என் அருமை மனைவி
கமலா அன்றாடம் நியூஸ் பேப்பரைப் படிப்பாள்.
அவள் படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரை, என் மனம் ஹிட்ச்காக் படம் பார்ப்பது போல் திக் திக்கென்று சஸ்பென்ஸுடன் அடித்துக் கொள்ளும். மனைவி பேப்பர் படித்தால் அதில் என்ன சஸ்பென்ஸ் என்று நீங்கள் கேட்கிறீர்களா? உங்களுக்கு என் மனைவி கமலாவைத் தெரியாது.
அவள் படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரை, என் மனம் ஹிட்ச்காக் படம் பார்ப்பது போல் திக் திக்கென்று சஸ்பென்ஸுடன் அடித்துக் கொள்ளும். மனைவி பேப்பர் படித்தால் அதில் என்ன சஸ்பென்ஸ் என்று நீங்கள் கேட்கிறீர்களா? உங்களுக்கு என் மனைவி கமலாவைத் தெரியாது.
பேப்பர் என்றால் அரசியல்,
சினிமா, இலக்கியம், விளையாட்டு என்று பல பல
செய்திகள் வரும். இவைகளில் எதுவும்
என் மனைவியின் கண்களில் படாது. அவள் பார்வைக்கு
அகப்படுபவை விளம்பரங்கள்தான். தள்ளுபடி விற்பனை, ஐம்பது சதவிகிதம் விலை
குறைவு என்று வரும் விளம்பரங்களை,
ஏதோ பகவத் கீதை படிப்பது
போல் மிகவும் உன்னிப்பாகப் படிப்பாள்.
படித்துக் கொண்டு இருக்கும் போதே,
"உங்களைத்தான்...
பேப்பரைப் பார்த்தீர்களா?'' என்று கேட்பாள்.
நானும் ஏதோ ஒரு
பெரிய ’விபத்து' வரப் போகிறது என்று
பயந்து கொண்டே, "என்ன... பேப்பரா? பார்த்தேன்,
மொத்தமும் சரியாகப் பார்க்கவில்லை'' என்று சொல்வேன்.
"பில்லா அண்டு ரங்கா
ஷாப்பில் பனாரஸ் பட்டுப்புடவை எல்லாம்
தள்ளுபடி விலையில் விற்கிறார்கள்.''
"அப்படியா?''
"கொட்டை கொட்டையாக விளம்பரம்
வந்திருக்கிறதே? கண்ணைத் திறந்து கொண்டு
பேப்பரைப் படித்தால் தெரியும். இதோ பாருங்கள்.''
பொடி எழுத்தில் வரி
விளம்பரமாக அந்த "சேல்' விளம்பரம் வந்திருக்கும்.
"350
ரூபாய் புடவை 150-க்கு கொடுக்கிறான்... 200 ரூபாய்
லாபம்'' என்பாள்.
150 ரூபாய்க்கு வாங்கி 350 ரூபாய்க்கு விற்றால் 200 ரூபாய் லாபம் என்பது,
நான் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டது, கமலா
படித்தது புதுக் கணிதமோ?
"இப்படி ஐந்து புடவை
வாங்கினால் நமக்கு ஆயிரம் ரூபாய்
வரவு. அப்படித்தானே?'' என்று கேலியாகக் கேட்பேன்.
"இந்த மாதிரி இடக்கர
டக்கராகப் பேசறதே உங்க பரம்பரைக்
குணம்... பளிச்சென்று ஒரு நல்ல புடவை
எனக்குக் கிடையாது. தள்ளுபடி கிடைக்கும்போது வாங்கிக் கொண்டால் என்னவாம்? கொள்ளை மலிவாக இருக்கிறது''
என்பாள்.
புடவை விலை மலிவோ
இல்லையோ, கொள்ளை என்பது உண்மை.
கடையே பில்லா ரங்கா ஷாப் ஆயிற்றே!
ஆகவே என் மனைவி
பேப்பரைப் படிக்க ஆரம்பித்தால் ’சஸ்பென்ஸ்'
ஏற்படும் காரணம், பின்னால் வரப்
போகும் ’எக்ஸ்பென்ஸ்'
அல்லி அரசாணி மாலை,
பெரிய எழுத்து மதனகாமராஜர் கதை
ஆகியவைகளையே படித்து இருக்கும் எங்க
மாமியார், பல சமயம் என்
மனைவியின் சார்பாக ஒத்து பாடுவாள்.
"அடியே கமலா... சில
பேர் பேப்பரில் வரும் விளம்பரத்தைப் படித்தால்
கூட பணம் செலவாகிவிடும் என்று
நினைப்பார்கள். நாலையும் படிக்கணும். வெறுமனே ஆப்பிரிக்கா, அமெரிக்கா
என்று அந்த ஊர் சமாசாரங்களைப்
படித்துக் கொண்டிருந்தால் ஆயிற்றா? நம்மூர் ‘கத்திரிக்கா' சமாசாரமும் படிக்கணும்...'' என்பாள். உபதேசங்களைத் தருவதிலும் தத்துவ வசனங்களை உதிர்ப்பதிலும்
என் மாமியாருக்கு இணை என் மாமியாரேதான்!
* *
"பார்த்தீர்களா... சுற்றுலா வாரியம் எத்தனை உல்லாசப்
பயணங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.''
"பார்க்கவில்லையே...''
"அரைப் பக்க விளம்பரம்
வந்து இருக்கிறது.''
"இல்லை கமலா, நான்,
வரி விளம்பரங்களை எல்லாம் உனக்காக விடாமல்
படித்தேன்.''
"போதும் சமத்து வழியாதீங்க.
தமிழ்நாடு டூர், தென்னிந்திய டூர்,
மகாபலிபுரம் டூர் என்று எத்தனை!...
எங்கேயாவது ஒரு இடம் அழைத்துக்
கொண்டு போயிருக்கிறீர்களா? கேடு கெட்ட மகாபலிபுரம்...
ஒரு டூர் உண்டா? திரும்பத்
திரும்ப உங்க மானம் பார்த்த
மாமண்டூர் கிராமத்திற்குத்தான் டூர் போவீங்க... ஹும்'' என்றாள்.
அவள் "ஹும்' என்பதை
அரை டன் அலுப்புடனும், நூறு
லிட்டர் சலிப்புடனும் சொன்ன சமயம், விதி
"ஹொஹஹோ' என்று நிறைய "ஹ'
எழுத்துக்களைப் போட்டு சிரித்துக் கொண்டிருந்தது?
"கமலா... மை டியர், கவலைப்படாதே...
சண்டே போகிறோம் மகாபலிபுரம்... சண்டையை விடு. நம்ம
காரிலேயே போகலாம்... சந்தோஷமா... ஒரு புன்னகை வீசு...
ஒரு மோனாலிஸாப் புன்னகை'' என்று அசட்டுத்தனமான நடிப்புடன்
அவளைச் சமாதானப்படுத்தினேன்.
சாலிட் ஸ்டேட் டி.வி.யில் சுவிட்சைப்
போட்டதும் திரையில் வெளிச்சம் வருவது போல் அவள்
முகம் டாலடித்தது.
"நிச்சயமாகப் போகிறோமா? நான் ஏற்பாடுகள் செய்த
பிறகு கெக்கேபிக்கே என்று சொன்னால் அப்புறம்
எனக்குக் கெட்ட கோபம் வரும்''
என்றாள். கமலாவிற்குச் சில
சமயம் கெட்ட கோபம் வரும்;
மற்ற சமயங்களில் நல்ல கோபம் வரும்.
ஆக எப்போதும் ஏதாவது ஒரு கோபம்.
ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி தினம் மாதிரி
இருந்தது வீடு. விடிகாலையே என்
மாமியாரும், கமலாவும் எழுந்து மகாபலிபுர உல்லாசப்
பயணத்திற்கு இட்லி, புளியோதரை எல்லாம்
தயார் செய்ய ஆரம்பித்தார்கள்.
"உங்களைத்தானே... உங்க காரைச் சரிப்படுத்துங்கள்.
நான் ரெடி பண்ணி விடுகிறேன்.
ஆறாவது மணிக்குக் கிளம்பி விடணும்...'' என்று
சொல்லி என் சுகமான நித்திரையைக்
(க)குலைத்தாள் கமலா..
இந்தச் சமயம் என்
மாமியார், ""அடியே கமலா... புளிசாதத்திற்கு
அப்பளம் பொறித்துக் கொள்ளலாம் என்றால் வீட்டில் அப்பளமே
இல்லையே'' என்றாள். இந்த பிரச்னைக்கு முடிவு
காணுவது என் பொறுப்பு என்பது
என் மாமியாரின் ஐடியா. ஏன் என்றால்
அவள் ’அடியே கமலா' என்று
சொன்ன போது கமலா அந்த
இடத்தில் இல்லை!
"விடிகாலை நாலரை மணிக்கு எங்கு
போய் அப்பளம் வாங்கி வருவது?'' - ஒரு தர்மக் கேள்வியைக் கேட்டேன்.
"அடுத்த தெருவில்தான் அவர்
ஆபீஸ் ஃப்ரண்ட் கோபு இருக்கிறாரே... போய்
வாங்கிண்டு வரச் சொல்லேன்'' என்று
என் மாமியார் மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாயைப் பார்த்துச் சொன்னாள்.
(என் மாமியார் என்னை நேராகப் பார்த்து
பேச மாட்டாள். (மரியாதையா அல்லது என்னை ஒரு
மனிதனாக மதிக்காத காரணமா என்பது எனக்குப்
புரியாத பல மர்மங்களில் ஒன்று!)
இந்த சமயம் பார்த்து
வாசலில் ஒரு சைக்கிள் ரிக்
ஷா வந்து நின்றது. அதிலிருந்து
தொப் தொப் என்று ஏழெட்டு
உருவங்கள் குதிப்பது தெரிந்தது. அர்த்த ஜாமக் கொள்ளைக்காரர்களா?
இல்லை.. இல்லை... என்பது அடுத்த இரண்டே
நிமிஷத்தில் தெரிந்தது.
"என்ன அத்திம்பேரே இன்னுமா
ரெடியாகவில்லை? ஐந்தரைக்கே வந்துவிடு என்றாளே அக்கா?'' என்று
கேட்டுக் கொண்டே அட்டகாசமாக உள்ளே
வந்தான் என் மைத்துனன் தொச்சு!
அவனைத் தொடர்ந்து வந்த அவனது பரிவாரம் ரத,
கஜ, துரக, பதாதி ஆகிய
நாலு வித படைகளையும் நினைவுபடுத்தினார்கள்
தொச்சுவின் இரட்டை நாடி மாமியார்
(தேர்), குண்டு மனைவி (யானை),
குதிரைவால் கொண்ட பெண், அரை
டிக்கட் வால்கள்!
தொச்சு எப்படி இந்த
சமயத்தில் வந்தான்? என் மனைவிதான் அவனை
வரச் சொல்லியிருக்க வேண்டும்.
"வாடாப்பா... தொச்சு... வா... எங்கே வராமல்
இருந்து விடப் போகிறாயோ என்று
நினைத்துக் கொண்டிருந்தேன். ஏன்னா... தொச்சுவை நான் தான் வரச்
சொன்னேன். உல்லாசப் பயணம் என்றால் நம்ப
மனுஷர்கள் நாலு பேர் இருந்தால்
தான் ஜாலியாக இருக்கும்'' என்றாள்
என் மனைவி.
தொச்சு வந்தால் ஜாலியாக
இருக்குமோ, இல்லையோ என் மணிபர்ஸ்
காலியாகிவிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. (புல், புழுவிலிருந்து, மனித
இனம் தோன்றி இருக்கலாம். ஆனால்
தொச்சுவின் பரம்பரை, அட்டையிலிருந்து தோன்றி இருக்க வேண்டும்.
ரத்தத்தை உறிஞ்சுகிற வம்சம். சரியான டிராகுலா.)
"அக்கா... படுபாவி பால்காரனை நாலு
மணிக்கே வாடா என்றேன். வரவில்லை.
அப்புறம் இவள் சொன்னாள். அக்கா
வீட்டில் தான் ப்ஃரிஜ் இருக்கிறதே.
அங்கு பால் இருக்கும். அங்கேயே
போய் காபி சாப்பிட்டுக் கொள்ளலாம்
என்றாள்.''
"அப்பா எனக்கு காபி
வேண்டாம். பூஸ்ட்தான்.'' என்றது தொச்சுவின் வாரிசுகளில்
ஒன்று.
"பூஸ்ட் கேட்கிறதா? பூட்ஸ்தான்'
என்று மனத்திற்குள் முணுமுணுத்துக் கொண்டேன். எனக்குத் தெரியும். என் மாமியார் கள்ளிச்
சொட்டு மாதிரி தன் அருமை
பேரன், பேத்திகளுக்கு பூஸ்ட் கரைத்துக் கொடுப்பாள்
என்று. என் வயிற்றில் புளியைக்
கரைத்தது!
"அத்திம்பேரே, இதோ பாருங்க... என்ன
வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். வெறும்
வயிற்றுடன் காரில் போகும்போது புரட்டல்
எடுக்கும். அதற்காக ஜம்மென்று இஞ்ஜி
முரப்பா'' என்றான்.
அவனை "முறைப்பாக"ப் பார்த்துக் கொண்டே,
"தொச்சுவின் முன்யோசனை யாருக்கு
வரும்?'' என்றேன்.
அந்த இஞ்சி முரப்பா
எனக்குதான் தேவைப்படும். தொச்சுவின் பட்டாளம் வெறும் வயிறுடன் இருந்தார்கள்
என்று சரித்திரமே கிடையாது. என் வீட்டிற்கு வந்தால்
லாக்கர்களில் நகையை வைத்து பூட்டுவது
போல், தின்னக்கூடிய எல்லா பொருள்களையும் வயிற்றில்
போட்டுக் கொள்வார்கள்.
தொச்சுவுடன் யாரோ ஒரு புதிய
நபரும் வந்திருந்ததை சற்று நேரம் கழித்து
தான் கவனித்தேன்.
"தொச்சு... இவர்?''
"அடடே சொல்ல மறந்து
விட்டேனே. இவர் உப்பிலி... தெரியாதா
உங்களுக்கு?''
"எனக்கு உப்பிலியும் தெரியாது.
திப்பிலியும் தெரியாது' என்று கூற வந்ததை
அடக்கிக் கொண்டு "தெரியும்'' என்று அசடு வழிந்தேன்.
"இவர் எங்க வீட்டுக்காரர்.
மகாபலிபுரம் பார்க்கவில்லை என்றார். வண்டிதான் போகிறதே என்று அழைத்து
வந்தேன்'' என்றான்.
இந்த சமயம் என்
மனைவி அங்கு வந்து "உப்பிலி
மாமா! வாங்கோ வாங்கோ... அம்மா
சர்க்கரை போடாமல் ’திக்’காக ஒரு கப்
காபி கலக்கி கொடு, மாமாவிற்கு. உப்பிலி
மாமாதான் நம்ப தொச்சுவின் வீட்டு
சொந்தக்காரர்'' என்றாள்.
தொச்சு வீட்டு வாடகை
சரியாக கொடுப்பதில்லை என்று எனக்குத் தெரியும்.
இப்படி ஓசியில் ’தீனி' போட்டே அவர்
வாயை அடைத்து வைக்கிறான் போலும்!
எல்லாரும் காரில் ஏறி உட்கார்ந்தோம்.
அடைத்துக் கொண்டோம் என்று கூறினாலும் சரியே.
எல்லாரும் உட்கார்ந்த பிறகு நான் டிரைவிங்
ஆசனத்தில் உட்காரப் போனேன். அங்கு எனக்கு
நாலு அங்குலம்தான் இடம் இருந்தது. உப்பிலி
சரியான சுயகாரிய புலி. படு தாராளமாக
முன் சீட்டுகளை கவர்ந்திருந்தார்.
கடவுளை வேண்டிக் கொண்டே
வண்டியைக் கிளப்பினேன்.
"சார்... அகஸ்தியன்... டயரில்
காற்று எல்லாம் சரியாக இருக்கிறதா?''
என்றார் உப்பிலி.
தொச்சு, "என்ன அத்திம்பேரே, டயர்
எல்லாம் உங்கள் தலையை மிஞ்சுகிறதே,
வழுக்கையில்'' என்றான். பின் சீட்டில் கலகலவென்று
சிரிப்பு. தொச்சுவின் மனைவிதான் வந்திருக்க வேண்டும்.
அந்த சமயம் தொச்சுவின்
பிள்ளை, "ஏன் அப்பா, டயரை
ரீட்ரெட் பண்ணுகிற மாதிரித் தலையையும் பண்ணுவதற்கு யாரும் ஏன் வழி
கண்டுபிடிக்கவில்லை'' என்று கேட்டான்.
மறுபடியும் சிரிப்பு. எனக்கு எரிப்பு.
ஒரு மாதிரியாக முக்கி
முனகிக் கொண்டு கார் சென்றது.
கனம் தாங்காமல் ஸ்ப்ரிங்குகள் க்ரீச் க்ரீச் என்று
கத்தின. வாயில்லாத அவைகளால் கத்த முடிந்தது. வாய்
உள்ள நான் ’கம்’மென்று இருக்க வேண்டியிருந்தது.
பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டேன். பணம் கொடுக்கும்போது ஒரு
ரூபாய் சில்லறை வேண்டியிருந்தது.
"தொச்சு ஒரு ரூபாய்
இருந்தால் கொடேன்''
"அடேடே... அத்திம்பேரே பர்ஸ் எடுத்துக் கொண்டு
வர மறந்து விட்டேன். ஏண்டி,
மகாராணி மங்கம்மா. பர்ஸ் எடுத்து சட்டையில்
போடு என்றேனே போட்டாயா?... ஒரு
காரியத்திற்கு உபயோகமில்லை. இப்படியா ஒத்தை ரூபா கூடஇல்லாமல்
வெளியே கிளம்புவது'' என்று தொச்சு கத்த -
"பர்ஸ் எடுத்து நீலச்
சட்டையில் நான் போட்டேனே. அடாடா
நீங்க இந்த சர்வ அழுக்கு
பச்சை சட்டையையா போட்டுக் கொண்டு வந்திருக்கிறீர்கள். சட்டையைப்
போட்டுக் கொண்ட போது பர்ஸ்
இருக்கிறதா என்று பார்த்திருக்கணும்.''
"எனக்குச் சொல்லித் தருகிறாயாடி அசமஞ்சமே... உன்னைப் போய் என்
தலைமேல் கட்டினானே உன் அப்பன்...''
"உங்களுக்கு நான் வாழ்க்கைப்பட்டேன். அரசமரமும்
ஏறத் தயார். அப்பாவை ஏன்
கரிக்கிறீர்கள்? பாருங்கள் அம்மா, உங்க பிள்ளை
இப்படித்தான் சதா சர்வகாலமும் சர்சர்னு
விழறார்'' என்று கூறியபடியே சுருதி
சுத்தமாக முகாரி வைக்க ஆரம்பித்தாள்.
சாதாரணமாக அவள் பேசுவதே அழுகை
மாதிரி இருக்கும். இப்போதோ கேட்கவே வேண்டாம்!
இதெல்லாம் ஒத்திகை எதுவும் இல்லாமல்
நடிக்கப்படும் திடீர் நாடகம் என்று
எனக்குத் தெரியும்.
"பெட்ரோல் போட வேண்டும் என்று
தெரியுமே! சரியான சில்லறை எடுத்துக்
கொண்டு வர வேண்டாமோ... என்னமோ
கமலா, சின்னச் சின்ன விஷயங்களில்
கூட சிலருக்கு முன் யோசனை இருப்பதில்லை''
என்றாள் என் மாமியார்.
"உண்மைதான். எனக்கு முன் யோசனை
இருந்திருந்தால் உங்கள் பெண்ணைக் கலியாணம்
பண்ணிக் கொண்டிருந்திருக்க மாட்டேன்' . இப்படி மனதிற்குள்ளேயே எரிச்சலுடன்
உரக்கக் கூறிக் கொண்டேன்.
சென்னை- செங்கல்பட்டு மார்க்கத்தில் சுமார் 10 மைல்கள் சென்றிருப்போம்.
"ஏம்மா காஸ் சிலிண்டரை
மூடினாயா?'' என்று கேட்டாள் என்
அருமை மனைவி.
"நீதானே கடைசியில் புளியோதரைக்கு
முந்திரிப்பருப்பு வறுத்தாய்?'' என்றாள் என் மாமியார்.
"முந்திரிப் பருப்பு போட்டியா அக்கா,
சபாஷ், என்ன தான் நல்ல
புளியோதரையாக இருந்தாலும் முந்திரிப்பருப்பு இல்லாவிட்டால் ருசிப்பதில்லை'' என்றான் தொச்சு. இதைக்
காதில் வாங்கிக் கொள்ளாமல்
என் மனைவி, "ஆமாம் அம்மா முந்திரிப்
பருப்பை வறுத்துப் போட்டேனே... அந்த புளிசாத டப்பாவைக்
காரில் எடுத்து வைக்க மறந்து
விட்டேனே'' என்றாள்.
"ஆமாண்டி, பாருடியம்மா எங்கே அந்த சம்படம்...?
அங்கே முன் பக்கம் இருக்கிறதா,
பாருங்க.''
"இங்கே சம்படமும் இல்லை!
பப்படமும் இல்லை. சுவாமி படம்
தான் இருக்கிறது'' என்றேன்.
"இவருக்கு ஜோக் அடிக்க நேரம்
காலம் கிடையாது. காரின் டிக்கியில் இருக்கிறதா?
இருக்காது. காரில் கொண்டு வந்து
வைக்கவே இல்லை'' என்று தீர்மானமாக
என் மனைவி சொன்னாள்.
"அத்திம்பேரே! காரைத் திருப்புங்கள்'' என்றான்
தொச்சு.
"அட, புளியோதரை என்ன
கெட்டா போய்விடும். சாயங்காலம் வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.
காரை எதற்குத் திருப்ப வேண்டும்'' என்றேன்
நான்.
"உங்க பேச்சே வேடிக்கைதான்.
இரண்டு வேளைக்கும் சேர்த்துதான் பண்ணியிருக்கிறேன். விர்ரென்று போய் எடுத்துக் கொண்டு
வந்து விடலாம். ஓட்டலில் சாப்பிட்டால் பசங்களுக்கு உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது'' என்று
சகதர்மிணி சொன்னதும்,
"ஆமாம், ஆமாம். நம்ப
பர்ஸுக்கும் அஜீரணம் வந்து
விடும்'' என்று முணுமுணுத்தபடியே வண்டியைத் திருப்பினேன்!
ஒரு மாதிரியாகத் திருக்கழுக்குன்றம்
வந்தோம்.
புற்றிலிருந்து ஈசல் வருவது போல்
காரைவிட்டு எல்லோரும் இறங்கினோம், மலையடியில்.
""அக்கா.... இது என்னது அநியாயம்...
உங்க புடவை எல்லாம்'' என்று,
வழக்கமான அழுகைக் குரலில் ஆச்சரியத்தைக்
கலந்து கேட்டாள் தொச்சுவின் தாரம்.
"என்னடி இது ஒரே
எண்ணைக் கறை! அடப்பாவமே, அப்பளக்
கூடையை மடியிலே வைத்துக் கொண்டு
இருந்தாயே, எண்ணையெல்லாம் கசிந்திருக்கிறதடி கமலா''- என் மாமியார்.
"அதனால்தான் டிக்கியில் வைக்கிறேன் என்றேன். இவர் தான் வண்டி
குலுங்கலில் அப்பளம்
உடைந்து போய்விடும், என்றார். ஒரே அசிங்கமாக ஊறியிருக்கிறதே'' என் மனைவி
எந்த நிமிடமும் மூக்கை சிந்தத் தயாரானாள் கமலா. .
எந்த நிமிடமும் மூக்கை சிந்தத் தயாரானாள் கமலா. .
"அத்திம்பேரே, இப்போது அப்பளம் ஒண்ணும்
உடையவில்லை. கார் குலுங்கிய குலுங்கலில்
எங்க உடம்பு எலும்புகள் தான்
இங்கே அங்கே ஒதுங்கிப் போயிருக்கிறது.
ஹெஹ்ஹோஹோ'' -தொச்சு.
என் மனைவி "சேல்'
வியாபாரத்தில் 200 லாபம் பண்ணி வாங்கிய அசல்
பனாரஸ் பட்டுப்புடவை அது. அதைப் பார்த்த
போது எனக்கு எரிச்சல்தான் ஏற்பட்டது.
இந்தப் புடவையுடன் எப்படி
மலை மேல் போவது: முதலில்
கடைத் தெருவுக்குப் போய்ச் சீப்பாக ஒரு
புடவை வாங்கிக் கொண்டால்தான் ஆச்சு என்று என்
மனைவி கூறியதை "சபாஷ், அக்கா சரியான
ஐடியா'' என்றான் தொச்சு. அவன்
தான் பர்ஸ் கொண்டு வரவில்லையே.
அவனுக்கு என்ன கவலை!
திருக்கழுக்குன்றத்தில் உள்ள முப்பது துணிக்
கடைகளின் ஸ்டாக்கை எடுத்துப் பார்க்காத குறையாக எல்லாவற்றையும் அலசிப்
பார்த்து சீப்பாக 250 ரூபாயில் ஒரு புடவையைத் தனக்கும்,
(""ஒரு கம்பி கூட சரிகை
இல்லை, என்னமா விலை போடறான்'')
நாட்டுத் தறி புடவை நன்றாக
உழைக்கும் என்று அம்மாவிற்கும் (விலை
187ரூபாய்) எல்லாருக்கும் வாங்கிய பிறகு தொச்சுவின்
மனைவிக்கு வாங்காவிட்டால் எப்படி என்று அவளுக்கும்
("டெம்பிள் பார்டர் புடவையே என்னிடம்
இல்லை அக்கா) புடவைகள் வாங்கிக்
கொண்டு திரும்ப மலைக்குப் போகும்
போது, ஏராளமாகப் பலர் எங்களை வரவேற்றார்கள்.
அவர்கள் வேறு யாருமல்ல,
கழுகு தரிசனம் முடிந்து திரும்புகிறவர்கள்.
"அடியே கமலா... நாம்
கொடுத்து வைத்தது இவ்வளவு தான்''
என்று மாமியார் சுருக்கமாக அலுத்துக் கொண்டதை, பரிமேல் அழகரோ ஐயன்
பெருமாள் கோனாரோ கேட்டிருந்தால் எட்டு
பக்கம் விளக்க உரை எழுதியிருப்பார்கள்.
"எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்னுடையது' என்ற பொருள் அதில்
இருப்பதை விளக்கியிருப்பார்கள்.
நான் ஒன்றும் பேசாமல்
இருந்தேன். "என்ன சுவாமி, மௌன விரதம்? இப்போது
என்ன செய்யலாம்?'' என்று என் மனைவி
கேட்டாள்.
"அம்மா... எனக்கு பசிக்குது'' என்று
ஒரு அரை டிக்கட் ஹைஃபியாக
அலறியது.
"ஆமாம் அக்கா, இங்கேயே
சாப்பிட்டுவிட்டு மகாபலிபுரம் புறப்படலாம்.''
"நானும் அப்படித்தான் நினைக்கிறேன்''- இது உப்பிலி.
"அத்திம்பேரே, உங்க கார் என்ன
இரண்டாவது கியருக்கு மேல் போகாதா? ஆமை
மாதிரி போகிறதே''
"ரோடு சரியாக இல்லை.
ஸ்ப்ரிங்கெல்லாம் கொஞ்சம் வீக். மெதுவாகத்தான்
போக வேண்டும். இன்னும் மூணு மைல்தான்
இருக்கிறது. போய் விடலாம் பத்து
நிமிஷத்தில்'' என்றேன்.
பத்து என்று நான்
கூறிய போது ஒரு சின்ன
விபத்து ஏற்பட்டது காருக்கு. பின் டயர் ரிடயராகிவிட்டது.
புஸ்ஸென்று பெருமூச்சு விட்டு
டயர் அடங்கிவிட்டது.
"அத்திம்பேரே பங்ச்சர் போலிருக்கிறது.''
"போல என்ன, எல்லாரும்
இறங்குங்க... அளவு, சங்கியை இல்லாமல்
லாரியில் ஏற்றுகிற மாதிரி "லோட்' போட்டால்?.. டிக்கியைத்
திறந்து ஜாக்கியை எடுத்து ஸ்டெப்னியை மாட்டணும்.
தொச்சு ரோடு ஓரமாக வண்டியைத்
தள்ளணும். உப்பிலி சார் அங்கிருந்து
நாலு பெரிய கல்லாக எடுத்துக்
கொண்டு வாங்க... கமலா. என்ன காரிலேயே
உட்கார்ந்து இருந்தால்? இறங்கு... இறங்கு...''
"ஏன் கத்தறீங்க. டயர்
பங்சரானால் உலகமே முழுகிப் போய்
விட்டதா? சீக்கிரம், டயரை மாத்துங்க. இதற்குப்
போய் இவ்வளவு ஆகாத்தியம் பண்ணறீங்களே.
உங்களுக்கு அகஸ்தியன் என்ற பேரை வைக்காமல்
ஆகத்தியன் என்று வைத்திருக்கலாம்'' என்று
என் மனைவி சொன்னதைத் தொடர்ந்து,
என் மாமியார், "அடியே, கமலா, நீ
ஏன் ஏதாவது சொல்லி அவர்
கோபத்தைக் கிளப்புகிறே. சிலர் இப்படித்தான் யாரும்
அகப்படாவிட்டால் பெண்டாட்டி மேல் சீறிக் கொண்டிருப்பார்கள்''
என்றாள்.
டிக்கியில் எனக்கு ஒரு அதிர்ச்சி
காத்திருந்தது. அங்கு ஸ்டெப்னி டயர்
இல்லை. நான்கு தினங்களுக்கு முன்புதான்
ரீட்ரெட் செய்ய கொடுத்திருந்தது நினைவுக்கு
வந்தது.
அடுத்த அரை மணி
நேரம் மகாபலிபுரம் வீதியில் நடைபெற்ற உரையாடல்களையும் வசை பாடல்களையும் விவரித்து
என் மானத்தைக் கப்பலேற்றிக் கொள்ள நான் தயாராக
இல்லை.
பின்னால் நடந்தவைகளைச் சுருக்கமாகச் சொன்னால் போதும்.
காரை ஓரமாகத் தள்ளிவிட்டு
லாரி ஒன்றில் ஏறி சென்னை
வந்து சேர்ந்தோம். மறுநாள் டயருடன் ஒரு
மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு போய் டயரை
மாற்றி வண்டியைக் கிளப்ப முற்பட்டேன். கிளம்பவில்லை.
யாரோ கார் பாட்டரியை கழட்டி, லவட்டிக்கொண்டு போய் விட்டார்கள்/... ஒரு மாதிரியாக
காரை ஊருக்குக் கொண்டு வந்தேன்.
எல்லா கஷ்டங்களிலும் நன்மை
ஏற்படும் என்று யாரோ கூறியிருக்கிறார்கள்.
அது உண்மைதான்.
மகாபலிபுர உல்லாச பயண கஷ்ட
நஷ்டத்திலும் ஒரு லாபம் ஏற்பட்டது.
அதன் பிறகு என் அருமை
மனைவி உல்லாசப் பயணம் என்ற பேச்சை
எடுத்ததே இல்லை.
இது போல் பயணம் அமைந்தால் பேச்சு எப்படி வரும்...?
ReplyDeleteபேப்பர் படிப்பதில் அங்கேயும் சிக்கலா...?
எல்லா கஷ்டங்களிலும் நன்மை ஏற்படும் என்று யாரோ கூறியிருக்கிறார்கள். அது உண்மைதான்.
ReplyDeleteNo gain without pain!--R
Great reading! What a humour! (Ungal pain engalukku gain!) - R. J.
ReplyDeleteI always like Thotchu stories
ReplyDeleteமிக்க நன்றி.
ReplyDeleteஅன்புகூர்ந்து யாரும் anonymous-ஆகப் பின்னூட்டம் போடாதீர்கள்.உங்கள் ஈ-மெயில் போடாவிட்டால் பரவாயில்லை. சொந்தப் பெயரிலேயோ புனைப்பெயரிலேயோ போடுங்கள். --கடுகு
Great Narration.
ReplyDeleteகார் பாட்டரி திருடடு,புடவை வாங்கல் இவை இழப்பு .லாபம் தொச்சுவின் இஞ்சி முரப்பா?
ReplyDeleteI wish your next trip with ALL to Ooty.
ReplyDeleteSir, why don't you make a visit to Baroda? There are so many places to see here. But please do not forget to bring thouchu with you because thoutchu is like a kothshu for me.
ReplyDeletesir, why don't you make a visit to Baroda? There are so many places to see here. But please do not forget to bring kothsu sorry thoutsu with you. In fact, he is the hero of your posts.
ReplyDelete