏன் பெட்டியின் மேலேயே இருக்கக் கூடாது? இதற்குத்தான் லா ஆஃப் சான்ஸ் அண்ட் மிஸ்சான்ஸ் என்று பெயர். இந்த விதியைத் தயாரித்த டாக்டர் அச்சுபிச்சுவின் கூற்று இதுதான்: `எதை எவன் எங்கு எதற்காகத் தேடிச் சென்று பார்க்கிறானோ, தடம் புரியாமல் தவிக்கிறானோ, வழி தெரியாமல் விழிக்கிறானோ, அவன் அதை அங்கு...' சரி, சரி... இதெல்லாம் உனக்குப் புரியாது. கதையைக் கவனி.
ஊருக்கு வெளியே ஒரு பாட்டி மெதுவடை விற்றுக் கொண்டிருந்தாள். இந்தப் பாட்டி ஏன் ஊருக்குள்ளேயே வியாபாரம் செய்திருக்கக் கூடாது? தள்ளாத வயதில் அவள் விடியற்காலையிலேயே எழுந்து காடா விளக்கில் வடைக்கு அரைத்து, வடை தயாரித்துக் கூடையில் வைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே கால் கடுக்க நடந்து வந்து வியாபாரம் செய்கிறாள் என்றால் அதற்குக் காரணங்கள் நிறைய இருக்க வேண்டும். உள்ளூரில் போட்டி இருக்கலாம். அல்லது கடனில் சாப்பிடுபவர்கள் அதிகம் பேர் இருக்கலாம். அல்லது, பாட்டியின் வடையில் கலப்படம் இருந்து அதை உணவு இன்ஸ்பெக்டர்கள் கண்டுபிடிப்பார்களோ என்று பயந்து காரை விட்டு வெளியே வந்திருக்கலாம். அல்லது ஒரு ரூபாய் வடையை ஐந்து ரூபாய்க்கு விற்றுப் பெருத்த லாபம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் வெகு தூரம் தள்ளி வந்து கடையைப் போட்டிருக்கலாம். பணத்தாசை தான் அடிப்படைக் காரணமாக இருக்கும்.  சீனத் தத்துவ ஞானி லா-ட்ஸொ கூறுகிறான்: `பேராசை என்னும் துராசை மனத்தினடியில் உள்ள லோப தாப மதமார்ச்சரிய உணர்வு நிலைகளில் உள்ளப் பிணைப்புகளைக் கட்டுத்தெறிக்கச் செய்து... ,,,,  அடேடே... அம்பி... அம்பி... ”

குழந்தை தூங்கி விட்டது!

1 comment:

  1. அருமையான கதை. என் கல்லூரி நாட்களில் (வன்முறை இல்லாத ரேக்கிங்க்) இதே கதையை , பெயர்களோடு சொல்ல வேண்டும் உதாரணதிற்கு,
    "மங்களாபுரி என்ற ஊரில், அழகி என்ற பாட்டி , வேப்பமரதுக்கடியில், உளுந்து வடை சுட்டு காசூகு விற்று வந்தாள்."

    அடுப்பின் பெயர் முதல் கொண்டு, எண்ணெய் மற்றும் தீப்பெட்டியின் தயாரிப்பையும் சொல்ல வேண்டும் இல்லயென்றால் திரும்ப முதல் வரியிலிருந்து தொடங்க வேண்டும்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!