March 16, 2011

அர்ச்சனை - 6 வீ டா, தர்மசத்திரமா? - கடுகு

என்னது படிக்கறீங்க? டிராமா நோட் புத்தகமா? இல்லை ஆபீஸ் வேலையா..? ஆபீஸ் நோட் புத்தகத்துக்குள்ள டிராமா நோட்டாக இருக்கும். முறைக்காதீங்க... காலைல போய் அர்த்த ராத்திரி திருடன் மாதிரி வர்றீங்க... நேபாளி கூர்க்கா மாதிரி நான் கொட்டு கொட்டுன்னு முழிச்சிண்டு கவலைப்பட்டுண்டு உட்கார்ந்திண்டு இருக்கேன்...
மத்தியானம் ஊரிலிருந்து வந்து கதவைத் திறக்கறேன். குப்புன்னு வாசனை தூக்கி அடிக்கிறது. ஆமாம்... சந்தனம், மல்லிகை, மருக்கொழுந்து வாசனைதான் பாக்கி.... கேட்கறீங்களே வெட்கமில்லாமல்... திருட்டுத்தனம் பண்ணவும் சாமர்த்தியம் வேணும்.
நான் ஊரில் இல்லாத போது இங்கே அடிச்ச கொட்டம் எனக்குத் தெரிஞ்சுடுத்து. தோட்டத்தில புதருக்குள் போட்டு மறைச்சுட்டால் ஆகிவிட்டதா? சிகரெட்டால் ஹோமம் பண்ணின மாதிரி இருக்கு... எவ்வளவு துண்டுகள்! பேப்பர் பிளேட் மட்டும் 20, 30 இருக்கும்.
என்ன விசேஷம்... பார்ட்டியா? எத்தனை பெண்கள் வந்தார்கள்... நீங்க சொல்லாவிட்டால் என்னால் கண்டுபிடிக்க முடியாதா? பக்கத்து வீட்டு சித்ராங்கிதான் இருக்காளே... இந்த மாதிரி விஷயங்களை மசாலா போட்டுச் சொல்வதற்கு..? என்னது... பத்து பேரா? சீமந்தம், வளைகாப்பு நிகழ்ச்சியா? என்னது... பர்த்டே பார்ட்டியா? இது என்ன கல்யாண மண்டபமா, சமுதாயநலக் கூடமா, தியான மண்டபமா, குத்துப்பாட்டு பாசறையா? யாருக்கு பர்த்டே? உங்களுக்குன்னு சொல்லிக் கூட பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருப்பீங்க... நான் வீட்லே இல்லைன்னா உங்க சில்மிஷ புத்திக்கு ஆயிரம் குயுக்தி யோசனை வருமே...

சோபா, கர்ட்டன் எல்லாம் சிகரெட் வாசனை. ஒரு மாசம் ஆனால் கூட போகாது.
”ஆஹா பஞ்சு, உங்களை மாதிரி யார் இருப்பாங்க... உங்க மனசே மனசு”ன்னு சொல்லி, ஐஸ் கட்டியைத் தூக்கி  உங்கள் தலையில வெச்சிருப்பாங்க. உங்களுக்கு சந்தோஷம், ஜலதோஷம் இரண்டுமே வந்திருக்குமே.
விடிய விடிய பார்ட்டியா? ஆட்டம், பாட்டம், தள்ளாட்டம்தான்!
உங்க நண்பர்களைக் கூப்பிட்டு பார்ட்டி வெச்சுக்கோங்க. தப்பில்லை. பெண்டாட்டி இருக்கிறபோது வெச்சுண்டால் என்ன தப்பு? `... ”என் ஒஃப் ஊரில் இல்லை' என்று கூரை மேல ஏறிக் கத்தி இருப்பீங்க. உடனே அந்த பயந்தாங்கொள்ளி மூஞ்சூறுங்க, `அடி சக்கை, பார்ட்டி வெச்சுக்கலாம். ஆஷா, உஷா, ராணி, வாணி கோணி எல்லாரையும் இன்வைட் பண்ணலாம்' என்று குதிச்சிருப்பாங்க. மில்லி, குவாட்டர்ன்னு குடிச்சிருப்பாங்க...
என்னது?.. யாரும் குடிக்கலையா? அடப் பாவமே... ஒயின் ஷாப்பில் போயி இருபது காலி பாட்டில் கொடுப்பா என்று கேட்டு வாங்கி வந்து புழக்கடை புதரில் அதைப் போட்டு வெச்சீங்களா? நம்ப வேலைக்காரி அஞ்சலை பார்த்துச் சொன்னாள்.
போறும்... அஞ்சலை, வாழையிலைன்னு அறுவை ஜோக் சொல்லி பேச்சை மாத்தப் பார்க்காதீங்க...
அவளுக்கு இப்படி கோள் மூட்டறதுக்கும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி பத்த வைக்கறதுக்கும் சம்பளம் தர்றோம்னா கேட்கறீங்க. அவள் சொன்னது சரிதான்.
பழ ஜூஸ் பாட்டில்களா அதெல்லாம்?... இருக்கலாம். ஒரு ஐம்பது எலுமிச்சைப் பழத் தோல் கூட பழ ஜூஸோட இலவசமாத் தர்றாங்களா? இரண்டு கிலோ சர்க்கரை தரலியா? டப்பர்வேர் டப்பாவில் இருந்த சர்க்கரை இப்போ நோ வேர்! காலியாயிட்டுதே...
ஆமாம். ஐம்பது பேருக்கு ஜூஸ் பண்ணால் ஆகாதா என்ன?
ஐம்பது பேர் இல்லையா? சரி, 49 பேர்ன்னு சொல்றீங்களா? இருபது பேர்தானா? அப்போ 20 பேர் அம்பது பேர் அளவுக்குச் சாப்பிட்டு இருக்காங்க... வயிறா, வண்ணான் சாலா?
படிச்சது போதும். நான் கத்தறது காதில விழறதா? உங்க ஃப்ரெண்ட்ஸ  எல்லாம் கத்தி கும்மாளம் போட்டால் அது சுகமான சங்கீதம். தாலி கட்டின பொண்டாட்டி பேசினால் கத்தல்...
அதிருக்கட்டும்... என் அம்மா படத்திற்கு மீசை போட்டது யாரு?  பர்த்டே பார்ட்டியில ஒரு கேம் ஷோவா? ஷேம்-ஷோவா! அவமானம், அவமானம்!
சிரிக்காதீங்க... என்னது, சிரிக்கலையா? இருக்கும், இருக்கும்... எல்லாச் சிரிப்பும் அந்தச் சிறுக்கிங்க கிட்ட சிரிச்சு சிரிச்சு ஸ்டாக் தீர்ந்து போயிருக்கும்.
உங்க நண்பர்களில் லட்சுமணன்னு ஒருத்தர் வந்தாரா? எப்படித் தெரியும்னு கேக்கறீங்களா? அவருக்கு பீங்கான் காபி `பாட்'கள் எல்லாம் சூர்ப்பனகையா காட்சி அளித்திருக்கும். ஏனென்றால் இரண்டு காபி பாட்களுக்கு மூக்கே காணோம். நாலு கப், சாஸர்களை இனிமேல் கிராக்கரின்னு சொல்ல முடியாது.  விரிசல், அதாவது கிரேக் விட்டதால- கிரேக்கரின்னுதான் சொல்லணும். பாவம், எங்க அம்மா ஆசை ஆசையாகக் கொடுத்தது.
நான் ஒண்ணும் ஜோக் அடிக்கலை. வயித்தெரிச்சல்ல பேசறேன். குண்டு மணி வந்திருந்தாரா? எப்படித் தெரியும்னா கேட்கறீங்க..?
நம்ப வீட்டிலே ஒரு நாற்காலி, முன்னாள் நாற்காலி, இந்நாள் முக்காலியாக காட்சி அளிக்கிறதே... அதைவிட வேறு சாட்சி வேண்டுமா?
இன்னும் நம்ப வீட்டுக் குடை...''
என்னது, குறட்டையா..?''
பஞ்சு சற்று பலமாகவே குறட்டை விட்டார்!

4 comments:

  1. என்னங்க இது அநியாயம், இன்னும் ஒருத்தர்கூட கருத்து போடலே?

    ReplyDelete
  2. ithuvum 'sugamaana sangeetham' thaan! - R.J.

    ReplyDelete
  3. தாளிப்பு பலமா இருக்கே. திருவாளர் கடுகு ethaium தாங்கும் இரும்பு இதயம் படைத்தவர் போலிருக்கிறது.

    அன்புடன்,
    blogpaandi
    http://blogpaandi.blogspot.com

    ReplyDelete
  4. அந்தக் காலத்து‍ ஆண்கள் கொடுத்து‍ வைத்தவர்கள். ரொம்பவும் நாகரீகமான வார்த்தைகளைத்தான் அம்புஜம் போன்றவர்கள் அர்ச்சனைக்கு‍ பயன்படுத்தியிருக்கிறார்கள்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!