December 25, 2009

திக்குத் தெரியாத டில்லியிலே!


டில்லிக்குப் போன முதல் தினம் குளிர் நடுக்கியது. சாயங்காலம் நாலு மணிக்குச் சூரியன் போர்த்திக் கொண்டு ஓடிவிட்டதால், குளிர் ஒருபடி அதிகமாயிற்று. எழு மணிக்குச் சாப்பிட்டு விட்டு, படுக்கைக்குள் புகுந்தேன். எவ்வளவு போர்த்திக் கொண்டாலும் குளிர் எப்படியோ உள்ளே புகுந்து வந்து தாக்கியது. (இப்படி மனிதர்களைத் தொல்லைப்படுத்தும்   வித்தையை டில்லி குளிருக்குக் கற்றுக் கொடுத்த குரு, சைதாப்பேட்டை கொசுவாகத்தான் இருக்க வேண்டும்!)

குளிர் காரணமாகத் தூக்கம் வரவில்லை. வெளியே வீதியில் சந்தடி அடங்கவில்லை. இந்தக் குளிரில்  வீட்டிற்கு வெளியே போகிறவர்களுக்கு இருப்பது எருமைத் தோலா (டில்லி எருமை) என்று எண்ணிக் கொண்டே ஒரு மாதிரி தூங்கிப் போனேன்.
காலையில் கண் விழித்த போது எனக்கு இரண்டு ஆச்சரியங்கள்! எப்போது நான் மரவட்டை ஆனேன்?

ஆமாம். குளிரில் ஒரு ஸ்பிரிங் போன்று சுருண்டு இருந்தேன். மணியைப் பார்த்தேன். ஒன்பதரை."என்னப்பா இவ்வளவு நாழியாகி விட்டதா? சூரிய வெளிச்சமே வரவில்லையே?'' என்றேன்.வாரி சுருட்டிக் கொண்டு  எழுந்து. கொதிக்கும் வெந்நீரில் குளித்தேன். "வெந்நீர் பட்ட இடமெல்லாம் ஜில்லென்று இருந்ததடி' என்று பாரதியார் பாணியில் எழுதலாம். 
நண்பரின் சைக்கிளை வாங்கிக் கொண்டு, ஆபீஸ் இருந்த பார்லிமெண்ட் வீதிக்குப் புறப்பட்டேன், தப்பு வழியில்! அகன்ற வீதிகள். அங்கங்கே பிரமாண்டமான டிராபிக் தீவுகள், சர்வ ஜாக்கிரதையாகப் போனாலும்  எங்கேயோ வழிதவறித் திரும்பி விட்டேன். "இது க்யா ஸ்ட்ரீட்?'' என்று மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றி நான் கேட்டபோது, "குதுப் ரோட்'' என்று சொன்னார். குதுப்மினார் டில்லியின் தென்பகுதியில் உள்ளது. நம் அலுவலகமும் தென் டில்லியில்தான் இருக்கிறது. ஆகவே சரியான வழியில் தான் செல்லுகிறோம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டு அதே வழியாகச் சென்றேன். அரைமணி ஆகியும் அலுவலகம் வரவில்லை. மாறாகப் பழைய டில்லியின் "நாக்குப்பூச்சி' சந்துகள் வந்தன! தப்பு வழியில் வந்து விட்டோம் என்று உண்ர்ந்து, மறுபடியும் மும்மொழியில் வினவினேன். என்னுடைய கேள்வியில் இருந்த தமிழ் வார்த்தைகளைப் புரிந்து கொண்டார்கள். ஆங்கில வார்த்தைகளைக் கேட்டு விழித்தார்கள்.

கடைசியில் ஒரு மதராஸி அகப்பட்டார். "அடேடே... குதுப் ரோடு டில்லிக்கு வடக்குப் பக்கம் அழைத்துப் போகும். வந்த வழியே திரும்பிப் போங்க'' என்று சொல்லி எப்படி எப்படிப் போக வேண்டும் என்று விவரமாகச் சொன்னார்.

அரே, தோத்திவாலா?
ஒரு மாதிரியாக ஆபீஸ் போய்ச் சேர்ந்தேன். அங்கும் எனக்கு ஒரு அதிர்ச்சி இருந்தது. காரணம், ஆபீஸில் நிறைய பிரஞ்சு மொழியில்தான் கடிதங்கள், பாரங்கள் (சர்வதேசக் கணக்குகள் என்பதால்!) சுற்றிலும்  அதைவிடக் கடினமான இந்தி மொழி. வேஷ்டி உடுத்தி கொண்டு ஆபீஸக்குப் போன என்னை ஒரு விசித்திரப் பிராணியாகத் தான் பார்த்தார்கள்.

அந்த ஆபீஸின் கெüரவத்திற்குக் களங்கம் விளைவித்து விட்டதாகத்தான் கருதினார்கள்.சென்ட்ரல் செக்ரட்டேரியட் அலுவலகங்களின் அந்தஸ்து என்ன? இந்தியாவையே ஆட்டிப் படைக்கும் ஆபீஸில், சாதாரண வேஷ்டி கட்டிக் கொண்டு வருவதா? ஆம், அந்த ஆபீஸின் சரித்திரத்தில், தட்டு கட்டு வேஷ்டியுடன் சென்ற முதல் ஆசாமி நான்தான். (கடைசி ஆசாமியாகக் கூட இருக்கும்.)அவர்களின் மொழிகளும் விழிகளும் என் சுரத்தை இழக்கச் செய்து விட்டன என்றாலும், டில்லியில் வீட்டு வாடகை அதிகம், கட்டுப்படியாகாது என்றெல்லாம் சொன்னதுதான் மனதில் பெரிய பள்ளத்தைத் தோண்டியது.

யாரோ சொன்னார்கள், டில்லியில் ட்யூஷன் சொல்லிக் கொடுத்தால் நல்ல பணம் கிடைக்கும் என்று. அதுவும் மதராஸிகளுக்கு டிமாண்ட் அதிகமாம்.அதன் பிறகு ட்யூஷனுக்கு முயற்சி செய்தேன்.சில மாதங்கள் ஓடிவிட்டன. வினய நகரில் ஒரு  வீட்டிற்கு - ஒரே அறை போர்ஷன் - குடி பெயர்ந்தேன்.

எம்.பி.க்கு ட்யூஷன்
ஒரு நாள் என் அலுவலக நண்பர், "ஒரு கன்னட எம்.பி.க்குத் ("பெண்மணி மட்டுமல்ல, செல்வியும் கூட!”) தமிழ் சொல்லித் தர வேண்டும், நீங்கள் தயாரா?'' என்று கேட்டார்.
எம்.பி. மிகப் பெரிய பிரமுகர் ஆயிற்றே! கிடைத்தற்கரிய வாய்ப்பு ("எம்.பி.யின் மூலமாகப் பிரமோஷன், அது, இது கிடைக்கும். ஒத்துக் கொள்ளுங்கள்''  இது கமலாவின் சிபாரிசு!)
சரி என்று ஒத்துக் கொண்டேன். அந்தப் பெண்மணியைச் சந்தித்தேன். ட்யூஷன் சம்பளம் தவிர மற்ற விஷயமெல்லாம் பேசிவிட்டு வந்தேன். ஆபீஸ் அருகில் இருந்த நார்த் அவென்யூவில் அவர் வீடு இருந்தது.  முடிந்ததும் அவர் வீட்டிற்குச் சென்று ‘அகர முதல எழுத்தெல்லாம்' சொல்லிக் கொடுத்துவிட்டு, வினய நகரில் இருந்த என் வீட்டிற்குப் போக வேண்டும்.
அந்த எம்.பி. இளவயதுக்காரர்தான். மூன்று  எம். ஏ. பட்டம் பெற்றவர். மடை திறந்தாற் போல் பேசக் கூடியவர். இந்தி, இங்கிலீஷ், கன்னடம், சம்ஸ்கிருதம் எல்லாவற்றிலும் வல்லவர். இருந்தாலும் ஒரு எல்.கே.ஜி. வகுப்பு மாணவி போல அக்கறையாகக் கற்றுக் கொண்டார்.
சுமார் ஒரு வருஷம் þ அவர் டில்லியில் இருந்த போதெல்லாம் சொல்லிக் கொடுத்தேன். இதற்கிடையில் அவருடைய சர்வன்ட் குவார்ட்டர்ஸில் எனக்கு இடம் தந்தார்.
சர்வன்ட் குவார்ட்டர்ஸ் என்பது தனியான ஒரு அப்பார்ட்மெண்ட். ஒரு எம்.பி.க்கு ஒன்று கிடைக்கும். எம்.பி.க்களின் எண்ணிக்கைகளை விட குவார்ட்டர்ஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் எப்போதும் டிமாண்ட். வாடகையும், சொன்னால் நம்ப மாட்டீர்கள். பன்னிரண்டு
ரூபாய்தான். ஆகவே சர்வன்ட் குவார்ட்டர்ஸ் கிடைத்து விட்டது என்றால், வியப்புடன் உங்களைப் பார்ப்பார்கள். (அல்லது வயிற்றெரிச்சலுடன் பார்ப்பார்கள்!)
அங்கு சென்ற சில வாரங்களில், எம்.பி.யின் வீட்டில் திருடன் வந்து விடவே, அவர் பயந்து விட்டார். துணையாக இருக்க, எங்களை அவரது வீட்டிற்கே வரச் சொன்னார். எங்கள் வசதிக்காகப் பெரிய ஃப்ளாட்டிற்கு மாறினார்.
நாங்கள் அவருடைய ஃபிளாட்டிற்கே போனதால் எம்.பி.க்கு மூன்று வித லாபம். துணை, கமலாவின் ருசிகரமான சமையல், வீட்டிலேயே தமிழ் வாத்தியார். (இதெல்லாம் இருக்கட்டும். அந்தப் பெண்ணுக்கு கமலாவின் கண் முன்னாலேயே பாடங்கள் நடத்துவதால் வேறு "காதல் பாடங்கள்' நடத்தி விடுவேனோ என்று கமலா பயப்பட வேண்டியதில்லை!)

பிரம்மாண்டமான ஃபிளாட். டெலிபோன், அந்தஸ்தான இடம். வேறு பல எம்.பி.களுடைய அறிமுகம். வாடகை கிடையாது!

அந்த எம்.பி.யைத் தேடி அடிக்கடி வருபவர்களுள் ( ஜனதா தலைவர்: பின்னாள் பிரதம மந்திரி!) சந்திரசேகரும் ஒருவர். கமலாவின் டிபனையும் காபியையும் பல தடவை பாராட்டியிருக்கிறார்.

இப்படி ஒரு வருஷம் சென்றிருக்கும். எல்லாம் சுமுகமாகத்தான் இருந்தன. இருந்தாலும் திடீர் என்று எங்களைக் காலி செய்யச் சொல்லி விட்டார் அந்த மாதர் குல மாணிக்கம். என்ன காரணம் சொன்னார் தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். இப்படிகூட  ஒரு   காரணம் இருக்கமுடியுமா என்று வியப்பீர்கள். அதை அல்பமானது என்பதா? பெண்மையின் பொறாமையினால் தோன்றியது என்பதா? ..............அது  அடுத்த பகுதியில்.                   (தொடரும்)

5 comments:

 1. கதை படிப்பது போல் சுவாரசியமாக இருக்கிறது.

  ReplyDelete
 2. // இப்படிகூட ஒரு காரணம் இருக்கமுடியுமா என்று வியப்பீர்கள். அதை அல்பமானது என்பதா? பெண்மையின் பொறாமையினால் தோன்றியது என்பதா? ..............அது அடுத்த பகுதியில்//

  சஸ்பென்ஸ் தாங்கவில்லை சார், சீக்கிரம் சொல்லுங்க, ப்ளீஸ்!

  ReplyDelete
 3. யதிராஜ சம்பத் குமார்December 25, 2009 at 4:18 PM

  அந்த பெண் எம்.பி, செல்வி. தாரா தேவியா??

  ReplyDelete
 4. <>>
  இல்லை. இல்லை. அப்புறம் ஒரு விஷயம். இந்தத் தொடரில் பெயர் குறிப்பிடப்படாமலேயே பலரைப் பற்றிய குறிப்புகள் வரும். அவர் யாராக இருக்கும் என்று மண்டையைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். நான் குழப்புவதே போதும்!

  ReplyDelete
 5. யதிராஜ சம்பத் குமார்December 26, 2009 at 12:27 PM

  இக்கட்டுரையில் யார் அந்த எம்.பி என்று அறிந்து கொள்வது முக்கியமில்லையென்றாலும் கூட, ஒரு சின்ன க்யூரியாஸிட்டிதான். சந்திரசேகர் பிரதமராக வருவதற்கு முன்பு என்றால் தோராயமாக எட்டாவது பாராளுமன்றமாக இருக்க வேண்டுமென்பது எனது யூகம். அதில் கர்நாடக மாநிலத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்ட இரண்டு பெண் எம்பிக்களுள் ஒருவர் மட்டுமே செல்வி. அவர் சிக்மங்களூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தாரா தேவி, இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அதற்காகத்தான் கேட்டேன்.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!