ஆகா! புத்தகங்கள்!
புத்தகங்களைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு புத்தகம் A PASSION FOR BOOKS,
HEROLD ROBNOWITZ மற்றும் ROB KAPLAN ஆகியவர்களால் தொகுக்கப்பட்ட புத்தகம். சில வருஷங்களுக்கு முன்பு வாங்கினேன். 1999ம் வருடம் பிரசுரமான புத்தகம். இந்தப் புத்தகத்தில் உள்ள எல்லா கட்டுரைகளும் லட்டுதான்.
ஒருசில கட்டுரைகளின் தலைப்பை மட்டும் தருகிறேன்.
* பழைய புத்தகக் கடையில்
* என் லைப்ரரி இடம் மாறியபோது
* புத்தக வியாபாரம் துவங்குவது எப்படி
* பிரசுரகர்த்தர்களால் நிராகரிக்கப்பட்ட 10 சிறந்த புத்தகங்கள்
* புத்தகங்களைக் கடன் தருதல்
* வாங்கிச் சென்ற புத்தகத்தை நண்பன் திருப்பித் தந்தது பற்றி...
* கடன் வாங்கிச் சென்ற புத்தகமே, வருக.
* பொது நூலகத்தை எப்படி அமைப்பது?
* சாமுவேல் பில்ஸ் புத்தகசாலை
* பழைய புத்தகங்கள் தரும் சுகம்
* புத்தகப் பைத்தியம்
* அமெரிக்க கேரக்டரை உருவாக்கிய 10 புத்தகங்கள்
* புத்தகங்கள் சேகரித்தல்
* புத்தகங்கள் வெறுமனே சொல்லவில்லை பைத்தியம் என்று
* ஆத்மாவின் ஒளிரல்கள்
* எப்படி வாசிப்பு என் வாழ்க்கையை மாற்றி விட்டது
* சாமர்செட் மாமின் 10 சிறந்த நாவல்கள்
* புத்தகங்களை அக்கறையில்லாமல் வைத்துக் கொள்வது எப்படி?
* இருபதாம் நூற்றாண்டின் 100 சிறந்த நாவல்கள்
பதிப்பாசிரியர்களின் அறிமுக உரையும் அபாரமாக உள்ளது. தமிழில் ஒரு பதிவாகவேப் போடத் தகுதி உடையது.
இப்புத்தகத்திற்கு ரே பிராட்பரி (RAY BRADBURY) என்ற எழுத்தாளர் முன்னுரை எழுதியுள்ளார். அதை தமிழாக்கம் செய்து தருகிறேன். ரே பிராட்பரி 400 புத்தகங்கள் எழுதியுள்ளார். புத்தகப் பித்தர். இவரைப் பற்றி மேலும் நிறைய விவரங்கள் விக்கிபீடியாவில் உள்ளன.
இனி பிராட்பரியின் முன்னுரை: (என் மொழிபெயர்ப்பு சுமாராகத்தான் இருக்கும்! ("தெரிந்தது தானே” - அசரீரி!)
= = =
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் வருடம் ஃபாரன்ஹீட் 451 என்ற என்னுடைய நாவலை எழுதி முடித்தேன். அதற்கு சில ஓவியஙகளை என் நண்பரும் ஓவியருமான ரீஜா முக்ரைனியிடம் போட்டுத் தரச் சொன்னேன். நாவலுக்கு ஏற்ற மாதிரியும் அதே சமயம் வித்தியாசமான படமாகவும் இருக்க வேண்டும் என விரும்பினேன். அவர் வரைந்திருந்த சில ஸ்கெட்சுகளைப் பார்த்து நானே ஒரு புதிய ஐடியா தயார் பண்ணினேன். ( DON QUIXOTE என்று வீரர், கவசங்களை (எஃகுக் கவசங்களுக்குப் பதிலாக. நியூஸ் பேப்பரில் செய்யப்பட்ட கவசங்களை) தரித்துக் கொண்டு, எரிந்து கொண்டிருக்கும் புத்தகக் குவியலின் மீது நிற்பது மாதிரி படம் வரையச் சொன்னேன். அது நிஜ கதாபாத்திரம் அல்ல. அந்த வீரன் உண்மையிலேயே நான்தான்! என் சரித்திரமே புத்தகங்கள்தான்! அதைத் தவிர வேறு எதுவுமே கிடையாது. அதனால்தான் இங்கே உங்கள் முன்னே இருக்கிறேன் - முன்னுரையாக!