December 30, 2018

அதிசயம்; ஆனால் உண்மை! முற்பிறப்பை அறிந்த ஒரு சிறுமி!

"சைகாலஜிஸ்ட்' என்று இங்கிலாந்திலிருந்து வரும் பத்திரிகையில் 1965-வாக்கில் ஒரு சுவையான கட்டுரை வெளியாகி இருந்தது. முற்பிறப்பை உணர்ந்த ஒரு சிறுமி, சில வருஷங்களுக்கு முன் டில்லியில் இருந்தாள் என்றும், அவள் முழுக்க முழுக்க முற்பிறப்பை அறிந்தவள் என்பதைப் பல சோதனைகள் மூலம் பிரமுகர்கள் குழு கண்டறிந்தது என்றும் விவரமாக எழுதி இருந்தார்கள்.

      கிட்டத்தட்ட 30 வருஷங்களுக்கு முன்பு, அதாவது 1935 சமயம்,  ஏழெட்டு வயதுச் சிறுமியாக இருந்த போது அந்தப் பெண் (சாந்தி தேவி) இப்படி முற்பிறப்பு விவரங்களைக் கூறி, டில்லியையே அதிசயிக்க வைத்தார் என்றும் எழுதியிருந்தது.

சாந்திதேவியை எப்படியாவது கண்டுபிடித்துப் பேட்டி காண வேண்டுமென்று நினைத்தேன். கட்டுரை ஆசிரியருக்குக் கடிதம் எழுதினேன் - சைகாலஜிஸ்ட் பத்திரிகை மூலமாக. அவரிடமிருந்து பதில் வரவில்லை.
கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களில் ஒருவர் புதுவை ஆசிரமத்தில் இருக்கிறார் என்று இருந்தது. அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் “டில்லியில் உள்ள  ஒரு அட்வகேட்டைக் கேட்டால் தெரியும்” என்று பதில் எழுதினார்.  அட்வகேட்டின் பெயர் குப்தா என்றும் குறிப்பிட்டிருந்தார். 

 குப்தாவைக் கண்டுபிடிப்பது எப்படி? டில்லி டெலிபோன் டைரக்டரியில் ஆறேழு பக்கங்கள் குப்தாக்கள் தான்!

சுமார் இரண்டு மாதம் அலைந்து திரிந்து அவரைக் கண்டு பிடித்தேன். அவர் சீனியர் அட்வகேட்.  தாரியாகஞ்ச் பகுதியில் சற்று பிரபலமானவர். அவரைச் சந்தித்தேன். சாந்தி தேவி பற்றிய எல்லா விவரங்களையும் அவர் என்னிடம் சொன்னார். 

   அந்தப் பெண் குழந்தை, ஒரு நாள் திடீரென்று தான் இன்னாருடைய மனைவி என்றும், தான் இந்த வயதில் ஒரு காய்ச்சல் காரணமாக இறந்துவிட்டதாகவும் சொன்னாள்.. அதுமட்டுமல்ல, தான் இறப்பதற்கு முன்பு இருந்வீட்டின்அடையாளமும் தனக்குத் தெரியும் என்று சொன்னாள். இந்த விஷயம் மெதுவாகப் பலருக்குப் பரவிவிட்டது. குழந்தையின் பெற்றோர் குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பயந்தார்கள் ஆனால் மற்றபடி அவள் சாதாரணமாகத்தான் இருந்தாள்.

December 20, 2018

நீரின் மேல் நடக்கலாம்

நீரின் மேல் நடக்கலாம்.
     ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். மந்திரத்தில் மாங்காய் வரவழைப்பது, பெட்டிக்குள் போட்டு பூட்டப்பட்டவர் இரண்டே நிமிடத்தில் வெளியே வந்து விடுவது போன்றவை சாமர்த்தியமான வித்தைகள். பார்த்து ரசித்து விட்டுப் போகிறோம்.
இந்தப் பதிவில் பிரம்மாண்டமான ஏமாற்று வேலை செய்த ஒருவரைப் பற்றிச் சொல்கிறேன்.

 அறுபதுகளில் நான் டெல்லியில் இருந்தபோது ஒருநாள் ஸ்டேட்ஸ்மேன் தினசரியில் ஒரு பேட்டி வெளியாகியிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு யோகியின் பேட்டி அது. ஒல்லியான உடலமைப்பு, மீசை, காற்றில் லேசாகப் பறக்கும் வெள்ளை நிற தாடியுடன் இருந்தார். சற்று வயது முதிர்ந்தவர். அவர். யோகங்களைப் பற்றி ஏதேதோ கூறியிருந்தார். அத்துடன் தன்னால் நெருப்பின் மீது நடக்க முடியும் என்று சொல்லிவிட்டு, "என்னால் நீரில் மேலும் நடக்க முடியும்” என்று சொல்லியிருந்தார். (அது மட்டுமல்ல ஒரு மண் குழியில் 72 மணி நேரம் புதைந்து இருந்துவிட்டு, மூன்று நாள் கழித்து ஒரு பாதிப்பும் இல்லாமல் வெளியே தன்னால் வர முடியும்; எல்லாம் யோக வல்லமை என்றும் சொன்னார் என்று நினைவு.)

அவர் டெல்லியில் எங்கே இருக்கிறார் என்பதை ஸ்டேட்மென் தினசரியில் இருந்த  நிருபர் என் நண்பர் மூலமாக தெரிந்துகொண்டு, அந்த யோகியை சந்திக்கச் சென்றேன்  அவர் பேட்டியைக் குமுதத்தில் எழுதினேன்
சில நாள் கழித்து,  ஜன்பத் ஓட்டலின் தோட்டப்பகுதியில், தீயில் நடந்து   காட்டப் போவதாகச் சொல்லி, எனக்கு அழைப்பிதழ் ஒன்றையும் கொடுத்தார்.  நம் ஊரில் தீமிதி பார்த்து இருந்ததால், அவர் செய்யப் போவது பெரிய சாதனையாக எனக்கு தெரியவில்லை.

December 08, 2018

துணுக்கு சுனாமி!


சாரணர் இயக்கம்
 சாரணர் இயக்கமான ‘ஸ்கவுட்’ 1907’  ஆண்டு உருவானது. அதை உருவாக்கியவர் பேடன் பவல் Baden Powell என்பவர். அந்த இயக்கத்தின் கோட்பாடு மிகவும் பிரபலமானது அது Be Prepared’. இதைப்பற்றி பேடன் பவல் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். "சாரணர்களின் கொள்கையை என்னுடைய பெயரின்  முதல் எழுத்துகளை வைத்து உருவாக்கினேன்" என்று 1908-ல் அவர் எழுதிய SCOUTING FOR BOYS என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்

 இரண்டு பேரும் பட்டினி
 நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஒரு உணவு விடுதியின் பெயர்: EAT HERE. உணவு விடுதியின் பெயரை பெரிய போர்டில் எழுதிவிட்டு, அதன் கீழே அவர்கள் எழுதி இருப்பது இதுதான்: “இல்லையென்றால் நாம் இருவரும்  பட்டினிதான்!”

 ஒப்புதல் வாக்குமூலம்
அமெரிக்க வெளி உறவு அமைச்சராக 1972-74’ம்ஆண்டுகளில் இருந்தவர் ஹென்றி கிஸ்ஸிஞ்ஜர்.  அவர் மிகவும் திறமைசாலியாக இருந்தால்   வெகுவிரைவில் பிரபலமானவராக ஆகிவிட்டார்.
அவர் எழுதிய சுயசரித்திர புத்தகத்தின் தலைப்பு: YEARS OF UPHEAVAL. அதன் முன்னுரையில் அவர் எழுதியுள்ள ஒரு வரி கவனத்திற்கு உரியது: “ இந்தப் புத்தகத்தில் என்னைப் பற்றி ஒளிவு மறைவு எதுவும் இல்லாமல், எதையும் மறைக்காமல் எழுதியுள்ளேன். நான் செய்த முதல் தவறை 850’ம் பக்கத்தில் எழுதி 
இருக்கிறேன்.”
 இந்த புத்தகத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன், அவர் என்ன தப்பு செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க!

 சாய்ஸில் விடலாமா?
இங்கிலாந்தின் பிரபல  தத்துவ ஞானியாக விளங்கியவர்   பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். ( BERTRAND RUSSELL). 1950ம் வருஷம் நோபல் பரிசு பெற்றவர். 
அவர் சொன்ன ஒரு குறும்பு வாசகம்:  “பத்துக் கட்டளைகளை பரீட்சை கேள்வித்தாள் மாதிரி கருத வேண்டும். பத்தில் ஏதாவது ஆறு கட்டளைகளை முயற்சி செய்தால் போதும்.”
  பரீட்சையில் சாய்ஸில் விடுவது போலவா, ரஸ்ஸல் அவர்களே?

December 04, 2018

அன்புடையீர்!


அன்புடையீர்!
 வணக்கம். 
பத்து ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 5-ஆம் தேதி ’கடுகு தாளிப்பு’ என்ற பெயரில் என் வலைப்பூவை தொடங்கினேன். தொடர்ந்து எத்தனை பதிவுகள் போட முடியும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் அல்லது கவலைப்படாமல் துவக்கி விட்டேன். 

    அமரர் கல்கியின் நினைவு தினத்தில் துவக்கிய நான், அவரது ஆசியையும் வழிகாட்டுதலையும் நம்பிதான் ஆரம்பித்தேன். அவர் என் ஊனிலும் ,உயிரிலும் கலந்து, பதிவுகள் எழுத எனக்கு அளித்த ஊக்கத்தினால், கிட்டத்தட்ட 700 பதிவுகளை எழுதி உள்ளேன். அவர் கொடுத்த ஊக்கத்திற்குச் சற்றும் குறையாத அளவு ஊக்கத்தை நீங்கள்  தந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த மைல்கல்லை நான் தொடுவதற்குத் தோள் கொடுத்த உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ளவே இந்த குறிப்பை எழுதி உள்ளேன். 
உங்களில் பலர் பின்னூட்டத்தில் தெரிவித்து வரும் பாராட்டுகள் மட்டும் அன்றி,   தனிப்பட்ட முறை யிலும்   எனக்கு ஈ-மெயிலில் பலர் எழுதி வரும் பாராட்டுகளும், எனக்குப் புத்துணர்ச்சியை ஊட்டி, கிரியா ஊக்கியாக விளங்கி வருகின்றன.  (இந்தக் கடிதங்களைப் பதிவில் போட என் மனம் ஒப்பவில்லை.)
 இதை எல்லாம்  என்னுடைய  சாதனையாகக் கூறிவிட்டு, வணக்கம் போட்டுவிடலாமா என்று மனதில் சில சமயம் தோன்றுவது உண்டு. அந்த சமயங்களில் எல்லாம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு "தம்பி! நீ எழுது" என்று பணித்த குரல், மீண்டும் சன்னமாக என் காதுகளில் கேட்கும். அந்த குரலுக்கு வந்தனை கூறி, மனதில் இருத்தி, வாயுற வாழ்த்தி, வணங்குகிறேன்; பதிவுகளைத் தொடர்கிறேன்!

- பணிவுடன் 
கடுகு
-----------------------------------------------------------------------------

\*** அடுத்த பதிவை இரண்டு மூன்று  நாளில் போடுகிறேன்.

November 24, 2018

ஜார்ஜ் பெர்னாட்ஷா

 தெரிந்த பெயர் ; தெரியாத விவரங்கள்  
ஜார்ஜ் பெர்னாட்ஷா (26 July 1856 – 2 November 1950)

       ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் பெயர் தெரிந்த அளவு, அவரைப் பற்றிய பல தகவல்கள் பலருக்குத் தெரியாது.

     அவரைப் பற்றிய மூன்று துணுக்குகள் ஓரளவு பிரபலம். 
1. கிரிக்கெட்டைப் பற்றி அவர் சொன்ன ஒரு கருத்து.

  1. "Cricket is a game played by 11 fools and watched by 11,000 fools."  
    2.  My Fair Lady  அபாரமான திரைப்படம். அவர் எழுதிய PYGMALION   நாடகத்தின் திரை வடிவம்.
   
     3.அவரைப் பற்றிய ஒரு மாதிரியான’  துணுக்கும் சற்று பிரபலமானது. 
      ஒரு  பெண்மணி (Lady Astor ?) அவரிடம் காதல் வயப்பட்டு(!!) சொன்னாராம்: “நாம் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம்.  நமக்கு பிறக்கும் குழந்தை, உங்களைப் போல் அறிவாளியாகவும் என்னைப் போல் அழகாகவும் இருக்கும்” என்றார்.
     “நீ சொல்வது சரிதான். ஒருக்கால், குழந்தை என்னைப் போல் ‘அழகாகவும்’, உன்னைப் போல் ‘அறிவாளி’யாகவும் பிறக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்று சொன்னாராம் ஷா!
      இது ஒரு ரீல் துணுக்கு. இது மாதிரி சர்ச்சில், ஐன்ஸ்டீன் என்று பல பிரபலங்களின் பெயர்களிலும்  பல ஹாலிவுட் நடிகைகளின் பெயர்களிலும் இதே துணுக்கு வந்திருக்கிறது!)
 * ஷா எழுதிய நாடகங்கள் எல்லாம் 36 தொகுதிகளாக வெளியாகி உள்ளன.  
  *ஷா  முழுக்க முழுக்க சைவமாக இருந்தவர். 
*அவருக்கு ஆங்கில மொழியின் ‘ஸ்பெல்லிங்’-கை சீர்திருத்த வேண்டும் என்ற வெறி இருந்தது.  நோபல் பரிசுத்தொகயில்  ஒரு பகுதியை  இந்த பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கு கொடுத்து விட்டார்.

November 10, 2018

தப்புத் தபால் தலையும், கில்லாடி ஆசாமியும்!

      தபால் தலைகளில் தவறு ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம்   பல நாடுகளில் நடக்கிறது. ஏன், ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது.  அலட்சியம்தான் காரணம். 
      ஒரு பெரிய பிரமுகரின் படத்தை ஒரு தபால் தலையில் வெளியிட்டார்கள். (எந்தப் பிரமுகர் எந்த நாடு என்பது முக்கியமல்ல.) அவர் மேஜை முன் உட்கார்ந்து எதையோ எழுதுவது போல் எடுக்கப்பட்ட படம் (அல்லது ஓவியம்). அச்சாகி தபால் தலை விற்பனைக்கு அனுப்பப்பட்டது.  சில நாட்கள் கழித்து அதில் ஒரு பெரிய தவறு இருப்பது தெரிய வந்தது. ஓவியம் வரைந்தவர், அவரது இடது கையில் ஆறு விரல்களைப் போட்டு விட்டார்! இதை ஒருவர் கூட கவனிக்கவில்லை!

 ஐ.நா சபையின் உறுப்பினராக இருந்த    டேக் ஹாம்மர்ஸ்ஷோல்ட் (DAG HAMMARSKJOLD)  காலமான பிறகு, முதலாம்  ஆண்டு நினைவு நாளன்று ( 23 அக்டோபர்,  1962 ) அவரை கௌரவிக்க நாலு சென்ட் தபால் தலையை அமெரிக்கா வெளியிட்டது. ஸ்டாம்பின் வடிவமைப்பு தயாரானதும், அந்த படத்தைப் பத்திரிகையில் வெளியிட்டு, இன்ன தேதியில் ஸ்டாம்பு வெளியிடப்படும் என்றும் அறிவித்து இருந்தார்கள்.  இளஞ்சிவப்பு வண்ண கலர் பேப்பரில் ஹாம்மர்ஸ்ஷோல்டின் படம் டிசைன் செய்யப்பட்டிருந்தது. 

சில நூறு தபால் தலைகளை  இளஞ்சிவப்புக்குப் பதில், மஞ்சள் கலரில் தவறாக அச்சகத்கதில்  அச்சடித்து விட்டார்கள். நல்லகாலம், எல்லா தபால் தலைகளையும் அடிப்பதற்கு முன் தப்பைக்  கண்டுபிடித்து விட்டார்கள். மீதி தபால் தலைகளைச் சரியான வண்ணத்தில் அச்சடித்தார்கள். 

October 30, 2018

துணுக்குப் பேரணி


  அம்மாடி, கேட்லாக்
           எழுபதுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் டில்லி தாரியாகஞ்ச்                       நடைபாதை கடைகளுக்கு படையெடுப்பது என் வழக்கம். அங்கு பல, அற்புதமான, அரிய ஆங்கில புத்தகங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.
     
புத்தகம் மட்டுமல்ல, அயல்நாட்டு ஃபேஷன் பத்திரிகைகள், அமெரிக்கSEARS  கேட்லாக் போன்றவைகளும் (அயல் நாட்டு தூதரகங்கள் பழைய பேப்பர் கடையில் போட்டவை!)  இங்கு கிடைக்கும். அதை வாங்கி நம் உள்ளூர் தையல்காரர்கள் புதுவிதமான டிரஸ்களைத் தைப்பார்கள். பர்னிச்சர் தயாரிப்பாளர்கள் பல்வேறு விதமான மேஜை, நாற்காலி என்று தயாரிப்பதற்கு ஐடியா கிடைக்கும்.
    கேட்லாக்  பயங்கரக் கனமாக இருக்கும். (1975-ம் வருஷ SEARS  கேட்லாக் 1491 பக்கங்கள்!). (பழைய  கேட்லாக்குகள் இப்போதும் கிடைக்கின்றன. E-book - 1969- ம் வருஷ SEARS  விளையாட்டு பொம்மைகள் கேட்லாக் விலை 150 டாலர்!

இரட்டையர்கள், ஆனால் விரோதிகள்.
     உலகின் மிகப் பிரபல இரட்டையர்கள் பல வருஷங்களுக்கு முன்பு சையாம்  நாட்டில் ( இன்றைய தாய்லாந்தில்)   1811-ம் ஆண்டு பிறந்த இரட்டையர்கள். 
அவர்கள் தனித்தனியாக, இரண்டு பேராக பிறக்கவில்லை. விலாப்பகுதி சதை அவர்களை ஒட்ட வைத்து இருந்தது. CHANG-ENG ஒட்டிய உடலுடன் வளர்ந்தார்கள்.  1829 -ம் ஆண்டு அவர்கள் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தார்கள். பல கண்காட்சிகளில் கலந்து கொண்டு நிறைய பணம் சம்பாதித்தார்கள்.
1874’ம் ஆண்டு, ஒரு மணி  நேர இடைவெளியில் இரண்டு பேரும் காலமானார்கள்! 
பி.கு: காலமாவதற்கு சில வருஷங்களுக்கு முன்பு அவர்களுக்குள்
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விரோதிகளாக ஆகிவிட்டார்களாம்!

மூடுக்கு ஏற்ற கலர்
     பிரபல எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்ட்டிற்கு ஒரு விசித்திர வழக்கம் இருந்தது. அவருக்கு பிடித்த எழுத்தாளரான DORIAN GRAY  எழுதிய புத்தகத்தை ஒன்பது காபிகள் வாங்கி, ஒவ்வொரு புத்தகத்தையயும் ஒவ்வொரு வித கலரில் பைண்ட் செய்து வைத்துக் கொண்டார். 
“எதற்கு ஒரே புத்தகம் ஒன்பது காபிகள். அவற்றை ஒன்பது கலரில் வைத்திருக்கிறீர்களே?என்று கேட்பவர்களுக்கு “ஆமாம்.. என் மூடுக்கு தகுந்த கலர் அட்டை போட்ட காபியை எடுத்துப் படிக்க விரும்புவதே காரணம் என்பார்.

   பிரிட்டீஷ் மியுசியமில் உள்ள புத்தகங்கள் எல்லாம் கலர் அட்டை போட்ட புத்தகங்களாக இருக்கும் என்கிறது ஒரு தகவல். சரித்திரம் சம்பந்தமான புத்தகங்கள்-சிவப்பு, Theological  புத்தகங்கள் – நீலம் கவிதைகள் – மஞ்சள், Natural History  பச்சை என்று வைத்திருக்கிறார்களாம்.

ஆசிரியர் சாவி சொன்னது
     சாவி சொல்வார். “சிறுகதை போட்டியில் எனக்கு நம்பிக்கையில்லை. ஐம்பதாயிரம் லட்சம் என்று பரிசுத் தொகை வைத்தால், சிறப்பான கதை எழுதுவார்கள் என்று கருதுவது தவறு. 

October 21, 2018

சூழ்நிலை


சூழ்நிலைதான் மனிதனையும் மனித குணங்களையும் உருவாக்குகிறது.  படு சீரியஸாக இருக்கும் ஆசாமி கூட சீட்டுக் கோஷ்டியில் இருக்கும் போது அரட்டையும், கூச்சலும் போடத் தயங்குவதில்லை. அவரே மாலையில் கதாகாலட்சேபத்தில் உட்கார்ந்திருக்கும் போது, காதலாகிக் கசித்து, கண்ணீர்ப் பெருக்கி நிற்கிறார்.  சீட்டாட்டத்தின்போது , ஜோக்கடிக்காமல் இருப்பது நடக்கக் கூடிய காரியமல்ல. எப்பேர்ப்பட்ட முசுடுவும் மாறி விடுவார்.

  வீட்டு வாசலுக்கு வரும்  காய்கறிக்காரியிடம் "என்ன? கொத்தமல்லி ஒரு ரூபய்க்கு நாலு கட்டுதானா?  அநியாய வெலை சொல்றியே! ஐந்து கொடேன்'' என்று பிசுக்காரமாகப் பேரம் பேசும் ஆசாமி, நாகரிக ஓட்டலுக்குப் போகும்போது , சற்றும் யோசிக்காமல் ’டிப்’பாக ஐந்து ரூபாய் கொடுப்பார்- சர்வர் கேட்காமல் இருந்தாலும்!
    மாதச் சம்பளம் வாங்கும் ஓட்டல் சிப்பந்தி, தன் கடமையைச் செய்கிறார். அவருக்கு’டிப்' கொடுக்கிறோம். பாவம், தோட்டத்தில், தனியாவைப் போட்டு நீர் ஊற்றி, கட்டுக் கட்டி எடுத்து க் கொண்டு, வீடு தேடி வரும் கொத்தமல்லிக்காரியிடம் பேரம் பேசுகிறோம்.  எல்லாம் சூழ்நிலை வித்தியாசம் தான்!
    இப்படிப் பேரம் பேசும் ஆசாமியைப் பெரிய கிளப்பில் பணம் வைத்துச் சீட்டாடும் போது பார்க்க வேண்டும். "ஏய், பையா... போய் நாலு பாக்கெட் பிஸ்கெட் வாங்கிக்கிட்டு வாடா'' என்று நூறு ரூபாய் நோட்டை வீசுவார். ஆட்டத்தின் நடுவில், "புது சீட்டுக் கட்டுகள் கொண்டு வா'' என்பார். சீட்டுக்கட்டின் விலை ஐம்பது ரூபாய். பத்து ஆட்டத்திற்குப் பிறகு அதையும் மாற்றச் சொல்வார். (ஒரு பெரிய கிளப்பில் சீட்டுக் கட்டுகள் வருடத்தில் சுமார் இருபது, முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்கள்! இது பழைய கணக்கு. இப்போது எவ்வளவு இருக்கும் என்று எனக்குத் தெரியாது!))  இவரே கிளப்பை விட்டு  இரவு 12 மணிக்கு வெளியே வரும் போது ஆட்டோரிக் ஷாக்காரரிடம் பேரம் பேசுவார். "என்னய்யா,  சாரங்கபாணி தெருவிற்கு ஐம்பது  ரூபா கேட்கிறே? நாற்பது ரூபா தரேன்'' என்பார்.

    தபாலாபீசில் கியூவில் நிற்கும் ஆசாமி கத்துவார்: "என்ன இது? இன்னும் இரண்டு கவு ன்டரைத் திறக்கக் கூடாதா? இவங்களைக் கேட்பவர்கள் யாருமில்லை. '' ஆனால் இந்த ஆசாமி, தாலுகா ஆபீஸில், ஒரு  ‘சலானி’ல் பணம் கட்ட நான்கு மணி நேரம் கூட காத்திருப்பார். ஒரு பேச்சுப் பேசுவாரா? ஊஹும். அங்கு காத்திருப்பவர்கள்தான் அதிகம். ஆகவே அந்தச் சூழ்நிலையில் இவரும் சாதுவாகிவிடுகிறார்.
          பீச், சினிமா தியேட்டர் என்று  போனால் பாப்கார்ன், ஐஸ் கிரீம் என்று கண்ணை மூடிச் செலவு பண்ணுவார்: கோவில் உண்டியில் பணம் போட, பர்ஸைத் துழாவித் துழாவிச் சில்லறையைத் தேடுவார்.
                          நாம் எல்லாரும் சூழ்நிலைகளின் கைப்பொம்மைகள்!
=====================

( அடுத்த பதிவு சற்று தாமதமாக வரும்.)

October 09, 2018

கமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2

 ஒரு வாரம்  கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா, அந்த பூச்சி மருந்து புட்டிகளின் லேபில்களில் பூச்சிகளின் படத்தை மூன்று வர்ணங்களில்  மாதிரி இருந்தன) “ரவிவர்மா” தீட்டிய படங்கள் பொட்டலங்கள்  இருந்தன.  
படமங்கள் மட்டும் பெரிதாக இருந்திருந்தால், எனக்கு செலவு நூறு, இருநூறு  ஆகி இருக்கும். எப்படி என்று கேட்கிறீர்களா? கமலா அந்த பூச்சி படங்களையும் ஃபிரேம் போட்டுக் கொண்டு வரச் சொல்லி இருப்பாள். பிழைத்தேன்.
     பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்த போதும், கஜலஷ்மி பதக்க செயினை பிறந்த நாள் பரிசாகக் கொடுத்த போதும், ‘மாட்டல்’ என்ற நகை திடீர் ஃபாஷனாக வந்த போது, என் அக்காவிற்கு வாங்கிக் கொடுக்காமல், கமலாவிற்கு வாங்கிக் கொடுத்த போதும் வராத, சந்தோஷம்,  ஏதோ கலியாண சீர் வந்தது போல் மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்து!
      பெட்டியில் ஒரு நோட்டீஸ் இருந்தது. அதுவும் மூன்று கலரில் அச்சடித்து இருந்ததா என்று கேட்காதீர்கள்:.அது அந்த விதைக் கம்பெனியை    அவமானப்படுத்துகிற மாதிரியான கேள்வி. 

அந்த நோட்டீஸில் “அன்புடையீர், உங்கள் கிச்சன் கார்டன் ஆர்வத்தை நாங்கள் பாராட்டும் வகையில் நான்கு ‘பண்டில்’ வைக்கோலை எங்கள் அன்பளிப்பாகத் தருகிறோம். விதைக்கும் போது, வைக்கோல் தேவைப்படும். (பயிர் வளர்ப்புக் குறிப்பைப் பார்க்கவும்.) வைக்கோல் சுலமாகக் கிடைப்பதில்லை. உங்களுக்கு வைக்கோல் ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது என்பதற்காக நாங்களே சப்ளை செய்கிறோம். பணம் ஏதும் தர வேண்டாம். நீங்கள் எங்கள் பண்ணைக்கு வந்து வைக்கோல் பண்டில்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதைப் பார்சலில் அனுப்பினால் வைக்கோலின் விலையை விட பார்சல் கட்டணம் அதிகமாகிவிடும்” என்று எழுதியிருந்தார்கள்.
       உடனே கமலா, “ஒரு நிமிஷம் இருங்கோ. இதோ புடவையை மாத்திக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே பெட்ரூமிற்குள் போனாள்.
     என்ன கமலா! புடவையை எதுக்கு மாத்திக்கப் போறே?” என்று கேட்டேன்.
     அந்த நோட்டீஸை எடுத்து, எழுத்துக் கூட்டிப் படியுங்கோ. அப்பவாவது உங்க மர மண்டையில் ஏதாவது உறைக்கிறதா என்று பார்க்கலாம்.  'பண்ணைக்கு வந்தால் வைக்கோல் பண்டில் இலவசமாகத் தருகிறோம்’ என்று அதில் போட்டிருக்கா இல்லையா?... இன்னிக்கே போய் எடுத்துண்டு வந்துடலாம், நம்ப காரில்” என்றாள்.
     “கமலா.. அது நோட்டீஸ் தானே.. ஏதோ கோர்ட் சம்மன் மாதிரி நினைச்சுண்டு, காலில் வெந்நீர் கொட்டிண்ட மாதிரி பதைபதைச்சுண்டு அவசரப்படறயே...  ஸ்டாக் தீர்ந்துடுச்சு என்று சொல்லிவிடுவார்களா என்ன?” என்று கேட்டேன்.
     இதற்கு கமலாவின்  ‘நியுட்டன் விதி’ ரியாக்‌ஷன் பற்றியும் அவள் விட்ட ராம பாணங்களைப் பற்றிய விவரங்களும் இப்போது தேவையில்லை. சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். அடுத்த பத்தாவது நிமிடம் வைக்கோல் பண்டில் வாங்க, பண்ணைக்குப் போகக் கார் புறப்பட்டது. இரண்டு மணி கழிந்து நாலு பண்டில் வைக்கோலுடன் வீடு திரும்பினோம்.
     நாளைக்குக் காலையில் ‘கிச்சன்’ கார்டன்’ வேலையை ஆரம்பிச்சுடப் போறேன்” என்றாள்.
      “தப்பு, தப்பு,  ‘ஆரம்பிச்சுடப் போறோம்’ என்று சொல்லு” என்று சொன்னேன்.
       “என்ன, என்ன? என்ன சொன்னீங்க? ஆரம்பிச்சுடப் போறோம்னு என்றா சொன்னீங்க. நிஜம்மாவா? சுனாமிதான் வரப் போறது” என்றாள்.
          “சுனாமியும் வராது…பினாமியும் வராது. நம்ப தோட்டம் பாரேன், ஹார்ட்டி கல்சரல் கிளப் நடத்தும் தோட்டப் போட்டியில் நிச்சயம் பரிசு வாங்கும். பரிசு வாங்கறதுக்கு நீ போகிற போது ,என்ன கலர் பட்டுப் புடவை கட்டிக்கணும்னு இப்பவே பிடிச்சு யோசிக்க ஆரம்பி” என்றேன்.

     மறுநாள் முதல், தோட்ட வேலை ஜரூராக நடந்தது. பள்ளம் தோண்டுவதும், கொத்துவதும் என் வேலை. கிராமத்தில் இந்த வேலைகளைச் சிறு வயதில் செய்திருந்ததால், மளமளவென்று செய்தேன். கமலா அவ்வப்போது இங்கே கத்தரி செடி, இங்கே பச்சை மிளகாய், இங்கே தக்காளி என்று பிளான் போட்டாள்.

October 04, 2018

கமலாவும் கிச்சன் கார்டனும்- பாகம் 1


      என் அருமை மனைவி டி.வி.யில் வரும் நிகழ்ச்சிகளில் எதைப் பார்க்க மறந்தாலும், இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தவறமாட்டாள். ஒன்று; சமையல் குறிப்பு; இரண்டாவது; தோட்டக்கலை, கிருஷிதர்ஷன், வயலும் வாழ்வும் என்ற பெயர்களில் வரும் எல்லா நிகழ்ச்சிகளையும் விடமாட்டாள்.

இத்தனை வருஷங்களாக நிகழ்ச்சிகளைப் பார்த்து வருவதால், என் மனைவிக்கு 200, 300 விதமான சமையல் குறிப்புகள் அத்துப்படி. கவனியுங்கள், குறிப்புகள் அத்தனையும் அத்துப்படியே தவிர, இன்னும் ‘பிராக்டிகல்’ பாடங்கள் வகுப்புக்கு அவள் போகவில்லை! அதனால், அது  ‘பிஸிபேளா-அன்னா’வாக இருந்தாலும் சரி, மிகவும் கஷ்டமான செய்முறையில் தயாரிக்கப்படும் சோன்பப்டி போன்ற இனிப்பு வகைகளானாலும் சரி, பாதி வார்த்தைகளாலும், மீதி பாதி மோவாயையும், தலையையும் அப்படி இப்படி ஆட்டி, தயாரிப்பதை விவரித்து விடுவாள்.
     பல சமயம் அவளிடம்  “சமையற்கலை பாடங்களில் தியரியில்    நூற்றுக்கு நூறு வாங்கி விட்டாய். பிராக்டிகல்தான்…..” என்று ஆரம்பிப்பதற்குள்  “அது என்ன கம்ப சூத்திரமா என்ன?  ‘ப்பூ’ என்று ஊதித் தள்ளி விடுவேன்”  என்பாள். (அவள் ‘ப்பூ’ என்று சொல்லும் வேகத்தில், நானே   இரண்டு அடி பின்னால் தள்ளப்படுவேன்!)
     “போகட்டும்.. மணி நாலு ஆகிறது. பசிக்கிறது  ஏதாவது டிஃபன் பண்ணேன்” என்பேன்.
      ”இதோ ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் ஓடுவாள். சரியாக அரைமணி நேரம் கழித்து, பிளேட்டில் சுடச்சுட டிபன் கொண்டு வருவாள். என்ன டிபன்? ரவா உப்புமா!
      “நேற்று கூட ரவா உப்புமாதானே?” என்று ஈன சுரத்தில் கேட்பேன்.
      ”அதுவேற உப்புமா? இரும்பு வாணலியில் பண்ணேன். அது அவ்வளவு மணமாகவும் ருசியாகவும் இல்லை. இன்னிக்கு  ‘டெஃப்ளான் கோட்டட் ’ வாணலியில் பண்ணி இருக்கேன். அமெரிக்காவிலிருந்து என் அண்ணா வாங்கி அனுப்பினான். ரொம்ப உசத்தி தவ்வா?”
     “ரொம்ப உசத்தியா? எம்பையர் ஸ்டேட் கட்டடத்தில், 80-வது மாடியில் இருக்கிற கடையில் வாங்கி இருப்பாராக்கும்….” என்பேன். அதற்கு மேல் நையாண்டி பண்ணினால், இந்த ரவா உப்புமாவும் அம்பேல் ஆகிவிடும் என்று சும்மா இருந்து விடுவேன்.
       மறுநாள் டிபன் என்ன இருக்கும் தெரியுமா? அதே ரவா உப்புமாதான்!
      “என்ன கமலா….?  என்று என் காதுக்கே கேட்காதபடி மவுனமாகக்(!) கேட்பேன்.
      கமலா நியூட்டனின் விதிகளைக் கரைத்துக் குடித்திருப்பவள். அவைகளைச் சற்று தனக்கு வசதியாக லேசாக மாற்றிக் கொள்வாள்.
     நியூட்டனின் மூன்றாவது விதி; “Every action has an equal  and opposite reaction” என்பதை நியூட்டனின் ‘ஆன்டிகமலா அதைக் கொஞ்சம் மாற்றி Every action has an equal and increased opposite reaction’ என்று, லேசான திருத்தத்துடன் மாற்றிக் கொள்வாள்.
     அதனால்தான் நான் மெல்லமாக என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன். அது பலமடங்கு   ‘டெஸிபலில்’ ரியாக்‌ஷனா’க வரும். சரி விட்ட இடத்திற்கு வருகிறேன்.
      ‘ஆமாம், நேற்று பண்ண உப்புமாவேதான். இன்னிக்கு எந்த பிளேட்டில் கொண்டு வந்திருக்கிறேன் பாருங்கோ…. கலியாணத்தின் போது உங்களுக்கு எங்க அப்பா வாங்கிக் கொடுத்த தட்டு. வெள்ளித் தட்டு. சாப்பாட்டுக்கு ருசி சேர்க்கும் என்பது மட்டுமல்ல; கொஞ்சம் வெள்ளியும் பஸ்பமாக உள்ளே சேர்கிறதால் உடம்புக்கும் பலம்என்பாள்.
இந்த விளக்கம் அல்லது சிற்றுரை  எத்தனை தடவை சொல்லி இருப்பாள் எனக்குத் தெரியாது. அவள் சொன்ன அடுத்த கணம், அந்த வார்த்தைகளை அப்படியே காதிலிருந்து கொட்டிவிடுவேன்!
     இதுதான் கமலாவின் வெரைட்டி! ஒரு கவிஞர் சொன்ன புத்திமதியை என் மூளையில் ‘க்விக் ஃபிக்ஸ்’போட்டு ஒட்டி வைத்திருக்கிறேன். அது; உன் மனைவி நல்லது செய்தால்,  ‘BE KIND’;  சள்ளு புள்ளு என்று விழுந்தால் ’BE BLIND’!  இதன் காரணமாக  கிட்டத் தட்ட முழு  Blind  என்ற ஸ்டேஜில் இருக்கும் நான், மேலும் Blind  ஆக விரும்பவில்லை. ஆகவே, ‘ஆமாம். வெள்ளித் தட்டு மட்டும் இருந்தால் போதாது. வெள்ளி ஸ்பூன் கொடு… இன்னும் தூக்கி அடிக்கும். இரண்டு மடங்கு பலம் வரும். …. வெள்ளியில் Shovel  யாரும் பண்ணலையே… சேஎன்பேன்.
     “போதும், உங்க அசட்டுத்தனம்…என்பாள்.
      இப்படி, அவளை அடிக்கடி குறை சொன்னதாலோ என்னவோ, சமையல் குறிப்பு நிகழ்ச்சிகளை விட அதிகமாகத் தோட்டக்கலை நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கினாள்.  ஹிந்தி, தெலுங்கு, ரஷ்யன், ஸ்பானிஷ் என்று எந்த மொழியாக இருந்தாலும் பார்ப்பாள்.
      ஒரு நாள் - அன்றைக்கு ஏதோ பண்டிகை தினம் என்று நினைக்கிறேன்.-அல்லது ஒரே நாளில் இரண்டு தடவை ராகுகாலம் வந்ததோ என்னவோ, சமையல் குறிப்பு நிகழ்ச்சியில் இங்கிலீஷ் வெஜிடபள்கள் பயிரிடும் முறையை ஒருத்தர் அரைகுறை ஆங்கிலத்தில் விளக்கி விவரித்தார். (அவரது ஆங்கிலம், தமிழ் மாதிரியும், தமிழ், ஆங்கிலம் மாதிரியும் இருந்ததால் பாதி புரியவில்லை!)

           நிகழ்ச்சி முடிந்ததும், அவர் ஒரு சின்ன அறிவிப்பு செய்தார். “அன்பான நேயர்களே, உங்களுக்கு அரிய பரிசு காத்திருக்கிறது. “உங்களுக்கு இங்கிலீஷ் காய்கறிகள் விதை இங்கிலாந்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டிற்கு வரும். முழுதும் இலவசம். தபால் செலவு மட்டும் நூறு ரூபாய்  அனுப்பினால் போதும். கிட்டத்தட்ட 500 ரூபாய் மதிப்பு விதைகள். உடனே கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதுங்கள்….என்று ஏதேதோ சொன்னார்.  அதுமட்டுமல்ல; “இது லண்டன் வீட்டுத் தோட்டம். பாருங்கள் கத்திரிக்காய்.. இது ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி தோட்டம். பாவக்காய் பாருங்கள். அல்ஃபோன்சா மாம்பழம் கெட்டுது. அவ்வளவு ஸ்வீட்..என்று சுற்றுலா விளம்பரம் மாதிரி பல ஊர்களைக் காட்டினார்.
     “நம்ப வீட்டில் தோட்டம் போடப் போகிறேன் நான் …உங்களைத்தான்… நூறு ரூபாய் அனுப்புங்கோ” என்று சொன்னாள். இல்லை, இல்லை.. சொல்லவில்லை. உத்தரவிட்டாள்!
     “உடனே நானும் தசரத மகாராஜனாக ஆகிவிட்டேன். மனைவிக்கு வாக்குக் கொடுத்ததைக் காப்பாற்றினேன். நூறு ரூபாயை அனுப்பினேன். அது 100% நஷ்டம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன் 
              *                           *
       ஒரு வாரம் கழித்து, தபாலில் ஒரு பளபள பாக்கெட் கமலாவின் பெயரில் வந்தது. அதில் முகவரி பொன்னிற எழுத்துக்களில் இருந்தது. பாக்கெட்டைப் பிரித்தாள். கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் விதைப் பொட்டலங்கள் நாலு இருந்தன. பொட்டலங்களின் மீது தக்காளி, கத்திரிக்காய், காலிஃப்ளவர், கேரட் படங்கள் அச்சிடப்பட்டிருந்தது. ஏதோ தன் வீட்டுத் தோட்டத்திலிருந்து வந்த காய்கறிகள் அவை என்று கமலா கருதினாளோ என்னவோ,  அல்லது சில வாரங்களில் இப்படிக் கண்ணைப் பறிக்கும் அழகுடன் கூடை கூடையாகத் தன் கிச்சன் கார்டனில் வரப்போகும் காய்கறிகள் இப்படி இருக்குமோ என மானசீகமாக ரசித்தாளோ என்னவோ, அவள் முகம் அத்தனை மலர்ச்சி பெற்றது.
     “பொட்டலத்தை இப்படிக் கொடு, நான் பார்க்கிறேன்.என்று கையை நீட்டினேன்.
     “தரேன்.. கொஞ்சம்  தளுக்காக வாங்கிக் கொள்ளுங்கள். உள்ளே விதைகள். உங்கள் இரும்புக் கையைப் போட்டு அதைப் பஸ்பமாக கசக்கி விடப் போகிறீர்கள். ஒவ்வொரு விதையிலிருந்தும் 10 கிலோ தக்காளி வரும்என்றாள். (விதை விற்பனை செய்த கம்பெனி ஒவ்வொரு விதையும் 5 கிலோ தக்காளியை உற்பத்தி செய்யும்என்றுதான் போட்டிருந்தான். ’கமலாவின் கைராசி; எல்லாம் இரண்டு மடங்கு உற்பத்தி செய்தாலும் செய்யும்’ என்று எனக்கு நானே விளக்கம் கொடுத்துக் கொண்டேன்.!)
     விதைப் பொட்டலங்களுடன், விவரமாக அச்சிடப்பட்ட சாகுபடி முறைக் கையேட்டையும் அனுப்பியிருந்தார்கள். பளபளவென்ற நேர்த்தியான காகிதம். அதை எடுத்து லேசாகப் புரட்டினாள்.  பக்கங்கள் புரளப் புரள கமலாவின் முகத்தில் மலர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே போயிற்று. (அவளுடைய கல்யாண அழைப்பிதழைப் பார்த்தபோது கூட இப்படி ஜொலிப்பு அவள் முகத்தில் வந்திருக்குமா என்பது சந்தேகம்!)
     எந்த செடிக்கு எந்த உரம் போட வேண்டும், போட வேண்டிய அளவு, அட்டவணை போன்ற விவரங்கள் கொடுத்து இருந்தார்கள். சொட்டு நீர் பாய்ச்சுவதற்கு தேவையான குழாய்கள் முதலியவற்றையும் அவர்கள் விற்பனை செய்வதாகவும், “நீங்கள்  எங்களது மிக முக்கியமான வாடிக்கையாளர் என்பதால் உங்களுக்குப் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறோம்என்று அச்சடித்த கூப்பனையும் அனுப்பி  இருந்தார்கள்.
     “கமலா, நீ ஸ்பெஷல் கஸ்டமர்.. உன் பெயருக்கு தனி ராசி இருக்குஎன்று ‘ஐஸ்வைத்தேன். இத்தனை வருஷங்கள் நான் வைத்த ஐஸ் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தால், கமலாவை ஒரு ’ஐஸ்பெர்க்’ என்று சொல்வீர்கள்.
     மளமளவென்று, தேவையான உரம், பூச்சி மருந்து, கோழிவலை, பயிர் டானிக் என்று பெரிய லிஸ்ட்டைப் போட்டு விட்டாள். ஐயாயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்தேன்.
     “இருங்க… போய் காபி போட்டுக் கொண்டு வருகிறேன்என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குச் சென்றாள். அட, திடீர் கரிசனம்!!!.
     அவள் சென்றதும், அந்த முக்கியமான வாடிக்கையாளர் கூப்பனை எடுத்து, இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தேன். அப்போது மூலையில் சிறிய எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த சிறிய குறிப்பு கண்ணில் பட்டது. “ஸ்பெஷல் கஸ்டமர் கூப்பன் 20,000 காபிகள்என்று இருந்தது! (இந்த கம்பெனிக்கு சாதாரண வாடிக்கையாளர் ஒருத்தர் கூட இருக்கமாட்டார்கள் என்பது நிச்சயம்… இதைக் கமலாவிடம் சொல்லக் கூடாது” என்று எனக்கு நானே புத்திமதியாகச் சொல்லிக் கொண்டேன்!)
(தொடரும்)
( பாகம்-2  இன்னும் நலைந்து நாட்களில் வரும்.)

September 21, 2018

துணுக்கு மகாநாடு

நான் ஒரு.......
நான் ஒரு துணுக்குப் பிரியன். அறுபதுகளில் ‘குமுதம்இதழில் எராளமான துணுக்குகளை ரீடர்ஸ் டைஜஸ்ட்பத்திரிகையைப் போல் போட்டுக் கொண்டிருந்தார்கள். சின்னச் சின்னத் துணுக்குகள், சுவையான துணுக்குகள் அவ்வளவுதான், இவற்றிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. வேறு சில பத்திரிகைகளும் இது போல் துணுக்குகளைப் போட ஆரம்பித்தன.

   அந்த கால கட்டத்தில் குமுதத்தில் நான் எழுதிய துணுக்குத் தகவல்கள் ஏராளம்.  பிறகு தினமணி கதிரிலும் நிறைய துணுக்குகளைத் தெளித்தேன். ‘கடுகு டயரிஎன்ற தலைப்பில், வாரா வாரம் கூடியவரை தேதிக்குப் பொருத்தமான துணுக்குகளை ஒரு வருஷம் எழுதினேன்.
 ‘துணுக்கு எழுத்தாளர் மகாநாடுஎன்று பாதி உண்மை, பாதி நகைச்சுவை கலந்த நீண்ட கட்டுரையையும் எழுதினேன்.
 பிறகு சில காலத்திற்குள் துணுக்குகள் மௌஸ் இழந்தன. ஆனால் துணுக்குகளை நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைப்பதை நான் விடவில்லை. இன்றும் அது தொடர்கிறது. என் நோட்டுப் புத்தகங்களிலிருந்து சில துணுக்குகளை இந்த வலைப்பூவில் அவ்வப்போது தர எண்ணியுள்ளேன்.  மெரினாவில் பாப்கார்ன் சாப்பிட்டு ரசிப்பதைப் போல் இவற்றை ரசியுங்கள். 

1.மில்டன்
 இந்த புகழ் பெற்ற எழுத்தாளருக்கு ஒரு அசாதாரணத் திறமை இருந்தது. அவர் இரண்டு கைகளாலும் எழுதும் திறமை கொண்டவர். இதற்குப், பழக்கமும் வேண்டும்.  “நான் வலது கையால் கவிதைகளை எழுதுவேன்., கட்டுரைகளை இடது கையால் எழுதுவேன்’” என்று சொல்லியிருக்கிறார்.
ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றி மதிக்கக்கூடிய தகுதி படைத்தவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்.
அவர் வலது கையாலும்,இடது கையாலும் எழுதும் திறமை படைத்தவர். அது மட்டுமல்ல, ஒரே சமயத்தில் இரண்டு கையாலும் எழுதும் திறமை படைத்தவராம்!

2. ஹிட்லர்
அமெரிக்க TIME பத்திரிகையில் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் “MAN OF THE YEAR’ என்று ஒருவரைத் தேர்ந்தெடுத்து அட்டைப் படமாகப் போடுவார்கள். 1939-ம் வருஷம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் யார் தெரியுமா? ஹிட்லர்!

3. ஐயோ, கேள்விக்குறியா? வேண்டாம்   
 நம் தமிழ் சினிமாத் துறையில் ஒரு மூடப்பழக்கம் அல்லது மூட நம்பிக்கை ஒன்று இருந்தது. படத்தின் தலைப்பில் எட்டு எழுத்துகள் வந்தால், படம் வெற்றிகரமாக ஓடாது என்ற (மூட) நம்பிக்கை காரணமாக எட்டு எழுத்துத்தலைப்பை வைக்கவே மாட்டார்கள்.
ஹாலிவுட்டிலும் இது போன்ற ஒரு மூட நம்பிக்கை உண்டு. படத்தின் பெயரில் கேள்விக்குறி இருக்கக் கூடாது. அதானால் கேள்விக்குறி போட வேண்டிய தலைப்பாக இருந்தால் கூட, அதைப் போடமாட்டார்களாம். WHO WANTS TO BE A MILLIONARE என்ற படத் தலைப்பில், அதனால் தானோ என்னவோ கேள்விக்குறியைப் போடவில்லை!

4. வெள்ளை மாளிகையில் திருமணம்
வெள்ளை மாளிகையில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஒரு அமெரிக்க அதிபர்: இருபத்திரண்டாம் அதிபரான கிளிவ்லேண்டின் (CLEVELAND 1837-1897) திருமணம் 1886ம் வருஷம் நடந்தது. (கல்யாண மண்டபச் செலவு மிச்சம்!)

5. 'அனானிமஸ்’ எழுதிய நாவல்
’அனானிமஸ்’ என்ற புனைப்பெயரில் FIRST IMPRESSION  என்ற தலைப்பில் 3-பாக நாவல் 1813-ம் ஆண்டு வெளியாயிற்று. அதன் அடுத்த பதிப்பைத் தன் சொந்தப் பெயரில் புதிய பெயரில் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றார். அவர்: ஜேன் ஆஸ்டென்; புத்தகம்: PRIDE AND PREJUDICE!

6. BENHUR  திரைப்படத்தில்
1959’ ம் ஆண்டு வெளியான BEN HUR  திரைப்படம் 11 அகடமி விருதுகளைப் பெற்ற பிரம்மாண்ட படம். அதில் ஒரு காட்சிக்கு மட்டும் 15,000 துணை நடிகர்கள் தேவைப்பட்டார்களாம்.

7. நெப்போலியன் திரைப்படங்கள்
சரித்திரத்தில் புகழ் பெற்றவர்களைப் பற்றிய திரைப்படங்கள் நிறைய தயாரிக்கப்பட்டுள்ளன. ஆபிரகாம் லிங்கனைப் பற்றிதான் அதிக படங்கள் வந்துள்ளன என்று சொல்வார்கள். மீபத்தில் 2017-ல் கூட ஒரு திரைப்படம் வெளியாயிற்று. ஆனால் லின்கனைச் சாப்பிட்டு விட்டர்: நெப்போலியன்! அவரைப் பற்றி வந்துள்ள திரைப்படங்கள் (2010 வருஷக் கணக்குப்படி): 194!

8.JEOPARDY வினாடி வினா கேள்விகள்;
அமெரிக்காவில் மிக மிகப் பிரபலமான வினாடி வினா போட்டி. JEOPARDY. வெவ்வேறு துறைகளில், முதல் சுற்றில் 30 கேள்விகளும், இரண்டாவது சுற்றில் 30 கேள்விகளும் கேட்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேர் தான் 
போட்டியில் இருப்பார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பரிசுத் தொகை 200, 500, 1000, 2000 டாலர் என்று இருக்கும். இதில் பலர் ஐம்பதாயிரம் டாலர், லட்சம் டாலர் என்று பரிசுத் தொகையை அள்ளியிருக்கிறார்கள். சமீபத்திய கணக்குப்படி, நிகழ்ச்சியின் போது க்விஸ் மாஸ்டர் ALEX TREBEC தெரிவித்த தகவல்: இதுவரை கடந்த 35 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை: 75,000!

9. அபாரமான ANAGRAM
ஆங்கில வார்த்தை விளையாட்டுகளில் மிகவும் புகழ் பெற்றது; ANAGRAM.
 (ஒரு ஆங்கில வார்த்தையை எடுத்துக் கொண்டு அதில் உள்ள
எழுத்துக்களை மாற்றிப் போட்டு, வேறு ஒரு வார்த்தையை உருவாக்குவதை ANAGRAM என்பார்கள்.  உதாரணமாக; NEPAL என்பதை PLANE, என்று மாற்றலாம். (அதுமட்டுமல்ல PANEL, PENAL என்றும் மாற்றலாம்.  FLORENCE NIGHTINGALE என்பதன் னக்ராம் FLIT ON CHEERING ANGEL. என்பதுதான் மிகவும் பிரபலமானது.) 

10. ஹிட்லரின் ரயில்
ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் தனக்கென்று ஒரு ரயில் வைத்திருந்தாரம். அதற்கு 1940ம் ஆண்டு அவர் வைத்த பெயர்; AMERIKA.

11.போப்பாண்டவரின் நகைச்சுவை 
போப்பாண்டவர் ஜான் பால் XXIII மிகவும் கலகலப்பானவர். அவருடைய நகைச்சுவை துணுக்குகள் ஒரு புத்தகமாகவே வெளிவந்துள்ளன.
ஒரு சமயம் போப்பாண்டவருக்கென்று விசேஷ அங்கி தயாரிக்க, ஒரு டிசைனை அவரிடம் காண்பித்தார்கள். அந்த உடையில் சிங்கத்தின் படம் போடப்பட்டிருந்தது. டிசைனைப் பார்த்த போப்பாண்டவர் சொன்னது; தயவு செய்து அந்த சிங்கம் உர்’ரென்று பார்ப்பது போல் ருக்க வேண்டாம்!

12. அம்மாதான் உலகம்
ஒரு பெண்மணி தன் பக்கத்து வீட்டுக்குப் போய், கதவைத் தட்டினார். ஒ0ரு ஆறு வயது பையன் கதவைத் திறந்தான். ”அம்மா இருக்காங்களா?” என்று அந்த பெண்மணி கேட்டாள். அந்தப் பையன் அம்மாவா இல்லையே அம்மாவுக்கு உடம்பு சரியாக இல்லை. ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்க.. அப்பா டொனால்ட், அண்ணன் மைக்கேல், நான் மட்டும்தான் வீட்டில் தன்னந் தனியாக இருக்கிறோம்என்றான்.

13. ’வெதர்’ சரிப்பட்டு வரலை!
டி.வி. நிகழ்ச்சியின் வானிலை அறிக்கையை ஒருவர் தொடர்ந்து பல வாரங்கள் செய்து வந்தார். துரதிர்ஷ்டம், அவர் ‘நாளைய வானிலை’ என்று அவர் அறிவித்தபடி எதுவும்  நடக்கவில்லை. பல பத்திரிகைகளும் நேயர்களும் அவரைப் கேலி ட்வீட்கள் மூலம் கலாய்த்தன.
   அவர்,  ‘நமக்கு இந்த வேலை வேண்டாம்’ என்று உதறிவிட்டு, வேறு ஒரு டி,வி கம்பெனிக்கு மனு செய்தார். நேர்முகப்பேட்டியிற்கு அவரைக் கூப்பிட்டார்கள். இவர் சென்றார். பேட்டியில் அவரிடம் சில கேள்விகள் கேட்டார்கள். அதில் ஒன்று: “ஆமாம் இதற்கு முன்பு இருந்த டி.வி. வேலையை ஏன் விட்டு விட்டீர்கள்?
   அதுவா? அங்கே வெதர் (weather) எனக்குச் சரிப்பட்டு வரலைஎன்றார்.”(THE WEATHER DID NOT SUIT ME!")
 இது எப்படி இருக்கு?

14. கனம், மோகனம்
 ஒரு சமயம் அரியக்குடியின் கச்சேரி நிகழ்ச்சியில், சபா தலைவர் அவரைப் பாராட்டிப் பேசினார். முக்கியமாக அன்று அவர் அவர் பாடிய மோகன ராகத்தை  ‘ஆஹா, ஓஹோ’ என்று பாராட்டினார்.

அவர் பேசியதும் அரியக்குடி சின்ன  ‘கமெண்ட்’ கொடுத்தார். “சபா தலைவர் இவ்வளவு பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன சாதித்து விட்டேன் என்று தெரியவில்லை. என்னமோ கனராகம் பாடினேன், அவ்வளவுதான்” என்றார். 
‘என்ன மோகனராகம்” என்பதைச் சிலேடையாக,  'என்னமோ கன ராகம்’  என்று பிரித்துச் சொன்னதை ரசிகர்கள் கைதட்டி ரசித்தார்கள். 
15. ஓய்வை நாடாத வாழ்க்கை.
   ஒரு அற்புதமான பொன்மொழி:  “எப்படிப்பட்ட வாழ்க்கையிலிருந்து நான்   ஓய்வு பெற விரும்ப மாட்டேனோ, அப்படிப்பட்ட வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதே என் இலக்கு,  -- Kurt Vonnegut 
( My goal is to create a life I don't want to retire from!)

16. ஒரு சிலை - 350 துண்டுகள் (அல்லது) 350 துண்டுகள்- ஒரு சிலை)
   ஆம், 350 துண்டுகளால் உருவானதுதான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவியின் சிலை. பிரான்ஸ் நாட்டு சிற்பி உருவாக்கிய சிலையின் 350 பகுதிகளை 214 பெட்டிகளில் வைத்து கப்பலில் கொண்டு வந்தார்களாம். இச்சிலையின் ஆள்காட்டி விரலின் நீளம்; எட்டு அடி!


17. மலைக்க வைக்கும் மார்சல் பிரவுஸ்ட்
   பிரெஞ்சு எழுத்தாளர் மார்சல் பிரவுஸ்ட் (1871-1922)  IN SEARCH OF LOST TIME என்ற பிரம்மாண்டமான நாவலை எழுதியுள்ளார். கிட்டதட்ட அவரது சுயசரிதைதானாம் அது. ஏழு வால்யூம்கள், கிட்டத்தட்ட 2000 கதாபாத்திரங்கள் கொண்ட புத்தகம்எத்தனை பக்கங்கள்? 4221 பக்கங்கள்!
ஒவ்வொரு பகுதியாக புத்தகம் வெளியாயிற்று -14 வருடங்களில்!

18. ஹிட்ச்காக்கின் கருத்து.
  பிரபல டைரக்டர் ஹிட்ச்காக் சற்று துடுக்காகவும் ‘சுருக்கென்றும் பேசக் கூடியவர் என்பார்கள். அவருடைய ‘சுருக்கு மொழியில் பிரபலமானது: திரைப்பட நடிகர்களைப் பற்றி அவர் சொன்ன கருத்து: “திரைப்பட நடிகர்கள் எல்லாம் கால்நடைகள் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை;  “திரைப்பட நடிகர்களைக் கால்நடைகள் போல் நடத்த வேண்டும்என்றுதான் நான்  சொன்னேன்! 

19. மாமனார் நேருவும் மாப்பிள்ளை ஃபெரோஸ் காந்தியும்.
  நேரு பிரதமராக இருந்த போது,  இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
  அப்போது ஒரு நாள் பாராளுமன்றத்தில் பிரதமர் நேருவை அவர் ஒரு கேள்வி கேட்டார்.
   கேள்வியைப் பற்றிய சற்றுப் பின்னணி தகவல்களை முதலில் தெரிவிப்பது அவசியம்.
   அந்த கால கட்டத்தில், சேத் ராமகிருஷ்ண டால்மியா என்ற ஒரு தொழிலதிபர்  ஏதோ தவறு செய்த காரணத்தால், கைது செய்யப்பட்டார். அவருக்குக் கோர்ட் ஜாமீன் வழங்கியது. அவருக்காக ஜாமீன் கையெழுத்து போட்டவர் யார் என்று தெரிந்து கொள்ள,விரும்பிய ஃபெரோஸ்       காந்தி  பாராளுமன்றத்தில் ஒரு கேள்விகேட்டார்:
  சேத் ராமகிருஷ்ண டால்மியாவிற்கும், அவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டவருக்கும் என்ன உறவு?என்று கேட்டார்.
 அந்த கேள்விக்கு   நேரு  அளித்த (சாதுரியமான) பதில்; “இந்த கேள்வி கேட்டவருக்கும், அதற்குப் பதில் சொல்பவருக்கும் உள்ள அதே உறவு தான்!                      இது எப்படி இருக்கு?