November 01, 2019

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 1



முதலில் சில வார்த்தைகள்.
சில வாரங்களுக்கு முன்பு, ‘நான்கு யோக முறைகள்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய விடுதியில் மூன்று நாட்கள் ஒரு பயிலரங்கம் நடந்தது.  காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை விடுதியிலேயே நடந்தது. விடுதியில் தங்கும் வசதி இருந்தது இடைவேளை உணவுக்குப் பிறகு, ஓய்வின் போது அந்த விடுதியின் வரவேற்பு கூடத்தில் இருந்த நாலைந்து ஷெல்ஃப்களில்  நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்தேன். அதனருகில் வசதியான சோபாக்கள் இருந்தனப் அந்த புத்தகங்களில் பல புதையல்களைக் கண்டுபிடித்தேன். எல்லாவற்றிற்கும் சிகரமாக எனக்குக் கிடைத்தது, சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு புத்தகம். அதில் பல அற்புதமான கட்டுரைகள் இருந்தன. பத்து தலைப்பில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இருந்தன. மகிழ்ச்சி, நம்பிக்கை, துணிவு, மனோதிடம், சுய ஒழுங்கு, மன அமைதி, பாசம், மனநிறைவு, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை என்று வகுக்கப்பட்டிருந்தன. எல்லாம் தத்துவ தலைப்புகள் என்று  உதட்டைப் பிதுக்கி அலட்சியப்படுத்தாதீர்கள். மனதைத் தொடும் நிகழ்வுகள், பல புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரைகளின் பகுதிகள், உணர்ச்சிகரமான   சம்பவங்கள், வாழ்க்கை வரலாறுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள், பொன்மொழிகள் என்று பிரமாதமாகத் தொகுக்கப்பட்ட கட்டுரைகள்! ஒவ்வொரு கட்டுரைக்கும் முன்னுரையாக புத்தகத்தைத் தொகுத்தவர் விளக்கங்களை மிக மிக சுவைபட எழுதி மேலும் சிறப்பு சேர்த்திருந்தார்!.


விடுதியில் தங்கியிருந்த மூன்று நாட்களுக்குள் மொத்த புத்தகத்தையும் படிக்க முடியவில்லை. ஆகவே வலை போட்டுத் தேடி, புத்தகத்தை வாங்கினேன். அந்த புத்தகத்தில் இருக்கும் எல்லா கட்டுரை களையும் தமிழ்ப் படுத்திப் போட மனம் விழைகிறது. பதிப்புரிமை, போன்ற பிரச்சினைகள் வரக் கூடும் என்பதால் ஒரு கட்டுரையைத் தழுவி, என் சொந்த சரக்கையும் சேர்த்து  ‘படித்தேன், ரசித்தேன்’ என்கிற மாதிரி ஒரு கட்டுரை எழுதி உள்ளேன். இது சற்று நீண்ட பதிவாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் போடுகிறேன். பதிவுகளுக்கு இடையே அதிக இடைவெளி இருக்காது.

  “அது சரி, புத்தகத்தின் தலைப்பு போன்ற விவரங்களைச் சொல்லுங்கள்” என்று நீங்கள் கேட்பதற்கு முன், நானே தந்து விடுகிறேன்: LIGHT FROM MANY LAMPS. Edited with commentaries by LILLIAN EICHLER WATSON..

 இனி புத்தகத்திற்குப் போகலாம்.
******


  மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!  ENJOY YOURSELF. IT IS LATER THAN YOU THINK!”

  ஆம் இதுதான் இந்தப் பதிவின் துணைத் தலைப்பு. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண அறிவுரை மாதிரி தோன்றும். வாழ்க்கையில்     எத்தனையோ மகிழ்ச்சிகரமான விஷயங்களை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றும், ஓய்வு பெற்றபிறகு அனுபவிக்கலாம் என்று எண்ணி, பொத்திப் பொத்திப் பத்திரப்படுத்தி வைத்து விடுகிறோம்.

  ஒரு சமயம், எனக்குத் தெரிந்த மருத்துவரைச் சந்திக்கச் சென்றேன். அவர் என் நண்பர். பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் வீட்டில் பெரிய டி.வி. செட் இருந்தது. அவரிடம்   டாக்டர் ‘மால்குடி டேய்ஸ்’ தொடரைப் பார்க்கிறீர்களா? அபாரமாக இருக்கிறது” என்றேன்
     அவர் உதட்டைப் பிதுக்கியபடி  “அதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லையே, சார். ஏகப்பட்ட விலை கொடுத்து இந்த டி.வி.-யை வாங்கினேன். தினந்தோறும் ஐந்து கிளினிக்குக்குப் போகிறேன். இரவு வீட்டுக்கு வந்ததும் இரண்டு வாய் அள்ளிப் போட்டுக் கொள்கிறேன். அடுத்த பத்தாவது நிமிஷம் குறட்டைதான். டி.வி. நிகழ்ச்சிகள் எல்லாம் எங்கேயும் போகாது. இந்த வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் ஹாய்யாகப் பார்த்துக் கொண்டால் போகிறது என்ன அவசரம்?” என்றார்.  ‘வாழ்க்கை வாழ்வதற்காக? சம்பாதிப்பதற்காக?’ என்ற கேள்வி அவர் மனதில் தோன்றியே இருக்காது என்பது நிச்சயம்.

  மற்றொரு உதாரணம் தருகிறேன். திரைப்பட இயக்குனர் ஒருவர் சொன்னதை நான் மறக்கவில்லை. அவர் ஏதோ ஒரு கிராமத்தில், மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். நகரத்திற்கு வந்தவர், தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, வெகு விரைவில் பிரபல டைரக்டர் ஆகிவிட்டார். அவர் படம் எடுத்தார் என்று சொல்வதை விட பணம் எடுத்தார் என்று சொல்வது சரியாக இருக்கும். எல்லாம் ஹிட் படங்கள்தான். ஓய்வு ஒழிவில்லாமல் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கூறியதை மறக்க முடியாது. அவர் சொன்னார்: “ஒரு காலத்தில், எந்த வசதியும் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டி வந்தேன். கடவுள் அருளால் இப்போது என்னிடம் இல்லாத வசதிகள் எதுவும் இல்லை- ஒன்றைத் தவிர. அது, நேரம்! எதையும் அனுபவிக்க நேரமில்லை. பின்னால் அனுபவித்துக் கொண்டால் போகிறது என்று நான் நினைக்கிறேன்” என்றார். 


  இப்போது டாக்டர் ஃப்ரெடெரிக் லூமிஸ் (1877-1949) என்ற மகப்பேறு மருத்துவரின் கதையைப் பார்ப்போம். இரவு, பகல் என்று பாராது, தன்னை நம்பி வந்தவர்களுக்கு மருத்துவ சேவையை  அளிப்பதை ஒரு கடமையாகக் கருதியவர். மெய் வருத்தம் பாராது, கண் துஞ்சாது, மருத்துவமனையே கதி என்று இருப்பவர்.

 ஒரு சமயம், அவர்  பணிபுரியும் அந்தப் பெரிய மருத்துவமனைக்குப் பிரசவத்திற்கு  மார்க்கரெட்  லூமிஸ் என்பவர் வந்தார். மருத்துவமனையில் இருந்த வேறு ஒரு மருத்துவரின் கவனிப்பில் அந்த பெண்மணி இருந்தார். சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்மணிக்குக் குழந்தை பிறந்தது. துரதிர்ஷ்டவசமாக குழந்தை பிறந்த அன்றே இறந்து விட்டது. அந்த பெண்மணிக்கு மேலும் சில சிகிச்சைகள் அளிக்கவேண்டி இருந்ததால் அவர் மருத்துவமனையிலேயே வைத்திருந்தார்கள்..
 ஒரு நாள் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளின் பெயர்களை டாக்டர் லூமிஸ் பார்த்தபோது, தன்னுடைய லூமிஸ் பெயரிலேயே ஒரு பெண்மணி அட்மிட் ஆகி இருப்பதைப் பார்த்தார்.
 சக டாக்டர் அவரிடம்  “டாக்டர், மருத்துவ மனையில் உங்கள் பெயரிலேயே ஒரு பெண்மணி இருக்கிறார். அவருக்குக் குழந்தை பிறந்தது. ஆனால் அது பிறந்த அன்றே இறந்து விட்டது” என்றார்.
“அப்படியா? இப்போது அவர் எப்படி இருக்கிறார்? அவரை நான் பார்க்கலாமா?”  என்று கேட்டார்.
 “பார்க்கலாமே! அவர் உங்கள் தூரத்து உறவினராகக் கூட இருக்கலாம். அவரிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டுச் சொல்லுகிறேன்” என்றார்.
டாக்டர் லூமிஸை சந்திக்க அந்தப் பெண்மணி சம்மதம் தெரிவித்தார்.

அந்தப் பெண்மணியைப் போய்ப் பார்த்து, டாக்டர் லூமிஸ் ஆறுதல் வார்த்தைகள் கூறினார். பெண்மணியும் சில நாட்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

தான் மருத்துவம் பார்த்த எத்தனையோ நோயாளிகளில் ஒருவராகத்தான் அந்தப் பெண்ணையும் லூமிஸ் கருதினார். அவளைக் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டார். ஆனால் சுமார் இரண்டு வருஷம் கழித்து அந்தப் பெண்மணியை அவர் நினைத்துக் கொள்ளும்படி அமைத்தது ஒரு கடிதம். ஆம், ஒரு கடிதம்! அந்தப் பெண்மணியை நினைவுபடுத்தியதுடன், அந்தக் கடிதம் அப்படியே டாக்டரையே மாற்றிப் போட்டு விட்டது!
                                                                                                                                               (தொடரும்)
    

9 comments:

  1. அது அவர் மனைவி அல்லது சகோதரி என்று சொல்லப்போகிறீர்கள் என்று படித்துக் கொண்டே வந்தேன்.   அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதற்காகக்காத்திருக்கிறேன்.

    அப்புறம் அனுபவிக்கலாம், அப்புறம் அனுபவிக்கலாம் என்று வாழ்க்கையின் சுவைகளை ஒத்திப்போடும்போது பசி போனபின் சாப்பிடுவது போலாகி விடுகிறது.

    ReplyDelete
  2. பெரும்பாலும் அனைவரும் பணத்தைத் தேடியே ஓடுகிறார்கள். இப்போது பலரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவதை விட வசதியாக வாழ்கிறார்கள் என்றே சொல்லலாம். லூமிஸின் கதை ஆச்சரியமாகவும் திகைப்பாகவும் இருக்கிறது. லூமிஸ் யார் என்பதை ஊகம் செய்து வைத்திருக்கிறேன். அடுத்தபதிவில் சரி பார்த்துக்கறேன்.

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    மனதில் அலையடித்துக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கும், கவலைகளுக்கும், பயங்களுக்கும், நல்ல தீர்வுகளைத் தரப் போகிறீர்கள்.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு, தொடர் பதிவுகள் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  4. வாழ்க்கையை அனுபவிப்பது பற்றி எழுதியுள்ளது மனதைத் தொட்டது.

    நீங்கள் கொடுத்த உதாரணங்களில் யாருமே வாழ்க்கையை அனுபவிக்க முடியாது. அவங்களுக்கு, அவங்களோட ஸ்டேஷன் எப்போ வருது என்பதே தெரியாது. அலிபாபாவின் தலைவர், வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, எனக்கு இருக்கும் பணத்தை என்னமாதிரி செலவழித்தாலும் செலவாகாத அளவு பணம் இருப்பதால், வாழ்க்கையை அனுபவிப்பதற்காக இதைச் செய்கிறேன் என்று சொல்லியிருந்தார். ஒருவேளை அவர் இந்தப் புத்தகத்தைப் படித்திருப்பாரோ?

    ReplyDelete
  5. மொழி பெயர்ப்பு என்பதே தெரியாமல் ஸ்மூத்தான (ஆற்றொழுக்கு நடை) மொழியில் கட்டுரை எழுதியிருக்கீங்க. பாராட்டுகள். அதிலும் புதிது புதிதாக படிக்கணும் பகிர்ந்துகொள்ளணும்னு நினைக்கறீங்களே. ஹேட்ஸ் ஆஃப் டு யூ சார்... உங்களைப் பற்றி நினைக்கும்போது, 'எங்கே வாழ்க்கை தொடங்கும்... அது எங்கே எவ்விதம் செல்லும்... இதுதான் வாழ்க்கை..இதுதான் சாலை என்பது யாருக்கும் தெரியாது' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

    ReplyDelete
  6. /அந்தப் பெண்மணியை அவர் நினைத்துக் கொள்ளும்படி அமைத்தது ஒரு கடிதம். ஆம், ஒரு கடிதம்! // - சொத்துக்கு அந்த டாக்டரை பாதுகாப்பாளராக வைத்து, பிரசவத்தின்போது குழந்தை இறக்காமல் ஆரோக்கியமாக இருக்க வைக்கக்கூடிய ஆராய்ச்சியோ அது சார்ந்த பணியையோ அந்தப் பணத்தில் அந்த டாக்டர் மேற்கொள்ளணும், இல்லைனா குழந்தை மருத்துவமனை ஆரம்பிக்கணும் என்று சொல்லியிருப்பாரோ?

    ReplyDelete
  7. நிறையப் படித்து, ரசித்து எடை போடும் திற்ன் படைத்த உங்கள் பாராட்டுகள் எனக்குக் CATALYST மாதிரி செயல்பட்டு உதவுகிறன. மிக்க நன்றி. இப்படிப் பணி செய்ய எனக்கு வாய்ப்பையும் ஓரளவு திறனையும் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். -- அன்புடன் கடுகு

    ReplyDelete
  8. நெல்லைத்தமிழன் அவர்களுக்கு,
    அந்தக் கடிதம் உங்களை இப்போதே அதிகம் பாதித்து விட்டது மாதிரி இருக்கிறது. அடுத்த பாகத்தை 4 நாளில போட்டு விடுகிறேன்.-- கடுகு

    ReplyDelete
  9. எதைத் தேடி ஓடுகிறோம் எனத் தெரியாமலேயே ஓடிக் கொண்டிருக்கிறோம். சொன்ன உதாரணங்கள் அனைத்தும் நன்று.

    மிகச் சரியான இடத்தில் தொடரும்.... அடுத்த பாகத்திற்கான காத்திருப்பில் நானும்....

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!