வாழ்க பாரதியார்!
அன்றொரு நாள் நான் மகாகவி பாரதியின் பாடல்களை உரக்கப் படித்து ரசித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம் என் நண்பரும் அரசியல்வாதியுமான திரு. அசமஞ்சம் என்னைப் பார்க்க வந்தார்.
""என்னய்யா படித்துக் கொண்டிருக்கிறீர்'' என்று கேட்டார்.
""மகா கவி பாரதியாரின் பாடல்களை இப்படிப் படிப்பது என் வழக்கம்.. இப்போது அவருடைய நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.''
""ஒரு பாட்டைப் படியேன்.''
""அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை...''
""பெர்மாதமா இருக்கே... இது போறும்பா. இதை வச்சுக்கினு பாரதியார் புகழை நான் பரப்பிடுவேன். கூட்டத்துக்குக் கூட்டம் அவரைப் பத்திப் பேசறேன்'' என்று சொல்லிவிட்டுப் போனார் அசமஞ்சம். சொன்னபடியே அவர் எல்லாக் கூட்டங்களிலும் பாரதியாரைக் கொண்டு வந்தார்.
அவர் கலந்துகொண்டு சில கூட்டங்களில் பேசிய உரைகளை இங்கு தருகிறேன்.
கோணி வியாபாரிகள் சங்கம்
''....எனக்கு முன்பு பேசியவர் "ஐயோ, பிளாஸ்டிக் பைகள் வந்து விட்டனவே... கோணி வியாபாரம் படுத்து விடுமா'' என்று கவலைப்பட்டார். பெட்ரோல்தான் பிளாஸ்டிக்குக்கு மூலப் பொருள். அதற்குப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. சணலோ ஆண்டவனால் தாராளமாகத் தரப்படும் செடி.




