April 17, 2012

ஜி.பி.ஓ. வாழ்க்கை-2

அதிர்ச்சிகள்!
ஜி.பி.ஓவில். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள், எலலாமே பிரமிப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. ஆனால் பல அதிச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எனக்குத் தெரியாது!
முதலாவது, ஆபீஸ் என்றால் மேஜை நாற்காலி, அறைகள், அலமாரிகள் என்றெல்லாம் நான் பண்ணிக் கொண்டிருந்த கற்பனைகள் யாவும் நீர்க் குமிழிகளக உடைந்து போனது மட்டுமல்ல, அதற்கு நேர் மாறாக  ஏமாற்றமும் அதிர்ச்சியும் தரும் பல அம்சங்கள் இருந்தன! ஆபீஸில் இந்த நூற்றாண்டைச் சேர்ந்த பொருள்கள் எதுவுமே இல்லை, கனத்த மரச்சட்டங்களில் ( நரசிம்ம பல்லவனின் சிற்பிகள்!?) செய்த (அல்லது பொளிந்த!) மேஜை,   நாற்காலிகள், எராளமான விழுப்புண்களுடன் இருந்தன. இதைவிட கொடுமை 50 பேர் பணியாற்றும்  ஒரு செக் ஷனில் 40 நாற்காலிகள்தான். இருந்தன, போரில் அதிக காயம் படாத வீரனைப் போல் சுமார் பொலிவுடன் இருந்த நாற்காலிகள்  கனமான சணல் கயிற்றால் மேஜைக் காலுடன் கட்டப்பட்டிருந்தன,  ஒரு சில சீனியர்கள் தங்களுக்குத் தாங்களே விருப்ப ஒதுக்கீடு செய்து வைத்திருந்தார்கள்!
ஆகவே  அங்கு இங்கு ஸ்டூல்களைத்  தேடிக் (வேட்டையாடி!) கொண்டு வரவேண்டும் ஒரு ஸ்டூலில் இரண்டு பேர் உட்கார்வது தவிர்க்க முடியாது!
அடுத்தது, முழுக்கை சட்டை போட்டுகொண்டு  ’நீட்’டாக வந்தது எவ்வளவு தப்பு என்பது தெரிந்தது  ரிஜிஸ்டிரேஷன் டிபார்ட்மென்டில் ‘புக்’ செய்யப்பட்ட தபால்களை ஆர்.எம்.எஸ் வழித்தடங்கள் வாரியாகப் பிரித்து, பட்டியல் போட்டு எழுதி  பைகளில் போட்டு அனுப்பவேண்டும். பட்டியல்களைக் கார்பன் பேப்பர் வைத்து எழுதவேண்டும். சாதாரண கார்பன் பேப்பர்இல்லை: டபுள் சைட் கார்பன் பேப்பர்,
ஆகவே  சற்று கவனக் குறைவாகக் கார்பன் பேப்பரின் மேல் முழங்கையை வைத்து லேசாகத் தேய்த்து விட்டால், சட்டை கரியாகி விடும்!

தபால்களை பண்டில் கட்டி பைகளில் போட்டு, பைகளின்  வாயைக் கட்டி (வாயைக் கட்டி, வயிற்றை கட்டி என்பது இதுதானோ!) அரக்கு முத்திரை போடவேண்டும். . அந்த பைகள் உலகம் சுற்றிய பைகள் என்பதால் டில்லி அழுக்கு,  நாக்பூர் மண் மணம், விஜயவாடா ரயில் பிளாட்பாரத்தின் மூக்கை துளைக்கும் சுகந்தம்,  இந்திய  திரு  நாட்டின்  பல  மாநிலங்களின் அழுக்கு எல்லாம்  இருக்கும்.  பைகளைச் சுத்தம் செய்யும் இயந்திரங்கள் ஒரு சில இடங்களில் இருக்கிறது என்றார்கள். ( இது வதந்தியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்!) தபால் பைகளைப் பற்றி ஒரு சில  சுவையான விஷயங்கள் பின்னால் எனக்குத் தெரிய வந்தது. அவை பின்னால் வரும்!
சென்டிரல் ஆர்.எம்.எஸ், எழும்பூர் ஆர்.எம்.எஸ்,, ஏர்போர்ட் என்று பல இடங்களுக்குப் பைகள் கட்டப்படும்.. அந்த சமயங்களில் சென்ட்ரல் ஸ்டேஷன், எழும்பூர் ஸ்டேஷன் எல்லாமே ஜி.பி. ஓ,விற்குள் வந்த  மாதிரி ஒரே இரைச்சலாக  இருக்கும்! (அந்த கால கட்டத்தில்  NOISE POLLUTION  என்ற வார்த்தையை யாரும் கேள்விப்பட்டதில்லை!)

இந்த இரைச்சலுக்கு மத்தியில் திடீரென்று உரத்த மணியோசை கேட்கும்.. அவ்வளவுதான். மின்சாரம் பாய்ந்தது போல்  பரபரப்புடன்,  போஸ்டல் வண்டிக்குள் ஏற்றுவதற்கு பைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் எடுத்துச் செல்லப்படும். வண்டி குறித்த நேரத்தில் புறப்பட்டு விடும். டிபார்ட்மென்ட் சட்டென்று காலியாகிவிடும். பைகள் மட்டுமல்ல, அலுவலர்களும் அம்பேல். அடுத்த டெஸ்பாட்ச் ஒரு மணி நேரம் கழித்துதான் என்பதால் பாதி பேர் இளைப்பாறுவதற்குக்  காண்டீன் சென்று விடுவார்கள்.

 மத்திய சர்க்காரில் வேலை என்று  ஒவ்வொரு நிமிஷமும்  காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருந்த எனக்கு  லேசான வெறுப்புணர்ச்சிதான் தோன்றியது..
.
இன்னும் அதிர்ச்சிகள் இருந்தன.. வேலை நேரம்  நான்கு  விதம்.  10-லிருந்து 6 வரை, காலை 7-லிருந்து பகல் 2 வரை, பகல் 2-லிருந்து இரவு 9 வரை, காலை 6-10 மாலை 4-8. (இந்த  நான்காவது வேலை நேரம் கிட்டதட்ட தண்டனை மாதிரி. ஆனால் இதற்குத்தான் அதிகம் பேர் தேவைப்படுவார்கள்) 10 - 6 க்கு மிகச் சிலரே தேவை. ஆகவே போட்டி அதிகம். செங்கற்பட்டிலிருந்து வருபவன் என்பதால் எனக்கு 10-6 டியூட்டி கொடுத்தார்கள்.

அடுத்த   அதிர்ச்சி: மாலை ஆறு மணி வரை வேலை இருக்கும்.  அன்றைய தினம் வந்த எல்லா ஜிஸ்தர் தபால்களை ‘பை’ வாரியாக   குறித்து   வைக்க வேண்டும். டெலிவரி பண்ணப்பட்டவை, வெளி ஊர்களுக்கு அனுப்பட்டவை போன்ற விவரங்கள் பெரிய லெட்ஜரில் பதிவு பண்ன வேண்டும். வந்தவைகளும் சென்றவைகளும் சரி சமமாக இருக்கவேண்டும். சுமார்  3000 -4000 ரிஜிஸ்டர் தபால்கள் அன்றாடம் வரும். ( 50 பேர் செய்த வேலை.  லெட்ஜர் பாலன்ஸ் ஆகவில்லை என்றால். ஒவ்வொருவருடைய 50 பேரின் கையேட்டையும்   சோதிக்க வேண்டும்.  வேலை முடிய இரவு 9 கூட ஆகிவிடும் என்று சொன்னார்கள். ( பயமுறுத்தினார்கள்!)

அடுத்து வந்த அதிர்ச்சி: மாலை 6 மணி வரை வேலை இருக்கும் என்பதால் 5.50க்குப் புறப்படும் செங்கல்பட்டு விரைவு வண்டியைப் பிடிக்க முடியாது. அதற்கு அடுத்த வண்டி அரை மணி கழித்துப் புறப்பட்டு, ஒரு மாமாங்கம் கழித்துப்   போய்ச் சேரும்!

ஆனல் இந்த அதிர்ச்சிகளைக் கண்டு நான் கலங்கவில்லை. முதல் மூன்று மாதம் ட்ரெயினிங். அதில் தேறினால் ரெகுலர் வேலை உத்தரவு தருவார்களாம்! அதுவரை பயிற்சி அலவன்ஸாக முழுசாக 55 ரூபாய் என்றார்கள். ஒரு நாளைக்கு 2  ரூபாய் கூட இல்லை!

ஜி,பி,ஓ-வின் பிரமாண்டமான கட்டடம். பீச் ஸ்டேஷனின் பரபரப்பு, மத்திய சர்க்காரில் வேலை, அதுவும் பென்ஷன் உத்தியோகம், என்ற பெருமையெல்லாம் பொசுக்கென  நொறுங்கிப் போயின.

அடுத்த சிலவருஷங்களில் இந்த ஜி,பி. ஓ-வின்  LIFE and PART-டாக நான் ஆனேன்.  அந்த விவரங்கள் சுவையானவை.  அவை, வரும் பதிவுகளில்!

9 comments:

  1. இது ஆரம்பம் தானே! சுவையான பகுதிகளுக்கு வெய்ட்டிங்!

    //உரத்த் மணியோசை கேட்கும்.. அவ்வள்வுதான். மின்சாரம் பாய்ந்த்தது போல் பரபபுட்ன// இந்த பதிவில் டைப்போ ஜாஸ்தி! போஸ்டல் வண்டி வந்த அவசரமோ?

    //பைகளைச் சுத்தம் செய்யும் இயந்திரங்கள் ஒரு சில இடங்களில் இருக்கிறது என்றார்கள். ( இது வதந்தியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்!)// இது நக்கல்! இருந்தும் வதந்தியே உண்மையாக இருக்கலாம், அடுத்தடுத்த பதிவுகளில் தெரிந்துவிடும்!

    உண்மையில் இந்த மாதிரி கேரியரை ஸ்டார்ட் செய்தும், எவ்வளவு உழைத்து மேலான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள் - பலருக்கு நீங்கள் ரோல் மாடல் ஆகலாம்.

    -ஜெ.

    ReplyDelete
  2. Very Very Interesting to read. Awaiting eagarly for your next part. Kindly do not delay much.

    ReplyDelete
  3. தவறுகளைத் திருத்திக் கொண்டிருந்த போது தவறதலாக போஸ்டிங் ஆகிவிட்டது. மின்சாரமும் போய்விட்டது, இப்போது திருத்தி இருக்கிறேன். இப்பவும டைப்போக்கள் இருக்கலாம். -கடுகு

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    ஜி.பி.ஓ. அலுவலகத்துக்கு நேரில் வந்து, அந்த சத்தத்தையும் பரபரப்பையும் பார்த்த மாதிரி இருக்கு.

    அடுத்த பகுதிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

    நன்றி.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  5. Charu Rasaleela has similar episodes on Post office culture and monotonous workload.

    ReplyDelete
  6. நமஸ்காரம்.
    உங்கள் தளத்தின் நகை மற்றும் நகைச்சுவை பெட்டிகளின் திரட்டு (compilation) உள்ளதா? ஆம் எனில் அதை எப்படி பார்ப்பது?
    நன்றி,வணக்கம்.

    ReplyDelete
  7. திரட்டு இல்லை. அவ்வப்போது எழுதி வைத்துக்கொள்ளுஙள். பழைய பொன்ம்மொழிகள் சில இருக்கும். முடிந்தால் அனைத்தையும் ஒரு பதிவாகப் போடுகிறேன்

    ReplyDelete
  8. ஸார்...அந்த காலத்தில் அரக்கு என்று ஒரு வஸ்து போஸ்ட் ஆஃபீஸில் கிடைக்கும்..என் ஃபிரண்ட் ஒருத்தன், போஸ்ட் ஆஃபீஸ் போய், ‘அரக்கிருக்கா’ என்று கேட்க, அதை அங்குள்ள போஸ்ட் மேன் ‘அரைக் கிறுக்கா’ என்று தவறாகப் புரிந்து கொண்டு, கேட்டவரின் முதுகை கடிதமாய் பாவித்து, ஸ்டாம்ப் குத்துவது போல் மொத்தியது தனிக் கதை!

    ReplyDelete
  9. நானும் ஒரு போஸ்ட் மாஸ்டர் பெண் என்பதால் மிகவும் ரசித்தேன்.
    அதுவும் வாயைக் கட்டுவது அரக்கு வைப்பதெல்லாம் அப்பாதான் செய்வார்.
    விஷமம் செய்தால் இந்தப் பைக்குள் வைத்து ரயிலில் அனுப்பிவிடுவேன் என்று தம்பியை மிரட்டுவார்:)
    கொஞ்சநேரம் தாங்கும்!!மிக மிக நன்றி. உங்கள் விழாவிற்கு வருகிறேன் கட்டாயம்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!