September 09, 2017

ஒரு சுவரும் நான்கு காதுகளும்

இஸ்ரேல் நாட்டு எழுத்தாளர்  எஃப்ரெய்ம் கிஷோனின்   (EPHRAIM KISHON) நகைச்சுவை கட்டுரைகளைப் பற்றியும், அவர் எழுதிய Mr. BLOT புத்தகத்தைத் 
தேடி அலைந்த விவரங்களையும் (பிரபல 
நியூயார்க் ஸ்ட்ராண்ட் BOOKS எனும் பிரம்மாண்டமான புத்தகசாலையில் இருப்பது தெரிந்து, அங்கு மறுதினம்  காலை சென்று  தேடிய போது,முன்னாள் இரவு ஷாப் மூடும் நேரத்தில் ஒருவர்  வாங்கிச்சென்று  விட்டார்  என்று  அறிந்து,  ஏமாற்றத்துடன்   திரும்பிய  விவரங்களை எல்லாம் எழுதியிருக்கிறேன். 
  அதற்கு ஈடு செய்யவோ என்னவோ சமீபத்திய BOOK SALE  ஒன்றில், அவர் எழுதிய MY FAMILY RIGHT OR WRONG  என்ற   புத்தகம்   கிடைத்தது. (விலை அரை டாலர்). 1983 –ல்  பிரசுரமானது. புது   மெருகு   குறையாமல்   இருந்தது.

    நம்பமாட்டீர்கள், அது PIERRE DANINOS என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய கட்டுரைகள் மாதிரியே,  தன்   மனைவியை  வைத்துப்   பின்னப்பட்ட  நகைச்சுவைக்  கதைகளாக  (அல்லது கட்டுரைகளாக) இருந்தன. தற்பெருமை அடித்துக் கொள்வதாகக் கருதாதீர்கள், அவை என்னுடைய கமலா, தொச்சு   கதைகளைப் போல (சுவையாக ?) இருந்தன.

 ஹீப்ரு மொழியில் 30 புத்தகங்களுக்கு மேல்   எழுதியவர் கிஷோன். இவரது புத்தகங்கள் 25 உலக மொழிகளில் வெளி வந்துள்ளன. 1983ம் ஆண்டு புள்ளி விவரம் தெரிவிக்கும் தகவல்: கிஷோனின் புத்தகங்கள் விற்பனை இரண்டே முக்கால் கோடியாம்.
 அவருடைய புத்தகத்தில் 71 கட்டுரைகள் உள்ளன. ஒரு  கட்டுரையை தமிழ்ப்படுத்தித்  தருகிறேன் - சொந்த சரக்கையும்  சேர்த்து!
###########

             ஒரு சுவரும் நான்கு காதுகளும்!! 
அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுடன்  நாங்கள் எப்போதும் நட்பாகத்தான் இருப்போம்.   முக்கியமாக இப்போது எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் FELIG குடும்பத்துடன்அவர்களை கண்டாலே எங்களுக்கு  எரிச்சலும் அசூயையும்  ஏற்படும்   என்கிற  உண்மையையும்  இங்கு கூறிவிடுகிறேன். அவர்களிடம் உள்ள ஒரு முக்கிய குறை ரேடியோ. அதைத் தப்பாகச் சொல்லக் கூடாது; அதைக் கையாளும் FELIG தான் முக்கியக் காரணம்.
     சரியாக சாயங்காலம் ஆறு மணிக்கு, ஆபீஸிருந்து வந்ததும், நேராக ஹால் மேஜை மேல்  வைத்திருக்கும் ரேடியோவின் காதைத் திருகுவார். வலி தாங்காமல் அது அலறும். பாவம் வாயில்லா ஜீவன். அது எவ்வளவு நாராசமாகக் கத்தினாலும், அவருக்கு கவலையில்லை. பாட்டோ, நாடகமோ, செய்தியோ எதுவாக இருந்தாலும், பயோ கெமிஸ்ட்ரி போன்ற புரியாத விஷயங்களாயினும் சரி, அவர் ரேடியோவை  நிறுத்தமாட்டார். உரக்கவும் தெளிவாகவும் அலறல் வந்தால் அதுவே அவருக்கு இன்பத் தேனாய் காதில் பாயும்.
அவர் வீட்டு ரேடியோ எங்களுக்கும் தெளிவாகக் கேட்கும். எங்கள் வீட்டில் யாரும் ரகசியம் பேச முடியாது. ந்த ரேடியோவின் கத்தலில் உரக்கப் பேசினாலே மற்றவர் காதில் விழாது என்று இருக்கும்போது ரகசியமாவது, மண்ணாவது!
     என் மனைவி அவர்கள் வீட்டிற்குச் சில சமயம் போய் வருவது உண்டு, முக்கியமாக வீட்டில் சர்க்கரை தீர்ந்துவிட்டால், ஒருகப்பை   எடுத்துக் கொண்டு, கடன் வாங்கி வரப் போவாள்.
     இப்படி போய் வந்ததும் அவளுக்கு   ஒரு முக்கிய விஷயம் அந்த ரேடியோவைப் பற்றி தெரிந்தது. மண்டையை வலிக்கும் அளவுக்கு எங்கள் வீட்டில் கேட்கும் அந்த ரேடியோவின் அலறல், அவர்கள் வீட்டில் அவ்வளவு உரக்கக் கேட்கவில்லையாம்.
     இது ஒரு புதிர். எங்கள் வீட்டுச் சுவர் ஒற்றைக்கல் சுவர். பெயருக்கு ஒரு மெல்லிய சுவர் (கான்ட்ராக்டர் இப்படிப் பல விதத்திலும் செலவைக் குறைத்திருக்கிறார்.) நம்பமாட்டீர்கள், அந்த அறையில் போய் டிரஸ் கூட மாற்றிக் கொள்ள மாட்டோம். அது கிட்டத்தட்ட  ‘ஸீ-த்ரு’ சுவர் என்றுதான் நாங்கள்   கருதுகின்றோம்! விளக்குப் போட்டுக் கொண்டு, உடை மாற்றினால் சுவரில் நிழல் விழுந்து, shadow-play திரைப்படம் மாதிரி பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தெரியும் என்று அஞ்சி, அந்த அறைப் பக்கமே போக மாட்டோம்.
     இதனாலும், ரேடியோ அலறலாலும் எங்களுக்கு எட்டிக்காயாக அவர்கள் இருந்தார்கள்.
      சுவர் பிரச்னைக்குத் தீர்வு இல்லை. நாம் ஒன்றும் செய்ய முடியாது அது போகட்டும்.  அந்த பாழாய்ப் போன ரேடியோவின் இம்சையிலிருந்து எப்படித் தப்பிப்போம் என்று தெரியாமல், தலையைப் பிய்த்துக் கொண்டு இருந்தோம்.
              அப்போது அந்த அற்புதம் நடந்தது.....     


                  புதிதாக வந்த திரைப்படத்திற்கு இரண்டு டிக்கெட் வாங்கி இருந்தேன்.   அதற்குப்    புறப்படத் தயார்  பண்ணிக் கொண்டிருந்தேன் என் மனைவி திடீரென்றுஉர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு, அதாவது வழக்கத்தைவிட அதிகமாக  (ஜி.எஸ்.டி யை கூடுதலாகப் போட்டு விட்டாளோ என்னவோ!) உற்’றென்று  முகத்தை வைத்துக் கொண்டாள்.
       “என்ன பேபி... ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய். மூவிக்கு லேட்டாகவில்லை?என்று சொன்னேன். (பேபி என்று நான் சொல்வது சில முக்கிய சமயங்களில் தான்; என் மனைவி கோபமாக இருக்கும்போது தான்.)
     என் மனைவி   “ஒன்றுமில்லை. புதுப் படத்திற்குப் போகிறோம். என் அபிமான நடிகர்  ஹீரோ. இப்படியா போய் அவரை அவமரியாதை பண்ணுகிறது? ஷேவ் பண்ணி மூணு நாள் ஆகிறது. சப்பாத்திக் கள்ளியின் முள் மாதிரி தாடி வளர்ந்திருக்கிறது.  எனக்குப் பிடித்த ஹீரோ என்பதால் அவரை இப்படி அவமரியாதை பண்ண வேண்டாம் என்றாள்.
     உங்களுக்குத் தோன்றுகிற கேள்வி யெல்லாம் எனக்கும் தோன்றியது என்றாலும், வாழ்க்கையில் அடிபட்டு, பாடம் கற்றுக் கொண்டவன். ஆதலால், ஒரு  நாடக  பாணியில்   “எடு என் எலக்ட்ரிக் ஷேவரைஅறுவடை செய்து விடுகிறேன்என்று சொன்னேன்.
     அந்த சமயத்தில் பக்கத்து வீட்டு ரேடியோ அலறத் தொடங்கியது. அதனால் என் மனைவி பேசிய சில வார்த்தைகள் என் காதில் விழவில்லை. அதுவும் ஒரு விதத்தில் நன்மைக்கே என்று எண்ணிக் கொண்டு, எலக்ட்ரிக் ஷேவரை எடுத்து பிளக்கில் போட்டேன்.
எடுத்தது கேட்டனர்; இற்றது கண்டனர்என்று  சொல்வார்கள். அதைவிட குறைவான காலப்பிரமாணத்தில்,  பிளக் போட்டதும், பக்கத்து வீட்டு வழக்கமான அலறல் பத்து மடங்கு அதிகரித்ததுடன், ஏழெட்டு   ரோட் ரோலர்களின் ஓசையைச் சேர்ந்திசையாகக் கொடுத்தது. காதைக் கிழித்தது ; வயிற்றைப் புரட்டியது. உடனே  பிளக்கைப் பிடுங்கினேன்.   சட்டென்று ரேடியோவின் டெசில் குறைந்தது.
பக்கத்து வீட்டுக்காரன் தன் மனைவியிடம் ‘”ERICA,  என்ன ஆச்சு தெரியுமா?  ரேடியோவை ஒரு தட்டு தட்டினேன்சட்டென்று நின்று விட்டதுஎன்று சொன்னது எனக்குக் கேட்டது. (அடுத்த வீட்டுக்காரர்கள், ரேடியோ சப்தத்தைவிட உரக்க பேசிப் பேசி,  அதுவே அவர்களுக்கு உகந்த ‘வால்யூம்: என்றாகிவிட்டது.  ரேடியோ போடாத போதும் அப்படியே பேசுவார்கள். அவர்கள் பேசுவது  எங்கள் வீட்டுச் சுவரை ஊடுருவி வந்து, தெளிவாக என் காதுகளைக் குடையும்;).
மறுபடியும் பிளக்கைப் போட்டேன். மறுபடியும்  அலறல்…. அதையும் மிஞ்சி பக்கத்து வீட்டுக்காரர் இந்த ரேடியோவிற்கு ஏதோ பைத்தியம் பிடித்து  விட்டது என்றார்.
அவருடைய எரிச்சல், என்னைப்  பன்னீரால்    குளிப்பாட்டியது போல் இருந்தது.   
     ”ஒரு ஆப்பிள் விழுந்ததைப் பார்த்து நியூட்டன் ஏதோ கண்டுபிடித்து விட்டார் என்று எல்லாரும் அவரைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்  இதோ பார், ஒரு சின்ன உத்தியால் பக்கத்து வீட்டுக்காரனுக்கு குடைச்சல் தருகிறேன்” என்றேன்.                  
என் மனைவி திரைப்படத்தையே எண்ணிக் கொண்டிருந்ததால், “ குடைச்சல் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். சீக்கிரம் ஷேவ் பண்ணிக் கொண்டு கிளம்புங்கள்”  என்றாள்.
மறுபடியும் பிளக் போட்டேன். அலறல் கேட்கவில்லை. ரேடியோவை அணைத்து விட்டிருக்க வேண்டும். ஆர்டனரி ஷேவ் செய்துக் கொள்ளாமல், அர்ஜண்ட் ஷேவ் செய்து கொண்டேன். திரைப்படத்திற்குப் போனோம். படத்தை விழுங்குவது போல என் மனைவி பார்த்துக் கொண்டிருந்தாள்என் மனமோ ஆர்க்கிமிடீஸ் சொன்னது போல், ”யுரேகா என்று கத்தியது..
     சுண்ணாம்பில் இருக்கிறது சூட்சுமம் என்பார்கள். ஒரு கையடக்க ஷேவரில் இருக்கிறது சர்வரோக நிவாரணி என்பதை நான் கண்டு கொண்டேன்!
                  ***      ****        *****
     மறுதினம் காலை FELIG  தன் வீட்டு மாடிப்படியில் இறங்கி வரும் சப்தம் கேட்டது. மளமளவென்று வீட்டை விட்டு வெளியேறி, அவர் மாடியிலிருந்து இறங்கும் போது ‘தற்செயலாக’ச்  சந்திப்பது என் திட்டம். என் திட்டம் பலித்தது.
     “ஹலோ FELIG, குட்மார்னிங் என்றேன்.. அவருக்கு மைண்ட்-ரீடிங் வித்தை தெரிந்திருந்ததால், நான் மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள்குட்டிச் சுவராகப் போக’ என்பது கேட்டி ருக்கும்! வேவு பார்க்க வந்தவன் விரைவில் முழு மூச்சுடன் வேலையில் இறங்கினேன்.
   விலைவாசி, மழை, வெய்யில், டிம்பக்டூவில்   நிலநடுக்கம், அஜர்பைஜானில் தீ விபத்து (அதிருக்கட்டும், அஜர்பைஜான் என்ற நாடு எங்கிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?) ஆகிய விஷயங்களை விளக்கினேன். FELIG, சுவாரசியமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, “ஒரு விஷயம் உங்களைக் கேட்க வேண்டும்? உங்களுக்கு மாய மந்திரங்களில் நம்பிக்கை உண்டா?” என்று கேட்டார்.
            “மாயமாவது, மந்திரமாவது? எல்லாம் கட்டுக் கதை. மந்திரத்தில் மாங்காய் விழுமா? இதெல்லாம் ஏமாற்று விஷயம். பணம் பண்ண அவனவன் திரிக்கிற சரடுஎன்றேன். என்ன விஷயத்திற்கு அவர்  வரப் போகிறார் என்று ஊகிக்க முடிய வில்லை   ரேடியோ, ரேடியோ என்று மனது லப்டப் அடித்துக் கொண்டிருந்தது.
     அவர் தொடர்ந்தார்:  “எனக்கும் இத்தனை நாள் வரை இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நேற்று சாயங்காலத்திலிருந்து கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது…. என்ன ஆச்சு தெரியுமா? என் ரேடியோவைப் போட்டேன். வழக்கம் போல் பாடிக் கொண்டிருந்தது திடீரென்று  ஏழெட்டு  லாரி   கருங்கல் ஜல்லியைப கொட்டியது போல்   பயங்கர ஓசையுடன் அலறியது. காதைக் குடைந்தது; மண்டையைப் பிளந்தது, திடீரென்று நின்றுவிட்டது. பத்து நிமிஷம் ஆகி இருக்கும். மறுபடியும் ஜல்லி உடைக்க ஆரம்பித்துவிட்டது. ‘ஏய்சும்மா இரு .போட்டேன் என்றால் பார்என்று ஒரு அதட்டல் போட்டேன். உடனே கப்சிப்  என்று அடங்கிவிட்டது.
     இப்படி நாலைந்து தடவை நடந்தது. அதற்குப் பிறகு நல்ல பிள்ளையாய் இருந்தது. (ஹாஹ்ஹா! அத்துடன், நான்தான் ஷேவ் பண்ணி முடித்து விட்டு, சினிமா பார்க்கப் போய் விட்டேனே!’)
     இந்தப் பூனையும் பால் குடிக்குமோ?”என்ற முகபாவனையுடன், “அப்படியா?” என்று அப்பாவியாகக் கேட்டேன்.
     “ஆமாம்.  என் தாத்தா சொல்வார், மேஜை, நாற்காலி, டைப்ரைட்டர், கிராமபோன் போன்ற  பொருட்களுக்கும் ஜீவன் இருக்கிறது. என்று.    ஜீவன் என்பதற்கு அர்த்தம் அவற்றின் உலகில் வேறு மாதிரி, நமக்கு தெரியாத அல்லது புரியாத விதத்தில் இருக்கும்என்று. அப்போதெல்லாம் அவர் சொல்வதைக் கேலி செய்வேன். இப்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது.”
     “இதோ பார்.,. FELIG,  நீங்கள் பீசில் கடுமையாக உழைக்கிறீர்கள் மூளைக்கு நிறைய வேலை கொடுக்கிறீர்கள். ஆபீசிலிருந்து வந்ததும் ரேடியோ போடுகிறீர்கள். அதை நிறுத்துங்கள் என்றேன்.
     “இல்லை சார்.. ன் தாத்தா சொல்வார், இந்த கிராமபோனுக்கு என்னைக் கண்டாலே பிடிக்கவில்லைஒரு நாள் அதன் தலைமேல் பாறங்கல்லைப்  போடப் போகிறேன்”   என்பார்.  என்ன ஆயிற்று தெரியுமா? ஒரு நாள் காலையில் எழுந்து பார்க்கிறோம். எங்கள் தாத்தா ஹாலில் பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து கிடக்கிறார். கையில் ஒரு பாறாங்கல்!  கிராமபோன் மேஜைக்கருகில் விழுந்திருந்தார். நெருங்கிப் பார்த்தோம்.. அவர் இறந்து போயிருந்தார்.”
      “இதெல்லாம் தற்செயல் நிகழ்வு என்று சொல்வேன் அந்த நம்பிக்கையெல்லாம் தாத்தாவோடு போகட்டும். மூளையைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.” என்றேன் (என் குரலில் இருந்த பரிவும், நட்புணர்வும் என்னையே ஆச்சரியப்படுத்தியது!)                         அப்போது அவருடைய மனைவி அங்கு வந்துஆபீசுக்கு நேரமாகலையா?” என்று கேட்க, “வரேன் சார்என்று சொல்லியபடியே வீட்டிக்குள் போனார். போகும் போது  “மறுபடியும் அந்த ரேடியோ அலறட்டும் அதை என்ன செய்கிறேன் பாருங்கள்” என்று மெதுவாகக் கறுவிக் கொண்டே போனார்!

                  ******     *******     ********
     சாயங்காலம் அலுவலகத்திலிருந்து FELIG, வருவதற்கு காத்திருந்தேன்போதும், இந்த விளையாட்டு’ என்று மனதில் தோன்றியது, இருந்தாலும் கெட்ட மனது அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
      FELIG, வந்ததும் , ஒரு கப்பை எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்குப் போய் சர்க்கரை கடன் வாங்கி வரும்படி என் மனைவியிடம் சொன்னேன். காதல்  ஒருவனைக் கைபிடித்து, அவன் காரியம் யாவினும் கைகொடுத்து, அறம் காக்கும் பெண்ணான என் மனைவி கப்பும்  கையுமாகப்   போனாள்.
                                        
 FELIG ரேடியோவைப் போட்டார். அதன் அலறலைக் கேட்டதும், நான் ஓடிப்போய் ஷேவரை எடுத்துபிளக்கில் போட்டு ஆன்செய்தேன். அடடா! பக்கத்து வீட்டு ரேடியோவில் வந்த பயங்கர ‘ கொற கொறா’சப்தம் இருக்கிறதே  அதை வீணையின் ஒலி என்பேனா, புல்லாங்குழலின் புல்லரிக்கும் இசை என்பேனா,என்று பட்டிமன்ற விவாதத்தை என் மனதிற்குள் நடத்திக் கொண்டிருக்கும்போது,  FELIG உரத்த குரலில் ஏய் ரேடியோ பிசாசேஉன் கழுத்தை முறித்து விடுவேன்.. மரியாதையாக ஒழுங்காக இருஎன்று கத்தியது கேட்டது. உடனே நான் ஷேவரை அணைத்துவிட்டேன்.
     அதைத் தொடர்ந்து, “அற்புதம்அற்புதம், ரேடியோவிற்கு புத்தி வந்தது. தண்டனை யிலிருந்து தப்பித்துவிட்டதுஎன் செல்லம்டா!   உன்னைப் போய் பிசாசு என்றேனே” என்று கொஞ்சினான் (இது, என் மனைவியின் ரிப்போர்ட்: பாகம்--1!)
   உடனே FELIG-கின் மனைவி  “பாருங்களேன்  இந்தக் குட்டிப் பையனின் மாய்மாலம்நீங்கள் இங்கே இருக்கிறதால், நல்லப் பிள்ளையாக, சொன்னப் பேச்சைக் கேட்டு கப்சிப் என்று பாடுகிறதுஎன்றாள். (இதுவும் என் மனைவியின் ரிப்போர்ட்: பாகம்-2)
                   *****      *****      ***********
     மறுதினம் மாலை 5 மணி, பக்கத்து வீட்டு ரேடியோ வழக்கம் போல் அலறியது.
     ஷேவரை எடுத்து பிளக்கில் மாட்டி சுவிட்சைப் போட்டேன். பக்கத்து வீட்டு ரேடியோ கண்டு கொள்ளவில்லை. ஒரு கடபுடா சப்தம் கேட்கவில்லை. என்னடா என்று பார்த்தேன். என் ஷேவர் வேலை செய்யாமல் சும்மா இருந்தது!இந்த   விளையாட்டு அதற்குப் பிடிக்க வில்லையோ என்னவோ, எனக்கு ஒத்துழைக்கக் கூடாது என்று தீர்மானித்து ரிப்பேர் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.
FELIG-கின்  தாத்தா சொன்னது போல் இந்த ஷேவருக்கும் ஆத்மா இருக்கும் என்று நினைக்கிறேன்.
     ஷேவரை எடுத்துப் போய் ரிப்பேருக்கு கொடுத்தேன் கப்பேசிட்டர், மோட்டார், டை-யோட்என்று எதை எதையோ சொல்லி, ரிப்பேர் செய்து, மறக்காமல் புது ஷேவர் விலைக்குச் சமமான தொகையைக்கூலியாக    வாங்கிக் கொண்டு, “இனிமேல் சூப்பராக வேலை செய்யும்” என்று சொல்லிக் கொடுத்தார்.
     மறுதினம் மாலைமணிக்கு FELIG- வருவதற்குக் காத்திருந்தேன். வந்தார். ஐந்து நிமிஷம் ஆயிற்று., பத்து நிமிஷம் ஆயிற்று ரேடியோ அலறல் வரவில்லை.
     ஒரு கப் சர்க்கரை எடுத்துக் கொண்டு போய், வாங்கியக் கடனைத் திருப்பித் ரும்படி என் மனைவியிடம் சொன்னேன். போய் உளவு பார்த்துவிட்டு வந்தாள்.
     “என்ன ஆச்சு.  'கண்டேன் சீதை'யை என்கிற மாதிரி சொல்என்றேன்.
     “ரேடியோ கோவிந்தாகெட்டுப்போய் விட்டதாம்என்றாள்
    ”நாம் செய்த குறும்பைக் கண்டுபிடித்து விட்டதோ என்னவோ…. வாழப்பிடிக்காமல் சமாதியாகிவிட்டதுஎன்றேன்!         
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி  சுமதி  ராஜா.  அவருக்கு என் நன்றி    

15 comments:

  1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    சிரிப்பை அடக்க முடியவில்லை, வாய் விட்டு சிரித்துக் கொண்டே இருந்தேன்.

    ஒரு விஷயம் சொல்லணும், பல வருடங்களுக்கு முன் பார்த்தது இது.

    அக்கம்பக்கத்தில் தேர்வுக்குப் பிள்ளைகள் படிப்பதைப் பற்றி கவலைப் படாமல் ரேடியோவை அலற விட்ட ஒருவரை அதை நிறுத்துவதற்கு, எங்கள் நண்பர் ஒருவர் கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு ஐடியாவை செயல்படுத்தினார்.

    அவங்க வீட்டு ரேடியோ ஒலிக்கும்போது(கத்தும்போது) ப்ளக் பாயிண்டில் ப்ளக்கை அரைகுறையாக சொருகுவார்.

    அவ்வளவுதான், ரேடியோ கரபுரவென்று இருமி, புலம்ப ஆரம்பித்து விடும். அவங்க ரேடியோவை நிறுத்துவரை, இந்த ட்ரீட்மெண்ட் தொடரும்.!!!

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  2. எஃப்ரெய்ம் கிஷோனின் கதை ரசிக்கும்விதத்தில் இருந்தது. உங்கள் கமலா-தொச்சு கதைகளைப்போல.

    நீங்கள் உங்கள் சரக்கையும் கொடுத்திருப்பது (ஜி.எஸ்.டி,...) நன்றாகத்தான் இருக்கிறது. இஸ்ரேலிலும் பக்கத்துவீட்டில் தேயிலைப் பொடி, சர்க்கரை கடன் வாங்குவது உண்டோ?

    இவருடைய புத்தகங்கள் 2 3/4 கோடி விற்பனையானது என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்தியாவில் எந்த எழுத்தாளருக்கும் 10,000 க்குமேல் புத்தகம் விற்பனையாயிருக்கிறதா? (லைப்ரரி விற்பனை தவிர)

    ReplyDelete
  3. கல்கி அவர்களை நினைவுகூர்ந்த விதம் சிறப்பு.

    ReplyDelete
  4. கல்கியின் நினைவு நாளன்று அருமையான பதிவு

    ReplyDelete
  5. -எல்லாருக்கும் மிக நன்றி. என் பேனாவுக்கு ஆத்மா இருக்கிறது. அது கலகி என்னும் தமிழோடு நிலைபெற்ற சக்தியால் இயங்குகிரது. நான் ஒரு ROBOT தான் - கடுகு

    ReplyDelete
  6. மிக அருமை! என்ன ஒண்ணு, தொச்சுவும், அங்கச்சியும், மாமியாரும் இல்லாத குறை ஒன்று தான்! அது சரி எல்லா நாட்டிலும் இப்படிப் பக்கத்து வீடுகளிலே காப்பிப்பொடி, சர்க்கரை கடன் வாங்குவாங்களா என்ன? ஆச்சரியம்! அல்லது உங்கள் கைச்சரக்குனு சொன்னீங்களே, அதிலே சேர்த்தியா? :)

    ReplyDelete
    Replies
    1. << காப்பிப்பொடி, சர்க்கரை கடன் வாங்குவாங்களா என்ன? ஆச்சரியம்! அல்லது உங்கள் கைச்சரக்குனு சொன்னீங்களே, அதிலே சேர்த்தியா? :)>> இல்லை. என் கைச்சரக்கு இல்லை.
      கொடி கட்டித் துணிகளை உலர்த்துவது கூட இங்கிலாந்து, அமெரிக்காவில் இருந்தது. +

      Delete
    2. கொடி கட்டித் துணிகள் உலர்த்துவது பற்றிக் காமிக்ஸ் புத்தகங்களில் பார்த்திருக்கேன் கடுகு சார்! அது சரி, நேத்தே சொல்ல நினைச்சு விட்டுப் போயிருக்கு! இந்த டெம்ப்ளேட்டில் பக்கம் முழுமையாகத் தெரியலை என்னோட மடிக்கணினியில். வலப்பக்கம் எல்லாம் பாதி தான் வருது! முன்னால் இருந்த டெம்ப்ளேட் வசதியாக இருந்த மாதிரி ஓர் எண்ணம்! :)

      Delete
    3. கீசா மேடம்.. சரியாத்தானே தெரியுது. முன்னால ஐபேட்ல பழைய டெம்ளட்ல ரொம்ப பெரிசு பண்ணினாலும் ஸ்கிரீன்ல தெரியும். இதுல எல்லாத் தளங்கள் போல, முழு ஸ்கிரீனும் தெரியுது.

      Delete
    4. கீதா சாம்பசிவம் மேடம்.. சரியாத்தானே தெரியுது. முன்னால ஐபேட்ல பழைய டெம்ளட்ல ரொம்ப பெரிசு பண்ணினாலும் ஸ்கிரீன்ல தெரியும். இதுல எல்லாத் தளங்கள் போல, முழு ஸ்கிரீனும் தெரியுது

      Delete
    5. நெ.த. உங்களுக்குச் சரியாத் தெரியுது போல! :) எனக்கு ஸ்க்ரீன் முழுசும் வந்திருக்கு. கீழே உள்ள கோட்டை அப்படியும் இப்படியும் இழுத்து முழுசும் தெரியறாப்போல் பார்த்துக்கறேன். அப்படியும் வலப்பக்கம் இழுத்தால் இடப்பக்கம் எழுத்துக்கள் மறைகின்றன. இடப்பக்கம் இழுத்தால் வலப்பக்கம் படங்கள், சுட்டிகள், லேபில்கள் மறைகின்றன. :) இப்போக் கொஞ்சம் சரி செய்திருக்கார்! பரவாயில்லை!

      Delete
  7. டெம்பிளேட்டின் அகலத்தைக் குறைத்துவிட்டேன். இப்போது சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். உங்கள் மடிக்கணின்க்கு ஆத்மா இருக்கிறதோ என்னவோ, அதற்குப் பிடிக்காத கட்டுரைகளை அரை குறையாகக் காண்பிக்கிறது.
    “என்ன, HAIR DRYER -ஐப் போடட்டுமா?” என்று மிரட்டிப் பாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, அதுக்குக் கட்டுரைகள் எல்லாம் பிடிக்கும்! இப்போத் தெரியுது. சாவி சாரின் ஓவியமும் இப்போத் தான் தெரியுது! முன்னால் தெரியலை! நான் கேட்டுக் கொண்டதுக்கு இணங்கி சரி செய்தமைக்கு ரொம்ப நன்றி.

      Delete
  8. ஹாஹாஹா! எல்லா ஊரிலும்/நாட்டிலும் பக்கத்து வீட்டுக் காரர்கள் இப்படித்தான் இருப்பார்களோ..?

    ReplyDelete
  9. தெரியவில்லை.. உங்கள் பக்கத்து வீட்டுக்காரரைக் கேட்டுச் சொல்லட்டுமா!!:)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!