December 09, 2009

நண்பர் கடுகு

 எழுதியவர்: ரா.கி. ரங்கராஜன் (குமுதம் ஜாம்பவான்!)
                   சுவையாக எழுதத் தெரிந்த எழுத்தாளர்கள் இன்று நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் நகைச்சுவையாக எழுதக் கூடியவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் குறைந்துவிட்டது. நல்ல வேளையாக நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவராக இருப்பவர் ‘கடுகு’ என்ற என் நண்பர் பி.எஸ். ரங்கநாதன். இவருடைய எழுபத்தைந்தாவது பிறந்த நாளையொட்டி எல்லா நண்பர்களுமாக சேர்ந்து விழா நடத்தினார்கள் சென்ற வாரம்.
சுஜாதாவையும் சுப்புடுவையும் போல் டெல்லியிருந்து தமிழ் நாட்டின் மீது படையெடுத்த எழுத்தாளர்களில் ஒருவர் கடுகு. இவரைக் கண்டு பிடித்துக் கொடுத்த பெருமை குமுதம் இதழையே சேரும் என்று நினைக்கிறேன்.
டெல்லியில் வாழும் சாதாரணத் தமிழர்களைப் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள்தான் இவரைப் பிரபலமாக்கின. ‘அரே டெல்லி வாலா’ என்ற தலைப்பில் சின்னஞ்சிறு துணுக்குகளை முதலில் எழுதத் தொடங்கினார். அமெரிக்க ‘டைம்ஸ்’ பத்திரிகையில் வருவது போன்ற தகவலும் நடையும் கொண்டிருந்ததால் அமரர் எஸ்.ஏ.பி.க்கு பி.எஸ்.ஆரை மிகவும் பிடித்துவிட்டது.

டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் வாசலில் பட்டாணி விற்பவனையும், புரோகிதம் பார்க்க ஸ்கூட்டரில் செல்லும் சாஸ்திரிகளையும், கொத்துமல்லி விற்கும் கீரைக்காரியையும் பேட்டி கண்டு எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்தார். ‘கடுகுச் செய்திகள்’ என்று நாலைந்து வரிகளில் துணுக்குகள் எழுதவே ‘கடுகு’ என்ற புனைப் பெயரே நிரந்தரமாகி விட்டது.
குமுதத்தில் எவ்வளவு கட்டுரைகளை எழுதினார் என்று இவருக்கும் கணக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லக்ஷ்மணைப் பற்றி எழுதினார். லால்பகதூர் சாஸ்திரி காலமானபோது அவருக்குப் பி.ஏ.வாக இருந்த வெங்கடராமன் என்ற தமிழரைப் பேட்டி கண்டு எழுதினார். வேலூர் ஆஸ்பத்திரியில், இடுப்புக்குக் கீழே இயங்காதவராக இருந்த மேரி வர்கீஸ் என்ற பெண் சர்ஜன், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே ஆபரேஷன் செய்ததைப் பற்றி எழுதினார். ஆண்களால் நிட்டிங் செய்ய முடியுமா என்று போட்டி வைத்த போது, தன்னால் முடியும் என்று சொல்லி, அதை விவரித்துக் கட்டுரை எழுதிப் பரிசையும் பெற்றார். இதெல்லாம் 64ம் வருட வாக்கில்.
அப்போது ரங்கநாதன் தபால் துறையில் பணியாற்றி வந்தார். சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவர் பத்திரிகைகளுக்கு எழுதக் கூடாது என்று யாரோ கிளப்பி விட்டார்கள். தான் எழுதுவது இலக்கியப் பணியே தவிர, அரசியல் அல்ல என்று பதிலளித்த ரங்கநாதன், குமுதத்திலிருந்து ஒரு சர்டிபிகேட்டையும் இணைத்தார். அவர் எழுதியவை நல்ல இலக்கியக் கட்டுரைகள் என்று அமரர் எஸ்.ஏ.பி. அப்போது எழுதித் தந்த நற்சான்றை இன்றைக்கும் பிரியத்துடன் பாதுகாத்து வருகிறார் கடுகு.
அஞ்சல் துறையை விட்டு விலகிய பின் ஹிந்துஸ்தான் தாம்ஸன் என்ற பிரபலமான விளம்பர நிறுவனத்தில் சேர்ந்து பல வருடம் பயிற்சி பெற்றதால் ஹாஸ்யச் சுவையிலிருந்து கணினிச் சுவையில் நாட்டம் கொள்ள ஆரம்பித்தார். விரும்பிக் கேட்போருக்கு ‘எழுத்துரு’ செய்து தருகிறேன் என்று சொல்கிறார். (கணினி பற்றி நான் சுத்த சுயம்பிரகாச ஞான சூன்யம். ‘எழுத்துரு’ என்றால் என்ன என்று தயவு செய்து யாரும் கேட்டுவிடாதீர்கள். கீழே விழுந்து விடுவேன்.)
டைரக்டர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, கடுகு மூன்று பேரும் பால்ய நண்பர்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஸ்ரீதர் இவரைப் பார்ப்பதற்காக பெஸன்ட் நகர் வீட்டுக்கு மனைவியுடன் வந்திருந்தார். காரில் உட்கார்ந்தபடியே பேசினாராம். உடல் நலம் குன்றி, பேசுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாகவும், ஸ்ரீதரின் மனைவி அவர் சொல்வதை விளக்கிச் சொன்னதாகவும் கடுகு வருத்தத்துடன் சொன்னார்.
கணினித் துறையில் தேர்ச்சி பெற்றிருப்பதால் ரங்கநாதனும் அவருடைய மனைவி கமலாவும் சேர்ந்து பல புத்தகங்களை அழகிய முறையில் வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க ஒன்று, பதம் பிரித்துப் பதிப்பித்துள்ள ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’. சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் தான் வாங்கிய ஒரே புத்தகம் இதுதான் என்றும், இது ஒரு ரத்தினம் என்றும் சுஜாதா எழுதினார். (இரண்டு பாகங்கள்; நந்தினி பதிப்பகம், போன்: 9444187365)
இரண்டு மூன்று தடவைகள் பி.எஸ்.ஆரின் டெல்லி வீட்டுக்கு சென்று தங்கியிருக்கிறேன். சாப்பிட்டிருக்கிறேன். முதல் முறை, தமிழ்நாடு செய்தித் தொடர்புத் தலைமைச் செயலாளராக இருந்த கவிஞர் தங்கவேலு (‘சுரபி’) என்னை டெல்லிக்குப் போய், பத்திரிகையாளர்கள் குழுவில் சேர்ந்து கொள்ளும்படி அனுப்பி வைத்தார். விமானப் பயணமும் புதிது. டெல்லியும் புதிது. அப்போது பி.எஸ்.ஆர்.தான் கை கொடுத்தார். அவருடைய மகள் ஆனந்தி -அன்று உயர்நிலைப்பள்ளி மாணவி - அவள் அறை நிறைய அலமாரி அலமாரியாக ஆங்கில நாவல்களை அடுக்கி வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இப்போது அவர் நியூ ஜெர்ஸியில், புகழ் பெற்ற ஒரு மருந்து நிறுவனத்தில், புற்று நோய்க்கான மருந்துகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.
நானும் ரங்கநாதனும் நண்பர்களாயிருப்பது போல, என் மனைவியும் ரங்கநாதனுடைய மனைவியும் நெருங்கிய சினேகிதிகள். பீங்கான் கிண்ணம், நூதன் திரி ஸ்டவ், மோடா என்று இவள் எது கேட்டாலும் அவர் டெல்லியிலிருந்து அனுப்பிக் கொண்டேயிருப்பார். என் குடும்பத்தில் பிரச்னையும் வேதனையும் ஏற்பட்ட சமயங்களில் அவர்கள் இருவரும் ஆறுதலும் தேறுதலும் தந்ததை எங்களால் மறக்க முடியாது.

கடைசியாக ஒரு கடுகுச் செய்தி: பி.எஸ்.ஆர். எனக்கு தூரத்து உறவு. என் மருமகளின் தங்கைக்கு இவர் பெரிய மாமனார். (புரிந்து கொண்டால் சரி.)

1 comment:

  1. //அமரர் எஸ்.ஏ.பி.க்கு பி.எஸ்.ஆரை மிகவும் பிடித்துவிட்டது.//

    அமரராகப்போகும் இந்த பாமரனுக்கும் பி.எஸ்.ஆரை மிகவும் பிடிக்கும். இவரைப்பிடிக்காதவர்களுக்கு, பைத்தியம் தான் பிடிக்கும்!

    பாரதி மணி

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!