February 02, 2011

அர்ச்சனை-2 சித்ராங்கி ஒரு ராங்கிக்காரி

வீட்டிற்குள் பஞ்சு நுழைந்தபோது இரவு மணி ஒன்று.  கதவைத் திறந்த அம்புஜம் மெகா அர்ச்சனைக்கு ஆயத்தமானாள்.
``வாங்க... வாங்க... சாப்பிடத் தட்டு போடட்டுமா? என்னது, சாப்பிட்டு ஆகிவிட்டதா? நல்லதுதான்.  என்ன, என்ன கேட்டீங்க? நானா? நான் இன்னும் சாப்பிடவில்லை. வீட்டில் ஒரு பைத்தியக்காரி சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பாள் என்று உங்களுக்கு எங்கே நினைவிருக்கப் போகிறது? ஆபீஸில் ஓடாய் உழைத்து வீட்டுக்கு வருகிறாரே, வாய்க்கு ருசியா நாமதானே பாத்து போடணும்னு இருக்கறவள் நான். ’அவர் எப்படியாவது போகட்டும், நாம கொட்டி மூடிக்கலாம்’னு இருக்க எனக்குத் தெரியாது. எங்கம்மா அப்படி வளர்க்கலையே என்னை!  எனக்கும் பசி போய்ட்டுது. இரண்டு மூணு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டுப் படுத்துக்கறேன். வயிற்றெரிச்சலும் தீரும்!

“என்னது, நல்லா சொன்னீங்களே, நீ சாப்பிட்டு விட்டு படுத்துக்கறதுக்கு என்ன என்றுதானே? சரி, படுத்துக்கறேன். அர்த்தராத்திரி கொள்ளைக்காரன் மாதிரி நீங்க கதவை இடிக்கிறபோது திறக்க வேண்டாமா?
ஆமாம்... என்னமோ வாசனை வர்றதே, ஆபீஸ்லே ஏதாவது பார்ட்டியா? எங்கே, என்ன சாப்பிட்டீங்க? அவன் சொன்னான், இவன் சொன்னான்னு கொஞ்சம் சாப்பிட்ட மாதிரி இருக்குதே...
”சரிதான். ஆபீஸில் மேனேஜர் பிறந்தநாள் விழாவா? அவர் குடிக்கட்டும், இல்லாவிட்டால் சாராயத்திலேயே குளிக்கட்டும். உங்க புத்தி எங்கே போச்சு?
இதபாருங்க... ஒவ்வொரு வீட்டுப் பொம்பளை மாதிரி எனக்கு கத்தத் தெரியாது. வாய் செத்த பூனையாக இருக்கறதாலே நீங்க ஆட்டம் போடறீங்க. ஷாப்பிங், அரட்டைக் கச்சேரி என்று எங்கேயும் போகத் தெரியாத அசமஞ்சம் நான்.
இதோ இருக்காளே, பக்கத்து வீட்டு சித்ராங்கி... அவ மாதிரி தாடகை உங்களுக்கு மனைவியா வந்திருக்க..... இல்லை, இல்லை, அதை ஏன் என் வாயால சொல்லணும்?

”நானே கேட்கணும்னு இருந்தேன். இவ்வளவு லேட்டாக ஆடிண்டு, தள்ளாடிண்டு `வாசனைத் திலக'மாக வருவீங்கன்னு எதிர்பார்க்கவில்லை.
காலையில ஆபீசுக்குப் போறப்போ பக்கத்து வீட்டு சிதம்பரத்துக் கிட்ட என்ன பேசிட்டுப் போனீங்க?.. சிதம்பர ரகசியமா? அது என்ன, அந்த சித்ராங்கி அப்படி சிரிச்சாள்? நீங்க என்ன சொன்னீங்க? சித்ராங்கி  ஒரு  நாள், ஒரு வேளை என்னைப் பார்த்து சிரிச்சுப் பேசியது கிடையாது. சரியான ராங்கிக்காரி.
அண்ணலும் பல்லை இளித்தான், அவளும் பல்லை இளித்தாளா?

”என்னது, ’சட்டை பட்டன் இரண்டு பிஞ்சு போயிருக்கிறது. பனியனில் முட்டை முட்டையாக ஓட்டை விழுந்திருக்கிறதே’ என்று சொல்லி சிரித்தாளா?
ஏன் பனியனில் இருக்கற அந்த முட்டையை எடுத்து ஹேம்லட்டோ, ஷேக்ஸ்பியர் போட்டுக் கொடுக்கச் சொல்றதுக்கு என்ன?
”பட்டனை தெச்சு தரட்டுமா என்றா கேட்டாள்? ஏன், உங்க பொண்டாட்டி கையால் ஆகாதவளா? அதுதானே அர்த்தம்? கர்ணன் குண்டலத்தோட பிறந்தது நிஜமோ, பொய்யோ தெரியாது. நான் இடது கையில ஊசியும் வலது கையில் நூலுமாகத்தான் பிறந்திருக்கிறேன். இந்த வீட்டில் நான் சமையல் மெஷின் மட்டுமல்ல, தையல் மெஷினும் கூட!

“இதபாருங்க... அந்த சித்ராங்கியின்  தளுக்கும் மினுக்கும்- தெருக்கூத்து ஸ்திரீபார்ட் வேஷக்காரி மாதிரி பவுடரை அப்பிக்கிட்டு... சகிக்கலை.
நீங்க கதவைத் தட்டறதைக் கேட்டு அந்த பக்கத்து வீட்டுக்கார நாரீமணி-- அவள் முழிச்சிண்டு பார்த்தாலும் பாத்திருப்பா. நாளைக்கு பேப்பர்ல வராத குறையா நியூஸ் போயிடும். என் மானமும் போயிடும்.

“மணியாச்சு, தூங்குன்னு சொல்றீங்களா? எனக்கு வீடு, வாசல், பசங்க, குட்டி, வீட்டுக்காரர் என்று நூறு கவலை. தூக்கமா வரும்? உங்களுக்கென்ன அந்த சித்ராங்கி பல் இளிச்சதை அசை போட்டுக் கொண்டு புளகாங்கிதப்பட்டுக் கொண்டே தூங்கிடுவீங்க.

இதோ பாருங்க..பார்ட்டி, தண்ணி எல்லாத்தையும்  மூட்டை கட்டுங்க... புட்டி உள்ளே போனால் புத்தி வெளியே வந்துடும். அது வர்றதோ இல்லையோ, பசங்களும் நானும் நடு ரோடுக்கு வந்துடுவோம். இதெல்லாம் தேவையா?
ஹும்..விடிகாலை நாலு மணிக்கு எழுந்து, கழுதை மாதிரி வேலை செய்யறதுக்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.
அம்மா... அம்மா... (லொக், லொக்) உங்க சட்டையிலிருந்து புகை நெடி தாங்கலை. நான் கீழே போய் தண்ணி குடிச்சுட்டு வர்றேன்...''

இதுதான் நல்ல சமயம் என்று பஞ்சு படுக்கையில் விழுந்து போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டு குறட்டை விட ஆரம்பித்தார்.

3 comments:

  1. பஞ்சு என்ற கடுகு குறட்டை விட ஆரம்பித்தார்

    ReplyDelete
  2. //ஒவ்வொரு வீட்டுப் பொம்பளை மாதிரி எனக்கு கத்தத் தெரியாது. //
    இனி அலுவலகத்துல இருக்கும்போது உங்க பதிவைப் படிக்கப் போவதில்லை ஐயா...சத்தமா சிரிச்சி ரொம்ப தர்ம சங்கடமாக போச்சு:-)

    ReplyDelete
  3. <<< பனியன்ல முட்டை முட்டையா ஓட்டை.. முட்டையை எடுத்து ஹேம்லட்டோ, ஷேக்ஸ்பியரோ போட்டுக் கொடுக்கச் சொல்றதுக்கு என்ன?>>>
    ரியலி.. சூப்பர்... உங்க கார்ட்டூன் மூளை எப்படியெல்லாம் யோசிக்கிறது. - கபாலி

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!