November 11, 2010

திருக்குறளை எழுதியது நான்.-கடுகு

`திருக்குறள் எழுதியது நான்' என்ற தலைப்பைப் பார்த்ததும் `ரீல்' என்று எண்ணி விடாதீர்கள். விவரமாகச் சொல்கிறேன்.

 டில்லியில் வள்ளுவர் கழகம் என்ற அமைப்பை நாங்கள் சிலர் உருவாக்கினோம். அமைச்சராக இருந்த க.ராசாராம் அதன் தலைவர். அவர் முயற்சியில் டில்லியில் வள்ளுவர் சிலை வைக்கப்பட்டது.
அந்தச் சிலையின் பீடத்தில் திருக்குறளை செதுக்கி வைக்க விரும்பினோம். சென்னையிலிருந்து செய்து கொண்டுவர நேரம் இல்லை. ஒரே இரவில் முடித்தாக வேண்டிய கட்டாயம். ஆகவே டில்லியில் உள்ளவர்களைப் பிடித்து இதைச் செய்ய முடிவு செய்தோம்.

அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதால் பீடத்தின் ஒரு பக்கத்தின் அளவுக்குப் பேப்பரில் குறளை  எழுதித்தர முடிவெடுத்தோம்.எனக்கு ஓரளவு லெட்டரிங் தெரியும் என்பதால் எனக்கு இந்த வேலை தரப்பட்டது. அவ்வளவு பெரிய அளவில் எழுதிப் பழக்கம் இல்லாததால் எனக்கு உதவி செய்தவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைமை இன்ஜினியர்! பேப்பரில் கோடுகள் போட்டு, எழுத்தின் அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் விவரமாகச் சொன்னார். அதன்படி நான் எழுதிக் கொடுத்தேன்

 நான் பெரிய காகிதத்தில் எழுதிக் கொடுத்ததை கிரானைட் கல்லின் மீது ஒட்டி வைத்து, அதன் மேலேயே பொளிந்தார்கள். எல்லோரும் தமிழ் தெரியாதவர்கள். ஆகவே கூடவே இருந்து தவறு வராதபடி பார்த்துக் கொண்டு இருந்தேன்.

 டில்லி சென்றால், டில்லி தமிழ்ச் சங்கத்தின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய திருவள்ளுவர் சிலையின் பீடத்தைப் பாருங்கள். சிலையின் பீடத்தில் சில திருக்குறள்கள் செதுக்கப்பட்டிருக்கும். என் கையெழுத்தில்!
.

November 10, 2010

உப்பும் மிளகும்

உப்பும் மிளகும்
அமெரிக்கவில் பிரசுரமாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித் தாளைப்
புரட்டினால் எல்லம் பிஸினஸ் செய்திகளாகவும் பங்கு மார்க்கெட்
நிலவரங்களும் மில்லியனும் பில்லியனுமாக இருக்கும்.
ஆகவே அமரிக்கன் லைப்ரரியில் அதன் கிட்டேயே போகமாட்டேன்.. இந்த செய்திதாளில் நிச்சயமாக எனக்குப் பிடித்த நகைச்சுவை அம்சமே இருக்காது .என்பது எனக்குத் தெரியும். ஆனால் மற்ற பகுதிகளுடன் தொடர்பில்லாத்த ஒரு பத்தி அவ்வப்போது வெளியாகிறது என்பது, ஒரு பழைய புத்தகத்தை நடைபாதைக் கடையில் வாங்கியபோதுதான் தெரிந்தது,
புத்தகத்தின் தலைப்பு: உப்பும் மிளகும்.  வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இந்த தலைப்பில் அவ்வப்போது பிரசுரமாகும் ஜோக்குகள்,ஒரு வரி சிரிப்புகள், நகைச்சுவைக் குட்டி பாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பு. ஒரு பத்து ஆண்டுகளில் வந்தவற்றில் சிறந்தவற்றைப் போட்டிருந்தார்கள்: அதிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.

இரண்டு கையால் படம் போடலாம்

இரண்டு கையால்
படம் போடலாம்
ஒரு பெரிய கரும்பலகையின் முன் சற்றுத் தள்ளி நின்று கொண்டு இரண்டு கைகளிலும் சாக்பீஸை எடுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் போர்டில் பக்கத்து பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வலது கையால் ஏதாவது (ஒரு கோலம் மாதிரி) டிசைன் போடுங்கள். அதே சமயம் இடது கையையும் போடுவதற்கு இயக்குங்கள். உங்கள் வலது கை போட்ட மாதிரி வளைவுகளையும் கோடுகளையும் இடது கையாலும் உங்களை அறியாமல் போட்டிருப்பீர்கள். இம்மாதிரி போட்டு பலரை வியக்கச் செய்திருக்கிறேன்.
உங்கள் வலது கை செய்வதை இடது கை எப்படியோ கண்டுபிடித்து அதே மாதிரி தானும் செய்கிறது.
நான் பேப்பரில் போட்ட படம். கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

November 06, 2010

பட்டப்பா - கேரக்டர்


பழைய கோணிப்பை பிஸினஸில் லட்ச லட்சமாகப் பணம் பண்ண முடியும் என்றால் யாரும் சாதாரணமாக நம்பமாட்டார்கள். ஆனால் பட்டப்பா லட்சாதிபதியானதே பழைய கோணி பிஸினஸில்தான். அவர் கோணிகளை ஆயிரம், பத்தாயிரக் கணக்ககில்தான் வாங்குவார்; விற்பார். சில சமயம் லட்சக்கணக்க்கில் வாங்கிப்போட்டு டிமாண்ட் வரும்போது விற்பார். பெரிய பணக்காரராகாவிட்டாலும் பழைய கோணி பட்டப்பா என்று பலர் (அவருக்குப் பின்னால்) குறிப்பிடுவார்கள். ஊரில் பெரிய மனுஷனாக இருக்கவேண்டும் என்ற காம்ப்ளெக்ஸ் உண்டு. அதன் காரணமாக உலகில் உள்ள எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார்-கோணிகள் நீங்கலாக!

வாட்ட சாட்டமான உயரம்; உடல் அமைப்பு. தலையில் முடியிருந்தாலும் உச்சியில் மட்டும் ஒரு வழுக்கை வட்டம். சில்க் ஸ்லாக். மூன்று பட்டனாவது திறந்திருக்கும். கழுத்தில் இரட்டை புலிப்பல் சங்கிலி. அகல சரிகைப் பட்டை வேஷ்டி, கவர்ச்சிகரமான குள்ள குண்டுத் தனம்- பட்டப்பா உடை விஷயத்தில் மட்டும் மாறுதல் செய்து கொண்டே இருப்பார்.

November 02, 2010

குறிப்புகள் இல்லாத குறுக்கெழுத்துப் போட்டி

இது ஒரு குறுக்கெழுத்துப் போட்டி. குறிப்புகள் கிடையாது. ஆங்கில எழுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட எண். தரப்பட்டு, கட்டங்களில் எண்கள் போடப்பட்டுள்ளன.. அகராதியின் உதவியுடன் பூர்த்தி செய்யலாம். ஒரே ஒரு வார்த்தைதான் சற்று பழக்கத்தில் இல்லாத வார்த்தை. முழுமையாகப் போட்டு முடித்தவர்கள், அந்த ஒரு கடின பதத்தை எழுதினால் போதும்.பாராட்டு கிடைக்கும்!