யாரடி நீ மோகினி
அம்புஜம் பெட்ரூமில் நுழையும் போதே, பஞ்சு ஒரு பக்கமாகப் புரண்டு படுத்தார். கொட்டாவி விடுவது போல் பாவ்லா காட்டினார்.``...பாவம். ஆபீஸில் ஏகப்பட்ட வேலை... தூங்கறதுக்கு டைம் கிடைக்கலை போல் இருக்கு. அதுதான் தூக்கம் வந்துடுத்து. ஆபீஸ நாடகம் ஒத்திகை பார்க்கிற மாதிரி, கொட்டாவி விடறது, குறட்டை விடறது, முழித்துக் கொண்டே தூங்கறது எல்லாம் ஒத்திகை பார்க்கறாரோ, என்னவோ! மனுஷன். அப்பதானே பொண்டாட்டி தொணதொணப்பிலிருந்து தப்பிக்கலாம்?
யார் அப்படிச் சொன்னதுன்னு கேக்கறீங்களா? நீங்க சொன்னீங்கன்னு நான் சொல்லலை. பாகீரதி சொன்னதைச் சொல்றேன். பாகீரதி யாருன்னு தெரியாதா? இதை நம்பச் சொல்றீங்களா? `பகீர்'ரதின்னு சொல்வீங்களே, உங்க உப்பிலியின் ஒய்ஃப். அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்று என்னைக் கேட்டால்?... நல்லா இருக்கே .கேள்வி!.. அவளுக்கு அவ வீட்டுக்காரர் உப்பிலி சொல்லி இருப்பார். உப்பிலிக்கு அவரோட பெஸ்ட் ஃப்ரெண்ட் பஞ்சு சொல்லி இருப்பார்.
நான் நச்சுதான், தொணதொணப்புதான். பிக்கல் பிடுங்கல்தான்... அதனாலதான் என்னை பொண்டாட்டின்னு வெளியில சொல்லிக்க உங்களுக்கு வெட்கமா இருக்கு.
ஆமாம்... நான் இல்லாததும் பொல்லாததும்தான் சொல்றேன். நேற்று சாயங்காலம் கோயிலுக்குப் போகும் போது எதிரே ஒரு மோகினி வந்தாளே, அவளைப் பார்த்ததும் அண்ணலும் இளித்தான், அவளும் இளித்தாள். அவள் யாரு? இளிக்கிற அளவுக்கு என்ன நெருக்கம் என்று இந்த க்ஷணம் வரை எனக்குச் சொல்லலை. அவளுக்கு என்னை அறிமுகம் கூட செய்து வெக்கலையே... பாவம், சொல்லிக்க வெட்கமாக இருந்திருக்கும்! அவள் கழுத்தை ஒடித்து, கண்ணைச் சுழற்றி பார்த்த பார்வையே சரியாக இல்லை. இதோ பாருங்க... அம்புஜம் மக்காக இருந்த காலம் மலை ஏறியாச்சு. அவளுக்கு ஞான திருஷ்டி இல்லாவிட்டாலும், மனுஷாளை எடை போடத் தெரியும். ஏதோ கண்ணிலே சாளேசுவரம் வரலை... ஒரு பார்வையிலேயே மனுஷாளின் தராதரத்தைக் கண்டுபிடிச்சுடுவேன்.
ஆஹா... அவளைத் தப்பாகச் சொல்லக் கூடாதா? அடாடா... என்னமா உருகுகிறார்! பொண்டாட்டி தவிர எல்லாரும் ப்த்தரை மாத்துத் தங்கம், நல்லவங்க; நம்பகமானவங்கன்னு . சொல்றீங்க... எனக்கு எல்லாரும் தளுக்கு மினுக்கு சுந்தரிகள்தான். பல்லை இளிக்கிறவர்கள்தான். அது சரி, அப்படி நான் எங்கே. எப்போ சொன்னேன். இந்த பாகீரதியைத்தான் சொன்னேன். அவள்தான் தன் பேரை பேஷன் பேரா மாத்திக்கப் போறாளாம். அனுஷ்காவோ, கத்திரிக்காவோ ஏதோ ஒரு பேர்...
அவள் பார்வையே சரியில்லை. அவள் எதுக்கு ஒரு உதட்டுச் சுழிப்புடன் சிரிக்கணும்... என்னது, நீங்க பாக்கலையா? அவள் தெருக்கோடியில் வரும் போதே நீங்க வெச்ச கண்ணை எடுக்காமல் பார்த்துட்டு இருந்ததை நான் பார்த்துண்டுதான் இருந்தேன்.