June 27, 2015

உங்கள் கனிவான கவனத்திற்கு

வணக்கம்.
அடுத்த பதிவு 15 நாள் கழித்து வரும்.  JET LAG காரணம். இந்தியா திரும்பிவிட்டேன்.
-கடுகு

 பின்னூட்டம்:  நன்கு ஓய்வெடுத்துக்கொண்டு விட்டு வெளுத்துக் கட்டுங்கள்.

நேயர்கள் சர்பாக நானே ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கிறேன்! என் பிளாக்கின் முதல் நேயர் நான்தானே!
 

June 05, 2015

சர்மாஜி and the art of getting motor cycle driving Licence!

அந்த காலத்தில்- அதாவது, அறுபதுகளில் ஒரு ஸ்கூட்டர் வாங்குவது மிக கஷ்டமான காரியம். புக் பண்ணி விட்டு பல வருடங்கள் தவமிருக்க வேண்டும். அதன் பலனாக  ஸ்கூட்டர் வாங்கி விட்டால் அடுத்த பிரச்னை  டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது. ஆர்.டி. அலுவலகத்தில்சார், மணி என்ன?” என்று கேட்டால் கூட 'மணி’ கொடுத்தால் தான் பதில் கிடைக்கும்!
  போன ஜென்மத்தில் பண்ணிய புண்ணியத்தினால் ஒரு செகண்ட் ஹாண்ட் ஸ்கூட்டர்  கிடைத்தது. LEARNERS LICENCE -ம் ஒரு மணி கியூவில் நின்று வாங்கிவிட்டேன்.
 ஒரு மாதம் ஆன பிறகு, பக்கா டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது எப்படி என்று யோசித்துக் கொண்டு (அதாவது கவலைப் பட்டுக் கொண்டு) இருந்தேன்.
என் நண்பர் சர்மாஜியிடம் பேச்சுவாக்கில் என் பிரச்னையைச் சொன்னேன். ”மாமாஜி… எனக்கு ஹிந்தியும் தெரியாது.. லஞ்சம் கொடுக்கவும் தெரியாது” என்றேன்.
    ”அங்கிள்.. நோ..பிராப்ளம். இது பெரிய காரியமா?.. நான் குர்காவ் R T O ஆபீசில் வாங்கித் தருகிறேன். என் வீடு குர்காவில்தான் இருக்கிறது. பத்து நாளைக்கு முன்பு போயிருந்தேன். புதுசாக ஒரு ஆபீசர் – இளைஞர். ரொம்ப சூட்டிகையான ஆசாமி - இருக்கிறார்.. லஞ்சம் என்ற  பேச்சுக்கே இடமில்லை. நான் உங்களை அழைத்துப் போகிறேன்” என்றார்.  (குர்காவ் - டில்லி தூரம் கிட்டதட்ட 25 கிலோமீட்டர்.)
(சர்மா எல்லாருக்கும் மாமாஜி. அவருடைய கைங்கரியத்தால் எல்லாருக்கும் நான் ‘அங்கிள்” ஆன கதையை ஒரு பதிவாகப் பின்னால் போடுகிறேன்!)
“ சரி.. சர்மாஜி.. டில்லியில் இருப்பவருக்கு குர்காவில் இருக்கும் ஆபீசில் லைசென்ஸ் கொடுப்பார்களா?” என்று கேட்டேன்.
“என் வீட்டின் முதல் மாடியில் குடி இருக்கிறீர்கள் நீங்கள் என்பதை மறந்து விட்டீர்களா?” என்று கண்ணைச் சிமிட்டினார்! புரிந்து கொண்டேன்.

May 10, 2015

ஒரு வரி - ஒரு ரூபாய்

ஒரு வரி பதில் 
1960 களில், டில்லியில் தபால் துறை அலுவலகத்தில் சர்வதேச  பார்சல் மெயில் அக்கவுண்டிங்க் செக் ஷனில்  நான் பணி புரிந்து கொண்டிருந்தேன்!
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்தவேண்டும்.அதே போல் அங்கிருந்து வரும் பார்சல்களை  இங்கு நாம் டெலிவரி செய்வதற்கு அவர்கள்  நமக்குக் கட்டணம் செலுத்தவேண்டும். )  இந்த வரவு செலவு கணக்குகள் சுமார் 50-60 நாடுகளுக்குத் தயாரிக்கப்படும். ( இது சற்று சிக்கலான கணக்கு. அதிகம் விவரித்தால் குழம்பிப் போவீர்கள்.)

இந்த கணக்கு முறை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட முறை. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு வர வேண்டிய தொகைக்கு 'பில்’ அனுப்ப வேண்டும்.  அதே மாதிரி   நமக்கு வர வேண்டிய தொகைக்கு நாம்  'பில்’ அனுப்ப வேண்டும்.
 ஆனால் இங்கிலாந்தைப் பொருத்தவரை இரண்டையும் நாமே செய்யவேண்டும். அதாவது நம்முடைய கணக்கை  நாம் அனுப்புவதுடன், இங்கிலாந்து அனுப்ப வேண்டிய கணக்கையும் நாமே தயார் பண்ணி அனுப்ப வேண்டும், அதை அவர்கள் சரிபார்த்து கையெழுத்துப் போட்டு அனுப்புவார்கள்!  ( அதாவது அவர்கள் செய்யவேண்டிய வேலையையும் நம் தலையில் எந்த தலைமுறையிலேயோ கட்டி விட்டிருந்தார்கள்.!.. சுதந்திரத்திற்கு வந்து இருபது ஆண்டு கழித்தும் வாயை மூடிக்கொண்டு, கையைக் கட்டிகொண்டு, பவ்யமாக அடிமைபோல்  இந்த வேலையை செய்து கொண்டிருந்தோம்.) 

1970-களில் இங்கிலாந்து- இந்தியா கணக்கை '‘செக்’ பண்ணும் வேலை எனக்குத் தரப்பட்டது. ‘வேறு  எந்த நாட்டுக்கும்  தராத சலுகை இங்கிலாந்திற்கு மட்டும் எதற்குக் கொடுக்கவேண்டும் என்று ஏன் யாரும் கேட்கவில்லை. இதை ஏன் நாமே கேட்கக்கூடாது  என்று எண்ணி,  பிரிட்டன் தரப்பு கணக்கை இனி பிரிட்டனே  தயாரித்து அனுப்பும்படி தெரிவித்து விடலாம் என்று ஒரு ஒரு குறிப்பை எழுதி, என் மேலதிகாரிக்கு அனுப்பினேன்.
அந்த ஃபைல் 15 நாள் கழித்து  எனக்குத் திரும்பி வந்தது.

April 30, 2015

கோபுலு


ஓவியமேதை கோபுலு காலமானார்.

 அருமையான, எளிமையான மனிதர். 

அவருடைய நட்பு எனக்குக் கிடைத்தது  மா பெரும் பேறு. 

அவருக்கு  என் கண்ணீர் அஞ்சலி.


  -கடுகு

----------------------------------------------------------------------------------------------

April 27, 2015

ஸ்டார் டிவி. ஒழிக


என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. "மாப்பிள்ளை. இந்தாங்கோ கொஞ்சமா ஹார்லிக்ஸ் கலந்துண்டு வந்திருக்கேன் . மூளையைக் கசக்கிக்கொண்டு எழுதறதுக்குச் சக்தி வேண்டாமா?' என்று சொல்லி என் மாமியார் ஒரு டம்ளர் ஹார்லிக்ஸை என் முன் வைத்தாள்.
இதுவரை  என்னைப் பார்த்து நேரடியாகப் பேசி அறியாத (ஏன் ஏசியும் அறியாத, அதாவது நேரடியாக ஏசி அறியாத!) என் அருமை மாமியார்,. 1. மாப்பிள்ளை என்று கூப்பிட்டார், 2. ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தார், 3. என்னை எழுத்தாளன் என்று அங்கீகரித்தார்.!! 

எத்தனை அதிசயங்களைப் படைத்தாய், இறைவா! இப்படி அதிசயங்களால் திக்குமுக்காடிப் போய் விட்டதால் தொச்சுவும் அவன் நால்வகைப் படைகளும் என் வீட்டுக்கு வந்து முகாமிட்டு இட்லி, தோசை சம்ஹாரம் செய்து கொண்டிருப்பதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை!
அந்த சமயம் என் மூளைக்குள் ஒரு பல்ப் எரிந்தது. என் மாமியார் மாறியதன் மர்மம் விளங்கியது. எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பு தொச்சு வந்து விட்டுப் போனதிலிருந்து ஏற்பட்ட மாற்றம்! இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படி என்ன நடந்தது?

என் அருமை மனைவி கமலாவும் அவளுடைய அருமை அம்மாவும், அதாவது என் மாமியாரும் மாவடு வாங்கப் போயிருந்தார்கள். மாவடு வாங்கப் போய் இவர்கள் மாங்காய் பார்டர் போட்ட புடவையை வாங்கி வந்துவிடப் போகிறார்களே (சாதாரணமாக அவள் அப்படிச் செய்வது வழக்கம்!) என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். தனிமையும் கவலையும் சேர்ந்து ரொம்ப போரடிக்கவே டிவியைப் போட்டேன். இதைவிட டி.வி. அதிகமாக போர் அடிக்காது என்ற அல்ப ஆசையுடன்!