சாவியும் நானும் - கடுகு
புது டில்லி ரயில்வே ஸ்டேஷனில் எழுத்தாளர் சுந்தாவும் நானும் ஜி.டி. எக்ஸ்பிரஸை வரவேற்கக் காத்திருக்கிறோம். வருஷம் 1968.. ரயிலில் வரப்போகிறவர் எழுத்தாளர் சாவி. அவரை முதன் முதலாகச் சந்திக்கப் போகிறேன். அப்போது தான் சில மாதங்களுக்கு முன்பிலிருந்து தினமணிக் கதிரில் தொடர்ந்து எழுதத் துவங்கி இருந்தேன். (தினமணி கதிரில் எழுத ஆரம்பித்தது ஓரு தனிக்கதை. அதை விவரித்தால் சுயப்பிரதாபமாக இருக்கும். ஆகவே தவிர்க்கிறேன்.)
ரயிலில் இருந்து சாவி இறங்கியதும், அவரிடம் சுந்தா என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஒரு சகஜமான புன்னகையுடன் "ஹலோ” சொல்லியபடி எனக்குக் கைகொடுத்தார்.
கைகொடுத்தவர்
நாற்பது வருஷம் கழித்து இந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்போது என் மனதில் நெகிழ்ச்சி எற்படுகிறது. அன்று மட்டுமல்ல, பின்னால் அடுத்த முப்பது வருஷங்களுக்கு மேலாக எனக்குப் பலவிதத்தில் கைகொடுத்து, எழுத்துலகில் என் தகுதிக்கு மீறிய உயரத்தில் என்னை வைத்துவிட்டார்.
சாவி நல்ல நகைச் சுவை எழுத்தாளர். அதைவிட நல்ல நகைச்சுவைப் பேச்சாளர். அதைவிட மிக நல்ல நகைச்சுவை ரசிகர்.
"அடடா.... என்னமாய் எழுதி இருக்கிறார் சும்மா கல கல என்று! எப்படி ஓடுகின்றது நடை!” என்று பாராட்டி ரசிப்பார்.
அவர் புதுமை விரும்பி. அதனால் குமுதம் செய்யும் புதுமைகளை ரசிப்பதுடன், அதுமாதிரி புதுமைகளைக் கதிரிலும் செய்ய விரும்பினார். நானும் ஏராளமான புதுமைகளுக்கு ஐடியா கொடுத்தேன். அவற்றை அவர் உடனுக்குடன் செயல்படுத்தி வந்தார். (என் புதுமைகளில் எண்பது பங்கு உமியும், இருபது பங்கு அவலும் இருந்தன என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறேன்.)
குமுதத்தில் ஒருத்தர் எழுதிவிட்டால் போதும், அவரை எப்படியாவது கதிரில் பிடித்துப் போடவேண்டும் என்று பரபரப்பார். நானும் 1963-லிருந்து குமுதத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்ததால் 1968-ல் என்னை தினமணி கதிரில் வளைத்துப் போட்டார்.
”பால்யூ என்னமா செய்கிறார்!. எவ்வளவு சுறுசுறுப்பாக செய்கிறார்!... ரா. கி. ரங்கராஜன் மாதிரி சரளமாக எழுதுவதற்கு ஆளே கிடையாது.... பாக்கியம் ராமசாமி நகைச்சுவையில் அபாரமாய் வெளுத்து வாங்குகிறார்" என்றெல்லாம் வியப்பார். இப்போது ஒரு சின்ன ரகசியத்தை இங்கே உடைத்தால் தவறில்லை. "பால்யூ தான் உமக்கு நல்ல நண்பராயிற்றே, கொஞ்சம் நம்ம கதிருக்கும் ஏதாவது எழுதச் சொல்லுங்களேன். அவர் எழுதுகிறார் என்பதை யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொள்கிறேன்" என்று என்னிடம் பல தடவை சொல்லியிருக்கிறார். ஒரு சமயம் ரா. கி. ரங்கராஜனையே தூண்டில் போட விரும்பினார். பிற்காலத்தில் தன் சாவி பத்திரிகையில் பாக்கியம் ராமசாமியை உதவி ஆசிரியராக அமர்த்திக்கொண்டு புளகாங்கிதமடைந்தார்.
சாவி தனது இருதய பைபாஸ் ஸர்ஜரியைப் பற்றி ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதினார். அதை அச்சில் பார்த்ததும் அவர் அடைந்த புளகாங்கிதத்திற்கு அளவே இல்லை. காரணம், அந்தக் கட்டுரை அவரது அபிமானப் பத்திரிகையான குமுதத்தில் வெளியாகியிருந்தது.
குமுதத்தில் சுஜாதா ஒரு கதை எழுதியிருந்தார். அவர் டில்லியில் இருக்கிறார் என்று தெரிந்ததும் எனக்குக் கடிதம் எழுதினார். அதன்படி சுஜாதாவிடம் கதை கேட்டு வாங்கி அனுப்பினேன். பின்னால் சுஜாதா கதிரில் தொடர் கதை எழுத ஆரம்பித்தார். கதையை வாராவாரம் சுஜாதா என்னிடம் கொடுப்பார். அதை டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் கொடுத்து, விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பேன். எழுபதுகளில் சுஜாதாவை ஒரு சினிமா நடிகர் அளவுக்குப் பாபுலராக்கியவர் சாவிதான்.
சாவியின் கோபம்
சாவியின் கோபம் சற்று பிரபலமானது. " ”எனக்கு முன் கோபம் உண்டு என்ன செய்வது? அது என்னோடு பிறந்தது” என்பார்.
ஒரு சமயம் வாரியார் ஸ்வாமிகள், காமராஜர் ஆகியவர்களைச் சேர்த்துக் கொண்டு ’சத்ய சபா’ என்ற அமைப்பை சாவி துவங்கினார். காமராஜரிடம் சபா பற்றி முதலில் பேச போனபோது, காமராஜர் "சபாவெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுண்ணேன். என்னை எதுக்கு இழுக்கறே? எனக்கு முன்கோபம் கொஞ்சம் ஜாஸ்தி" என்றார். உடனே சாவி "ரொம்ப நல்லதாப் போச்சு. எனக்கும் முன்கோபம் ஜாஸ்தி. நமக்குள் நல்ல பொருத்தம் இருக்கும்" என்றார். காமராஜர் உடனே சிரித்துவிட்டு "சரி....சரி....நான் வர்றேன்” என்று கூறிவிட்டார்.
சாவியின் கோபத்திற்கு மற்றொரு சின்ன சம்பவம். தன்னை அலட்சியப் படுத்தினாலும் சாவி கவலைப்படமாட்டார். ஆனால் தினமணி கதிரை யாரும் குறைவாகப் பேசக்கூடாது, அலட்சியப் படுத்தக்கூடாது.
ஒரு பிரபல இயக்குனர் தன் திரைப்படத்தில் கிட்டத்தட்ட இப்படி ஓரு வசனத்தை எழுதியிருந்தார். கதாநாயகியை ரயில் நிலையத்தில் வழியனுப்பும் கதாநாயகன் "இந்தா, இந்த வார குமுதம், கல்கி, விகடன் எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன் படித்துக்கொண்டே போ" என்கிறான். படத்தைப் பார்த்துவிட்டு வந்த சாவி, நேரே கதிர் ஆபீசுக்குச் சென்றார். அச்சுக்குப் போகத் தயாராயிருந்த ப்ரூஃப்களை வரவழைத்து, அதில் இடம் பெற்றிருந்த அந்த குறிப்பிட்ட படத்தின் விமரிசனத்தை எடுத்துவிட்டார். அந்த இடத்தில் நாலைந்து ஜோக்குகளைப் போட்டு, அச்சுக்கு அனுப்பிவிட்டார்!
"மூன்று பத்திரிகைகளின் பெயரை எழுதிய டைரக்டர், ஏன் நம் தினமணி கதிரின் பெயரைச் சேர்க்காமல் விட்டார்? சரி, அது அவர் இஷ்டம். படத்தின் விமரிசனத்தை நீக்கி விடுவது என் இஷ்டம்" என்றார்.
(படம் ரிலீசாகி மூன்று, நான்கு வாரங்களாகியும் கதிரில் விமரிசனம் வராததால், சாவியை டைரக்டர் அணுகி சமாதானம் செய்ததெல்லாம் தனிக்கதை.)!
கட்டுரைகளைக் கிடப்பில்....
சாவிக்கு என் எழுத்தின்மேல (தவறான?) மோகம் இருந்ததால், தினமணி கதிரின் ஆஸ்தான எழுத்தாளனாக நான் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தேன். என் எழுத்து வராத இதழே இல்லை என்று பெருமையடித்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கு வாய்ப்புகள் கொடுத்தார். இருந்தும் ஒரு சமயம் என் மூன்று கட்டுரைகளைக் கிடப்பில் போட்டுவிட்டார். அவரது கேரக்டர் கட்டுரைகளைப் போல, நானும் மூன்று கேரக்டர் கட்டுரைகளை எழுதி அனுப்பியிருந்தேன். பல மாதங்களாகியும் அவை வெளியாகவில்லை. நானும் அவரிடம் அதைப் பற்றி கேட்கவில்லை. ஆறு மாதம் கழித்து திடீரென்று முதல் கட்டுரை வெளியாயிற்று. தொடர்ந்து கேரக்டர் கட்டுரைகளை அனுப்பும்படி கடிதம் எழுதியிருந்தார். நானும் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். இருபத்து மூன்று வாரங்கள் வெளியாயின. "அடுத்த வாரத்துடன் கேரக்டர் கட்டுரையை நிறுத்திவிடுங்கள்”என்று அவரிடமிருந்து ஒருவரிக் கடிதம் வந்தது. ஐம்பது, அறுபது கட்டுரைகள் எழுத நினத்திருந்தேன். அவர் சொன்னபடி இருபத்தி நாலாவது கட்டுரையுடன் நிறுத்திவிட்டேன்.
சில மாதங்கள் கழித்து நான் சென்னை சென்ற போது அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் கேட்டார் "உங்கள் கேரக்டர் கட்டுரையை இருபத்து நாலு வாரத்துடன் நிறுத்திவிடச் சொன்னேனே, ஏன் என்று நீங்கள் கேட்கவில்லையே!”
”பத்திரிகையில் போடுவதும் போடாமல் இருப்பதும் உங்கள் ஊரிமை, நான் கேட்பது சரியாக இருக்காது என்பதால் கேட்கவில்லை" என்றேன்.
”சரி, நீங்கள் கேட்டமாதிரி வைத்துக்கொண்டு நான் பதில் கூறிவிடுகிறேன் நான் இருபத்தைந்து கேரக்டர் கட்டுரைகள்தான் எழுதியிருக்கிறேன், என்னை நீங்கள் மிஞ்சக் கூடாது என்பதால் நிறுத்தச் சொன்னேன்" என்றார், இப்படிச் சொன்னாரே தவிர, பின்னால் குங்குமம் இதழில் மேற்கொண்டு இருபத்தைந்து கேரக்டர் கட்டுரைகளை எழுதியபோது, வெகுவாகப் பாராட்டினார்.
பின் குறிப்பு
சாவி அவர்களைப் பற்றி நூறு பக்கக் கட்டுரை எழுதுமளவுக்கு பல தகவல்கள், சம்பவங்கள் உண்டு. பலவற்றில் நானும் இடம் பெறுவேன் என்பதாலும், சந்தடிசாக்கில் கந்தகப்பொடி வைப்பது போல், என் பிரதாபத்தையும் கூற வேண்டியிருக்கும் என்பதாலும் இப்போது இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
இந்தக் கட்டுரையைப் பாராட்டி எழுதினீர்கள் என்றால் ஆபத்து. ஏனென்றால் தொடர்ந்து கல்கியும் நானும், தேவனும் நானும், குமுதம் எஸ். ஏ. பி. யும் நானும், ரா. கி. ரங்கராஜனும் நானும், பாக்கியம் ராமசாமியும் நானும், புஷ்பா தங்கதுரையும் நானும், டைரக்டர் ஸ்ரீதரும் நானும், டைரக்டர் கே. பாலச்சந்தரும் நானும், சித்ராலயா கோபுவும் நானும், சுப்புடுவும் நானும், டில்லி கணேஷும் நானும் என்று எழுதித் தள்ளிவிடுவேன். எச்சரிக்கை!
சாவி அவர்களிடம் 1987 முதல் 1994 வரை முழுசாக எட்டு ஆண்டுகள் நேரடியாகப் பழகி, ஜர்னலிசம் பயின்று, அவரின் அன்புக்குப் பாத்திரமானவன் என்கிற முறையில், அவர் பெருமை பேசும் கட்டுரைகள் எங்கிருந்தாலும் தேடித் தேடிப் படித்து ரசிப்பது என் வழக்கம். அவருடனான அனுபவங்களை நானும் என் வலைப்பூவில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறேன். தங்களின் இந்தக் கட்டுரையைப் பெரிதும் ரசித்தேன்.
ReplyDeleteந்ன்றி. சாவி அவர்களை பற்றிஎழுத இன்னும் நிறைய உள்ளன. அவ்வப்போது எழுத எண்ணம்.
ReplyDeleteஅடுகு
Dear ரவி பிரகாஷ்,
ReplyDeleteஉங்கள் வலைப்பூ முகவரி தர இயலுமா ?
நன்றி...
srinivasan,
ReplyDeletewww.ungalrasigan.blogspot.com