December 12, 2009

அத்தை -- கடுகு

வக்கீல் வேதாந்தத்தின் வீடும் குடும்பமும் வாழ்க்கையும் ஒரு சின்ன உலகம் என்றால் அந்த உலகத்தை சுழல வைக்கும் அச்சு: அத்தை!




வக்கீலின்குடும்ப த்தோடு ஒன்றிவிட்ட இத்மா அத்தை. வக்கீலின் வீட்டில் புரளும் லட்சங்களும் மிதமிஞ்சிக் கிடக்கும் சொகுசுப் பொருள்களும் அத்தைக்கு லட்சியமில்லை. அந்த குடும்ப த்தில் உள்ள ஒவ்வொரு வருடைய சந்தோஷமும் மனசந்துஷ்டியும் தான் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
பொம்மைக் கலியாணம் மாதிரிஏழாவது வயதில் அத்தைக்கு (அந்த வயதில் அலமேலு) கலியாணம் நடந்து ஒன்பதாவது வயதில் தாலியை இழந்தாள். அதற்கு  முன்பு பெற்றோர்களையும் இழந்தாள். எதிர் காலம் இருண்டு போய் விட்டது என்று உணரக் கூடத் தெரியாத வயதில் வெகு தூரத்து உறவினரான வேதாந்தத்தின் தந்தை அவளை வீட்டோடு  சகோதரி மாதிரி  வைத்துக் கொண்டார்.
வேதாந்தம் வளர்ந்து பெரிய வக்கீலாகி குடியும் குடித்தனமாக வசதியுடன் வாழத் துவங்கியபோதும் அலமேலுவைத் தன் வீட்டோடு வைத்துக் கொண்டார். விதவைக்கோலம் என்கிற அலங்கோலம் எதையும் செய்துகொள்ள விடவில்லை!
வேதாந்தமும் சரி அவர் மனைவி, பெண், பிள்ளைகளும் சரி யார் பேச்சை அலட்சியம் பண்ணினாலும் அத்தை சொல்லைத்  தட்டமாட்டார்கள். அத்தைதான் அந்த வீட்டின் ஃபைனல் அதாரிட்டி! அன்பான சர்வாதிகாரி!
கோடாலி முடிச்சும் பளிச்சென்ற களையான முகமும், எளிய  நூல் புடவையும், பிறருடைய இன்பத்தில் நிறைவு காணும் மனப்பான்மை பிரதிபலிக்கும் முகபாவமும் அத்தை மீது  மரியாதையையும், சிநேக உணர்ச்சியையும் தோற்றுவிக்கும்.
"வேதாந்தம்.....  ராஜிக்கு இந்த வாரம் பரீட்சை பணம் கட்டணும்... எண்பது ரூபாய் கொடுத்திருக்கிறேன். டிரைவர் இரண்டு நாள் வரமாட்டானாம். சரின்னுட்டேன். சாயங்காலம் வர்றபோது சுப்பிரமணிய ஆசாரியை வரச்  சொல்லிவிட்டு வா..... ஜயாவுக்கு நாலு வளையல்கள் பண்ணணும்....நாளைக்குக் கலியாணம் நிச்சயமா யிடுத்துன்னா அப்போ அவசரம் அவசரமாப் பண்ண முடியாது... யாரு ..... மாணிக்கமா?...  வாப்பா,  தோட்டத்திலே போய் தேங்காய்  20, 25  பறிச்சுப் போடு,  கிணற்றடி மரத்தில்தான் காய் நன்னா முற்றி இருக்கு. அதிருக்கட்டும். வேதாந்தம்... குழந்தை ஜயஸ்ரீ என்னமோ கிட்டார் வாத்தியம் வேண்டும் என்று கேட்டாளாம்... நீ "கூடாது' என்றாயாம். அவள் அம்மாவும் "கூடாது' என்றாளாம்... என் கிட்டே வந்து அழறது... போகட்டும், இந்த வயசில்தான் அல்ப ஆசைகள் இருக்கும். உன் மாதிரி, என் மாதிரி வயசான பிறகா ஆசைப்படும்... "சரிடி, உங்கப்பாவிடமிருந்து பணம் நான் வாங்கித்தர்றேன்' என்று சொல்லிவிட்டேன்.''
"அத்தையைக் கேட்டுக்கோ', "அத்தை பர்மிஷன் கொடுத்துட்டாள்' போன்ற வாக்கியங்கள் வக்கீல் வேதாந்தத்தின் இல்லத்தில் அடிக்கடி கூறப்படுபவை. வேலைக்காரன் கூட எஜமானியம்மாவிடம், "ஏம்மா சும்மா திட்டறே... அத்தையம்மா அதோ வர்றாங்க' என்பான்!
"ஏண்டியம்மா கல்யாணி. அவனை ஏன் திட்டறே, போன ஜன்மத்திலே நீ கடன்பட்டிருக்கிறே, அதுதான் நீ அவனுக்கு சம்பளம் கொடுக்கறே... அவன் வேலையைச் செய்யாம ஏமாத்தறான்... உன் பணம் அவனை அப்படிப் பண்றது.!..:
"அத்தையம்மா..வூட்லே சம்சாரம் காய்ச்சல், அதனாலத்தான்...''
"காய்ச்சல் என்றால் சொல்றது, கஷாயம் போட்டு வைப்பேனே! போவச்சே ஒரு யேனத்திலே வாங்கிட்டு போ...கஷாயம் தரேன்''
 தங்கள் பிறந்த நாள், நல்ல நாள் போன்ற முக்கிய தினங்களில் வேதாந்தத்தின் பிள்ளைகள், பெண்கள் முதலில் அத்தையைத்தான் நமஸ்கரிப்பார்கள்.
பெரிய பிள்ளை ஐ. ஏ. எஸ். பாஸ் செய்து வேலைக்குச் சேர்ந்து, முதல் மாத சம்பளத்தை வாங்கியதும், நேராக சமையலறைக்கு  வந்து அத்தையிடம்தான் கொடுத்தான்! "எனக்கு எதுக்குடா  பணம், காசு? தீர்க்காயுசோட இருடா.'' என்றாள்.
வாழ்க்கையில் விரக்தி இல்லாத ஆத்மா அத்தை. அவள்  ஒரே ஒரு சமயம்தான் நெகிழ்ந்து போய் கண்ணீர் விட்டாள். வேதாந்தம் தன் பெரிய பெண்ணின் கல்யாண அழைப்பிதழை அத்தையின் பெயரால் அச்சடித்து இருந்ததைப் பார்த்தபோது!

6 comments:

  1. ஆஹா அற்புதம் ..இந்த மனநிலை ரொம்ப கஷ்டம் செம கேரக்டர்

    ReplyDelete
  2. நீண்ட வருஷங்களாகிவிட்டது இது போன்ற ஒன்ற படித்து.
    ஆமாம், நீங்கள் பிரபல வார பத்திரிக்கையில் எழுதுபவரா என்ன?
    கடுகு என்ற புனைபெயர் தெரிந்தது போல உள்ளது.

    ReplyDelete
  3. அன்புள்ள கக்கு அவர்களுக்கு, நமக்குள் அதிக வித்தியாசம் இல்லை - ஒரு எழுத்துதான்.

    கடுகு என்ற புனைபெயர் தெரிந்தது போல உள்ளது.

    <<<>>> என்னது ‘தெரிந்தது போல ’ என்கிறீர்கள். இங்கு என் வீட்டிற்கு வந்து கேளுங்கள்: எல்லாருக்கும் தெரியும்!

    ReplyDelete
  4. முதலிலேயே படித்திருந்தாலும் நீங்கள் சொன்னதற்காக இன்னொரு முறை படித்தேன். ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு விஷயம் ஹைலைட்டாகத் தெரிகிறது. பெற்றவர்களையே பாரமாக நினைக்கும் பிள்ளைகள் இருக்கும்போது இப்படி தூரத்துச்சொந்தமான அத்தையை முதன்மைப்படுத்தும் சொந்தங்களும் இருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயம்தான்.பொம்மைக் கலியாணம் மாதிரிஏழாவது வயதில் அத்தைக்கு (அந்த வயதில் அலமேலு) கலியாணம் நடந்து ஒன்பதாவது வயதில் தாலியை இழந்தாள். இவரையொத்த விதவைகள் நிறையப்பேர் இருந்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை. நன்றி.

    ReplyDelete
  5. அருமையான கேரக்டர் - அற்புதமாக விவரித்திருக்கிரீர்கள்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!