May 06, 2010

டயரியும் நானும் - கடுகு

எனக்கு டயரி எழுதும் பழக்கம் கிடையாது. (`அதுவரைக்கும் நாங்கள் பிழைத்தோம்' என்று நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவது தெரிகிறது!) அதற்கு பல முக்கியக் காரணங்கள். முதலாவது சோம்பேறித் தனம். இரண்டாவது நாம் மறக்க விரும்பும் விஷயங்களை எழுதித் தொலைப்போம். எப்போதாவது டைரியைப் புரட்டினால் அதுதான் முதலில் கண்ணில் படும். அந்த விஷயத்தை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதபடி பாடாய்ப் படுத்தும். மூன்றாவது: என்னிடம் கறுப்புப் பணம் கிடையாது.
அது என்ன கறுப்புப் பணத்திற்கும் டைரிக்கும் சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நீங்கள் கேட்காவிட்டாலும் கேட்பதாகப் பாவித்துப் பதில் சொல்கிறேன்!
வருமான வரி அதிகாரிகள் எங்கேயாவது ரெய்டு சென்றார்கள் என்றால் செய்திகளில் முதலில் வருவது: ``ரெய்டின் போது கணக்கில் காட்டாத பல லேவாதேவி (யார் அந்த `தேவி?!' அசின் மாதிரி இருப்பரா” அல்லது தமன்னா மாதிரி இருப்பாரா? )  விவரங்கள் குறிக்கப்பட்டிருந்த டைரியைக் கைப்பற்றினார்கள்.''
அந்த ஆசாமி எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழியாக இருந்தாலும் டயரி எழுதியிருப்பான்! அப்படித்தான் செய்திகள் வரும்!
இப்படிப்பட்ட செய்திகளை நிறையப் படித்ததன் விளைவாக டயரி = கறுப்புப் பணம் என்று என் மனதில் பதிந்து விட்டது.
இதை எல்லாவற்றையும் விட வேறொரு காரணமும் இருந்தது. சுமார் நூறு வருடங்கள் கழித்து என் கொள்ளுப் பேரனின் கொள்ளுப் பேரன் என் டயரியைப் படிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். படிக்கப் படிக்க என்னைப் பற்றிய மதிப்பு அவனுக்குக் குறைந்து கொண்டே போகும்.
உதாரணமாக ``தீபாவளி போனஸ், பிராவிடண்ட் பண்டில் கடன் ,இரண்டையும் சேர்த்து ஒரு 20,000 ரூபாயில் கலர் டிவி இன்று வாங்கினேன்'' என்று எழுதியிருப்பேன். அதைப் படித்து விட்டு அவன் என்ன நினைப்பான் தெரியுமா? ``ஹும் பிசாத்து.. 20,000 ரூபாய்... நாலு ஃப்ரண்ட்ஸுடன் நாம் ஸெவன் ஸ்டார் ஓட்டலுக்குப் போய் டின்னர் சாப்பிடுவதற்கு ஆகிற செலவு கூட இல்லை. பெரிய டிவி வாங்கிட்டாராம்... ஜம்பமாக டயரியில் எழுதியிருக்கிறார்'' என்று நினைப்பான்.

May 04, 2010

ஸ்வர ஃபாண்ட் என்பது என்ன”

எழுத்துருக்களும்  நானும் என்ற ஒரு பதிவில் திருப்புகழ் ஸ்வரப் புத்தகம் அச்சடிப்பதற்காக விசேஷ ஸ்வர எழுத்துரு செய்து கொடுத்ததாக எழுதி இருந்தேன். அது என்ன என்று சிலர் கேட்டிருந்தனர்.
 ஸ்வர எழுத்துரு என்று எதுவுமே கிடையாது. இது நானே வைத்த பெயர்.
நமது  கர்நாடக சங்கீத ஸ்வரப்புத்தகங்களில் வழக்கமாக நாம் உபயோகிக்காத - அல்லது தமிழிலேயே இல்லாத எழுத்துருக்கள் இருப்பதைப் பார்த்திருக்கக்கூடும். உதாரணத்திற்கு சில எழுத்துக்களை இங்குள்ள படத்தில் பாருங்கள்.

சில மெய் எழுத்துகளின் கீழே புள்ளி இருக்கும். ரி நி ரீ போன்ற சில எழுத்துகளின் மேல் கொக்கியுடன் ஒரு புள்ளியும் இருக்கும். இப்படி இரண்டு உயிரெழுத்துகளை ஒரே மெய்யெழுத்தின் மீது கணினியில் அச்சடிக்க முடியாது ஆகவே  ஒரு உயிரெழுத்தை மட்டும் மெய்யெழுத்தின் மேல் டைப் செய்து பேப்பரில் பிரிண்ட் எடுத்து விட்டு பிறகு ஒரு ஆர்டிஸ்ட்டு பேனாவினால் புள்ளியோ, கோடோ. கொக்கியோ போட்டுக் கொடுப்பார். இப்படிப் போடப் படுபவை ஒரே சீராக இருக்காது. ஆகவே இம்மாதிரி எழுத்துகளை
எழுத்துருவிலேயே சேர்த்து நேரிடையாக டைப் செய்ய வகை செய்தேன். அப்படி நான் உருவாக்கிய முருகா எழுத்துருவைத்தான்  (TM-MURUGA.TTF) படத்தில் காட்டியுள்ளேன். ஏதோ கர்நாடக ஸங்கீதத்திற்கு நான் செய்த சிறிய பணி,
பின் குறிப்பு.  - ஸ்வர புத்தகங்கள் அச்சடிப்பவர்களுக்கு இந்த எழுத்துரு தேவை எனில் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். எழுத்துரு இலவசம். 

May 01, 2010

லிஃப்கோ சர்மா

லிஃப்கோ புத்தக கம்பெனியின் ஸ்தாபகர் சர்மா தீவிர வைஷ்ணவர். லிட்டில் ஃப்ளவ்ர் கமபெனி ( லிஃப்கோ) துவக்கிய போது அவரது  பள்ளி முதல்வர் ஃபாதர் வெர்ஜரிடம் போய், அவரது ஆசிகளைக் கேட்டார். வெர்ஜர் தந்த பெயர்தான் லிஃப்கோ!

தினமணி கதிரில் அவரைப் பற்றி எழுதுவதற்காக அவரைப் பார்க்கச் சென்றேன். ( ஜூன் 1969). அவரைப் பேட்டி கண்டு ஒரு கட்டுரையை எழுதினேன். அது தினமணி கதிரில் வெளியாயிற்று
.
பிறகு சில வருஷ்ங்கள் கழித்து திரு சர்மா காலமானார். அவர்  காலமான சில நாட்கள் கழித்து லிஃப்கோவிலிருந்து எனக்கு ஒரு கவர் வந்தது. பிரித்துப் பார்த்தேன். ஒரு கடிதமும் செக்கும் இருந்தன. சர்மாவின் புதலவர் திரு வரதன் எழுதி இருந்தார்: “ எங்கள் தந்தையார் காலமாவதற்கு முன்பு ஒரு விரிவான உயிலை எழுதியிருந்தார். அதில் அவருக்கு உதவிய பலரைப் பற்றி நனறியுடன் குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறிய தொகையை அனுப்பும்படி எழுதியிருந்தார். . அதன்படி உங்களுக்கு இத்துடன் ஒரு செக் அனுப்புகிறேன்.”

என் பெயருக்கு முன்னால் ஒரு வரிசை எண் இருந்தது. 157 என்பது என் நினைவு. செக தொகை: ரூ.5. ( மிக குறைந்த  தொகை என்று உதட்டைப் பிதுக்காதீர்கள். எழுபதுகளில் 5 ரூபாய்க்கு ஒரு டாலர்!)

உயிலில் பெயர்களைக் குறிப்பிட்டதுடன் பணமும் ஒதுக்கி வைத்த லிஃப்கோ சர்மா அசாதாரண மனிதர்தான்!

டேவிட் வெல்ஸ்

 என் மேஜையின் மீது மூன்று  புத்தகங்கள் உள்ளன. டேவிட் வெல்ஸ் ( DAVID WELLS)   எழுதியவை, மூன்று புத்தகங்களும் கணிதம் சம்பந்தமானவை. மூன்றும் அற்புதமான புத்தகங்கள்.முதல் புத்தகம் எண்களைப் பற்றியது. புத்தகத்தின் பெயர்: சுவையான மற்றும் ஆச்சரியமான  எண்கள். 220 பக்கங்கள். அப்பப்பா, எத்தனை தகவல்கள். எல்லாம் சுவையானவை; மிகவும்  எளிமையானவை. கணக்கு என்று பயப்படாமல் படிக்கக்கூடியது.
இரண்டாவது புத்தகத்தின் பெயர்: சுவையான மற்றும் ஆச்சரியமான  கணிதம். கிட்டதட்ட 250 புத்தகங்களிலிருந்து சிறிது பெரிதுமாகக் கணிதம் பற்றிய பல பகுதிகளைத்  தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.. அந்தப் புத்தகங்களின் பட்டியலும் உள்ளன. 310 பக்க  புத்தகததைப் படிக்கும்போது மனதிற்குள் : ஐயோ.. இன்னும் 200 பக்கம்தான் இருக்கிறதா, இன்னும் 150 பக்கம்தான் இருக்கிறதா, இன்னும் 100 பக்கம் தான் இருக்கிறதா, என்று மனது அடித்துக் கொள்ளும். எல்லாம்.அவ்வளவு சுவையான விஷயஙகள். 250 புத்தகங்களை  அவர் படித்திருக்கவேண்டும்.
மூன்றவது புத்தகம்: சுவையான மற்றும் ஆச்சரியமான  கணிதப் புதிர்கள்,  375 பக்க புத்தகதில்  568 கணிதப் புதிர்கள் உள்ளன. ( சாம் லாயிட், மார்ட்டின் கார்ட்னர், எச்..ஈ,டூட்னி ஆகியவர்கள் எழுதிய புத்தகங்களில் உள்ள பல புதிர்கள் இதில் இருந்தாலும்  சுமார் 100 புதிய புதிர்களையும்  தந்துள்ளார்
வெல்ஸ் எழுதிய இன்னும் இரண்டு புத்தகங்களை வலைபோட்டுத்  தேடிக்கொண்டிருக்கிறேன்..
         இருங்கள். சுவையான தகவல் இனிமேல்தான் வரப் போகிறது. வெல்ஸ் பிரைமரி பள்ளி மற்றும்  செகண்டரி பள்ளியில் கணக்கு வாத்தியார்! ஆமாம். கணக்கு வாத்தியார்!.. நம்புங்கள்.
வெல்ஸ் கணிதப் பாடம் படிக்க கேம்பிரிட்ஜில் சேர்ந்தார். பரீட்சையில் தோல்வியுற்றார். அதற்குப் பிறகு அங்கே படிப்பைத்  தொடரவில்லை ( என்று நினைக்கிறேன்). கணக்கு வாத்தியாராகி விட்டார்!
இவரது புத்தகங்களை பிரசுரித்திருப்பது: பெங்குவின் நிறுவனம்!

பின்குறிப்பு:  பல அரிய கணிதத் தகவல்களும்.பாஸ்கரா, ஐன்ஸ்டீன். இயூலர், பால் எர்டோஸ், கலிலியோ,ஃபிப்பனொக்கி, ராமானுஜன்,  நியூட்டன்   போன்றவர்களைப் பற்றிய பல செய்திகள புத்தகங்களில் உள்ளன. அவைகளை. அவ்வப்போது போடப் பார்க்கிறேன். பயப்படாதீர்கள், அவை கணிதமாக இருக்காது. கதையாக இருக்கும்.

நாணா. - கேரக்டர்

சைலன்சர் இருந்தும், சைலன்சர் இல்லாத மோட்டார் சைக்கிளைவிட அதிகமாக படபட சப்தம் போடும் மூன்றரை ஹார்ஸ் பவர் மிலிடிரி மோட்டார் சைக்கிளில் அட்டகாசமாக, அண்ணாமலை மன்றத்தின் ஸ்டேஜின் வாசல் கதவு வரை வந்து வண்டியை ’ஜங்க்’ என்று நிறுத்துபவன்தான் நாராயணசாமி என்னும் நாணா.
நல்ல உயரம். நல்ல அகலம். ஆஜானுபாஹுவான ஆள். பூப் போட்ட ஸ்லாக், மேல் பட்டன் திறந்திருக்கும், கழுத்தில் தங்கச் செயின், இடது கையில் டிஜிட்டல் கடிகாரம்.  கழுத்தில் லாவகமாகச் சுற்றப்பட்டிருக்கும் கர்ச்சீஃப். இடது கையில் சாவிக்கொத்து.
நாணா இருக்குமிடத்தில் அட்டகாசமான சிரிப்பு இருக்கும். ஊர் வம்பு இருக்கும். சென்னையிலுள்ள அமெச்சூர் நாடக நடிகர்களைப் பற்றியும் குரூப்களைப் பற்றியும், அரட்டையும் கீழ்வெட்டும் இருக்கும். நகர சபாக்களைப் பற்றி  நுனி நாக்கு விமர்சனம் இருக்கும்.
நாற்பதைத் தாண்டிய நாணா ஒரு அமெச்சூர் நாடகக்குழுவின் சர்வாதிகாரி. இருந்தும் எல்லாரும் அவனை ’நாணா’, ’நீ’, ’வா’, என்று சர்வ உரிமையுடன் பேசுவார்கள். அவர்களுக்குத் தெரியும், நாணாவிடம் தாராளமாக உரிமை எடுத்துக் கொள்ளலாம் என்று. சில சமயம் கோபம் வந்து நாணா கத்த ஆரம்பித்தால் எல்லோரும் கப்சிப் தான்.
நாணா, நாடகத்தில் நடிப்பதை நிறுத்தி பல வருஷங்களாகின்றன. இருந்தும் நாடகத்தின் மேல் தீராத மோகம்.
"என்னடா, பசங்களா.... மணி ஐந்தரை ஆச்சு. சரியா ஆறாவது மணிக்கு டிராமாவிற்குப் பெல் அடித்துவிடுவேன்... எவனாவது ரெடியாகவில்லை என்றால் அவன் இனிமேல் நம்ம குரூப் பக்கமே தலைவைத்துப் படுக்கவேண்டாம்.... யாரு தர்மலிங்கமா? மேக்கப் போட நீ வந்துட்டியா இன்னிக்கி... உங்கப்பா எங்கே? மனோஹர் டிராமாவிற்குப் போய்ட்டாரா? பத்து ரூபாய் அவங்க ஜாஸ்தி கொடுக்கிறாங்க அதனாலே இவர் ஓடிப் போய்ட்டாரு... சரி.... சரி.... பின்னால் பேசிக்கிறேன். நீ வேலையைக் கவனி.