ஒரு ரிஜிஸ்டர்ட் தபால் கணக்கில் குறைந்த கவலையில் இரவு தூங்காமல் கழிந்தது. அதே சமயம் ஏதேதோ பயங்கர ’கனவுகள்’(?) வந்ததால் மனதில் அமைதியில்லை.
மறு நாள் ரயிலைப் பிடித்து, பீச் ஸ்டேஷனை அடைந்து, ஜி.பி.ஓ விற்குள் எப்படி நுழைந்தேன் என்பதெல்லாம் தெரியாது. “எங்களுக்கு வந்த பையில் கூடுதலாக ஒரு ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கிறது என்ற தகவல் அறிய கவலையுடனும் ஆர்வத்துடனும் செக் ஷனுக்குள் சென்றேன்.”
ஹெட்கிளார்க் இருந்தார் என்னைப் பார்த்ததும் “இன்னும் ஒரு மெஸேஜும் வரவில்லையேப்பா. கவலைப்படாதே வந்து விடும். ஒரு தபால் அதிகமாக இருந்தால் அவர்களுக்கும் தலைவலி.... முதலில் ஒரு தபால் குறைந்த விவரங்களை, எரர் புக்கிலே ( ERROR BOOK) ஒரு குறிப்பு எழுதி பி..பி..எம்.முக்கு அனுப்பு. (பி பி எம் = பிரெஸிடென்ஸி போஸ்ட் மாஸ்டர்.)
நானே என்மேல் குற்றப் பத்திரிகைத் தயாரித்து அனுப்ப வேண்டும். எழுதினேன். அனுப்பினேன்.. அரை மணி நேரம் கழித்து பி.பி.எம்-இன் பியூன் எரர் புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். அதில் “தவறுக்கான காரணமானவரிடம் விளக்கம் வாங்கி அனுப்பவும்” என்று எழுதி இருந்தார். விளக்கம்? என்ன சொல்வது? ஒரு தபால் எப்படி குறைந்தது என்று தெரிந்தால், இப்படி ஏன் எரர் புத்தகத்தில் குறிப்பு எழுதப் போகிறேன்?.
ஜி.பி.ஓ.வில் வேறு ஒரு செக் ஷனில் செங்கல்பட்டிலிருந்து வரும் ஒரு சீனியர் இருந்தார். அவருடன் லேசான பழக்கம்தான் இருந்தது. அவரிடம் போய் விவரங்களைச் சொன்னேன். அவரிடம் சொல்லும் போது என் குரலிலும் முகத்திலும் பயம் இருந்தது
”ஒண்ணும் கவலைப்படாதே. ஒரு மண்ணும் ஆகாது. தானாக மெஸேஜ் வரும். ஆர்.எம்.எஸ்.காரரிடம் போயிருக்கும். அவனால் உடனே மெஸேஜ் அனுப்ப முடியாது. அவன் குறிப்பு எழுதி தபால் பையில்போட்டு அனுப்புவான். அவனுக்கு இது மாதிரி தினமும் நடந்து கொண்டுதான் இருக்கும்..உன் விளக்கத்தை இரண்டு நாள் கழித்து அனுப்பலாம், நான் எழுதித் தருகிறேன்” என்று தைரியம் கொடுத்தார்.
தபால் பைகள் வர வர கூடவே இருந்து பிரித்துப் பார்த்தேன். விஜயவாடா ஆர்.எ.ம்.எஸ். பையில் ஒரு கவர் இருந்தது. பிரித்தேன். அதில் உள்ளே ஒரு ஓலை மாதிரி நீளமான குறிப்பு இருந்தது. தலைப்பில் ’எரர் எக்ஸ்ட்ரேக்ட்’ (ERROR EXTRACT) என்று எழுதி இருந்தது. ’ஒரு ரிஜிஸ்டர் தபால் லிஸ்டில் எழுதப்படாமல் கூடுதலாக வந்து விட்டது. புதிய லிஸ்ட் போட்டு அனுப்பவும்’ என்பதைப் படித்தேன். ஹெட் கிளார்க் “பாத்தியா நான் சொன்னேனே. தபால் அகப்பட்டு விட்டது, போ, இனிமேல் ஜாக்கிரதையாக வேலை செய்” என்றார்.
எல்லாம் இந்த நம்பர் ஸ்லிப்பு ஒட்டும் போது ஏற்பட்ட சிறிய அலட்சியத்தால் வந்த வினை. ஸ்லிப்பு ஒட்டுவதற்கு விரலில் பசையை எடுத்துத் தடவும்போது சற்று அதிகப்படியாக பசையையோ அல்லது கைவிரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் பசையையோ கவரின்மீது எங்கேயாவது கவனக்குறைவாக தீற்றியிருப்பார்கள். அதன் காரணமாக அந்தக் கவரின் மேலே வைக்கப்படும் கவருடன் அது ஒட்டிக்கொண்டு விட்டது (இரட்டைப் பிறவிபோல!) இதனால் பட்டியல் போடும்போது அது கண்ணில் படாமல் டிமிக்கிக் கொடுத்து விட்டுப் போய்விட்டது.