1. சேட்டைக்காரன் எழுதிய மொட்டைத்தலையும் முழங்காலும்.
இது
சேட்டைக்காரனின் புத்தகத்திற்கு நான் எழுதும் முன்னுரை. பொதுவாக முன்னுரை என்பது
பாராட்டு உரையாகத்தான் இருக்கும். அதுவும் படிக்காமலேயே பல முன்னுரைகள்
எழுதப்படுவதும் உண்டு. நானும் சேட்டையின் கதைகளைப் படிக்காமல் இருந்திருக்க
வேண்டும். அப்போது அட்டகாசமான பாராட்டுரை எழுதி இருப்பேன். இன்டர்நெட்டில் எதையோ
வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சேட்டையின் வலையில் அகப்பட்டுக் கொண்டேன்.
அவரது
கதை/கட்டுரைகளைப் படித்தேன். படிக்கப் படிக்க சிரிப்புத் தாங்க முடியவில்லை.
வயிற்றெரிச்சலையும் தவிர்க்க முடியவில்லை. பொறாமைதான் காரணம். அவரது சரளமான
நடையும், வரிக்கு வரி வரும் நகைச்சுவை வெடிகளும் என்னை அசத்திவிட்டன. பல சமயம்
சட்டென்று வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
அதுவும்
அவர் அள்ளித் தெளித்திருக்கும் ஏராளமான உபமானங்கள் எல்லாம் சூப்பர்.
கீழ்ப்பாக்கத்தில் ஐம்பது வருஷம் சர்வீஸ் போட்ட ஆசாமி மாதிரி சிரித்தேன்.
சேட்டைக்காரனுக்கு
சிலேடையும் அனாயாசமாக வருகிறது. தன்னைத்தானே எள்ளி நகையாடுவதும் பிரமாதமாக
இருக்கிறது.
அவர்
கட்டுரைகளைப் படித்தபோது எனக்குத் தோன்றியது: இந்த ஆசாமி வலைப்பூவில் எழுதக்
கூடாது; பொதுஜனப் பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்பது என் கருத்து, அவா,
விருப்பம், யோசனை, அறிவுரை, வேண்டுகோள், கட்டளை.
அவர்
கட்டுரைகளிலிருந்து ஒருசில வரிகளை இங்கு தரலாம் என்று பார்த்தபோது அது முடியாத
காரியம் என்று உணர்ந்தேன். எல்லா வரிகளும் நகைச்சுவை மணிகள். படித்தேன்
என்பதற்குச் சாட்சியாக இருக்கட்டும் என்று ஒன்றிரண்டு கொடுக்கிறேன்.
* வெரிகுட்!
இவ்வளவு கோட்டை விட்டும் எங்க ஒட்டகப் பண்ணையிலே முதலீடு பண்ணனும்னு உங்களுக்கு
எப்படித் தோணிச்சு?”
“பணத்தை
விட்ட இடத்துலேதானே சார் பிடிக்கணும்? சரவணபவனிலே சாப்பிட்டுட்டு வசந்தபவனிலே போயா
வாய் கொப்பளிக்க முடியும்?"
* “நாளைக்கு
வரச்சொல்லும்மா! டயர்டா இருக்கு, நான் கொஞ்ச நேரம் பல்லு விளக்கப்போறேன்!”
*”அதாவது, ரெண்டு
பேருக்கும் ஆளுக்கு ஒவ்வொரு சம்சாரம்னு சொல்ல வந்தேன். என் சம்சாரம் பேரு கோதை,
உங்க சம்சாரம் பேரு ராதை!”
* பீர்க்கங்கரணைத்
தண்ணித்தொட்டிக்கு பீட்டர் இங்கிலாண்டு சட்டை போட்டுவிட்டது போல, ஆல்ப்ஸ்
மலையிலிருந்து உருண்டுவந்த ஐஸ்பாறை போன்று உருண்டையாக ஒருவர் என்னை நெருங்கினார்.
* ”என்
வாழ்க்கையிலேயே இப்பத்தான் முதமுதலா டம்ளர்லே உப்புமா சாப்பிட்டிருக்கேன்,” என்று மனைவியை
மனமுவந்து பாராட்டியவன்.
*அதை
ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்ச நேயர் எப்படி சாப்பிடறது?
* எனது
நாக்கு அடைமழை பெய்த ஆதம்பாக்கம் சாலைபோல ஊறத்தொடங்கியது.
முன்னுரையை
எழுத ஆரம்பிக்கும்போது சேட்டையை அதிகம் புகழக் கூடாது என்று தீர்மானத்துடன்தான்
துவங்கினேன். அவரது நகைச்சுவை என் தீர்மானத்தைத் தவிடுபொடியாக்கி விட்டது.
சேட்டைக்காரனை
நான் சந்தித்தது இல்லை; அவருடன் பேசியதும் இல்லை! சேட்டையின் எளிமையான, சரளமான,
யாரையும் புண்படுத்தாத, எப்போது படித்தாலும் சிரிப்பு வரவழைக்கக் கூடிய கதை,
கட்டுரைகளை நான் எழுதிய கட்டுரைகளைவிட அதிகம் ரசித்துப் படித்தேன்; ரசிகனானேன்
மேலும்
பல உயரங்களைத் தொட்டு, கொடிகட்டிப் பறப்பார் சேட்டை என்பதில் எனக்குக் கடுகளவும்
சந்தேகமில்லை.
--கடுகு
========================
2.. சுஜாதா தேசிகன்
எழுதிய "என் பேர் ஆண்டாள்”
முகவுரை எழுதுவதைப்போல் கஷ்டமான காரியம் எதுவுமில்லை.( அதைப் படிப்பது அதை விடக் கஷ்டமான காரியம் என்பது வேறு விஷயம்!)
புத்தகம் எழுதுபவர்களுக்கு, புத்தகம் எழுதி முடித்த பிறகு பொதுவாக ஏற்படும் இரண்டு பிரச்சினைகள்: முதலாவது: புத்தகத்திற்கு என்ன பெயர் வைப்பது?
அடுத்தது: யாரிடம் முகவுரை எழுதி வாங்கிப் போடுவது? முதல் பிரச்சினையை அவரே முட்டி மோதி (மனைவியுடன்?) ஒரு மாதிரி ‘பிரமாதமான’த் தலைப்பைத்
தேர்ந்தெடுத்துவிடுவார்.