December 30, 2018

அதிசயம்; ஆனால் உண்மை! முற்பிறப்பை அறிந்த ஒரு சிறுமி!

"சைகாலஜிஸ்ட்' என்று இங்கிலாந்திலிருந்து வரும் பத்திரிகையில் 1965-வாக்கில் ஒரு சுவையான கட்டுரை வெளியாகி இருந்தது. முற்பிறப்பை உணர்ந்த ஒரு சிறுமி, சில வருஷங்களுக்கு முன் டில்லியில் இருந்தாள் என்றும், அவள் முழுக்க முழுக்க முற்பிறப்பை அறிந்தவள் என்பதைப் பல சோதனைகள் மூலம் பிரமுகர்கள் குழு கண்டறிந்தது என்றும் விவரமாக எழுதி இருந்தார்கள்.

      கிட்டத்தட்ட 30 வருஷங்களுக்கு முன்பு, அதாவது 1935 சமயம்,  ஏழெட்டு வயதுச் சிறுமியாக இருந்த போது அந்தப் பெண் (சாந்தி தேவி) இப்படி முற்பிறப்பு விவரங்களைக் கூறி, டில்லியையே அதிசயிக்க வைத்தார் என்றும் எழுதியிருந்தது.

சாந்திதேவியை எப்படியாவது கண்டுபிடித்துப் பேட்டி காண வேண்டுமென்று நினைத்தேன். கட்டுரை ஆசிரியருக்குக் கடிதம் எழுதினேன் - சைகாலஜிஸ்ட் பத்திரிகை மூலமாக. அவரிடமிருந்து பதில் வரவில்லை.
கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களில் ஒருவர் புதுவை ஆசிரமத்தில் இருக்கிறார் என்று இருந்தது. அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் “டில்லியில் உள்ள  ஒரு அட்வகேட்டைக் கேட்டால் தெரியும்” என்று பதில் எழுதினார்.  அட்வகேட்டின் பெயர் குப்தா என்றும் குறிப்பிட்டிருந்தார். 

 குப்தாவைக் கண்டுபிடிப்பது எப்படி? டில்லி டெலிபோன் டைரக்டரியில் ஆறேழு பக்கங்கள் குப்தாக்கள் தான்!

சுமார் இரண்டு மாதம் அலைந்து திரிந்து அவரைக் கண்டு பிடித்தேன். அவர் சீனியர் அட்வகேட்.  தாரியாகஞ்ச் பகுதியில் சற்று பிரபலமானவர். அவரைச் சந்தித்தேன். சாந்தி தேவி பற்றிய எல்லா விவரங்களையும் அவர் என்னிடம் சொன்னார். 

   அந்தப் பெண் குழந்தை, ஒரு நாள் திடீரென்று தான் இன்னாருடைய மனைவி என்றும், தான் இந்த வயதில் ஒரு காய்ச்சல் காரணமாக இறந்துவிட்டதாகவும் சொன்னாள்.. அதுமட்டுமல்ல, தான் இறப்பதற்கு முன்பு இருந்வீட்டின்அடையாளமும் தனக்குத் தெரியும் என்று சொன்னாள். இந்த விஷயம் மெதுவாகப் பலருக்குப் பரவிவிட்டது. குழந்தையின் பெற்றோர் குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பயந்தார்கள் ஆனால் மற்றபடி அவள் சாதாரணமாகத்தான் இருந்தாள்.


தான் முற்பிறப்பில்  ஒரு குறிப்பிட்ட ஊரில் உள்ள ஒரு இடத்தைக் குறிப்பிட்டு,  தான் அங்கு இருந்ததாகத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாள்.  அந்த வீட்டை காண்பிக்க முடியுமா என்றெல்லாம் கேட்டார்கள். அவள் “நிச்சயமாக எனக்கு தெரியும்.  வீடு அடையாளம் தெரியும்” என்று சொன்னாளாம். 

ஒரு நாள் அவள் “நான் வீட்டைக் காண்பிக்கிறேன், வாருங்கள்” என்று சொன்னாள். ஒரு சின்ன கூட்டமே அவளுடன் சென்றது. அவள்  அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு குறிப்பிட்ட வீட்டைக் காட்டினாள். அங்கு இருந்தவரிடம் இந்தப் பெண்ணின் விசித்திரமான நடவடிக்கைகளைப் பற்றிச் சொன்னார்கள்.

 அங்கு இருந்த முதியவர்,  “அவள் சொல்வது எல்லாம் சரிதான்.  நான்  இன்ன வயதில் இருந்தபோது என் மனைவி காய்ச்சல் காரணமாக இறந்துவிட்டாள்” என்று சொன்னதுடன், அவள் சொல்லிய எல்லா விஷயங்களும் சரியானவை என்றும் சொன்னாராம்.

 அதன்பிறகு இவர்கள் வீட்டிற்கு திரும்பி விட்டார்கள். இந்தக் குழந்தையின் பெற்றோர் இந்த விஷயத்திற்கு முடிவுகட்டத் தீர்மானித்து, குழந்தையிடம் “நீ இந்த மாதிரி பேசவே கூடாது” என்று சொன்னதுடன், அவளிடம் பழைய விஷயங்களை எதையும் கேட்காமல் இருந்தார்கள். 

ஆனால் அவள் சொன்னது எல்லாம் உண்மை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.  அதன்பிறகு அவர்கள் மூச்சே விடவில்லை. எப்படியோ சைக்காலஜிஸ்ட் பத்திரிகையில் விவரமாக வந்துவிட்டது

 இது எல்லாம் விவரமாக என்னிடம் சொன்ன அட்வகேட், அந்தப்   பெண்மணி எங்கு இருக்கிறார் என்பதை விசாரித்து தெரிவிக்கிறேன் என்றும் கூறினார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து, அவர் எனக்கு தகவல் கொடுத்தார். அந்தப் பெண்மணி இப்போது   டீச்சராக டெல்லி அரசு பள்ளியில் பணிபுரிவதாகச் சொன்னார். அத்துடன்  தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

 அவரிடம் “சார், நான் திடீரென்று பேசினால் அவர் என்னை சந்திக்கத்  தயங்குவார்.  ஆகவே நீங்கள் என்னை பற்றி ஒரு வார்த்தை அவரிடம் சொல்லி வையுங்கள்” என்றேன். அவர் அதற்கும் ஒத்துக்கொண்டார்.

 அதன் பிறகு சாந்தி தேவிக்கு போன் செய்தேன். அவர்   பேட்டிக்கு எளிதில் ஒத்துக்கொள்ளவில்லை. நான் பத்திரிகைக்காரன் என்று சொன்னேன். சென்னையிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னேன் அதனாலோ என்னவோ இரக்கப்பட்டு ஒத்துக்கொண்டார் 

  கொத்தவால்சாவடி போன்ற ஒரு பகுதியில், நெருக்கமாக இருந்த வீடுகளுக்கு நடுவே ஒரு சின்ன வீட்டில் அவரைச் சந்தித்தேன். நான் சந்தித்தபோது,  கிட்ட தட்ட நாற்பது, நாற்பத்தைந்து வயது பெண்மணியாக இருந்தார். அவருடன் ஹிந்தியில் பேச ஆரம்பித்துத் தத்தளித்தேன். ஆனால் அவர் “நீங்கள் ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்கிறேன்” என்றார். நான் ஆங்கிலத்தில்  பேட்டியை நடத்தினேன். அவர் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.   
“இப்போது   உங்களுக்கு   முன் ஜென்ம விஷயங்கள் ஏதாவது ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.
“எதுவும் இல்லை” என்றார்.
 முப்பது வருஷங்களுக்கு மேலாக,  தன் முந்தைய பிறவி பற்றி பேசவும், நினைக்கவும் வாய்ப்பு இல்லாததால் மறந்துவிட்டார்.
  பேட்டி முடிந்ததும், புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டேன். சம்மதித்தார்.
கட்டுரை மிகவும் சிறப்பாக அமைந்தது.  ஒரு ஸ்கூப் நியூஸ் மாதிரி அந்தக் கட்டுரையை குமுதத்திற்கு அனுப்பினேன்.  கட்டுரையைப் படித்த குமுதம் ஆசிரியர் எனக்குக் கடிதம் எழுதினார்.. கட்டுரை மிகவும் சிறப்பாக அமைந்திருப்பதாகவும், அடுத்த வாரம்  வெளியாகும் என்றும் எழுதியிருந்தார்.

ஆனால், அடுத்த வார இதழை பார்த்தபோது பெரிய ஏமாற்றம்.  குமுதத்தில் என் கட்டுரை காணவில்லை. அதே சமயம் குமுதம் ஆசிரியரிடத்தில் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் “சாந்தி தேவி கட்டுரை அச்சடிக்கப்பட்ட பிறகு நிறுத்தப்பட்டது. காரணம் தெரிந்திருக்கும். அனுதாபங்கள்” என்று எழுதியிருந்தார்.

என்ன காரணம் என்பதை ஊகிக்கக்கூட முடியவில்லை. மனதில் கலவரம் ஏற்பட்டது. ஆனால் அன்று மாலையே  விடை தெரிந்து விட்டது.  அதன் பிறகுதான் நிம்மதியாக மூச்சு விட்டேன். 

 அன்று மாலை வழக்கம் போல் அவ்வார விகடனை வாங்கினேன் அதைப் புரட்டினேன். அதில்  “சைக்காலஜிஸ்ட்"டில் வந்திருந்த சாந்திதேவி பற்றிய கட்டுரையை அப்படியே தமிழ்ப்படுத்தி போட்டிருந்தார்கள்.

அடப் பாவமே, சுமார் இரண்டு மாதம் நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய கட்டுரையை, ஒரு தகவல் எழுத்தாளர் (எடுத்தாளர்!) கொன்று விட்டார்.

அதன் பிறகு, சாந்தி தேவி அவர்களுக்கு விஷயத்தை விளக்கி பத்திரிகையில் பேட்டி வராததை பற்றி சொல்லி அவரைத் தொந்தரவு செய்ததற்கு மன்னிப்புக் கோரினேன். 

துரதிஷ்டம் என்னவென்றால் அந்தக் கட்டுரை குமுதத்தில் பிரசுரமாகவில்லை; என்னிடமும்  காபி இல்லை. இருந்தால்   இப்போது இந்த பதிவில் போட்டு இருக்கமுடியும்.

இத்தனை வருடங்கள் ஆனதால் பல சின்னச் சின்ன தகவல்கள் மறந்து போய்விட்டன. ஆனால் சாந்தி தேவியை அந்த சிறிய வீட்டில் சந்தித்ததும், பேசியதும் நன்றாக விடியோ மாதிரி நினைவிலிருக்கிறது; பேசிய விஷயங்கள் தான் மறந்துவிட்டன!

11 comments:

  1. இந்த முற்பிறப்பு விஷயத்தை நான் எங்கோ படித்திருக்கிறேன். தமிழ் பத்திரிகையில் இல்லை.

    ஆனால் அதைக் கட்டுரையாக்க நீங்கள் முயற்சித்ததையும் அது, விகடனில் "எடுத்தாள்பவரால்", குமுத்த்தில் வெளியாகவில்லை என்றும் இன்றுதான் தெரிந்துகொண்டேன்.

    இதுமாதிரி ஒற்று வேலைகள் விகடனில் ரொம்ப வருடமாக இருந்திருக்குமோ?

    ReplyDelete
  2. முற்பிறப்புகளைப் பற்றி நறைய புத்தகங்கள் வந்திருக்கின்றனவே... அவற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா?

    முற்பிறப்பு என்ற கான்சப்டை இந்துமதம் ஒன்றுதான் சொல்கிறதா?

    ReplyDelete
  3. இந்தமாதிரி கடிதங்களை எல்லாம் பத்திரப்படுத்தி, ஆவணப்படுத்தி வைத்திருக்கிறீர்களா கடுகு சார்? அல்லது சந்தித்த அனுபவங்களைத் தவிர படங்களோ சுவனீரோ எடுத்துக்கொண்டதில்லையா?

    ReplyDelete
  4. முன் பிறவி நினைவுகள் சுவாரஸ்யமானவைதான். குமுதத்தில் அந்தக் கட்டுரை வெளியாகாதது வருத்தமாக உள்ளது.

    ReplyDelete
  5. மிக்க நன்றி. அட்வகேட் நிறைய விஷயங்களைச் சொன்னார். மகாத்மா காந்தி கூட சிறுமி சாந்தியைப் பார்க்க விரும்பினாராம்!
    கிட்டத் தட்ட இதே மாதிரி, எதிரில் இருப்பவர் மனதில் இருப்பதை சொல்லும் சக்தி படைத்த PETER HURKOS என்னும் டச்சுக்காரர், அமெரிக்கா வந்த பிறகு, பல குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க போலீசுக்கு உதவி உள்ளார். அவரது வரலாறைத் தினமணி கதிரில் விரிவாக 70 களில் எழுதி இருக்கிறேன். -கடுகு

    ReplyDelete

  6. நெல்லைத் தமிழன் அவர்களுக்கு. எத்தனையோ விஷயங்கள ஆவணப் படுத்திக் கொள்ளவில்லை. என் வீட்டிற்கு வந்த பல பிரபலங்களுடன் (பட்டியல் போட்டால் அசந்து போய்விடுவீர்கள்) படமும் எடுத்துக் கொள்ளவில்லை.- கடுகு

    ReplyDelete
  7. சாந்தி தேவி பற்றிய விபரங்களைப் படித்துள்ளேன் நானும். விகடனில் தான் இருக்கும்! குமுதத்தில் அது வெளியாகாதது குறித்து வருத்தம் தான்! என்ன செய்வது! உங்கள் உழைப்பு வீணாகிவிட்டது. இது மாதிரி ஒரு கருவை வைத்து எழுத்தாளர் தி.சா.ராஜு அவர்கள் ஓர் கதை எழுதி அதுவும் விகடனில் தான் வந்தது என நினைக்கிறேன். அதில் கதாநாயகனின் மனைவி போல் இருக்கும் ஒரு காஷ்மீரப் பெண் ? சிறுமி! கதாநாயகனின் பிள்ளையைக் கவர்ந்து அவனைச் சமாதானம் செய்து வளர்க்க உதவி புரிவதாகவும், அவள் குழந்தைக்காகப் பாடும் ஓர் பாடல் கதாநாயகனின் மனைவி பாடும்/சொல்லும் ஸ்லோகத்தின் ராகம் மாதிரி இருப்பதாகவும் உணர்வார். மனைவியின் பெயர் ஜோதி எனப் படித்த நினைவு. பிடித்த ராகம் என நாதநாமக்ரியாவைச் சொல்லி இருப்பார். அந்தப் பெண்ணின் தந்தையும் பெண் தன் முற்பிறப்பைப் பற்றிச் சொன்னதாகவும் சொல்லுவார்.

    ReplyDelete
  8. நம் உழைப்பு வீணாவதுபோல் துயரம் வேறெதுவுமில்லை. அதுவும் நாம் நம்பிக்கை கொடுத்து பேட்டி எடுத்து வந்தவரிடம் அத்தகவலைத் தெரிவிக்கும் கணம் மிகுந்த அவஸ்தையானது. :(

    ReplyDelete
  9. நன்றி. இது சாதாரண பேட்டியல்ல. மிக மிக அரிதான நபரை கண்டு பிடித்து, பார்த்து, பேசி எழுதியது. சைக்காலஜிஸ்ட்டில் வந்ததை விட அதிக தகவலகள் இருந்த பேட்டிக் கட்டுரை.- கடுகு

    ReplyDelete
  10. ஒன்று தெரிகிறது, காப்பி அடிப்பவர்கள் அப்போதே இருந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  11. இருபது மறுபிறப்பை சொல்லும் சம்பவங்கள் https://www.amazon.com/Twenty-Cases-Suggestive-Reincarnation-Enlarged/dp/0813908728 என்ற புத்தகம் ஒரு கனடிய டாக்டர் ஆல் பல வருடங்களிட்கு முன் வெளியிட பட்டுள்ளது.

    அவர் தனது வாழ்வின் பெரும் பகுதியை இந்த மறுபிறப்பின் ஆராய்ச்சிக்காக செலவிட்டுள்ளார்.

    பெரும்பாலான சம்பவங்கள் இந்தியாவில் 60 களில் நடந்திருக்கிறது.

    ஒரு ஆய்வு முறையில் எழுதபட்ட புத்தகம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் நடந்த சம்பவங்களை வாசிக்க புல்லரிக்க வைக்கிறது.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!