February 17, 2011

டி.வி. பேட்டிகள் -- கடுகு


ரேடியோ, டி.வி. பேட்டிகளில் பல சமயம் பேட்டி காண்பவர் பேசுவதுதான் அதிகபட்சமாக இருக்கும். தங்களுடைய கெட்டிக்காரத்தனத்தைக் காட்டுவதிலேயே முனைப்பாக இருப்பார்கள். இது எல்லா பேட்டியிலும் நடைபெறுவதுதான். பல வருஷங்களுக்கு முன்பு (JEAN PAUL SARTRE)  (ஜீன் பால் சார்த்ரே)விடம் நடத்திய பேட்டியிலிருந்து ஒரு பகுதியை ஒரு பத்திரிகையில் போட்டிருந்தார்கள். அதை என் டயரியில் எழுதி வைத்தேன். (நிஜமான பேட்டியா, நையாண்டியாக எழுதப்பட்டதா என்று இப்போது எனக்கு நினைவில் இல்லை.) இந்தப் பேட்டியைப் பார்த்து நான் ஒரு கட்டுரையை எழுதினேன். தினமணி கதிரில் வெளியான அந்தக் கட்டுரையை இங்கு தருகிறேன்.  ஜீன் பால் சார்த்ரே பேட்டியையும் இங்கு முதலில்போடுகிறேன்.

Interviewer:
Borrowing the terms employed by the structuralists, one might say that signification is the product of the articulation of signifiers themselves considered as non-articulated constituent elements; signification would be the unit of meaning which brings about the unification of the discontinuous data of your verbal material.

Sartre: Exactly!
----------------------------------------------

ஒரு சிறப்புப் பேட்டி!
எழுத்தாளர் ஏகாம்பரம் எழுதியது

முன்னுரை: சமீபத்தில் நான் காட்டாங்குடி சென்று வந்ததையும் அந்த அனுபவங்களை எழுதியதையும் அறிவீர்கள். `இவ்வளவு சிறப்பாக உங்களால் எப்படி எழுத முடிகிறது?' என்று உங்களில் பலர் என்னைக் கண்டு வியந்திருப்பீர்கள். இதற்கே வியந்து விட்டால் போதுமா? இன்னும் நான்- அதாவது எழுத்தாளர் ஏகாம்பரம்- எழுதும் கட்டுரைகளைக் கண்டு மேலும் வியப்படையப் போகிறீர்கள். இதோ ஒரு பேட்டி:
*                *                 *
டிம்பக்டு நாட்டிலிருந்து வந்துள்ள எழுத்தாளர் ஜீரோவைப் பார்க்க அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்குப் போகிறோம். புன்சிரிப்புடன் அவர், ``பிரபல தமிழ் எழுத்தாளர், கட்டுரையாளர் திரு.ஏகாம்பரம் அவர்களே!'' என்று வரவேற்கிறார். பேட்டி ஆரம்பமாகிறது.ஏகா: கடந்த முப்பது வருடங்களாகப் பல பத்திரிகைகளில் கட்டுரைகளும், கதைகளும், தொடர் கதைகளும், பயணக் கட்டுரைத் தொடர்கதைகளுமாக எழுதி, தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவன் என்ற நிலையைப் பெற்றுள்ள நான், தங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தாங்களும் அப்படியே என்னைச் சந்தித்து பேட்டி அளிப்பதில் பேருவகை கொள்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் சொல்வது சரிதானே?
ஜீரோ: ஆம்.
ஏகா: சமீப காலமாக உலக எழுத்தாளர்களிடையே பெரியதொரு மறுமலர்ச்சியும், கம்பீரமான எழுச்சியும் ஏற்பட்டிருப்பதும், யதார்த்தமான தத்துவார்த்த பரிணாம நெறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதும் நல்ல அறிகுறிகள் என்று நான் சொல்வதில் தவறில்லையே?
ஜீரோ:  இல்லை.
ஏகா: ஆனால் அதே சமயம் சமுதாய அழுக்குகளையும், மனிதனின் அடிப்படை எண்ணங்களில் உள்ள அழுக்காறுகளையும் ஒரு உத்வேகத்தால் உந்தப்பட்ட உணர்ச்சியுடன் சாடி எழுத முற்படுவதால், எழுத்தில் பல சமயம் ஆழம் குறைவதுடன், சில ரசக்குறைவான அம்சங்களும் இடம் பெறுகின்றன. சென்ற மாத இலக்கிய அரங்கில் நான் வெளியிட்ட இந்தக் கருத்தைக் கட்டக் தமிழ் இலக்கிய மாதப் பத்திரிகையான `சிந்தனைப் பொறி' அப்படியே பிரசுரித்துள்ளது. அதைத் தங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன். நான் கூறிய கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் அல்லவா?
ஜீரோ: எஸ்.
ஏகா: உலக நாடுகளில் எல்லாவற்றிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் சகஜ நிலைக்கு அப்பாற்பட்ட பல்நோக்கு மாறுதல் கொள்கைகளின் அடிப்படையில் நிர்ணயமான வடிவமைப்பு கொண்ட எழுத்தோவியங்கள் உருவாகிறது என்று நான் கூறுவதை எந்த அறிவாளியாலும் மறுக்க முடியாது. சரிதானே?
ஜீரோ: ஆமாம்.
ஏகா: இப்படி இருந்தும் இன்றையத் தலைமுறையில் மனிதாபிமானம் மிக்க கதைகளை அதிகம் பார்க்க முடியவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு `ஆழிச்சங்'கில் நான் எழுதிய `தாகத்தின் வேகம்' போன்ற நல்ல கனபரிமாணம் கொண்ட கதைகள் இதுவரை வெளியாகவில்லை. நானே அதற்குப் பிறகு எழுதவில்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பாருங்கள், பத்து வருடம் ஆகியும் அக்கதை என் நினைவில் இருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் அக்கதையில் உள்ள மனிதாபிமானமும், எழுதிய உத்தியின் விசேஷ அழகும்தான். புதிய தலைமுறை எழுத்தாளர்கள் இன்னும் கற்றறிய வேண்டியது நிறைய உள்ளது என்று நான் கூறுவதில் தவறில்லையே.
ஜீரோ:இல்லை.
ஏகா: வில்லியம் ஃபாக்னர், ராபர்ட் ஃப்ராஸ்ட், மெக்கின்ஸி, டியூடிலாஸ், அடிசன் பேன்ற இலக்கியகர்த்தாக்களை இன்னும் பலர் விரும்பிப் படிக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் புத்தகங்களைக் கல்லூரிகளில் பாடப் புத்தகமாக வைக்காத போதும் படிக்கிறார்கள். ஏனென்றால் அவற்றில் ஒரு உண்மைத்துவம் இருக்கிறது. மனத்தின் ஆழத்தில் உள்ள மெல்லுணர்வுகளை எழுப்பும் பண்பு கொண்டுள்ளன. கட்டாயப்படுத்தப்பட்டு படிக்கும் போது இம்மெல்லுணர்வுகள் அழிந்து விடுகின்றன. ஆகவேதான் என் கதைகளையும், கட்டுரைகளையும் பாடப் புத்தகமாக வைக்க ஏற்றுக் கொள்ளவில்லை. இது சரியான கருத்துதானே?
ஜீரோ:ஆம்.
ஏகா: உங்களது பல கருத்துக்கள் என் கருத்துகளுக்குப் பொருந்தி இருப்பதைக் கண்டு சந்தோஷப்படுகிறேன். இன்றைய இலக்கிய உலகைப் பற்றி அறிய இப்பேட்டியை தாங்கள் எனக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி. உங்களது அரிய நேரத்தை இந்தப் பேட்டிக்காக ஒதுக்கியதற்கு எங்கள் `களத்தூர் செய்தி'யின் சார்பில் உங்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். இந்தப் பேட்டியின் மூலம் தங்களது ஆழ்ந்த புலமை வாய்ந்த சில எண்ணங்களை நான் அறிய முடிந்தது. இது வாசகர்களுக்கும் பெரிய இலக்கிய விருந்தாக அமையும் என்பது உறுதி. வணக்கம்!
ஜீரோ: நன்றி.

6 comments:

 1. ஐயோ, ஐயய்யோ! ஜீரோ நொந்து நூடுல்ஸ் ஆயிருப்பாரே! - ஜெ.

  ReplyDelete
 2. very origanl in aruvai.

  ReplyDelete
 3. இலக்கியப் படைப்பாளிகள் என்று பெருமைப் பட்டுக் கொள்பவர்கள் படிக்கணும் இதை.
  முன்னே வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் எடுக்கப்படும் பேட்டியை கிண்டலடித்து சிரிப்போம். பேட்டி எடுப்பவரே பேசிக் கொண்டு இருப்பார்.

  ReplyDelete
 4. உண்மைதான். இது மாதிரி எழுதப்ப்பட்ட, லணடன் டைம்ஸ் பத்திரிகையில் 70 களில் வந்த புத்தக விமர்சனங்களை எழுதி வைத்துள்ளேன். அதை விரைவில் போடுகிறேன்.

  ReplyDelete
 5. enna ithu aruvainu oru section? intha blog mothamaave athuthaane????!!!!

  ReplyDelete
 6. பிரபலமான தமிழ்த் தொலைக்காட்சியில் (கட்சி சார்புள்ளதுதான்)பேட்டிக்கு‍ என்றே பிரபலமான ஒரு‍ நபர் அந்த டி.வி. சார்ந்த கட்சி நபர்களை பேட்டி‍ எடுக்கும் விதம் அலாதிதான்.
  அப்போ*********** ஆட்சியில எந்தப் பிரச்சினையும் இல்லேங்கறீங்க. எதிராளியும் திருதிருவென விழித்தபடி‍ ஆ....ஆமாங்க. ஆயிரம் பிரச்சினை வந்தாலும் சமாளிக்கிற அல்லது‍ தீர்த்து‍ வைத்து‍ அமைதியான ஆட்சி நடத்துற திறமை ********* (இவருக்கு) இருக்கு, வர்ற தேர்தல்ல இவர் அமோகமா வெற்றி பெறுவார்னு‍ ஆணித்தராமா சொல்றீங்க? அப்படித்தானே. ஆ..... ஆமாங்க.

  பாபு
  கோவை

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :