January 10, 2019

நெப்போலியனின் பேச்சின் வீச்சு!


முன்குறிப்பு: பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று மகாகவி பாரதி பாடினார். அதில் வெற்றியும் பெற்றார். பேச்சு திறத்தாலே வையத்தைப் வென்றுள்ளார்கள், ஆட்சிகளைப்  பிடித்துள்ளார்கள்: தக்க வைத்துள்ளார்கள்.
இரண்டாவது உலகப் போரில் சர்ச்சில் தனது வீரமிக்க   உரைகளாலேயே போரில் வென்றார் என்பார்கள். 
   மறக்க முடியுமா, 1947 ஆகஸ்ட் 15 அன்று  இரவு செங்கோட்டையில் நேருஜி நிகழ்த்திய  TRYST WITH  DESTINY உரையை? 
   மார்ட்டின் லூதர் கிங்கின் I HAVE A DRAEM, உரை, ஆப்ரகாம் லிங்கன்  கெட்டிஸ்பர்க் போர்க்களத்தில் நிகழ்த்திய அற்புதமான உரை ஆகியவை சரித்திரத்தில் செதுக்கப்பட்டுள்ளன.

நெப்போலியன்  மாவீரன் மட்டுமல்ல; வீரம் செறிந்த பேச்சும் அவருக்கு கைவந்த கலை. நெப்போலியனைப் பற்றிய சிறு குறிப்பை முதலில் தருகிறேன்.  

இத்தாலியில் 1769 ஆம் ஆண்டு ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி நெப்போலியன் பிறந்தார். 16 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி 1804-ம் ஆண்டு மன்னரானார்.  அவருடைய ஆட்சிக் காலத்தில் ஐரோப்பாவில் ஒரு வல்லரசாகப் பிரான்சு ஆனது. 

1814 ஆம் ஆண்டு ரஷ்யா மீது படையெடுத்துச் சென்றார்.  துரதிர்ஷ்டம்,  அதில் தோல்வி அடைந்தார். மன்னர் பதவியையும் இழக்கவேண்டி வந்தது.
தனது  ராணுவ வீரர்களிடம் இருந்து விடைபெற்றுவிட்டு, எல்பா தீவிற்கு சென்று விட்டார்.
எல்பா தீவிற்குப் போவதற்கு முன்பு, அவர் தன்னுடைய ராணுவ வீரர்களுக்கு ஆற்றிய உரையை ஒரு மாற்றுக் குறையாமல் தமிழில் தர முயற்சிக்கிறேன்.

நெப்போலியனின் உரை
என்னுடைய  OLD GUARDS பட்டாளத்தைச்   சேர்ந்த சிப்பாய்களே! உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன். கடந்த இருபது வருடங்கள் கௌரவம் மற்றும் புகழ் என்றும் பாதையில்  உங்களுடன் சேர்ந்து வந்திருக்கிறேன்.

சமீப கால கட்டத்தில், நாம் செழிப்புடன்  இருந்த காலத்தைப் போன்றே, நீங்கள் தைரியத்திற்கும் விசுவாசத்திற்கும் உதாரணமாக இருந்துள்ளீர்கள். உங்களைப் போன்ற வீரர்கள் உள்ளளவும்  நாம் எடுத்துள்ள முயற்சிகள்  தோல்வி அடையாது. ஆனால் போர் முடிவுக்கு வராது; தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கும்.

அதன் காரணமாக பிரான்ஸ் மேலும் மேலும் துயரங்களில் ஆழ்ந்து கொண்டே போகும்.  என் சொந்த விருப்பு வெறுப்புகளை தேசத்திற்காகத் தியாகம் செய்து விட்டேன்.  நான் போகிறேன், ஆனால் நீங்கள், என் நண்பர்களே, பிரான்சிற்கு தொடர்ந்து சேவை புரிந்து கொண்டிருப்பீர்கள்.  பிரான்சின் மகிழ்ச்சி தான்  எனது ஒரே சிந்தனை. என் விதியைக் கண்டு. வருத்தப்படாதீர்கள். நான் பிழைத்து எழ ஒப்புதல் தந்தேன் என்றால், உங்கள்  புகழுக்கு என் சேவையை அளிப்பதற்காகத்தான். நாம் இணைந்து சாதித்த சாதனைகளைச் சரித்திரமாக எழுத எண்ணியுள்ளேன். உங்கள் அனைவரையும் என்  நெஞ்சில் இணைத்துக் கொள்கிறேன்!

5 comments:

 1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை நிரூபித்தவர். அருமையான தொகுப்பு.

  ReplyDelete
 2. இதுக்குக் கமென்ட் கொடுத்த நினைவு! கொடுத்தேனா இல்லையா? எப்படி ஆனாலும் நெப்போலியனின் சிறப்பான உரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 3. ஒவ்வொரு தலைவனும், வீரனும், அவரவர்கள் செய்தவற்றை தங்கள் மனதளவில் ஜஸ்டிஃபை செய்தே வந்திருக்கின்றனர்.

  மொழிபெயர்ப்பு இயல்பா இருந்தது.

  ReplyDelete
 4. நன்றி.. சர்ச்சில் உரை ஒன்றைத் தர நினைத்துள்ளேன். - கடுகு

  ReplyDelete
 5. இளங்கோ அவர்களுக்கு, உங்கள் பின்னூட்டம் PUBLISH ஆகமாட்டேன் என்கிறது. நான் போடும் பின்னூட்டம் கூட ANONYMOUS என்று போட்டால் தன் பிரசுரம் ஆகிறது.--கடுகு

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!