1962’ம் வருஷம் டிசம்பர் மாதம் 10’ம் தேதி ஜி.டி.யில் நான் டில்லிக்குப் பயணமானேன் (டிக்கட் 35 ரூபாய்). 1984’ம் வருஷம் டிசம்பர் மாதம் 10’ந் தேதி ஜி.டி.யில் சென்னைக்குப் பயணமானேன் (டிக்கட் முதல் வகுப்புக்கு 450 ரூபாய்). டில்லிக்குப் பிரியாவிடை கொடுத்து விட்டு மூட்டை முடிச்சுகளுடன் சென்னைக்கு வந்துவிட்டேன். அரசாங்கப் பணியிலிருந்து முன்னதாக ஓய்வு பெற்று -- அவர்கள் துரத்துவதற்கு முன்பு நாமாக ஓய்வு பெறுவது நல்லதாயிற்றே - வந்துவிட்டேன். இந்த இடைப்பட்ட 21 வருஷங்களில் டில்லியில் ஏனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பலதரப்பட்டவை. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பெரிய புள்ளிகள் சிலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிடைத்தன. நான் ஏதோ அரசாங்க ரகசியங்களையோ கிசுகிசுக்களையோ சொல்லப் போகிறேன் எனறு-÷ ஏதிர்பார்க்காதீர்கள். இவை ஓரளவு எனக்குத் தெரியும் என்றாலும், கூறப் போவதில்லை. பின்னால் எப்போதாவது ஏன் சுயசரிதையில்--(ஆமாம்! சொல்லவில்லை என்று பின்னால் கோபித்துக் கொள்ளாதீர்கள். இப்போதே எச்சரித்து விட்டேன். அப்படியொரு அறுவை உங்களைத் தாக்கக் கூடும்!)--எழுதுவேன்.
சூட் போட்ட போர்ட்டர்
அந்த பயங்கரக் குளிர்காலை வேளையில் டில்லியில் முதன் முதலில் கம்பளி ஸ்வெட்டரோ, போர்வையோ இல்லாமல் வெறும் வேட்டி சட்டையுடன் இறங்கியபோது பல் கிடுகிடு ஏன்று நடுங்கியது. தடபுடலாகக் கோட்டும் ஸ்வெட்டரும் பாண்ட்டும் போட்ட ஒரு சர்தார் போர்ட்டர் அனாயாசமாக ஏன் பெட்டிகளைத் தூக்கி வெளியே கொண்டு வைத்தார். ஒரு ரூபாய் நோட்டை நீட்டினேன். (அந்தக் காலத்தில் ஒரு ரூபாய் நோட்டும் இருந்தது. அதற்கு மதிப்பும் இருந்தது.) அவர் என்னவோ சொன்னார். புரியவில்லை. ஆனால் பார்த்த பார்வை புரிந்தது!. நான் பேசாமல் 5 ரூபாயைக் கொடுத்தேன்.
ஆ! இந்தியாவின் தலைநகரம்,
காந்திஜி நடந்த மண்,. நேருஜி வாழ்ந்து கொண்டிருக்கும் நகரம்! ஏதோ நேருஜியின் பக்கத்து வீட்டிற்கே குடித்தனம் வந்து விட்டதைப் போன்று உள்ளத்தில் லேசான மகிழ்ச்சி. பிரபல ஐ.என்.ஏ. வழக்கு நடைபெற்ற செங்கோட்டையைப் பார்க்கப் போகிறேன். நினைத்தாலே சிலிர்ப்பு ஏற்படும் பல சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவங்கள் நடத்த டில்லி! டில்லியில் எல்லாம் புதுமையாக இருந்தன. சல்வார் கமிஸ் போட்ட பெண்கள் கண்களை( சுகமாக!)உறுத்தினர். (அந்தக் காலத்தில் நம் ஊர்களில் அந்த மாதிரி "கன்னா பின்னா' டிரஸ் எல்லாம் கிடையாது!) நான்குமாடி கட்டிடங்கள் ஏராளமாக இருந்தன.21 வருடங்களுக்குப் பிறகு டில்லிக்கு டாடா சொல்லிவிட்டுக் கிளம்பியபோது இந்தப் புதுமைகளில் பல, பழக்கத்தின் காரணமாக கண்களில் படுவதுகூட் தெரியவில்லை. சில நிஜமாகவே காணாமற் போய்விட்டன. உதாரணமாக, நடமாடும் இஸ்திரிக் கடை அடியோடு போய்விட்டது. இப்போது வீட்டு மாடிப்படியின் கீழ் அல்லது மரத்தடியில் "செமி' நிரந்தர இஸ்திரி கடைகளாக அவை மாறிவிட்டன. நாலு மாடிக் கட்டிடங்கள் பல 10, 12 மாடிகளாக மாறி விட்டன. (இடப் பஞ்சம். டில்லியில் வீட்டு மனைகள் சதுர கஜத்தில்தான் ரேட் பேசப்படுகிறது.) கன்னாட் பிளேஸ் மைதானத்தில் கரடி வித்தைக்காரன் டாலர், பவுண்டாகச் சம்பாதித்துக் கொண்டிருந்தான். இன்று அங்கு ஒரு பெரிய அண்டர்கிரவுண்ட் மார்க்கெட் வந்து விட்டது. டாலர் முதலிய சம்பாத்தியம், வியாபாரம் அந்த மார்க்கெட்டில் (பாலிகா பஜார்) இப்போது நடைபெறுகிறது, ஆனால் ரகசியமாக! (அது ஒரு முனிஸிபல் அண்டர்கிரவுண்ட் பஜார். என்ன பொருத்தமான பெயர்!)
பிரச்னைகள் பிறந்தன
கு... கு...குளிர்! பகல் பன்னிரண்டு மணி வெய்யிலில் இப்படிக் குளிருமா? இப்படிப் பற்கள், நம் பேச்சைக் கேட்காமல் ஆதி தாளம், ஜம்பை தாளம் என்று பலவித தாளங்கள் போடுமா?
கரோல் பாக்கில் என் பால்ய நண்பன் வீட்டிற்குப் போனேன். பால்ய நண்பன் என்றால் எனக்கு ஏதோ தள்ளாத வயது வந்து விட்டது ஏன்று எண்ணாதீர்கள். அவன் (பெயர்: லச்சுமு) பால்ய நண்பன் அல்ல; பாப்பா நண்பன். டில்லிக்கு உத்தியோகத்தில் சேர வந்த விவரங்களை நான் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தான்."இந்த ஸாடே ஸாத் சம்பளத்தில் டில்லியில் குப்பை கொட்டுவது கஷ்டம்பா'' ஏன்று சொல்லிவிட்டு, மீண்டும் சிரித்தான்."வீட்டு வாடகை என்ன தெரியுமா? ஒரே ரூம்தான். ஆல் இன் ஒன். வாடகை 75 ரூபாய்க்குக் குறையாது'' ஏன்றான். (1964’ல் இது 7500 ரூபாய்க்குச் சமம்.)"அப்புறம் ஸ்வெட்டர், ட்வீட் சூட் எல்லாம் வாங்க வேண்டும். இதற்கு மூன்று மாதச் சம்பளம் வைத்தால் கூட போதாது'' என்று சொல்லிச் சிரித்தாள். அவனுக்குச் சிரிப்பு, எனக்கு உடம்பிலே எரிச்சல்; வயிற்றில் புளி; மனதில் ஒரு மிக்சி ஓடியது! காய்கறி விலை, சினிமா டிக்கெட்டுகளின் விலை, எனக்கு அலாட்மென்ட் கிடைக்கக் கூடிய அரசாங்க வீடு (ஆர்.கே. புரம்) பாம்பு உலாவும் பகுதியில் இருக்கக் கூடும் என்ற தகவல் போன்ற பல நகைச்சுவையான செய்திகளைச் சொல்லிச் சிரித்தான்! ஏற்கனவே என் மனதில் அயர்ச்சி. அழகிய மனைவியையும் (இந்தக் கட்டுரையை என் மனைவி கமலா படிக்கக் கூடும் என்பதால் அடைமொழியை மறக்காமல் போட்டிருக்கிறேன்!) குழந்தையையும் விட்டுப் பிரிந்து வந்திருந்த் தால் மனதில் உற்சாகம் இல்லாமல் இருந்த என்னை லச்சுமுவின் ஜோக்குகள், கிடு கிடு பள்ளத்தாக்கில் தள்ளி விட்டன. ஆனால் மறுநாள் புதிய அலுவலத்திற்குப் போய்ச் சேர்ந்த போது அங்கு ஒரு அதிர்ச்சி. காத்திருந்தது-- மற்றொரு கிடு கிடு பள்ளத்தாக்கில் என்னைத் தள்ள!.
‘தொடரும்’ என்று போடுவதற்கு இது நல்ல இடம், ஆகவே மற்றவை அடுத்த பகுதியில் தொடரும்!
Very nice wrinting sir
ReplyDeleteசாவி இதழில் அவ்வப்போது படித்து இருக்கிறேன். இப்பொழுது தொடராக படிக்க ஆவலாயுள்ளேன்.
ReplyDeleteதொச்சு கதைகளும் போடுங்கள்.
சினிமா, அரசியல், இல்லாத விஷய்ங்களைப் போடுங்கள்.
--டில்லி பல்லி
எழுத்து நடை வசீகரித்தாலும் ஏதோ பஸ் டிக்கெட்டில் எழுதி வைத்துக் கொண்டு படிப்பது போல உணர்வு வருகிறது. கொஞ்சம் பத்திகளை அகலமாக்கினால் நன்றாக இருக்கும்
ReplyDeleteஅருமை சார்.
ReplyDeleteதொடருங்கள்.
அடுத்த பகுதிகளை படிக்க ஆர்வமுடன்,
ReplyDeleteDear Agasthiyan,
ReplyDeleteI have read your wondrful articles in Dinmani kadir when it was in peak during 70s.
It is a real pleasure reading you.
continue for readers like me.
K.Sreenivasan Nagasaki Japan