September 29, 2012

உன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-1

உன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-1

முன்குறிப்பு: அடுத்த  மூன்று அல்லது நான்கு பதிவுகள் ஒரு தொடர்ப் பதிவாகப் போட எண்ணியுள்ளேன்.. ஆங்கில நகைச்சுவை கட்டுரை ஒன்று மொழிபெயர்க்கப்பட்டு 3,4 பகுதிகளாக வரும்.
யார் அந்த நகைச்சுவை எழுத்தாளர் என்பதைப் பின்குறிப்பில் தெரிவிக்கிறேன். எழுதியவர் யார் என்று யூகித்து முதலில் எழுதுபவர் ஒருவருக்கு என்னுடைய “கமலாவும் நானும்” புத்தகம் பரிசாக ( அல்லது (தண்டனையாகத்!) தரப்படும்   
ஒரே நிபந்தனை:  அவர்களுடைய  முகவரி இந்தியாவிற்குள் இருக்க வேண்டும்
..--------------------

என்னுடைய பரம்பரை காரணமாகவோ என்னவோ,. எந்த வித உடற்பயிற்சியோ, டயட்டோ இல்லாமல் என் உடல் ஒரே அளவில் இருந்து வருகிறது. எத்தனையோ வருஷங்களாக சூட் வாங்க ரெடிமேட் கடைக்குப் போனால் 39 சைஸ் எடுத்து  மாட்டிக்கொண்டு, ஜம்மென்று  ராஜ நடைப் போட்டுக்கொண்டு    வந்து விடுவேன். (முதலில் அதற்குப் பில் போட்டு பணத்தைக் கொடுக்க வேண்டும் என்பது முக்கியம்!)

எனக்குப் பேன்டின் கால்பக்கம் மடிப்பு இருக்கவேண்டு. சில சமயம் அவசரமாக வாங்கும்போது இதையெல்லாம் பார்க்க முடியாது.   மடிப்பு இல்லாவிட்டாலும் வாங்கி விடுவேன்,  நானே மடித்துக் கொண்டு நடையைக் கட்டுவேன்.

இரண்டு பேருடைய கைரேகை எப்படி ஒரே மாதிரி இருக்காதோ, அது மாதிரிதான்  நமது உடல் அமைப்பும், ஆகவே சற்று ஏறக்குறைய இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி விடுவேன்,

 என் வலது தோள் , என்  இடது தோளை விட உயரம் குறைந்து இருக்கும். இதற்கு ‘ஸ்வே பேக் என்று பெயராம். டாக்டர்கள் சொன்னார்கள். இதைவிட சற்று தபுடலான, செல்வச்செழிப்பை பிரதிபலிக்கக்கூடிய பதமாக இருந்திருந்தாதால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன். உடலமைப்பில் இந்த சிறிய குறை இருந்தாலும் நான் என்றும் ஒல்லியான 39 தான்!

 இப்படி இருக்க எதற்கு ஹாங்காங் தையற்காரரிடம் ஒரு சூட் தைக்கச் சொன்னேன்?  முக்கிய காரணம் எதுவும் இல்லை.. அன் சொந்த வேலையாக ஹாங்காங் .போனேன். அதனால் அங்கு சூட் தைக்கக் கொடுக்க வேண்டியதாயிற்று.
 நான் ஹாங்காங் போகிறேன் என்று சொன்னதும் என் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஹாங்காங்கிலுள்ள தங்கள் ஒஸ்தி தையற்காரரிடம் கட்டாயமாக நான் ஒரு சூட் தைத்துக்கொள்ளவேண்டும் என்று நிர்ப்பந்திக்காதக் குறையாகச் சொன்னார்கள்.
   ஹாங்காங் பக்கமே போயிராத நண்பர்களுக்கு, ஹாங்காங் போய் வந்த நண்பர்கள் இருந்தது மட்டுமல்ல , அவர்கள்  சூட் தைத்துக்கொண்ட தையற்காரரின் விவரங்களையெல்லாம் இவரிடம் சொல்லியிருந்தார்கள்!

ஹாங்காங்  போய் வந்த  ஒருத்தர் ஒரு தையற்காரரின் விசிடிங்கார்ட்டையும் வைத்திருந்தார்.
     ”இதபாரு. நீ கட்டாயம் போக வேண்டிய இடம்   சிங்  லூ    டெய்லரிடம் தான். அவரிடம் தான் பிரமாதமான  இங்கிலீஷ் உல்லன் ரகங்கள் இருக்கிறது.  இதோ, என் சூட்டைத் தொட்டுப் பார்” என்று சொல்லிக்கொண்டே கையை என் பக்கம் நீட்டினார்.
“இந்த சூட் மூன்று வருஷத்துக்கு முன்பு தைத்தது. சொன்னால் நம்பமாட்டாய், எப்படி இருக்கிறது பார்த்தாயா ஸ்டீல் கணக்கா” என்றார்.
   அவர் சொன்னதுக்காக சூட்டை தடவிப் பார்த்தேன். என் கட்டை விரலின் தோலை சுரண்டி எடுத்துவிட்டதைப் பார்த்தபோது அது ஸ்டீல் மாதிரி உழைப்பதின் காரணம் எனக்குத் தெரிந்தது . அது ஸ்டீல் உல்லால் நெய்யப்பட்ட சூட் டாக இருந்திருக்கும்.
  ” வருஷக்கணக்கில் இது உழைக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை” என்றேன்,
“இதை ..இதை.. இதைத்தான் நா ன் எதிர்பார்த்தேன்” என்று அவன் முக பாவம் சொன்னது. சூட்டின் கலர். டிசைன் பற்றி மேலும் பாராட்டாக நான் சொல்லவில்லை. காரணம் தோல் வழண்டுபோன என் கட்டை விரல் எரிச்சலுடன் துடித்துக் கொண்டிருந்தது .
”இதற்கு நீ எவ்வளவு கொடுத்தேன் என்று நினைக்கிறாய்” என்று கேட்டார். ஹாங்காங்கில் துணி விலையெல்லாம் மிகவும் குறைவு என்று கேள்விப்பட்டிருந்ததால், “ என்ன 20 டாலர் இருக்குமா?” என்று கேட்க நினைத்தேன்.
 அவர் சந்தோஷத்தைக் கெடுப்பானேன் என்று எண்ணி   "என்ன 50 டாலர் இருக்குமா?" என்று கேட்டேன்.
"முப்பதே டாலர்" என்றார் அவர்,. ஒரு வெற்றிப் புன்னகையுடன்.!
நல்லகாலம்,  இருபது டாலர் என்று முதலில் தோன்றியதைச் சொல்லவில்லை

 இன்னொரு நண்பர் இன்னொரு தையற்காரரை சிபாரிசு செய்தார். கிட்டத்தட்ட மிலிடரி உத்திரவு போல் அவர் சொன்னார். ”நீ யார் பேச்சையும் கேட்காதே. நேரே சார்லி-லாம் கிட்டே போ. ஹாங்காங்கிலேயே அவனை அடிக்க ஆள் கிடையாது. சூப்பர் டெய்லர். அவர் தைச்ச சூட் தான் இது. லைனிங் மட்டும் பாரு. இங்க இரண்டு பட்டன் கூடுதலாகக் கொடுத்திருப்பதைப் பார் . பாக்கெட்டுக்கு உள்பக்கம் என் பேரை எம்பிராய்டரி பண்ணி எழுதியிருக்கிறார் பார் ”என்றார்.
  ” பிரமாதம்”. என்று சொன்னேனே தவிர, அவரது தோளை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை. காரணம் , அந்த இடத்தில் தையல் விட்டுப் போய் ஒரு அங்குலத்திற்கு  தோளை விட்டு கோட்டின் கை இறங்கி இருந்தது.
   ”சரி ....  எவ்வளவு கொடுத்திருப்பேன் என்று குத்துமதிப்பாகச் சொல்ல முடியுமா”  என்று கேட்டார். இந்தக் கேள்வி  அடுத்து வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்,
  ” ஐம்பது டாலர்  ” என்று சொன்னேன்.  என் முந்தைய நண்பர் மாதிரி சந்தோஷப் படுவார் என்று எண்ணிக்கொண்டு .
    அதைக்கேட்டதும் அவர் முகம் தொங்கிப் போய் விட்டது , அவரது சூட்டின் வலது கை போல!
  ”எப்படிப்பா  கரெக்டா சொன்னே?.....யாராவது உனக்குச் சொல்லியிருப்பாங்க.
‘ என்றார்.   
 என்ன தோன்றியதோ அவர் சட்டென்று விடை பெற்றார். அந்த சூட்டிலிருந்த டபுள்- ஜிப்பைப் பற்றியோ,  பைசா வைத்துக் கொள்வதற்காக வைக்கப்பட்ட ரகசிய பாக்கெட்டைப் பற்றியோ, அதற்காகக் கூடுதல் சார்ஜ் இல்லாமல் டெய்லர் தைத்துக் கொடுத்ததையோ சொல்லாமல் போய்விட்டார்!.
     ஆகவே நான் ஹாங்காங்கிற்குள் காலடி வைத்தபோது என்னிடம் 14  ’அடிச்சுக்க முடியாத’-தையற்காரர்களின் பெயர், முகவரி எல்லாம் இருந்தன. அகர வரிசைப்படி ஏஸ் டெய்லரிங்கிலிருந்து, டாம்-உ வரை  இருந்தன. அது மட்டுமல்ல, ‘அட்டகாசமான்டெய்லர்”,’ அந்த ஷாப்பில் ஹாரி என்பவரைக் கேளுங்கள்,” ”இலவசமாக பீர் கொடுப்பார்கள்: என்று கூடுதல் குறிப்புகளும் இருந்தன!

 ஹாங்காங் தையற்காரர்கள் அசுர வேகத்தில் தைத்துக் கொடுப்பார்கள் என்று கேள்:விப்பட்டிருக்கிறேன். நான் ஆறு நாள் ஹாங்காஙகில் இருக்கப் போகிறேன் என்பதால் ஆறஅமர தைத்துக்கொடுக்க அவகாசம் கொடுக்கத் தீர்மானித்தேன். அவகாசம் கொடுத்தால் அவசர அடி வேலையாக இருக்காது என்று நான் நினைத்தேன்.
  ஓட்டல் ரூமில் பெட்டிப் படுக்கையைப் போட்டதும், நேரே ஹான்கௌ ரோட்டிற்குப் புறப்பட்டேன். என் லிஸ்டிலிருந்த பெரும் பாலான டெய்லர்கள் அங்குதான் இருந்தார்கள். முதலில் டெய்லர்ரை பார்க்கிற வேலை. அதற்கப்புறம் ஊரைச் சுற்றிப் பார்த்துக்கொண்டால் போயிற்று. என் ஐடியா இதுதான். லிஸ்டிலிருந்த டெய்லர்களில் ஒரு சிலரையாவது பார்த்து அவர்கள் வைத்திருந்த சூட் துணிரகங்களைப் பார்த்து விலையைக் குறித்துக் கொள்ளவேண்டும்  முடிவாக எந்த தையற்காரரின்  மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் விழுகிறதோ அவரிடம் சூட் தைத்துக் கொள்ளலாம் என்பது என் திட்டம். எனக்குத் தேவை ஒரு சூட் தான்.  அதற்குமேல் தேவையில்லை. மேலும் என் பெட்டியில் இதற்குமேல் கனம் ஏற்றினால் கூடுதல்எடைக்கு விமானக் கம்பெனிக்குப் பணம் கட்டவேண்டியிருக்கும்.

  ஹாங்கௌ தெருவில் தையல்காரர்களின் பெயரையும் முகவரியையும் தேடிக் கொண்டு போனேன். அப்போது ஒரு கடையிலிருந்து ஒரு இளஞன் வெளியே வந்தான்.
 
  "சார், உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?" என்று சூப்பரான ஆங்கில உச்சரிப்புடன் கேட்டான். அவனிடம் என் அமெரிக்க உச்சரிப்பைக் காட்ட வெட்கமாக இருந்தது.
 ” இங்கு ஹோ- சாங்  டெய்லரிங் கடைக்குப் போகவேண்டுமே. அதன் முக வரியைக் கண்டு பிடிக்க முடியவில்லை” என்றேன்.
“விலாசம் கண்டுபிடிப்பது இங்கு கொஞ்சம் கஷ்டமான காரியம் சார், வாங்க உங்களுக்கு அந்த கடையைக் காட்டுகிறேன்” என்றான்,
அவன் பின்னால் சென்றேன். ஒரு சின்ன சந்துக்குள் அழைத்துச் சென்றான். காலேஜ் மாணவனாக இருக்கலாம். அல்லது அரசு ஊழியனாக இருக்கலாம் என்று தோன்றியது.
”இதோ சார், உங்க கடை. ஹோ-சாங் கில்லாடி டெய்லர் சார்”. கதவைத் தள்ளித் திறந்தான். ”வாங்க, சார்” என்று பவ்யமாகச் சொன்னான். நான் உள்ளே நுழைந்தேன். அவனும் என் பின்னாலேயே வந்தான். இங்கிலீஷ் பேசத் தெரிந்த தையற்காரரிடம் என்னை பத்திரமாக ஒப்படைத்துவிட்டுப் போக விரும்பினான் போலும்.
எங்கு திரும்பினாலும், ட்வீட், ஸில்க், கம்பளி என்று துணிக் கட்டுகள்! எத்தனை எத்தனை டிசைன்கள். சன்னமான துணியிலிருந்து கனமான துணி வரை கொட்டிக் கிடந்தது. எனக்கு பிரமிப்பு அடங்கவில்லை. கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு தையல்காரரைப் பார்க்க கௌன்டர் பக்கம் போனேன். அப்போது தான் பார்த்தேன்,  என்னை அழைத்துவந்த அந்த சீன இளஞன் கௌன்டருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்ததை!.
 என்னைப் பார்த்ததும், ”சார், என் விசிட்டிங் கார்ட்” என்று சொல்லி ஒரு விசிட்டிங் கார்ட்டைக் கொடுத்தான்.’ ஹென்றி லம், மானேஜர், ஹோ-சாங் டெய்லரிங் கம்பெனி லிமிடெட்’ என்று அதில் அழகாக அச்சிடப் பட்டிருந்தது.
”அட ... நீ இங்க வேலை செய்றவன் என்று எனக்குத் தெரியாதே” என்றேன்.
 ”சார், நான் இங்கு சாதாரண வேலை ஆள் இல்லை. நான் தான் இங்கே மானேஜர்... நாலைந்து சூட் தைத்துக்கொள்ளத்தான் இங்கே வந்திருக்கீங்க என்று நினைக்கிறேன்.”
”இல்லைப்பா, ஒரே ஒரு சூட்தான். இன்றைக்குத்தான் நான் ஹாங்காங் வந்தேன். இது தான் நான் பார்க்கிற முதல் ஷாப். துணிகளை கொஞ்சம் பார்த்து விட்டு முடிவு எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.”

“ அப்படியா சார், வெரிகுட். என்னை ஹென்றி என்றே கூப்பிடுங்கள். துணிகளைப் பார்ப்பதற்கு முன்னால என்ன ட்ரிங்க் சாப்பிட விரும்பறீங்க. ஸ்காட்ச், ஜின், போர்பான், பீர், வோட்கா உங்களுக்கு எது பிடிக்குமோ அதைத் தருகிறேன். நீங்க எங்க கெஸ்ட்.  அந்த சமயம் ஒரு அழகான சைனீஸ் பெண் வந்தாள், பிரபல டிசைனர் சுசீ வாங் வடிவமைத்த  டிரஸ்ஸில் இருந்தாள்.கவர்ச்சியான  குட்டைப் பாவாடை அணிந்து இருந்தாள்!

  ஒரு புன்னகையுடன், வரவேற்கும் பாவனையில் லேசாகக் குனிந்து  வணங்கினாள். பிறகு  என் அருகில் வந்து, தளிர் போன்ற விரல்களால் என் கோட்டு பட்டனைக் கழட்டி, கோட்டை எடுக்க ஆரம்பித்தாள்.     
(தொடரும்)

11 comments:

  1. ஆஹா... விறுவிறுப்பாக ஆரம்பித்து இருக்கிறது தொடர்....

    யார் எழுதினார் என்பது தெரியவில்லை.... :(

    ReplyDelete
  2. பலே கில்லாடிதான் அந்த மேனேஜர்!

    ReplyDelete
  3. இயல்பான நகைச்சுவை ததும்பும் எழுத்து. சுவாரஸ்யம். எழுதியது பி.ஜி.உட்ஹவுஸ் அவர்களா...?

    ReplyDelete
  4. வணக்கம் கடுகு சார். தொடர்ந்து உங்கள் எழுத்துக்களைப் படித்து வந்தாலும் (print&blog) இப்பொழுதுதான் தொடர்பு கொள்கிறேன். சிறப்பான உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகள் மற்றும் கதைகள் காலத்தால் அழியாதவை. தொடர்ந்து எழுத ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தர வேண்டிக்கொள்கிறேன்.மேலேயுள்ள சுவையான கட்டுரை ஆர்ட் புச்வல்ட் உடையது என்று எண்ணுகிறேன்.சரிதானே.நன்றி.

    ReplyDelete
  5. எர்னஸ்ட் ஹெமிங்க்வே ஆக இருக்குமோ ?



    பி.கு.: எனக்கு தெரிந்த ஆங்கில எழுத்தாளர் அவர் ஒருவர் தான் !

    ReplyDelete
  6. Thank you very much for your compliments.
    Keep reading. But why ananymous?=kadugu

    ReplyDelete
  7. To all my reasders:
    I have a problem in my blog. I am notable to write/reply to comments from my computer. Anyone reding this may offer me some tips.

    I am writing this from another pesron's system!

    Kadugu

    ReplyDelete
  8. You are really a 'notable' Notary! - R. J.

    ReplyDelete
  9. Thanks to a help. The problem about teh comments has been solved!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!