December 21, 2019

மெய் சிலிர்த்திடும் என்பது மெய்!

இந்த பதிவிற்கு இரண்டு முன்னோட்டங்கள் தேவைப்படுகின்ன.
பதிவில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். முதலில் இரண்டு பேரை பற்றி சுருக்கமான குறிப்பைத் தருகிறேன்


1. ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக் (1878-1969) [ HARRY EMERSON FOSDICK ] என்ற
பாதிரியார். இவர் சாதாரண பாதிரியார் அல்ல; அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தேவாலயத்தை நிறுவியவர். சுமார் 50 புத்தகங்களை எழுதியவர்.
இவரது தந்தை, அமெரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தரான ராக்பெல்லர் நிறுனத்தில் பணியாற்றியவர்- அதுவும் நன்கொடை அளிக்கும் இலாகாவில்!
ஃபாஸ்டிக் எழுதியுள்ளஎழுதியுள்ள புத்தகங்களில் ஒன்று: ON BEING FIT TO LIVE WITH. அதில் கிடைத்த ஒரு தகவல் மெய் சிலிர்க்கச் செய்தது. அந்தத் தகவலைப் பதிவாக அளிக்கிறேன்.

2. நியூட்டன் பேக்கர் (1871-1937) [NEWTON BAKER] : இவர் ஒரு பிரபல வழக்கறிஞர், அரசியல்வாதி, சிறந்த பேச்சாளர். அன்றைய கால கட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்த வுட்ரோ வில்சன் [Woodrow Wilson] இவரை தனது யுத்த இலாகா செயலராக (1916 -1921) நியமித்திருந்தார். மேலும், இவர் பிரபல ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு அறங்காவலாரகவும் இருந்தார். இவர் பின்னால் அமெரிக்க அதிபர் பதவி தேர்தலில் நின்றவர்.

( இவர்களின் படங்களை மேலே MAST HEAD-ல் பாருங்கள். இருவரும்
TIME பத்திரிகையின் அட்டையில் இடம் பெற்ற பிரமுகர்கள்.)

நியூட்டன் பேகர், தன்னிடம் கூறிய ஒரு தகவலைப் பாதிரியார் ஃபாஸ்டி க் தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்தத் தகவலைப் பார்க்கலாம்
* *
யுத்த இலாகா செயலர் என்ற முறையில், நியூட்டன் பேகர் பல ராணுவ மருத்துவமனைகளுக்குச் சென்று, போரில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பது மற்றும் ஆறுதல் கூறுவது வழக்கம். அப்படி ஒரு சமயம் மருத்துவமனைக்குச் சென்ற சமயம் அங்கு சிகிச்சை பெற்றுவரும் ஒரு ராணுவ வீரரைப் பார்த்த போது, அவருடைய ரத்தமே உறைந்து போய்விட்டது! (மனதைத் திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.)
அந்த ராணுவ வீரர் ஒரு இளைஞன். அந்த வீரனை மருத்துவமனையை ஒட்டி இருந்த புல்தரைக்கு சக்கர நாற்காலியில் ரு நர்ஸ் கொண்டு வருவதைப் பார்த்தார்; அப்படியே இரத்தம் உறைந்தது போல் உணர்ந்தார். காரணம் அந்த இளைஞனுக்கு இரண்டு கால்களும் இல்லை; ஒரு கையையும் இழந்திருந்தான்; இரண்டு கண்களும் பறி போயிருந்தன. போதாக்குறைக்கு போரில் ஏற்பட்ட காயங்களால் அவன் முகம் கன்னாபின்னாவென்று குரூரமாகக் காட்சியளித்தது.
அந்த ராணுவ வீரன் மிகவும் சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்தார். வாழ்க்கையே அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் இப்படி ஒரு ஆள் இருக்கமுடியுமா என்று வியந்தார்.
அந்த மருத்துவமனையைச் சுற்றிவிட்டுத் திரும்பி விட்டார்.

December 05, 2019

பத்து ஆண்டு நிறைவு


கடுகு தாளிப்புவிற்கு   பத்து  ஆண்டு நிறைந்துள்ளது.

 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத்  துவக்கினேன்.
   தனியாளாக நம்மால் எத்தனை பதிவுகள் எழுதி, தட்டச்சு செய்து, பதிவாகப் போட முடியும் என்று ஒரு கணம்கூட யோசிக்கவில்லை; தயங்கவும் இல்லை.  காரணம், “தம்பி, நீ எழுது என்று, கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு   சொன்ன (அல்லது ஆசீர்வதித்த) கல்கி அவர்கள் என்னை வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை என்னிடமிருந்து தான்!  ஏன், இன்றும், பத்து ஆண்டுகள் பதிவுகள் எழுதிய பிறகும், அவர் மீது உள்ள நம்பிக்கை ஒரு சத விகிதம் கூட குறையவில்லைஅவர் என் குருநாதர் என்று நான் கூறிக் கொண்டால்  எனக்குப் பெருமை ஏற்படலாம்.  ஆனால்அவருடைய சீடன் நான் என்பதால் அவருடைய திறமைக்கும், புகழுக்கும் எவ்வித ஏற்றமும் இல்லை. 

 கிட்டத்தட்ட
 
630 பதிவுகள் போட்டுள்ளேன். இது பெரிது அல்ல. இந்த சமயத்தில் ஒரு தகவலைச் சொல்ல மனம் விழைகிறது. என் வலைப்பூவின் தலைப்பு  ஓவியங்கள் (Masthead) எல்லாவற்றையும்  நானே வடிவமைத்துள்ளேன். வலைப்பூ இல்லாவிட்டால் இவ்வளவு படங்களை (சுமாராக) உருவாக்கவும்,  பதிவு எழுதுவதற்காகப் பல புத்தகங்களைப் படித்திருக்கவும் மாட்டேன். வலைப்பூ  என்னுடைய உந்து சக்தியாக விளங்கி வருகிறது.
     இவை எல்லாவற்றையும் விட என் வலைப்பூவைப் படிக்கும் உங்களில் பலர் எழுதிய பாராட்டுகளும்  ‘சபாஷ்களும்  வைட்டமின் மாத்திரைகளாகச் செயல் பட்டுள்ளன. இதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது என் மனதில் மகிழ்ச்சியை விட அதிகமாக நெகிழ்ச்சிதான் ஏற்படுகிறதுவார்த்தை ஜாலத்திற்காக இப்படி எழுதவில்லை. அப்படி எழுதினால் அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகும்.
 அனைவருக்கும் நன்றி. முக்கியமாய்  எழுத்தாளர் சுஜாதா தேசிகன் அவர்களுக்கு  ஸ்பெஷல் நன்றி. அவர் தான் பதிவுகள் எழுதும்படி முதன் முதலில் (அன்புக்) கட்டளை இட்டார்.
       அனைவருக்கும் வணக்கம்.      -- கடுகு 

November 30, 2019

புள்ளிகள்:துணுக்குகள்!

30 செகண்ட் ட்யூன், சம்பாதித்தது....அம்மாடி!
JEOPARDY,அமெரிக்காவின் மிகப் பிரபலமான வினாடி வினா நிகழ்ச்சி . இதில் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பவர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் டாலர்கள் என்று பரிசாக அளிக்கப்படுகிறது,  இந்த அரைமணி நேர நிகழ்ச்சியில் ஒரு லட்சம் டாலர்களை  வென்றவர்கள் பலர் உண்டு. 
    இந்த நிகழ்ச்சியின் கடைசி கேள்விக்கு விடை அளிப்பதற்கு முன்   30 வினாடி ட்யூன் ஒன்று போடப்படுகிறது .1964’ல்   இருந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அந்த டியூன் முக்கியமான அங்கமாக விளங்குகிறது. இந்த ட்யூனைப் போட்ட கிரிஃப்ஃபின் எனும் இசை அமைப்பாளருக்கு   ராயல்டியாக  70 லட்சம் டாலர் கிடைத்ததாக சில வருஷங்களுக்கு முன்பு அவரே சொல்லி இருக்கிறர். இன்றும் அந்த நிகழ்ச்சியில் இந்த  ட்யூனுக்கக  ராயல்டி தொகை அவருடைய பேரனுக்கு(?) போகக்கூடும்! 
ரூஸ்வெல்ட்டிற்கு ஓட்டு போடாததன் காரணம்!
அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் 'டெமாக்ரடிக்' கட்சியை சேர்ந்தவர் முதல் முதலாக   1933’ல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்து 1937’ல் இரண்டாவது தடவையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941’ம் வருஷம் மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிட்ட அவர், தனது நெருங்கிய நண்பரான தனது பேட்டைவாசி முதியவரைச் சந்தித்து, தனக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டார்.
அவரிடம்  “அதிபர் தேர்தல் வருகிறது. நீங்கள் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்” என்று கேட்டார் ரூஸ்வெல்ட். அந்த முதியவர்  “வழக்கம்போல் நான் ’ரிபப்ளிகன்’   கட்சிக்குத் தான் போட்டு போட போகிறேன்” என்றார். ரூஸ்வெல்ட்டிற்குக் கொஞ்சம் ஷாக். அவரிடம்  “சரி,  மூன்றாவது தடவை நான் நிற்பதால் நீங்கள் அப்படி தீர்மானித்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

November 12, 2019

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 3

ஷார்ட்டியின் மனமாற்றம்


  அடுத்த மூன்று மாதத்தை எப்படி,எங்கு கழிப்பது என்பதை மேலெழுந்த வாரியாகத் திட்டமிட்டு விட்டு, தன் நண்பரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஷார்ட்டிக்கு டாக்டர்  லூமிஸ் போன் செய்தார்; தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரும் வந்தார்.
    அவரிடம் லூமிஸ் “வீட்டிற்குப் போய், துணிமணிகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு வா. நாம் தென் அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணமாகப் போகப் போகிறோம்” என்றார்.

    இதைக் கேட்ட ஷார்ட்டி சற்று தயங்கியபடி சொன்னார் “சுற்றுப்பயணம் வர எனக்கு ஆசைதான். ஆனால் ஒரு முக்கிய வேலையை முடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். அடுத்த சில மாதங்களில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. ஒரு வாரம் கூட நான் இங்கு இல்லாமல் இருக்க முடியாது” என்றார்
  அவரிடம் டாக்டர் லூமிஸ் தனக்கு வந்த கடிதத்தைப் படித்துக் காண்பித்தா.ர் அதை பொறுமையாகக் கேட்ட ஷார்ட்டி “என்னால் உங்களுடன் வருவதற்கு இயலாது. கடந்த சில வாரங்களாக ஒரு முக்கிய வியாபார ஒப்பந்தத்தை நிறைவு செய்ய முயன்று கொண்டிருக்கிறேன். வெண்ணை திரண்டு வந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஊரை விட்டு போக முடியாது. நான் இங்கு இருந்தாக வேண்டும். வேறு சமயம். நாம் இரண்டு பேரும் சுற்றுப்பயணம் போனால் போகிறது” என்றார். அதே மூச்சில், “ஆமாம், அந்த பெண்மணி என்ன எழுதினார்? திரும்பப் படியுங்கள்” என்றார். “மழ்ச்சியை அனுபவியுங்கள். நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்துவிட்டது.. அப்படியா?” என்று கேட்டார்.
   சில கணங்கள் அவர் அமைதியாக இருந்தார். டாக்டர் லூமிஸும் எதுவும் பேசவில்லை. ஷார்ட்டி அந்தப் பொன்மொழியை மனதில் அலசிக் கொண்டிருந்தார்.
    அவருக்கு ஏதோ ஒரு விழிப்பை அந்தப் பொன்மொழி ஏற்படுத்தி இருக்க வேண்டும். பிறகு ஷார்ட்டி சொன்னார்: “இவர்கள் முடிவு எடுப்பதற்காக நான் மூன்று மாதங்கள் காத்து இருந்தேன்; அவர்கள் இன்னும் முடிவெடுக்க வில்லை. இனிமேலும் காத்திருப்பதற்கு நான் என்ன பைத்தியக்காரனா? எனக்காக அவர்கள் காத்திருக்கட்டும். சரி, டாக்டர் எப்போது போகலாம் என்கிறீர்கள்?” என்று கேட்டார்!.
                                *                                 *                             *
உருகிப்போன  ஸ்டீல்!
      லூமிஸும் ஷார்ட்டியும் உல்லாசக் கப்பலில் தென் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்கள்  ஒவ்வொரு நாளும் அவர்கள் மனதில் இருந்த பல பிரச்சினைகளின் கனமும், அழுத்தமும் கடல் பயணத்தில் மெல்ல மெல்ல ஆவியாகிப் போனதாக இருவரும் உணர்ந்தார்கள்.

November 07, 2019

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 2

டாக்டர் லூமிஸ் (1877–1949)  தனது இந்த அனுபவம் பற்றி ஒரு விவரமான கட்டுரையைப் பின்னால் எழுதினார். அதன் தலைப்பு “ஒரு சீன தோட்டத்தில்!” அதிலிருந்து சில வரிகளைப் பார்க்கலாம்.

டாக்டர் லூமிஸின் கட்டுரை:
 “ஒரு கடிதத்தின் கதையைப் பல தடவை பலரிடம் நான் சொல்லி இருக்கிறேன். அந்த ஒரு கடிதம் நிகழ்த்திய மாற்றம் அளவிட முடியாதது. முதலில், கடிதத்தைத் தருகிறேன். அது சைனாவில் இருந்து வந்தது.
    அன்புள்ள டாக்டர்,
        இந்த கடிதத்தை பார்த்து வியப்படையாதீர்கள். என் முழுப் பெயரை இங்கு நான் எழுதவில்லை. என் பெயரும் உங்கள் பெயர் தான் என்பதை மட்டும் மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
       என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்காது. இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் மருத்துவமனையில் நான் இருந்தேன். வேறு ஒரு டாக்டர் என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனக்குக் குழந்தை பிறந்தது; அன்றே அது இறந்து விட்டது.
               என்னை கவனித்து வந்த டாக்டர் ஒரு நாள் என்னிடம், ”உங்களுக்கு ஒரு சின்னத் தகவல். உங்கள் பெயரையே உடைய ஒரு டாக்டர் இங்கே இருக்கிறார். இங்கு அட்மிட் ஆனவர்களின் பெயர்கள் எழுதியுள்ள நோட்டீஸ் போர்டில் உங்கள் பெயரைப் பார்த்த அவர் உங்களைப் பற்றி என்னிடம் விசாரித்தார்; உங்களைப் பார்க்கவும் விரும்பினார்.... குழந்தையை இழந்த நீங்கள் யாரையும் சந்திக்க விரும்புவது சந்தேகம் என்று அவரிடம் சொன்னேன்” என்றார்.
      “அதனால் என்ன? அவரைப் பார்க்க எனக்குத் தயக்கம் இல்லை” என்று நான் கூறினேன்.

                  சிறிது நேரம் கழித்து நீங்கள் என் அறைக்கு வந்தீர்கள். என் படுக்கைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டீர்கள். எனக்கு ஆறுதல் கூறினீர்கள். மற்றபடி என்னிடம் அதிகம் எதுவும் பேசவில்லை. உங்கள் முகபாவமும், குரலில் இருந்த கனிவும் என் கவனத்தை ஈர்த்தன. அது மட்டுமல்ல, உங்கள் நெற்றியில் கவலையின் அறிகுறியாக பல ஆழமான கோடுகள் இருந்ததையும் பார்த்தேன். உங்கள் பரிவான ஆறுதல் வார்த்தைகளாலோ என்னவோ வெகு விரைவிலேயே என் உடல் நலமடைந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன்.
       அதன் பிறகு உங்களை நான் சந்திக்கவில்லை. ஆனால் தாங்கள்  இரவு பகல் என்று பாராது மருத்துவ மனையிலேயே இருப்பதாகச் சொன்னார்கள்.

.
       இன்று பகல் சைனாவில் பீஜிங் நகரில் ஒரு அழகான வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளேன். வீட்டின் தோட்டத்தைச் சுற்றி உயரமான மதில் சுவர்கள் இருந்தன. அதன் ஒரு பகுதியில், அழகிய சிவப்பு, வெள்ளை மலர்ச் செடிகள் காட்சியளித்தன. அங்கு சுவரில் சுமார்  இரண்டு அடி நீளமுள்ள ஒரு பித்தளைத் தகடு   பதிக்கப்பட்- டிருப்பதைப் பார்த்தேன். அதில் சீன மொழியில் ஏதோ பொறிக்கப் பட்டிருந்தது. அதைப் படித்து மொழிபெயர்த்துச் சொல்ல ஒருவரைக் கேட்டுக் கொண்டேன். அவர் படித்துச் சொன்னார்:
     “மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!” என்பதே அந்த வாசகம்.

அந்த வாசகத்தை பற்றி விடாது மனதில் அசை போட்டேன். எனக்கு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை. இறந்துபோன குழந்தையை எண்ணி இன்னும் வருந்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கணம் என் மனதில் ஒரு திடீர் முடிவு தோன்றியது.  ‘இனியும் நான் காலம் தாழ்த்தக் கூடாது. நான் ஏற்கனவே தாமதம் செய்து விட்டேன்’ என்று என் உள்ளுணர்வு எனக்குத் தெரிவித்தது. ‘இறந்துபோன குழந்தையைப் பற்றிய எண்ணி விசனத்திலேயே மூழ்கி இருக்கிறாயே’ என்று என் உள் மனது கேட்டது.
    குழந்தையை பற்றி எண்ணம் வந்ததும், மருத்துவமனையில் நீங்கள் என்னை வந்து பார்த்தது நினைவுக்கு வந்தது. அது மட்டுமல்ல, ஓய்ச்சலே இல்லாமல் உழைப்பதன் அடையாளமாக உங்கள் நெற்றியில் விழுந்திருந்த கோடுகளும் நினைவுக்கு வந்தன. எனக்குத் தேவைப்பட்ட அனுதாபத்தைக் கனிவுடன் நீங்கள் அளித்தீர்கள்.
     உங்களுக்கு என்ன வயது  என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை என் தந்தை ஸ்தானத்தில் நான் வைக்கக்கூடிய அளவு வயதானவர் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. எனக்காக நீங்கள் அன்று செலவழித்த சில நிமிடங்கள் உங்களைப் பொருத்தவரை ஒன்றும் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு குழந்தையை இழந்த, அதுவும் அது பிறந்த தினத்தன்றே பறிகொடுத்த ஒரு பெண்ணுக்கு அது மிக மிகப் பெரிய விஷயம்.
   பதிலுக்கு நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவ்வப்போது எண்ணுவது வழக்கம். அது அறிவீனம் என்று எனக்குத் தெரியும்.
   இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்த தினம், நீங்கள் தனியாக ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து, சீன தோட்டத்துப் பொன்மொழியை தீர்க்கமாகச் சிந்தியுங்கள்!
    மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!     
                                                                                  ---  மார்க்கெரட்
       

November 01, 2019

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 1



முதலில் சில வார்த்தைகள்.
சில வாரங்களுக்கு முன்பு, ‘நான்கு யோக முறைகள்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய விடுதியில் மூன்று நாட்கள் ஒரு பயிலரங்கம் நடந்தது.  காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை விடுதியிலேயே நடந்தது. விடுதியில் தங்கும் வசதி இருந்தது இடைவேளை உணவுக்குப் பிறகு, ஓய்வின் போது அந்த விடுதியின் வரவேற்பு கூடத்தில் இருந்த நாலைந்து ஷெல்ஃப்களில்  நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்தேன். அதனருகில் வசதியான சோபாக்கள் இருந்தனப் அந்த புத்தகங்களில் பல புதையல்களைக் கண்டுபிடித்தேன். எல்லாவற்றிற்கும் சிகரமாக எனக்குக் கிடைத்தது, சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு புத்தகம். அதில் பல அற்புதமான கட்டுரைகள் இருந்தன. பத்து தலைப்பில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இருந்தன. மகிழ்ச்சி, நம்பிக்கை, துணிவு, மனோதிடம், சுய ஒழுங்கு, மன அமைதி, பாசம், மனநிறைவு, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை என்று வகுக்கப்பட்டிருந்தன. எல்லாம் தத்துவ தலைப்புகள் என்று  உதட்டைப் பிதுக்கி அலட்சியப்படுத்தாதீர்கள். மனதைத் தொடும் நிகழ்வுகள், பல புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரைகளின் பகுதிகள், உணர்ச்சிகரமான   சம்பவங்கள், வாழ்க்கை வரலாறுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள், பொன்மொழிகள் என்று பிரமாதமாகத் தொகுக்கப்பட்ட கட்டுரைகள்! ஒவ்வொரு கட்டுரைக்கும் முன்னுரையாக புத்தகத்தைத் தொகுத்தவர் விளக்கங்களை மிக மிக சுவைபட எழுதி மேலும் சிறப்பு சேர்த்திருந்தார்!.


விடுதியில் தங்கியிருந்த மூன்று நாட்களுக்குள் மொத்த புத்தகத்தையும் படிக்க முடியவில்லை. ஆகவே வலை போட்டுத் தேடி, புத்தகத்தை வாங்கினேன். அந்த புத்தகத்தில் இருக்கும் எல்லா கட்டுரை களையும் தமிழ்ப் படுத்திப் போட மனம் விழைகிறது. பதிப்புரிமை, போன்ற பிரச்சினைகள் வரக் கூடும் என்பதால் ஒரு கட்டுரையைத் தழுவி, என் சொந்த சரக்கையும் சேர்த்து  ‘படித்தேன், ரசித்தேன்’ என்கிற மாதிரி ஒரு கட்டுரை எழுதி உள்ளேன். இது சற்று நீண்ட பதிவாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் போடுகிறேன். பதிவுகளுக்கு இடையே அதிக இடைவெளி இருக்காது.

  “அது சரி, புத்தகத்தின் தலைப்பு போன்ற விவரங்களைச் சொல்லுங்கள்” என்று நீங்கள் கேட்பதற்கு முன், நானே தந்து விடுகிறேன்: LIGHT FROM MANY LAMPS. Edited with commentaries by LILLIAN EICHLER WATSON..

 இனி புத்தகத்திற்குப் போகலாம்.
******

October 21, 2019

வியக்கத் தெரிந்த மனமே!


கௌரவம்  அளிக்கப்பட  வேண்டிய  முறை இதுதான்!

        பம்பாய் பல்கலைக்கழகத்தில் 2015’ம் வருஷம் ’சமஸ்கிருத தினம்’ என்று ஒரு நாள் கொண்டாடினார்கள். விழாவில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு   நிறைய பணிகள் புரிந்து வரும் டாக்டர் கௌரி என்ற ஒரு சமஸ்கிருத அறிஞர்  கௌரவிக்கப்பட இருந்தார். 

அவருக்குக் கௌரவம் அளிக்க  மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அழைக்கப்பட்டிருந்தார்.

                   விழா மேடையில் டாக்டர் கௌரி, விழா நிர்வாகிகள், 
மற்றும் பல்கலைக்கழக  உயர் அதிகாரிகள் அனைவரும் 
அமர்ந்திருந்தார்கள்.  முதல்வருக்காக காத்திருந்தார்கள்.  குறித்த 
நேரத்திற்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வந்தார்.   

        மேடையேறிய  முதல்வர் தனக்கு ஒதுக்கப் பட்டிருந்த நாற்காலியில் அமரச் செல்லவில்லை. மாறாக அந்த சமஸ்கிருத விருது பெறவிருக்கும் பெண்மணி உட்கார்ந்து இருந்த இடத்திற்குச் சென்று, பவியத்துடன் குனிந்து, அவர் காலைத் தொட்டு நமஸ்கரித்து விட்டு, மைக்கின் முன் சென்று உரை நிகழ்த்த ஆரம்பித்தார்."There are very few people left on this earth, in this era who really deserve this gesture and Dr. Gauri is one of them".        
ஃபட்னாவிஸின் பணிவையும், காலைத் தொட்டு நமஸ்கரித்ததையும்
பார்த்து அனைவரும் அப்படியே வியப்பில் உறைந்து போனார்கள்.


              தற்போது டாக்டர் கௌரி கேரளாவிலுள்ள சின்மயானந்தா 
பல்கலைக்  கழகத்தில் டீன் பதவியில் உள்ளார்.

(இத்தகவலைத் தந்தவர்: குறிப்பிட்ட விழாவிற்குச் சென்றிருந்த  திருமதி வீணா அமோலிக் அவர்கள். அவருக்கு என் நன்றி.)

இன்னொரு வியப்புத் தகவல்.

பலே விற்பனை

சமீபத்தில் Lillian Eichler Watson  என்ற எழுத்தாளர் 70 வருஷத்திற்கு முன்பு தொகுத்த ஒரு புத்தகம் லாட்டிரி பரிசு மாதிரி எனக்குக் கிடைத்து. எல்லா கட்டுரைகளும் அபாரமான கட்டுரைகள் மட்டுமல்ல, நெகிழ்ச்சியூட்டும் கட்டுரைகள். அதில் படித்த ஒரு கட்டுரைக்கு,  தமிழ் உடையான வேட்டியைக் கட்டி, அடுத்த பதிவாக விரைவில் போடுகிறேன். சற்று நீண்ட பதிவாக இருக்கும். இரண்டு மூன்று பாகங்களாகப் போட வேண்டியிருக்கும் எனக் கருதுகிறேன்.
 லில்லியன் 1922 -ல்   A BOOK OF ETIQUETTE  (ஒழுங்கு நடைமுறைகள் (?)) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அது இரண்டு  வருஷத்தில் இருபது  லட்சம் காபிகள் விற்றன. லாபம் மட்டும் இரண்டரை லட்சம் டாலராம்  (இன்றைய கணக்கில் 30 லட்சம் டாலர் இருக்கும்!)

JEOPARDY கேள்விகள்
அமெரிக்க டி.வி.யில் முப்பத்தைந்து வருஷமாக நடந்து வரும் வினாடி வினா நிகழ்ச்சியான JEOPARDY-யில் இதுவரை கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமாம்.

மின்னல் வேகம்
பிரபல ஜெர்மன் கார் நிறுவனம்:  BUGATTI (புகாட்டி).  கார் பந்தயத்திற்கு உகந்த காரை அவர்கள் தயாரித்து வெள்ளோட்டம் விட்டார்கள். மணிக்கு  304 மைல் வேகத்தில் பறந்ததாம்.

October 02, 2019

நானும் ஒரு ஷேக்ஸ்பியர்- ஒரு ஜகஜ்ஜாலப் புரட்டு



கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இடையிடையே ஒரு சில   சொந்தப்  பாடல்களைப் பல புலவர்கள் புகுத்தி வைத்துள்ளது  அனைவரும் அறிந்ததே.
கம்பன் பெயரோடு தாங்களும் சேர்ந்து பெருமைப்படலாம் என்ற எண்ணத்துடன் இந்த இடைச்செருகல் பாடல்களை உருவாக்கி வந்துள்ளார்கள்!
  அவற்றைக் கண்டுபிடித்து நீக்குவதற்கு மிகுந்த திறமையும் புலமையும் வேண்டும்;  டி.கே.சி போன்று ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள்  விழிப்புடன் ஈடுபட்டால் இந்த கலப்பட பாடல்களை கண்டுபிடிக்க முடியும்.
  இந்த  பித்து உலகெங்கும் பலரைப் பிடித்து ஆட்டும் அல்ப ஆசை! ஆனால் இங்கிலாந்தில் ஒரு இருபது வயது பையன் செய்த தில்லுமுல்லுவுக்கு ஈடு எதுவும் கிடையாது.  சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அதாவது ஷேக்ஸ்பியர்  காலமான பிறகு, நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு நடந்த தில்லு முல்லு!

       வில்லியம் ஹென்றி அயர்லாந்து என்ற இளைஞன் என்ன செய்தான் தெரியுமா?  அவன் லண்டனில் ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் ஏதோ பழைய பத்திரங்களைத் தேடியபோது, ஒரு பத்திரத்தில் ஷேக்ஸ்பியரின் சாட்சிக் கையெழுத்து இருப்பதை பார்த்தான்.  

அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

 ஷேக்ஸ்பியர் எழுதிய சில நாடகங்களைப் படித்து இருந்ததால், அவருடைய கையெழுத்தைப் பார்த்ததும் அவனை ஒரு வெறி பிடித்துக் கொண்டது.  ஷேக்ஸ்பியரின்  நாடகங்களை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தான். 

   அத்துடன் நிற்கவில்லை. சுமார் ஒன்றரை வருஷம்  பத்திரத்தில் இருந்த ஷேக்ஸ்பியரின் கையெழுத்தைப் பார்த்து,  அப்படியே  எழுதப் பழகினான்.  
இத்தனைக்கும் அவரது நாடகங்களின் ஒரிஜினல் கையெழுத்து பிரதிகள் யாவும் மறைந்து போயிருந்தன. 
இளைஞன் அயர்லாந்திற்ககு மேடை நாடகங்களில் மிகவும் ஆர்வம் உண்டு அவனே நடிகனாக வேண்டும் என்று விரும்பினான். அத்துடன் கவிதைகள் எழுதுவதிலும் அவனுக்கு விருப்பம் உண்டு .
படிப்பில்  அவன் படு சூனியம். அவனுடைய பள்ளிக்கூட தலைமையாசிரியர் ஒரு சமயம் கூறியது  “ உன்னால் பள்ளிக்கூடமே அவமானம் அடைகிறது.” .
அவனுடைய பெற்றோர்களும் அவனை ’வடிகட்டி’ என்றுதான் சொல்வார்கள் 

August 25, 2019

படமும் ( கோர்ட்) நோட்டீஸும்!

அறுபது, எழுபதுகளில் டில்லியில் நான் இருந்த போது, ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டியின் துணைத் தலைவராக இருந்தேன்சங்க நிகழ்ச்சிகளை   நிறைய நடத்தி வந்தோம் 
அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களை காலைக் காட்சிகளாகத் திரையிடுவோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. சங்கத்திற்கு நல்ல வருமானமும் இருந்தது. அந்த காலகட்டத்தில் கலாகேந்திரா நிறைய படங்களை எடுத்துக் கொண்டிருந்தது.
    திரைப்படத் தயாரிப்பாளர் கலாகேந்திரா' கோவிந்தராஜன் என் நண்பர். எங்க ஊர்க்காரர். அவர் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன் சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் நான் சென்னை ஜி பி -வில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
 எதிர்நீச்சல் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்த காலகட்டம் அதுஎதிர்நீச்சல் படத்தை ஒரு காட்சி டெல்லியில்  நாங்கள் திரையிட விரும்புகிறோம்  என்று தெரிவித்தேன்.   படத்தை கொடுத்து உதவ வேண்டும் என்று நான் கேட்டிருந்தேன். அவரும் ஒப்புக் கொண்டார்..
எங்கள்  சொசைட்டி திரைப்படத்தை விளம்பரப்படுத்தி, டிக்கெட்டுகள் அச்சடித்து  மளமளவென்று விற்பனை செய்யத்  தொடங்கி விட்டது.
 “படத்தின் பிரின்ட்டை உங்களுக்குச் சேர்ப்பது என்னுடைய பொறுப்பு என்று கோவிந்தராஜன் சொல்லியிருந்தார். ஆகவே கவலையில்லாமல் இருந்தேன்.