August 05, 2010

நான் அலபாமக்காரன்

சில வருஷங்ககளுக்கு முன்பு அமெரிக்காவில் ஆர்லாண்டோவில் உள்ள டிஸ்னிலாண்டிற்குப் போயிருந்தேன். அப்போது ‘ யூனிவர்ஸல் ஸ்டூடியோஸ்’ என்ற பிரம்மாண்ட தீம் பார்க்கிற்குச் சென்றேன். சினிமா சம்பந்தமாக  பல நூறு விஷயங்கள் இருந்தன. பத்து மணி நேரத்திற்கும் அதிகமாகப் பார்த்தும் பலவற்றைப் பார்க்க முடியவில்லை.
      அதில் ஹிட்ச்காக் அரங்கம் ஒன்று இருந்தது, ஹிட்ச்காக்  சம்பந்தமான புகைப் படங்கள், தகவல்கள் மட்டுமல்ல, ஹிட்ச்காக் படத்தின் ஒரு காட்சியை  ஷூட் பண்ணிக் காண்பிக்க ஒரு சின்ன செட்டையும் போட்டு வைத்திருந்தார்கள்.  ஒரு உயரமான கட்டிடம். தூரத்தில் சுதந்திர தேவியின் சிலை.. காமிரா.சின்ன லிஃப்ட், விளக்குகள் எல்லாம் இருந்தன, அப்போது ஒரு அறிவிப்பு வந்தது.” இப்போது ஒரு திகில் காட்சியைப் படம் பிடித்துக் காண்பிக்கப் போகிறோம். இந்த உயரமான கட்டடத்தின் மேலே இருந்து ஒருவர் கீழே பல நூறு அடி விழப்போகிறதை. படம் பிடிக்கப் போகிறோம்.  இரண்டு நிமிஷப் படம் ... இதில் கைகால்களை உதறிக் கொண்டேஅலறியபடி  கீழே விழுபவராக நடிக்க ஒருவர் தேவை.. அவரை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்:
சட்டென்று யாரும் முன்வரவில்லை. இரண்டு மூன்று நிமிஷங்களுக்குப் பிறகு ஒரு இளைஞன் ”நான் நடிக்கிறேன்” என்று முன் வந்தார். அவரை  அறிமுகப்படுத்தி கொள்ளச் சொன்னார்கள்.
அவர் மேடை ஏறி “ எல்லாருக்கும் வணக்கம். என் பெயர் ராபர்ட்.. நான் சிறந்த மாநிலமான அலபாமாவிலிருந்து வருகிறேன். I COME FROM THE GREAT STATE OF ALABAMA!) ’என்று கம்பீரமாகச் சொன்னார்.. அவருக்கு தன் மாநிலத்தின் மீது அவ்வளவு பற்று!  அமெரிக்காவில் அலபாமா என்றால் சற்று இளக்காரம் தானாம்.
அப்படி அவர்  சொன்னதைக் கேட்டதும் என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
நாம் எப்போதாவது  “தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன்” என்பதற்குப் பதில் “ பெருமை வாய்ந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன்’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லி இருக்கிறோமா?  ..
யோசித்துப் பார்ப்போம்..

பின் குறிப்பு: சரி, அந்த திகில் காட்சியை எப்படிப் படம் பிடித்தார்கள்?
ஒரு சிறிய ஸ்டூலின்மேல் மல்லாந்து படுக்கச் சொன்னார்கள்.கை காலை
உதறிக் கொண்டே அலறுவது மாதிரி நடிக்கச் சொன்னார்கள்.  லிஃப்டில் காமிராமேன் உட்கார்ந்ததும், டைரக்டர் ஸ்டார்ட் சொன்னார். இரண்டு பிரம்மாண்டமான ஃபேன்களை ஓடவிட்டார்கள். லிஃப்ட் விர்ரென்று 20,30 அடி உயரம் மேலே சென்றது. அவ்வளவுதான் ஷூட்டிங்.
       உடனே படத்தைப் போட்டுக் காண்பித்தார்கள். மியூசிக்கையும் சேர்த்து இருந்தார்கள். அலபாமாக்காரர் குளோஸ் என்று பயப்படும் அளவுக்கு திகில் காட்சியாக இருந்தது. இத்தனைக்கும் அவர் அரை அங்குலம் கூட கீழே விழவில்லை!

கோளறு பதிகம், -9: கொத்தலர்

பாடல்- 9
கொத்தலர் குழலி யோடு விசயற்கு நல்கு
      குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
      திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலியோடு - கொத்தாக மணம் மிகுந்த மலர்களை கூந்தலில் அணிந்திருக்கும் உமையன்னையோடு
விசயற்கு நல்கு - விசயனான அருச்சுனனுக்கு அருள் செய்வதற்காக
குணமாய வேட விகிர்தன் - இறைவனின் குணங்களைப் பறைசாற்றும் உருவினை விடுத்து மாய உருவில் வேடனாகத் தோன்றும் திருவிளையாடல்கள் செய்பவன்
மத்தமும் - கங்கை என்னும் நீரையும்
மதியும் - பிறை நிலவினையும்
நாகம் - பாம்பினையும்
முடிமேலணிந்து - தன் திருமுடிமேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்றதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே - பௌத்தரையும் சமணர்களையும் வாதப்போரில் செருக்கழிக்கும் அண்ணலின் திருநீற்றின் பெருமையில் எனக்கு ஆழ்ந்த திடமான நம்பிக்கை உண்டு
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அத்தகு எதிர்ப்புகளும் சிவனடியார்களுக்கு நல்லவையாக மாறும் அவை மிக நல்லவையாக மாறும்

August 01, 2010

கமலாவும் எருமை மாடும்.. - முன்னுரை

தேவன் எழுதிய ஸ்ரீமான் சுதர்சனம் என்ற நாவலில் குடவாசல் என்ற மைத்துனன் கேரக்டர் அட்டகாசமாக உருவாக்கி இருப்பார்.. அந்த கேரக்டரின் பாதிப்பால் நான்  கமலா கதைகளை எழுதத் துவங்கிய போது என் மைத்துனன் தொச்சு என்ற கேரக்டரை  உருவாக்கினேன்  ’ மைத்துனன்
அமைவ தெல்லாம் இறைவன் கொடுத்த சாபம்’ என்று நான் சொல்லும் அளவுக்கு அவனால் நான் படும் பாட்டைக் கதைகளில் எழுதினேன். அந்தக் கதைகள் ஓரளவு (தன்னடக்கமே  நீ வாழ்க!),  நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த சீரீஸிலிருந்து ஒரு கதையை இங்கு தருகிறேன்.

கார்கில் சிறப்பு இதழ் ஒன்றை கல்கி வெளியிட்ட போது ஒரு ‘தொச்சு’ கதையை என்னிடம் கேட்டார்கள். அத்துடன் ’கார்கில் சம்பந்தமான கதையாக  இருக்கட்டும்’ என்றும் எழுதி இருந்தார்கள். ஆக கதையில் தொச்சு, கார்கில் போர், நகைச்சுவை இவை மூன்றும் இருக்க வேண்டும்.  என்ன செய்வது என்று தெரியாமல் மண்டையைக் குடைந்து கொண்டிருந்த போது, என் அருமை மனைவி கமலா “ அப்போ பிடிச்சு. கத்திண்டு இருக்கேன்... காதிலே விழுந்தால்தானே! எருமை மாட்டு முதுகில் மழை பெய்ஞ்சாகூட கொஞ்சம் சிலிர்த்துக்கும்...  உங்களுக்கு  எருமை மாட்டைவிட தடிமனான தோல்., அதனாலேதான்...” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே “ஆஹா ஐடியா வந்திரிச்சு: என்று பாட ஆரம்பித்தேன்.
“ கமலா..உன்  திட்டுமழையில் ஒரு ஐடியா துளிர் விட்டு விட்டது. கல்கிக்கு ஒரு எருமை கதை ரெடி” என்றேன்.  ( நமக்குள் இருக்கட்டும். அவள் அர்ச்சனையை நிறுத்துவதற்காக அப்போது ரீல் விட்டேன்.  அப்புறம் நிஜமாகவே எருமை மாட்டுக் கதை உருவாகிவிட்டது!).
இதோ அந்த கதை - தனிப் பதிவாக!

கமலாவும் எருமை மாடும் - கடுகு

  பொழுது விடிந்தால் சில வீடுகளில் டீவி போடுவார்கள்; சில வீடுகளில் ரேடியோ போடுவார்கள்;  வேறு சில வீடுகளில் ’சுப்ரபாதம்' போடுவார்கள். ஆனால் என் வீட்டில் விடிந்ததும் போடப்படுவது சண்டை!
    ஆமாம். தினந்தோறும் எங்கள் வீட்டுப் பால்காரர் வேதாசலத்துடன் கமலா-- அதாவது என் அருமை மனைவி -- ஒரு பத்து நிமிஷம் சண்டை போடுவாள். "என்னடா, கடன்காரா பாலா இது? இல்லை பாலாறா, புழலேரியா, செம்பரம்பாக்கமா? வர வர பாலில் ஒரே தண்ணி... அடுத்த மாதத்திலிருந்து நிறுத்திடப் போறேன்'' என்று கத்துவாள்.

 வருஷம் 365 நாள் -- லீப் வருஷத்தில் 366 நாள் -- இதே ராகம், இதே பல்லவி.
    இரண்டு வருஷமாகத்தான் வேதாசலம் பால் ஊற்றுகிறான். அதற்கு முன் அவனுடைய அப்பா தணிகாசலம் பால் ஊற்றி வந்தார். அவரிடமும் கமலா இதே பாட்டு. ஆனால் சாஹித்தியத்தில் சிற்சில வார்த்தைகள் மாறியிருக்கும். "என்னடா, கடன்காரா' என்று சொல்ல மாட்டாள். "என்னங்க, தணிகாசலம்" என்று சொல்வாள்!
    கமலா எவ்வளவு கத்தியும், எருமை மாடு முதுகின் மேல் தண்ணீர் பட்டது மாதிரி, எதுவும் அவன் மனத்தில் ஒட்டாது. பார்க்கப் போனால், அப்படி கமலா கத்தாவிட்டால், "அம்மாவுக்கு என்ன உடம்போ?'' என்று யோசிப்பான். கமலா கத்துவதைக் கேட்டுக் கேட்டு என் காது மரத்து விட்டது என்று கூடச் சொல்லலாம். ஒரு காது வழியாகப் புகுந்து ,அதே காது வழியாக வெளியே போய்விடும்! ஆனால், அன்று என் போதாத வேளை, ஒரு காது வழியாகப் போன அவளது கத்தல் மற்றொரு காது வழியாக வெளியே போகுமுன் என் மூளையை லேசாகத் தாக்கி விட்டுச் சென்றது.
    பால்காரர் சென்றதும், கமலாவிடம் கேட்டேன். "ஏன் கமலா, தினமும் இந்த பால்காரரோட சண்டை போடறது, எத்தனை வருஷம் ’கன்னித் தீவு' மாதிரி தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது?''
    "நான் சண்டைக்காரி. அதுதான் சண்டை போடறேன். நீங்க ஆம்பிளையா, லட்சணமா, "ஏண்டா, இப்படி பண்றேன்"னு ஒரு வார்த்தை கேட்டா அவனுக்குக் கொஞ்சம் உறைக்கும்...''
    "நான் சொன்னால் உறைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. என் வாழ்க்கையில் நான் நிதர்சனமாகக் கண்ட உண்மை.''

மூன்று சிலேடைகள்--கண்ணதாசன் சொன்னது

தையலுக்கு உதவும்!

ஒரு புலவரின் மனைவி ஒரு நாள் வடை செய்தார். புலவரும் மனைவியும் சாப்பிட்ட பிறகு சில வடைகள் மிகுதியாக இருந்தன.
மறுநாள் காலை  புலவரின் மனைவி,  அந்த வடைகளை புலவரிடம் சாப்பிடக் கொடுத்தார். முந்தைய தினம் செய்த வடை என்பதாலும் கோடை காலம் என்பதாலும் வடைகள் ஊசிப் போயிருந்தன.
புலவர் வடையை பிய்த்தார். ஊசிய வடையாக இருந்ததால் உள்ளே இருந்து நூல் நூலாக வந்தது.
“இந்தா, வடை. ஊசிப் போய்விட்டது” என்று சொல்லியபடியே மனைவியிடம் அவற்றைக் கொடுக்க வந்தார்.
”ஊசிப் போய்விட்டால் குப்பையில் போடுங்கள். ஏன் என்னிடம் கொடுக்கிறீர்கள்?” என்று சற்று கோபமாகக் கேட்டாள்.
புலவர் சாவதானமாகச் சொன்னார். “வடை ஊசிப் போனதால், நூல் வந்தது. ஊசியும், நூலும்  இருப்பதால் அவை தையலுக்கு உபயோகப்படுமே என்று உன்னிடத்தில் கொடுத்தேன்” என்றார்!

மூன்று சிலேடைகளைக் கவனியுங்கள்.
தையல் = தைப்பது, பெண்மணி
ஊசி = துணி தைக்கும் ஊசி, உணவுப் பொருள் கெட்டுவிடுவது
நூல் = வடையிலிருந்து வரும் இழை, தைக்கும் நூல்