January 30, 2019

காதலியா? அரச பதவியா?


காதலியா?  அரச பதவியா? இப்படி ஒரு கேள்வி பல வருஷங்களுக்கு முன்பு இங்கிலாந்து மன்னருக்கு  முன்னே தோன்றியது. இந்தக் கேள்வியைக் கண்டு அவர் கலங்கவில்லை; இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கவில்லை. காரணம் அவர்  காதல் அவ்வளவு தீவிரமாகவும், உண்மையாக இருந்தது. அதனால் அவர் – எட்டாம் எட்வர்ட்- தன்னுடைய அரச பதவியைத் துறக்க முடிவு செய்தார்.


  அன்றைய காலகட்டத்தில், இங்கிலாந்து மன்னராக வரப் போகிறவர் அரச குடும்பத்தில் உள்ள ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. வேறு எவரையாவது மணந்தால் அவர் அரச  வம்சத்திலிருந்து நீக்கப்படுவார்; அது  மட்டுமல்ல அரச பதவியும் பின்னால் கிடைக்காது.
 தன்னுடைய குடும்பத்தாரிடமும் மதகுருமார்களும் அரசியல் தலைவர்களுடனும் தன்னுடைய காதலைப் பற்றி கூறியதுடன், வாலிஸைத் திருமணம் செய்து கொள்வதற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டும் என்றும் கேட்டுப் பார்த்தார். ஆனால் எல்லோரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.            ஏற்கனவே இரண்டு தடவை திருமணமாகிஇரண்டாவது திருமணம் விவாகரத்து வழக்கில் நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உலகெங்கும் எல்லா பத்திரிகைகளும் இதை செய்திகளும் பின்னணியும் காதல் விவகாரம் ஆகியவை பற்றி பத்தி பத்தியாக எழுதின ஆனால் எதற்கும் கலங்கவில்லை. தன் காதலிலிருந்து சிறிதளவும் அவர் விலகவில்லை. அதில் உறுதியாக இருந்தார்.

   1936-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவருடைய  தந்தை ஐந்தாம் ஜார்ஜ் காலமானார். உடனே இவர் அரச பதவி ஏற்க வேண்டி இருந்தது.
 1936 ஜனவரியிலிருந்து பத்து மாதம் இங்கிலாந்து மன்னர் பதவியில் இருந்தும், அந்தப் பதவியின் மீது அவருக்குப் பிடிப்பு ஏற்படவில்லை.     வாலிஸ் சிம்ஸன்  என்ற  அமெரிக்கப் பெண்ணிடம் காதல் வயப்பட்டு இருந்தார். வாலிஸ் விவாகரத்து ஆனவர்!  இருந்தும் அவரது காதல் சிறிதும் குறையவில்லை.  


பிரதம மந்திரியாக இருந்த பால்ட்வின் பல அறிவுரைகளை மன்னருக்கு எடுத்துச் சொன்னார்: “இங்கிலாந்து மன்னர் தேவாலயங்களின் தலைவரும் கூட; விவாகரத்து ஆனவரைத் திருமணம் செய்துகொள்வது தேவாலயங்களின் கோட்பாட்டுக்குப் புறம்பானது’ என்றும் ’இப்படிப்பட்ட திருமணத்தை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்படவில்லை’ என்றும் கூறி அவர் மனதை மாற்ற முயன்றார். பலனில்லை.

அரச பதவியைவிட தன் காதல் தான் பெரியது, முக்கியமானது என்று முடிவு எடுத்த எட்வர்ட், முடிசூட்டு விழாவிற்கு முன்னேயே1936-ம் வருஷம் டிசம்பர் 10ஆம் தேதி  தன் பதவியைத் துறந்தார். மறுநாள் பாராளுமன்றம் அதை ஏற்றுக்கொண்டது.

 இதன் காரணமாக பிரிட்டிஷ் ராஜ வம்சத்தில் தானாகவே பதவியைத் துறந்த முதல் அரசர் இவர் என்ற ஒரு தனி கீர்த்தியையும் பெற்றார். இது சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய பரபரப்பான காதல் கதை என்று உலகமே கருதியது.

அவர் பதவியை துறந்தும்   அவருடைய தம்பி ஆறாம் ஜார்ஜ் பதவியேற்றார்
 அடுத்த நாள், டிசம்பர் 11-ம் தேதியன்றே, தான் பதவி விலகுவதாக வானொலியில் அறிவித்தார்..

நான் சொல்வதை நீங்கள் நம்புங்கள். அரச பதவி என்பது என் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு. அதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அரசன் என்ற முறையில் ஆற்ற வேண்டிய கடமைகளை செய்திட, நான் நேசிக்கும் பெண்மணியின் உதவியும், துணையும் இல்லாமல் செய்ய முடியாது என்றும் உணர்ந்தேன்”என்பது அவரது உரையின் முக்கிய வாசகம்.
     அவரது வானொலி உரை உலகெங்கும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
(உலகின் மிகச் சிறந்த உரைகளில் ஒன்று என்று கருதப்படுவது இந்த உரை.)

எட்டாம் எட்வர்ட் 11-12- 1936  நிகழ்த்திய வானொலி உரையைப் பார்க்கலாம்.  
 “ என் மனதில் இருப்பதை சொந்தமாக, சுதந்திரமாக நானே எடுத்துக் கூற இத்தனை நாட்களுக்கு பிறகு இப்போது எனக்கு சந்தர்ப்பம் வந்துள்ளது. எதையும் நான் மறைக்க விரும்பவில்லை. இதுநாள் வரை அரசியல் அமைப்பு விதிகளின் கட்டுப்பாடு காரணமாக என்னால் பேச இயலவில்லை. சில மணிநேரங்களுக்கு முன்பு சக்கரவர்த்தி என்ற முறையில் என் கடைசி கடமையை செய்து முடித்து விட்டேன்.

இப்போது என் சகோதரர்  அரச பதவி ஏற்றுக்கொண்டு விட்டதைத் தொடர்ந்து, புதிய மன்னருக்கு என்னுடைய ஒத்துழைப்பையும் விசுவாசத்தையும் தெரிவிப்பது அவசியம். இதை என் முழு மனதுடனும் செய்வேன்.

அரச பதவியை நான்  துறந்ததன் காரணங்கள் உங்கள் எல்லாருக்கும் தெரியும். ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த முடிவை நான் எடுத்த சமயம், நம் நாட்டையும் சாம்ராஜ்யத்தையும் நான் மறக்கவில்லை. வேல்ஸ் இளவரசன் என்ற முறையில் கடந்த 25 வருடங்களில், நான் செய்ய முயற்சித்த சேவைகளை நான் மறக்கவில்லை.        

ஆனால் நான் சொல்லும் ஒரு விஷயத்தை நீங்கள் நம்ப வேண்டும். இந்த பொறுப்புச் சுமையை என்னால் தாங்க முடியவில்லை என்பதையும், அரசன் என்ற முறையில் ஆற்ற விரும்பும் பணிகளை. நான் நேசிக்கும் பெண்ணின் உதவியும் ஆதரவும் இல்லாமல் செய்வது இயலாத காரியம் என்பதையும் உணர்ந்தேன்.

உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். நான் எடுத்துள்ள இந்த முடிவு என்னுடையது; என்னுடையது மட்டுமே. என்னைப் பற்றி நானே அதை யோசித்து  முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது.  என் விஷயத்தில்   அக்கறை கொண்டவர், கடைசிவரை வேறு பாதையை நான் எடுப்பதற்கு முயற்சி செய்தார். இந்த முடிவை - என் வாழ்வின் முக்கியமான முடிவை - நான் ஒருவனே-  ஒரே எண்ணத்துடன் தான் யோசித்தேன் இந்த முடிவின் விளைவு அனைவருக்கும் சிறந்ததாக அமையும் என்ற ஒரே எண்ணத்துடன் தான்  பரிசீலித்தேன். 

இந்த முடிவை எடுக்கச் சற்று சுலபமாக இருந்தது என் தம்பி. அவரின் சிறந்த குணமும், நீண்ட பயிற்சியும் கொண்டவராக  இருப்பதாலும், எவ்வித இடையூறும் இல்லாமல் பதவியை அவர் ஏற்று, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை முன்னேற்றப் பாதைக்கு இடையூறு எதுவும் ஏற்படாமலும் நடத்திச் செல்வார் என்பதை நான் முழுமையாக அறிந்திருந்தாலும், நான் சுயமாக இந்த முடிவை எடுக்க உதவின.

அவருக்கு ஈடு இணையற்ற என் சிறப்பான  ஆசீர்வாதத்தை  அளிக்கிறேன்.  எனக்கு  கிடைத்திடாத, அனால் உங்கள் அனைவருக்கும் இருப்பது போல அவருக்கும் மனைவியும் குழந்தைகளும் கூடிய மகிழ்ச்சிகரமான குடும்பம் உள்ளது.

கடந்து போன கடினமான தினங்களில் எனக்கு ஆதரவு தந்தது மேன்மை தங்கிய அரசியான என் அம்மாவும் என் குடும்பத்தினரும் தான்.  நமது ராஜ்யத்தின் அமைச்சர்கள் யாவரும், முக்கியமாக பிரதம மந்திரி பால்டுவின் என்னுடன் எப்போதும் பரிவுடன் நடந்து கொண்டார்.  எனக்கும் அவர்களுக்கும் இடையே அரசியல் சட்ட ரீதியாக எந்த முரண்பாடும்  ஒரு சமயமும் ஏற்படவில்லை. அது மாதிரியே பாராளுமன்றத்திற்கும் எனக்கும் முரண்பாடு எதுவும் இல்லை.  அரசியல் சட்டத்தை கடைபிடிக்கும் பாரம்பரியத்தில் என் அப்பாவால் வளர்க்கப்பட்ட நான் எந்த சந்தர்ப்பத்திலும் அப்படிப்பட்ட பிரச்சனைகள் தோன்ற சந்தர்ப்பமே அளிக்கவில்லை. எப்போது நான் வேல்ஸ் இளவரசர் ஆனேனோ, அப்போதிலிருந்தும் பின்னால் அரச பதவி ஏற்றதிலிருந்தும் என்னை அனைத்து தரப்பினரும் மிக மிக அன்புடனும் மதிப்புடனும் போற்றியுள்ளனர்.  நான் யாவருக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன்.

பொதுவாழ்க்கை விட்டு நான் இப்போது முழுதுமாக விலகிக்கொள்கிறேன். ஏன் மீதிருந்த சுமையை இறக்கி விட்டேன். நான் திரும்பவும் என் தாய்நாடு திரும்ப சிறிது காலம் ஆகும். ஆனால்  நமது சமுதாயத்தின் ஏற்ற இறக்கங்களை நான் ஆழ்ந்து கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்.   பின்னால் எப்போதாவது மேன்மை தங்கிய மன்னருக்கு தனிப்பட்ட முறையில் என்  சேவை தேவைப்பட்டால் அதை அளிக்காமல் இருக்க மாட்டேன்.

இப்போது நாம் எல்லோருக்கும் புதிய மன்னர் கிடைத்துவிட்டார். அவருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஆண்டவன் உங்களுக்கு அருள் புரியட்டும். வாழ்க மன்னர். GOD SAVE  THE KING!

                                                        **                        **
அடுத்த நாள்-ஆம் மறுநாளே - டிசம்பர் 12-ம் தேதியன்றே  எட்வர்ட் இங்கிலாந்தை விட்டுப் பிரான்சுக்குச்  சென்றுவிட்டார்.  பிறகு ஆறு மாதம் கழித்து, 41-வது வயதில் தன் காதலி வாலிஸ் சிம்ஸனைத் திருமண செய்துகொண்டார். பிரான்சிலேயே வசிக்கத்  துவங்கினார்.
 
அதன்பிறகு அவர் இங்கிலாந்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. 1965-ல் கண் மருத்துவம் செய்து கொள்ள, லண்டன் மருத்துவ மனைக்கு வந்தார். ராணி எலிசபெத்   அங்கே சென்று சென்று அவரைப் பார்த்தார். அந்த சமயத்தில் தான் வாலிஸ் சிம்ஸனை ராணி முதல் முறையாகப் பார்த்தார்.

 பாரிஸ் நகரத்தில் இருந்த அவர் அதிகமாக யாரையும் சந்திக்காமல் இருந்தார்.  தோட்ட வேலையில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது  
  வீட்டில்  பெயர் எட்வர்ட் இல்லை; டேவிட் என்று தான்  அழைக்கப்படுவார்
                                            *                                   *
எட்வர்டின் பழைய வாழ்க்கை விவரங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

 எட்வர்ட் 1895-ல் பிறந்தார். அவருடைய தந்தைஅதாவது ஐந்தாம் ஜார்ஜ் மிகவும் கண்டிப்பபானவர்.  ராயல் கல்லூரியில் எட்வர்ட் சேர்க்கப்பட்டார்.  அங்கு வீட்டை விட மிக அதிக கட்டுப்பாடுகள்  உண்டு

ஆக்ஸ்போர்ட் கல்லூரியில் படிப்பில் அவர் சராசரியாகத்தான் இருந்தார். இசைக்கருவிகள், நடன பயிற்சி ஆகியவற்றில் அதிக ஈடுபாடு இருந்தது.

 முதல் உலக மகாயு த்தம்   தொடங்கியதும்  இராணுவத்தில்.  சேர்ந்தார். பிரான்சில் இருந்த ராணுவ அமைப்பில். பணிபுரிய அவர் அனுப்பபட்டார். அவரை போர்முனைக்கு அனுப்பவில்லை என்றாலும்,
 குண்டுகள் விழக்கூடிய  பகுதிகளில்  பணிபுரிய வேண்டி வந்தது.  போர் முடிந்ததும் இவர் பல உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். இங்கிலாந்தின் அடுத்த மன்னராக வரப்போகிறவர் என்பதால் பல இடங்களில் அவருக்கு மிக உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. 

1919-ல் அவர் நியூயார்க் நகருக்கு விஜயம் செய்தார். அவருடைய எளிமையும் அலட்டிக்கொள்ளாத பாங்கும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது மட்டுமல்லஇவர் நிச்சயமாக நல்ல மதிப்பு மிக்கவராக   வருவார் என்றும்  கூற ஆரம்பித்தார்கள் அதேசமயம் அவர் திருமணம் பற்றியும் பேசத் துவங்கினார்கள்.
               கப்பல் துறையில் வியாபார முறையில் தொடர்பு கொண்டிருந்த ஒருவர் த்சன்  மனைவி வாலிஸ் சிம்ஸனை ஒரு சமயம் அறிமுகம் செய்து வைத்தார்..   முதல் சந்திப்பிலேயே வாலிஸின்  நடை உடை பாவனை எல்லாம் அவருக்குப் பிடித்துவிட்டது. அவர் மீது காதலும் ஏற்பட்டது
 அப்படி இப்படி என்று ஆறு ஆண்டுகள் கழிந்தன.

1936-ம் ஆண்டு ஜனவரி மாதம். அவர் தந்தை ஐந்தாம் ஜார்ஜ் காலமானார்.
எட்டாம் எட்வர்ட் மன்னராக பொறுப்பேற்றார். 1936-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை – 11 மாதங்கள் -அரசராக இருந்தார். அதன் பிறகு  தன் பதவியைத் துறந்தார்.

 1972 மே மாதம் 28-ம் தேதி எட்வர்ட் பாரீசில் காலமானர்.  வாலிஸ் சிம்சன் 1986-ல்   காலமானார்.
******

ஒரு சின்ன குறிப்பு:
லியொனார்ட் லயான்  என்ற பத்திரிகை நிருபர், நியுயார்க் போஸ்ட் பத்திரிகையில் பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். அவருக்கு சர்ச்சில். பெர்னாட்ஷா, சார்லி சாப்ளின். மெரிலின் மன்றோ, கென்னடி  போன்ற வர்களுடன் நேரடி தொடர்பு இருந்தது

அவர் பல சுவையான சமாசாரங்களை தன் மகனிடம் சொல்லி இருக்கிறார். அவருடைய மகன் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பெரிய தலையணை புத்தகமாகப் போட்டிருக்கிறார்.

லியொனார்ட் லயான்  ஒரு சமயம் எட்டாம் எட்வர்டின் வீட்டிற்கு போய் அவரைப் பார்த்துவிட்டு வந்து சொன்னதை மகன்  அந்த புத்தகத்தில்   தந்திருக்கிறார். அதைப் படித்த நான் குறிப்புகள் எழுதி வைத்தேன்.  துரதிருஷ்டவசமாக எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் நினைவில் இருக்கிறது. எட்வர்ட் தனது வீட்டில் வைத்திருந்த புத்தகசாலை   பிரம்மாண்டமானது   என்று தெரிவித்திருக்கிறார். மேலும் பல தகவல்கள் உள்ளனகுறிப்புகள் அகப்பட்டால் அவற்றை இந்தப் பதிவில் சேர்க்கிறேன்.

                                             ##################.

6 comments:

  1. கோமகனின் காதல் என்னும் தலைப்பில் ஆனந்த விகடனில் தொடராக வந்து ஆர்வத்துடன் படித்திருக்கிறேன்.மேலதிகத் தகவல்களை அளித்தமைக்கு நன்றி. பின்னாட்களில் இவரும் இவர் மனைவியும் ராணியால் கௌரவிக்கப்பட்டனர் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் முழுமையா வாசிக்கவில்லை. சில நாட்கள் கழித்துத்தான் வருவேன். பிறகு பின்னூட்டமிடறேன். (நான் அவர் நிலையில் இருந்தால் என்ன செய்திருப்பேன் என்றும் யோசிக்க வைக்கிறது. ப்ரின்ஸிபிள்ட் பெர்சன்ஸ் தனிதான்)

    ReplyDelete
  3. netflix web series The Crown பார்த்திருந்தீர்களேயானால் காதலுக்காக முடிதுறந்தவர் என்று கொண்டாடப்படும் இந்த எட்டாம் எட்வர்ட் பற்றி காதலுக்கு மரியாதை தந்தவர் என்று மட்டும் முடித்து விட முடியுமா என்ன? However, while Edward was foolish and naive about Hitler (as he later admitted in an interview with an American newspaper in 1966), he was by no means alone in adopting a sympathetic approach towards Nazi Germany in the 1930s என்று பிபிசியின் History Extra தளம் சொல்கிறது. விவாகரத்தான ஒரு பெண்மணியை திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்று சர்ச் தடைபோட்டது. அமெரிக்கக் காதலிமீதிருந்த மோகத்தில் எட்டாம் எட்வர்ட் முடிதுறந்தார்.

    எண்பத்திரண்டு ஆண்டுகளுக்குப்பின்னால் பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தில் என்னென்ன மாற்றங்கள்? பழமை விரும்பிகளான பிரிட்டிஷ் ராஜ குடும்பத்து மருமகளாக விவாகரத்தான அமெரிக்க டிவி நடிகை ரேச்சல் மேகன் மெர்க்கெல் இளவரசர் ஹாரியை திருமணம் செய்து கொண்டது (அம்மா african american) என்று நினைத்துப் பார்த்தே இருக்க முடியாத ஒன்றாக எட்டாம் எட்வர்டை ஓரம் கட்டிவிட்டதே சார்!

    ReplyDelete

  4. கிருஷ்ண மூர்த்தி S அவர்களுக்கு, மிக்க நன்றி.
    NETFLIX, TV Serials எதுவும் பார்ப்பதில்லை. அதனால் எதுவும் இழப்பு இல்லை. எட்டாம் எட்வர்ட் முடி துறந்ததுதான் இந்த பதிவு. ஆகவே மற்ற விஷயங்களைக் குறிப்பிடவில்லை. -- கடுகு

    ReplyDelete
  5. ரொம்பவும் ஆச்சர்யமானதுதான். செய்தி தெரிந்த விஷயமே தவிர இவ்வளவு விளக்கமாகத் தெரியாது. பேச்சும் அபாரம். மிக்க கண்ணியத்துடன் இருந்தது. (நல்லா மொழிபெயர்த்திருக்கீங்க. பலர் படிக்கறவங்க முழி பெயர்ப்பாங்க)

    அவ்வளவு பெரிய பதவி/ரெஸ்பான்சிபிலிட்டியை பெண்ணுக்காக தியாகம் செய்வது - நினைத்துப்பார்ப்பதற்கே கடினம்.

    ReplyDelete
  6. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து

    குறள் தான் நினைவுக்கு வரும் எட்வர்ட் ராஜாவை நினைக்கும்போது.

    இவரது இச்செயலைப் பற்றி ஒரு calypso பாடலே உண்டு:

    It’s love it’s love it’s love alone
    That caused King Edward to leave the throne

    Calypso வகைக்கே உண்டான laid-back தன்மை தவிற பேசுபொருளும் ‘ராஜா நம்ம ஆள்யா’ என்பது போல இருக்கும்.

    Now he's the victim of circumstance
    Now they live in the south of France

    என்றெல்லாம் பாடல்வரிகள் :-)
    https://www.musixmatch.com/lyrics/Blind-Blake-The-Royal-Victoria-Hotel-Calypsos/Love-Love-Alone

    வி.எஸ்.நைபால், தனது Miguel Street சிறுகதை வரிசையில், ‘காதலால் உந்தப்பட்டு ஒருவர் செய்யும் விளங்கவொண்ணா’ செயல்களைப் பார்க்கும் ஒரு பதின்வயது இளைஞன் கதையை எழுதியிருப்பார்
    கதையின் தலைப்பு: Love, love and love alone.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!