October 05, 2012

உன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-2

"சார், உங்கள் கோட்டை அவள் எடுக்கட்டும்   ஹென்றி என் தயக்கத்தைப் பார்த்து, நட்பாகச் சொன்னான்.  “உங்கள் அளவுகளை எடுக்கப் போகிறேன். உங்களுக்குத் துணி எதாவது பிடித்திருந்தால் அளவு தேவைப்படுமே.”

  அந்த சைனீஸ் பெண் என்னை கிறு கிறுக்கச் செய்து விட்டாள்.

  ”சார், லி- மே யிடம் உங்களுக்கு என்ன மாதிரி டிரிங்க் வேண்டும் என்று சொல்லுங்கள்.? - ஹென்றி சொன்னான். ”அவள் டிரிங்க் கொண்டு வருவாள். அது வரை சூட் துணிகளை நாம் பார்க்கலாம்”.  என்றான்.

  ++                         
லி-மே என் ஒயின் டிரிங்கில் ஏதோ தப்பு சமாசாரத்தைப் போட்டாள் என்று சொல்லமாட்டேன். ஒயின் என்பதே தப்பு சமாசாரம் என்பது வேறு விஷயம். அந்த கவுன்டருக்கு அருகில் உட்கார்ந்து என்னை அறியாமல் தூங்கிக் கொண்டே வெவ்வேறு துணிரகங்களைப் பார்த்தேனா, அல்லது உண்மையிலேயே அவைகளை நனவில் பார்த்தேனா என்பது நிச்சயமாக எனக்குத் தெரியாது.

 ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரியும் என் லிஸ்டில் இருந்த மற்ற 13 தையற்கடைகளுக்கு நான் போகவில்லை என்பது. ஹோ-சாங் கடையின் ஹென்றியையும் லி-மே யையும் சந்தித்தப் பிறகு நான் ஓட்டலுக்குத் திரும்பியதும் கோட் பாக்கெட்டில் கைவிட்டேன், ஒரு ரசீது தட்டுப்பட்டது. அதை எடுத்துப் பார்த்தால் ஹோ-சாங் டெய்லரிங் கம்பெனியில் இரண்டு குளிர்கால சூட்டுகள் ஒரு சில்க் சூட் ஒரு கோடைகால சூட் இரண்டு ஸ்போட்ஸ் ஜாக்கெட் மூன்று ஸ்லாக் செட்டுகள் தைக்க ஆர்டர் கொடுத்திருந்தேன். அது மட்டுமல்ல ஒரு டஜன் ஷர்ட்டுகள் கூட.

 என் கையில் ஒரு அழகான டையும் இருந்தது. அதன் விலை பில்லில் சேர்க்கப்படவில்லை. ஹென்றி என் மேல் இரக்கப்பட்டோ அல்லது நன்றியுடனோ எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். இத்துடன் ஒரு ஸில்க் கை குட்டையும் இருந்தது. அதில் லி-மே என்று அழகாக எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது. அந்த ஸில்க் சூட் துணிகளின் குன்றின்மேல்மிதந்து கொண்டிருந்த மெல்லிய வாசனையும் இருந்தது.

என் நாக்கு சரியான தடி நாக்கு. அதனால் இப்போது என் ட்ராவலர்ஸ் செக் கட்டு இளைத்திருந்தது. ஆனால் ஒன்று இன்னும் இருபது வருஷத்திற்கு நான் சூட் வாங்கவேண்டியதே இல்லை -- ஃபேஷன் மாறாத இருக்கும் பட்சத்தில்.

  ஹாங்காங்கில் பார்க்க வேண்டிய எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க ஆறு நாட்கள் அதிகப்படி. ஆனால் நான் ரிபல்ஸ் பே, டைகர் பாம் தோட்டம், ஹாங்காங் துறைமுகம் ஆகியவற்றை என் ஓட்டல் ஜன்னல் வழியாக, அதுவும் இரவு நேரத்தில்தான் பார்க்கமுடிந்தது.

  நான் தினமும் பெரும்பாலான நேரமும் -- இல்லை முழு நேரமும் ஹோ-சாங் டெய்லரிங் கம்பெனிக்குப் போய்க் கொண்டிருந்தேன், சூட் அளவுகளை சரி பார்க்கவும், இந்த சாக்கில் லி-மே யை சந்திக்கவும் எண்ணி. முன்னதற்கு குறைவான நேரமும், பின்னதற்கு அதிக நேரமும் செலவானது.

அளவுகளை சரிபார்ப்பதற்கு ஹென்றி அவசரம் காட்டவில்லை. காரணம் அமெரிக்காவில் செயின்ட் லூயீஸிலிருந்து வந்த ஒரு கொழுத்த செலவாளிக்கு விழுந்து விழுந்து சேவை செய்வதில் முனைப்பாக இருந்தான். ஆகவே ஒரு உதவியாளனிடம் என்னை கவனிக்கச் சொல்லிவிட்டான். உதவியாளனிடம் ஒரே கஞ்சா மணம்.  அதாவது அது கஞ்சா மணமாகத் தான் இருக்கவேண்டும். நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஏனென்றால் கஞ்சா வாசனை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

 லி-மே இதோ வந்து விடுவாள் என்று ஹென்றி சொல்லிக் கொண்டேயிருந்தான். ஆனால் அதற்குப் பிறகு லி-மே யை நான் பார்க்கவில்லை. அவளது கைக்குட்டையை திருப்பித் தரவேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருந்தேன். லி-மே யின் உறவினர் காலமாகிவிட்டதாக ஒருநாள் சொன்னான். அடுத்த நாள்,” அவளுக்குக் கடுமையான ஜலதோஷம். அதனால் அவள் வீட்டிலேயே இருக்கிறாள்” என்றான். இன்னொரு நாள் கம்பெனி வேலையாக வெளியூர் சென்றிருப்பதாகச் சொன்னான்.  நான் ஒரு சந்தேகப் பிறவியாக இருந்திருந்தால்  என்னை சந்திப்பதை அவள் தவிர்க்கிறாள் என்று நினைத்திருப்பேன்.

ஒரு நாள் கடை மூடும் நேரம் பின் அறையிலிருந்து அவள் மாதிரி ஒரு பெண் வருவதைப் பார்த்தேன். அவளுடைய மெல்லிய இடையை அந்த சென்ட்லூயி பணக்காரரின் கை அணைத்துக்கொண்டிருந்தது. ஆனால் அது லி-மே இல்லை. அவள் மாதிரி வேறு ஒரு பெண்.            (தொடரும்)

5 comments:

  1. இரண்டாவது பகுதியில் அதிக விறுவிறுப்பு... அடுத்த பகுதிக்கான ஆவல் அதிகரித்து விட்டது.

    ReplyDelete
  2. சஸ்பென்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  3. Sir,

    Just a remainder, few years before you had promised to write about Mr. Cho Ramasamy, it will be good if you share your association with him.

    Sankar

    ReplyDelete
  4. Sir,

    Just a remainder, few years before you had promised to write about your association with Mr. Cho Ramasamy. It will be good if you write about him

    ReplyDelete
  5. Ton Mr Sjnakar Narayanan,
    I had written a post titled 'Cho's father and I'.
    Also I have posted an (old) interview with Mr Cho,

    -Kadugu

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!