December 20, 2018

நீரின் மேல் நடக்கலாம்

நீரின் மேல் நடக்கலாம்.
     ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். மந்திரத்தில் மாங்காய் வரவழைப்பது, பெட்டிக்குள் போட்டு பூட்டப்பட்டவர் இரண்டே நிமிடத்தில் வெளியே வந்து விடுவது போன்றவை சாமர்த்தியமான வித்தைகள். பார்த்து ரசித்து விட்டுப் போகிறோம்.
இந்தப் பதிவில் பிரம்மாண்டமான ஏமாற்று வேலை செய்த ஒருவரைப் பற்றிச் சொல்கிறேன்.

 அறுபதுகளில் நான் டெல்லியில் இருந்தபோது ஒருநாள் ஸ்டேட்ஸ்மேன் தினசரியில் ஒரு பேட்டி வெளியாகியிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு யோகியின் பேட்டி அது. ஒல்லியான உடலமைப்பு, மீசை, காற்றில் லேசாகப் பறக்கும் வெள்ளை நிற தாடியுடன் இருந்தார். சற்று வயது முதிர்ந்தவர். அவர். யோகங்களைப் பற்றி ஏதேதோ கூறியிருந்தார். அத்துடன் தன்னால் நெருப்பின் மீது நடக்க முடியும் என்று சொல்லிவிட்டு, "என்னால் நீரில் மேலும் நடக்க முடியும்” என்று சொல்லியிருந்தார். (அது மட்டுமல்ல ஒரு மண் குழியில் 72 மணி நேரம் புதைந்து இருந்துவிட்டு, மூன்று நாள் கழித்து ஒரு பாதிப்பும் இல்லாமல் வெளியே தன்னால் வர முடியும்; எல்லாம் யோக வல்லமை என்றும் சொன்னார் என்று நினைவு.)

அவர் டெல்லியில் எங்கே இருக்கிறார் என்பதை ஸ்டேட்மென் தினசரியில் இருந்த  நிருபர் என் நண்பர் மூலமாக தெரிந்துகொண்டு, அந்த யோகியை சந்திக்கச் சென்றேன்  அவர் பேட்டியைக் குமுதத்தில் எழுதினேன்
சில நாள் கழித்து,  ஜன்பத் ஓட்டலின் தோட்டப்பகுதியில், தீயில் நடந்து   காட்டப் போவதாகச் சொல்லி, எனக்கு அழைப்பிதழ் ஒன்றையும் கொடுத்தார்.  நம் ஊரில் தீமிதி பார்த்து இருந்ததால், அவர் செய்யப் போவது பெரிய சாதனையாக எனக்கு தெரியவில்லை.


குறிப்பிட்ட நாளில், பலர்  (டிக்கெட் வாங்கி கொண்டு?), நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்தார்கள்.  ஓட்டலின் பின்புறம் இருந்த மைதானத்தில் தீயைப்  பரப்பி வைத்து, சுற்றி நாற்காலிகளை போட்டு இருந்தார்கள்.    நிகழ்ச்சி நடந்தது. யோகத்தை பற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு, யோகி  விர்ரென்று தீயை இரண்டு எட்டில் நடந்து கடந்தார். அதைப் பார்த்து பலர் மலைத்துப் போனார்கள்.  
 “நீரில் நடக்கும் யோகத்தையும் ஒருநாள் செய்து காண்பிக்கிறேன்என்று, இமயமலையில் கொடி நாட்டி விட்டு வந்த வீரரைப்போல் நெஞ்சை நிமிர்த்திச் சொன்னார்!

அதன் பிறகு அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. திடீரென்று சில மாதங்கள் கழித்து  பிளிட்ஸ் பத்திரிகையில் அவரைப்பற்றி, அதன் ஆசிரியர் பிரபல கரஞ்சியா அட்டகாசமாக எழுதியிருந்தார். அவர் நீரில் மேல் நடக்கும் யோக சாதனையை பம்பாயில் செய்து காண்பிக்க இருக்கிறார் என்றும் தானே முன்நின்று ஏற்பாடுகளை செய்யப்போவதாகவும் கரஞ்சியா எழுதியிருந்தார். கிட்டத்தட்ட ஐந்து ஆறு வாரங்கள் இவரைப் பற்றி எழுதி, எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார் கரஞ்சியா. நிகழ்ச்சியைப் பார்க்க இவ்வளவு கட்டணம்,  படம் எடுக்க இவ்வளவு கட்டணம் என்று எல்லாம் அறிவித்திருந்தார். வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் வீடியோ எடுக்கவும் கட்டணம் என்று  எழுதி, எதிர்பார்ப்பை மிகவும் உயர்த்தி விட்டார்  

         நிகழ்ச்சி நடத்த விசேஷ நீச்சல் குளம் கட்டப்படுகிறது என்றும் அறிவித்தார். (எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டதால், இந்த பதிவில் சில பிசிறுகள், தவறுகள்  இருக்கக்கூடும் என்பதையும் கூறிவிடுகிறேன்)
      குறிப்பிட்ட நாள் இந்த ‘சாதனை’யைப் பார்க்க நிறைய பேர் வந்தார்கள். பல வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள், டிவி மற்றும் ரேடியோ நிலையங்கள் தங்கள் படப்பிடிப்பு நிபுணர்களை அனுப்பி வைத்தன. நிகழ்ச்சியின்போது பல விமானங்கள் அந்த நீச்சல் குளத்தின் மீது பறந்தபடியே படம் எடுத்துக் கொண்டிருந்தன.
  யோகி  வந்தார். மேடையில் நின்று ஏதோ தியானம் செய்தார். உலக மகா அதிசயத்தை காணத் திரண்டிருந்த கூட்டம் மூச்சுக்கூட விடாமல், கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.  யோகி வலது காலை தண்ணீரில் மெதுவாக வைத்தார். தொபு கடீர்!  தண்ணீரில் மூழ்கி விட்டார்!
   
தண்ணீரில் இருந்து வெளியே வந்து, தான்  நடக்க முடியாமல் போனதற்கு ஏதோ சமாதானம் சொன்னதுடன்,  விரைவில் தான்  நடந்து காட்டும் நிகழ்ச்சி நடத்தப் போவதாகவும் சொன்னார். அதன்பிறகு அவர் நடத்தவில்லை.  

 இதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து - 1977 என்று நினைக்கிறேன்- டாக்டர் கோவூர் என்பவர் இந்த மாதிரி சித்து வேலை என்று செய்யும் புரட்டு வேலைகளைத் தோலுரித்துக் காட்ட ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார் அவர் பெங்களூரில் ஒரு கூட்டத்தில் பேசியபோது, பம்பாயில் யோகியின், நீரின் மேல் நடக்கும் நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தைப்  பற்றியும் குறிப்பிட்டார்.
  கூட்டம் முடித்ததும், டாக்டர் கோவூரை  ஒருவர் வந்து சந்தித்தார். சற்று வயதான ஆசாமி. அவர் நீங்கள் நீர் மேல் நடப்பதாக சொன்ன யோகி பற்றி சொன்னீர்கள் அல்லவா?  அந்த யோகி வேறு யாருமல்ல. அது நான்தான்என்றார். தான் செய்ய இருந்தது ஏமாற்று வேலை தான் என்று அவரிடம் ஒப்புக் கொண்டாராம்.
அவரிடம்  கோவூர்  “அது  போட்டும். இதனால் நீங்க என்ன லாபத்தை அடைந்தீர்கள்?” என்று கேட்டாராம் அவர் டிக்கெட் வசூல், விமானத்தில் இருந்து படம் எடுத்தவர்கள் கொடுத்த தொகை என்று கிட்டத்தட்ட 27 லட்சம் எனக்கு கிடைத்ததுஎன்று சொன்னாராம்!.
அதன் பிறகு யோகி என்ன ஆனார் என்பது தெரியவில்லை. பிளிட்ஸ் ஆசிரியர் கராஞ்சியாவே ஏமாந்து போனதுதான் ஆச்சரியம்!
===========================================
சலமேல் நடக்கலாம், கனல் மேல் இருக்கலாம்
தன் நிகரில் சித்தி பெறாலாம்,
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம் அரிது ! சத்தாகி என்

சித்தமிசை குடி கொண்ட தேசோ மயானந்தமே! 
--தாயுமானவர்

                           (இந்த  பதிவை, GOOGLE-DOC-ல் நான் பேசியதை  அது தட்டச்சு செய்து கொடுத்தது. எழுத்து எழுத்தாக தட்டச்சு செய்யவில்ல. வார்த்தை வார்த்தையாகத் தந்து விடுகிறது. வேகம் சொல்லி முடியாது!).

8 comments:

 1. இது குறித்துக் கேள்விப்பட்டுப் படித்த நினைவுகள். டாக்டர் கோவூர் பத்தியும் படித்த நினைவு. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. நான் படிக்காத தகவல்.

  பொதுவா சித்திகளை அடைவது ஓரளவு சுலபம்தான்னு நம்புறேன். ஆனால் அதை சுயநலத்துக்குப் பயன்படுத்தினால் ஆன்மீக முன்னேற்றம் தடைபடுவதோடு, தீய விளைவுகளையும் உண்டாக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

  இந்த இடுகை படித்த உடனே எனக்கு திருவான்மியூர் சர்க்கரைஅம்மா (யோகி ஆனந்தாம்பாள், அவர் ஸ்ரீசக்கரத்தை அனுசந்தித்து வந்ததனால் சக்கர அம்மா என்று ஆகி பிறகு சர்க்கரைஅம்மா என்று மருவிவிட்டது), வானவெளியில் பறந்து தங்கள் வீட்டு மொட்டை மாடியில் இறங்கியதைக் கண்டதாக திரு.வி.கல்யாணசுந்தரனார் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
 3. சலமேல், தேசோ மயானந்தமே - சமஸ்கிருத வார்த்தைகளை அப்படியே தமிழ்ப்படுத்தியிருக்கிறார் தாயுமானவர். ஜலம் மேல் நடக்கலாம், தேஜோமய ஆனந்தமே. எனக்கு இது, திருமாலையில் 'முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே' என்ற வரிகளில் தொண்டரடிப்பொடி ஆழ்வார், 'தேஜஸை', தேசு என்று தமிழ்ப்படுத்தியிருப்பதையும், ப்ரபந்தத்தில், 'வைஷ்ணவர்கள்' என்பதை 'வைட்டிணவர்கள்' என்று தமிழ்ப்படுத்தியிருப்பதையும் நினைவுக்குக் கொண்டுவந்தது.

  ReplyDelete
 4. எங்கு 'கலெக்‌ஷன்' இருக்கோ அங்கு உண்மையான யோக சாதனங்கள் இருக்கும்னு நான் எப்போவுமே நம்பறதில்லை.

  படாடோப யோகிகளை நம்புவதற்கு ஏழைகள்தான் அவசியம் என்று இல்லை. பொதுவா அவர்கள் பணக்காரர்களையும் சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களையும் சுலபமாகத் தன்வயப் படுத்திவிடுவார்கள்.

  ReplyDelete
 5. "குறிப்பிட்ட நாளில், பலர் (டிக்கெட் வாங்கி கொண்டு?)"

  அப்படியென்றால் தாங்கள் ஓசியில் சென்றுள்ளதாக தெரிகிறது. பத்திரிகையாளர் என்பதாலா?

  ReplyDelete
 6. இளங்கோ அவர்களின் கேள்விக்குப் பதில்:
  ஆமாம், with a capital ‘ஆ’!!- கடுகு

  ReplyDelete
 7. ஸ்வாரஸ்யம்... ஏமாற்ற எத்தனை வழிகள்...

  ReplyDelete
 8. என் மனசுல இந்தத் தலைப்பு ஓடிக்கொண்டிருந்தது. திருமங்கை ஆழ்வார், மன்னராக இருந்தபோது, அவர் அமைச்சரவையில், நீர் மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான், தாள் ஊதுவான், தோலா வழக்கன் என்ற பெயரில் இருந்ததாக என் அப்பா என் சிறிய வயதில் சொல்லிக்கொடுத்தார். பெயர்க் காரணம் என்ன என்று நான் அப்போ கேட்கலை.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!