
குளிர் காரணமாகத் தூக்கம் வரவில்லை. வெளியே வீதியில் சந்தடி அடங்கவில்லை. இந்தக் குளிரில் வீட்டிற்கு வெளியே போகிறவர்களுக்கு இருப்பது எருமைத் தோலா (டில்லி எருமை) என்று எண்ணிக் கொண்டே ஒரு மாதிரி தூங்கிப் போனேன்.
காலையில் கண் விழித்த போது எனக்கு இரண்டு ஆச்சரியங்கள்! எப்போது நான் மரவட்டை ஆனேன்?
ஆமாம். குளிரில் ஒரு ஸ்பிரிங் போன்று சுருண்டு இருந்தேன். மணியைப் பார்த்தேன். ஒன்பதரை."என்னப்பா இவ்வளவு நாழியாகி விட்டதா? சூரிய வெளிச்சமே வரவில்லையே?'' என்றேன்.வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து. கொதிக்கும் வெந்நீரில் குளித்தேன். "வெந்நீர் பட்ட இடமெல்லாம் ஜில்லென்று இருந்ததடி' என்று பாரதியார் பாணியில் எழுதலாம்.