February 07, 2011

திடீரென்று வந்தார்! -கடுகு

பெரிய விளம்பர நிறுவனங்களில் ஆண்டுதோறும்   இரண்டு மூன்று நாள் கிரியேட்டிவ் துறை, விளம்பர சேவைத் துறை, ஆடியோ-வீடியோ துறை, ஆர்ட் டைரக்டர்கள், காபி ரைட்டர்கள் எல்லாரையும் இரண்டு அல்லது மூன்று நாள் ஒரு கருத்தரங்கம் மற்றும் விவாதக் கூட்டம் என்று ஒரு பெரிய ஓட்டலில் நடத்துவார்கள்.
அந்த ஆண்டு விளம்பர நிறுவனம் வெளியிட்ட முக்கிய விளம்பரங்கள் பற்றியும், மக்களிடம் அந்த விளம்பரங்கள் பெற்ற பாதிப்புகளையும், வெற்றி தோல்விகளையும் விளக்குவார்கள். விளக்கிய பிறகு கேள்வி பதில்கள் நிகழ்ச்சியும் இருக்கும். தயவு தாட்சண்யமின்றி கடுமையான விமர்சனங்கள், கேள்விகள் எல்லாம் இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் உரையை அபாரமாகத் தயாரித்துக் கொண்டு வருவார்கள். நிறைய `சிலைட்'கள் தயார் பண்ணி அவற்றைப் போட்டுக் காட்டி உரை நிகழ்த்துவார்கள். மிக மிகச் சுவையான உரைகளாகவும், ஒருவரை ஒருவர் மிஞ்சும் உரைகளாகவும் இருக்கும்.
ஒட்டுமொத்தமாக அந்த ஆண்டு கம்பெனி கையாண்ட விளம்பரங்களைப் பற்றி ஒரு விரிவான, ஆழமான பார்வை அனைவருக்கும் கிடைக்கும். எங்கு குறைபாடு உள்ளது, எதைச் சரியாகச் செய்யவில்லை, ஏன் ஒரு குறிப்பிட்ட விளம்பரம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை, அதே மாதிரி ஏன் வேறு ஒரு விளம்பரம் எதிர்பார்த்ததை விட ஓஹோ என்று சாதித்தது என்பதெல்லாம் அலசப்படும்.

மூன்றாம் நாள் முடிவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் பரிசளிப்பு விழா என்று கோலாகலமான பல நிகழ்ச்சிகள் நடக்கும்.
பூஸ்ட் விளம்பரங்களைக் கையாண்ட விளம்பர டீம் ஒரு ஆண்டு பரிசு பெற்ற சுவையான சம்பவத்தைக் கூறுகிறேன்.
பூஸ்ட் விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இடம் பெற்றிருந்த கால கட்டம் அது. பத்திரிகை, டி.வி., ரேடியோ விளம்பரங்களில் `பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி' (BOOST IS THE SECRET OF MY ENERGY)  என்று சொல்வார்.
அந்த ஆண்டு `பூஸ்ட்' விளம்பரங்களில் நிறையப் புதுமைகள் புகுத்தி எல்லா ஊடகங்களிலும் எங்கள் நிறுவனம் அதகளம் செய்திருந்தது.
வருடாந்திரக் கூட்டத்தில் பூஸ்ட் விளம்பரங்களைக் கையாண்டவர் - திருமதி திரிபாதி- மிகவும் உற்சாகத்துடன் அவரும், அவர் உதவியாளைகளும்  என்னென்ன விவாதித்தார்கள், என்ன செய்தோம் என்றெல்லாம்  விவரங்களுடன், கூறினார்.  வீடியோ, ஸ்லைட்கள் மூலம் திரையில் விளக்கப் படங்களைப் போட்டு உரை நிகழ்த்தினார். கடைசியில் பூஸ்ட் விளம்பரப் பாடல் போட்டார்.
ஆனால் பாடல் முடிந்ததும் கபில்தேவ் வசனம் வரவேண்டிய சமயத்தில் திருமதி திரிபாதி ஹாலில் உள்ள  எல்லா விளக்குகளையும் அணைக்கும்படி  ரகசியமாக  ஏற்பாடு  செய்திருந்தார். சட்டடென்று விளக்குகள் அணைந்தன. ஒரு சில  செகண்டுக்குப் பிறகு விளக்குகள் மீண்டும் வந்தபோது ஆச்சரியமான விஷயம் நடந்தது.
திரைக்கு முன் கபில்தேவ் - ஆம், கபில் தேவ் அவர்களே!- நின்று கொண்டு, ``பூஸ்ட் ஈஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி'' என்று உற்சாகமாகச் சொன்னார்.
கை தட்டலும், விஸிலும் பறந்தன். ஹோட்டலே குலுங்கியிருக்கும்.
அந்த ஆண்டு திருமதி திரிபாதிக்குப் பரிசு கிடைத்தது!
இதில் ருசிகரமான விஷயம் என்னவென்றால், கபில்தேவ் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஹோட்டலில் திரைக்குப் பின்னால் இருந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் திரைக்கு முன் தோன்ற வேண்டிய தருணத்திற்கு இரண்டு செகண்டுக்கு முன் தகவல் அனுப்பி, விளக்கு அணைக்கப்பட்டவுடன் இருட்டில் தட்டுத் தடுமாறி திரைக்குப் பின்னால் வந்து, விளக்குப் போட்டதும் `சட்'டென்று வேளியே வந்து, `பூஸ்ட் ஈஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி' என்று கம்பீரமாகச் சொன்னார்.

2 comments:

  1. நானும் கபிலும் என்று கட்டுரை எங்கே? உங்கள் துறையில் ப்ரகாசிக்க மூளை ரொம்ப வேண்டும் என்று தெரிந்துகொண்டேன். - ஜெ.

    ReplyDelete
  2. படிக்க சுவாரசியமாக இருந்தது.. :))

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!