February 17, 2011

வீரகுண பாண்டியனின் காதலி -எழுத்தாளர் ஏகாம்பரம் எழுதியது

  சரித்திரக் கதைகள் பல புருடாவாக இருக்கின்றன என்று பலர் சொல்வதால் ஆதார பூர்வமான சரித்திரக் கதையை  எழுதித் தரும்படி எழுத்தாளர் ஏகாம்பரத்திடம் கேட்டோம். அவர் எழுதி தந்த முதல் அத்தியாயம். இது! ( இதையே கடைசி அத்தியாயமாகவும் செய்து விடப் போகிறேன்!!)


வீரகுண பாண்டியனின் காதலி 
`ஈராயிரம்1 ஆண்டுகளுக்கு2 முன்பிருந்த3 வீரகுண4 பாண்டிய5 மன்னனின் சௌந்தர்யமே6 உருவான மணிமண்டபத்தின்7 மீது குணவாயில்8 எழுந்த கதிரவன் தன் தேஜோமயமான9 கிரணங்களை மகோன்னதமாகவும்10 ஜாஜ்வல்யமாகவும்11 வீசிக் கொண்டிருந்தான்.
(தொடரும்) 12

அடிக்குறிப்புகள்:
1. ஈராயிரம் என்பதைப் பதம் பிரிப்பின் ஈர் ஆயிரம் என்றாகும். சிலரது தலைமுடியில் ஈர், பேன் முதலியவை ஆயிரக் கணக்கில் இருக்கும். அந்த ஈரை இது குறிக்காது. எனினும் நீலகண்டராய சிங்கரையர் நிகண்டில் ஈர் என்பது இரண்டைக் குறிக்கும் என்றிருப்பதை நோக்குமிடத்து இது இரண்டாயிரம் என்பதைக் குறிக்கும் எனலாம்.
2. ஆண்டு எனப்படுவது ஆண்-டூர் என்பதன் சுருக்கம். ஆண்களுக்கு ஆணான சூரியன் ஒரு தரம் பூமியை வலம் வரும் காலத்திற்கு, ஆணைச் சுற்றி ஒரு டூர் போய்விட்டு வர ஆகும் பொழுதிற்கு ஆண்டூர் என்பதாகும். இதுவே வழக்கில் ஆண்டு என்றாகி, ஒரு வருஷத்தைக் குறிக்கும் சொல்லாயிற்று. இந்த விளக்கம் டூரிஸ்ட் இலாகாவின் பழைய குறிப்பேடுகளில் காணப்படுகிறது.
3. இந்தச் சொல் `முன் பிறந்த' என்றிருக்க வேண்டும் எனப் பல கல்வெட்ட ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதாவது இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு பிறந்த என்று பொருள்படும். `முன்பிருந்த' எனின் ஆண்டு என்பதற்கு முன்னே இருந்த என்ற கருத்து வருகிறது. ஆண்டு என்பது உருவமற்றது. ஆதலால் அதற்கு முன்பு எப்படி ஒருவர் இருக்க முடியும்? பிறந்த என்பதே ஏற்புடைய சொல்லாகும்.
4. `நீரகுண' என்றும் வழக்கில் இருந்தது. இது `வர்லாரே டி பாண்ட்யா' என்ற பழைய பிரெஞ்சுப் புத்தகத்தில் உள்ள தகவல். மனதில் இரக்கம் மிகுந்தவன் என்ற பொருளில் `ஈரகுண' என்றும் இருக்கலாம். இது முற்றிலும் கரையானால் அழிந்து போன பழைய ஏட்டுச் சுவடியில் பல இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்.
5. சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள `பாந்தியன் தெரு' உண்மையில் `பாண்டியன் வீதி' என்றுதான் சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக இருந்தது. வீதியின் பெயரை எழுதிய பெயிண்டர் சற்று காது மந்தமுடையவராதலால் பாண்டியன் என்ற சொல் பாந்தியன் என்று அவர் காதில் விழுந்திருக்க வேண்டும். `தி ஹிஸ்டரி ஆஃப் டெஃப் பெயிண்டர்ஸ் ஆஃப் தி கார்ப்பரேஷன் ஆஃப் மெட்ராஸ்' என்ற ஏழு தொகுதியுள்ள புத்தகத்தின் மூன்றாவது தொகுதியில் 768ம் பக்கத்தைக் காண்க.

6. சௌந்த்ர்யமே வருக என்று ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த சேதி/  படத்தின் தலைப்பில் இந்தச் சொல் வருவதால் இந்தச் சொல்லைப் பற்றிய விரிவான விளக்கத்தைத் திரைப்படத்தில் எதிர்பார்க்கலாம்.
7. அந்தக் காலத்தில் வைரம், கோமேதகம், பவளம், முத்து, ரத்தினம் போன்ற மணிகளால் மண்டபங்கள் கட்டினார்கள். உட்காரும் போது உறுத்தும். இருந்தாலும் விலைமதிப்பற்ற உறுத்தல் என்பதால் மன்னர்களும் மந்திரிகளும் உறுத்துவதைப் பொருட்படுத்தவில்லை.
8. இந்த இடத்தில் வாயில் என்பது கட்டாவ் வாயிலைக் குறிக்காது. `வாய்க்குள்' என்பதையும் குறிக்காது.
9, 10, 11 சரித்திரக் கதைகளுக்கு மெருகு கொடுக்கும் இந்த வார்த்தைகளை எப்படியாவது நுழைத்து விட்டால்தான் ஆசிரியரின் நடையை வாசகர்கள் பாராட்டுவார்கள்.
11. இந்த வார்த்தையை வடமொழி எதிரிகள் கூட `சாச்வல்யமாக' என்று எழுத மாட்டார்கள். `ஜ'வைப் போட்டால்தான் ஜோராக இருக்கும்.
12. `நம்முடைய போதாத காலம் எங்கே போனாலும் ]தொடரும்' என்ற பொருளில் இது இங்கு உபயோகிக்கப் படவில்லை. `தொடர்... ஹும்' என்று சிலர் சரித்திரக் கதைகளைப் பார்த்ததும் அலுத்துக் கொள்வார்கள். கதை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்ளாதிருக்க இப்படித் `தொடரும்' என்பதை சரித்திரக் கதாசிரியர்கள் பல்லாண்டு காலமாகப் போட்டு வருகிறார்கள்.

6 comments:

 1. தொடரட்டும்..ம்ம்ம்ம்! - ஜெ.

  ReplyDelete
 2. http://www.google.com/buzz/115511813610845200164/7MYm3a1u9tc/2010%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B2#1297937903410000

  இங்கே இப்பதிவு சுட்டப்பட்டுள்ளது..! தகவலுக்காக..

  நன்றி..

  யாரோ ஒருவன்

  ReplyDelete
 3. பதிவைத்தானே சுட்டு இருக்கிறீகள். பதிவரை அல்லவே! பிழைத்தேன்!!:)

  ReplyDelete
 4. தாளிப்பு என்பதைக் கயிறு மாதிரி எழுதியிருப்பது பிரமாதம். கயிறு திரிக்கிறீர்கள் என்பதை சிம்பாலிக்காகத் தெரியபடுத்தி இருக்கிறீர்கள்!!! - கபாலி

  ReplyDelete
 5. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  பல மாதங்களுக்கு முன்பே, என்னுடைய ஃபேஸ்புக் அக்கவுண்டில், தங்களது வலைப் பூவின் சுட்டியைத் தந்து இருக்கிறேன். ஆனால், தங்களிடம் தகவல் தெரிவிக்க விட்டுப் போய் விட்டது. மன்னிக்கவும்.

  நன்றி

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 6. திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு,
  வணக்கம்.ஃபேஸ்புக் எல்லாம் என் சிறிய புத்திக்கு எட்டாத விஷயங்கள், ஏதோ நல்லது செய்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.!!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :