July 01, 2017

பரிவு மாமி

அறுபது வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் அந்தக் கணம் அப்படியே நினைவில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம்,  முகத்தில் புன்னகையையும், குரலில் பரிவையும், தோற்றத்தில் ஒரு பொலிவையும் கொண்ட பெரிய மாமி, “வாடாப்பா” என்று அழைத்த நேர்த்தி. அவர் என் பெரிய மாமாவின் மனைவி.
  சிறுவன் நான், முதன்முதலாக மாமாவைப் பார்க்கச் சென்னைக்கு வருகிறேன். ஜார்ஜ் டவுன்  சென்று என் தாத்தாவின் வீட்டின் வாயிற் கதவைத் தட்டுகிறேன். வீட்டின் பின்கட்டிலிருந்து வருகிறார் பெரிய மாமி. இன்னும் அந்த பட்டப் பெயர் அவருக்கு வரவில்லை. வீட்டின் மூத்த பிள்ளையின் மனைவிதான். பின்னால் அவரது மைத்துனன்களுக்குத் திருமணம் ஆனதும் மாமிக்குப் ‘பெரிய’   என்ற பட்டம் கிடைத்தது.
கதவைத் திறந்தபடியே ‘வாடாப்பா’ என்று அவர் பாசமுடன் அழைத்த பாங்கு என் மனதில் அந்தக் கணத்தை மறக்க முடியாத கணமாகச் செய்து விட்டது.
         இன்று மாமி இல்லை. ஆனால் அவரது நினைவுகள் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் என்னுள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. சில வருடங்களுக்குப் பிறகுதான், சற்று வளர்ந்து பெரியவனான பிறகுதான் மாமியின் பரிவு என்னுள் புரிந்த ஜாலத்தை உணர்ந்தேன். அதுவரை அவர் ‘எனக்குப் பிடித்த மாமி’ என்ற அளவில்தான். சென்னைக்கு வரும்போது அவரை சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு 30, 40 வருஷங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் குசலம் விசாரிக்கும் போதே நம்மை அன்பால் குளிப்பாட்டி விடுவார். கண், காது, மூக்கு மாதிரி புன்னகையும் அவர் முகத்தின் ஒரு நிரந்தர அம்சம்.
மாமனார், மாமியார், மைத்துனர்கள், நாத்தனார் என்று சற்றுப் பெரிய குடும்பம். சென்னைக்கு வரும் உறவினர்களக்கு அந்த வீடு, வசதியான தங்கும் விடுதி. எத்தனை பேர் வந்தாலும் மாமியின் முகத்தில் அலுப்போ சலிப்போ வராது. அவரது சாம்ராஜ்யம் சமையலறை. அந்த சமையலறை மேற்கூரையில் வெளிச்சம் வருவதற்காகப் பொருத்தப்பட்ட கண்ணாடி வழியாக சூரிய ஒளி  அடுப்பின்  முன் அவர் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும் இடத்தின் மீது விழும். அப்போது அவரது வைர மூக்குத்தியும் வைரத் தோடும் ஒளிச் சிதறுலுடன் பளிச்சிடும். மாமியின் முகத்திற்கு அவை கூடுதல் நேர்த்தியை அளிக்கும்.
மைத்துனர்களுக்கு கலியாணம் ஆயிற்று. வீட்டிற்குப் புது மாட்டுப் பெண்கள் வந்தார்கள். அவர்களுக்குப் பெரிய மாமி, மூத்த நாட்டுப் பெண்ணாக இல்லாமல் உடன் பிறந்த சகோதரியாகத் திகழ்ந்தார். சமையல் செய்வது தனது உரிமை மாதிரி அவர் செய்து வந்தார். அது மட்டுமல்ல, யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும், ரிக் ஷாவை வரவழைத்து (தெருமுனையில் ரிக் ஷா ஸ்டாண்ட்) பக்கத்துத் தெரு டாக்டரிடம் அழைத்துப் போய் வருவார்.  எல்லா காரியங்களையும் இயல்பாகச் செய்வார்.
மாமியின் வீட்டிற்கு நாலு வீடு தள்ளி இருந்தவர் சொந்தமாக சினிமா தியேட்டர் வைத்திருந்தார். அந்தத் தெருவிலேயே அவர் வீட்டில் மட்டும்தான் டெலிபோன் இருந்தது. எப்போதாவது போன் பண்ண வேண்டுமென்றால் அங்கு போய்த்தான் பண்ண வேண்டும். போன் என்பதே அரிதாக இருந்த காலத்தில்,  புக் பண்ணி விட்டு 10, 15 வருஷம்க காத்திருக்க வேண்டும். ஆகவே அதிகமாக அவருக்குத்  தொந்தரவு இருக்காது.
அவருடைய தியேட்டரில் ஒரு படம் இரண்டு மூன்று வாரம் ஓடிய பிறகு சிலருக்கு ‘பாஸ்’ கொடுப்பார். அவர் வீட்டிற்குப் போகும் சிறுவர்கள் சிறுமியரிடம் “இந்தா, நாலு பாஸ்தான் இருக்கு. உங்க பெரியம்மா கிட்டக் கொடு...” என்று கொடுப்பார். சிலசமயம் கேட்டு அனுப்பினாலும் கொடுப்பார்.. நாலு பாஸ் வந்தால், ஆறு பேர் நான், நீ என்று போட்டி போடுவார்கள். தன் ஓரகத்திகளிடம்.“நீங்க பசங்களை அழைச்சுகிட்டு படம் பார்த்துவிட்டு வாங்க.” என்று அனுப்பி விடுவார்.
“மாமி.. நீங்க போங்க...”என்றால், “எனக்கு என்ன அவசரம்? அடுத்த வாரம் கிடைச்சால் போய்க்கிறேன். நீங்க போய்ட்டு வாங்க.” என்று ஆதுரத்துடன் சொல்வார்.
ஏதோ தியாகம் மாதிரியோ அல்லது ஏதோ பறிபோன மாதிரியோ அவர் முகத்தில் பாவம் எதுவும் இருக்காது. உள்ளத்தில் இருந்தால் தானே அது வெளிப்படும்?
“இன்னிக்கு வெள்ளிக்கிழமை. கொஞ்ச நேரம் வீணை வாசிக்கப் போறேன்.” என்று சொல்வார்.

    புதிதாக வந்த ஓரகத்திகளுக்குக் குழந்தைகள் பிறந்தன. பெரிய மாமிக்குக் குழந்தை பிறக்கவில்லை. ஆனால் துளி - துளி என்றால் துளிக்கூட அதற்காக ஏக்கம் அடைந்ததோ, விதியை நினைத்து  நொந்து கொண்டதோ இல்லை. “எல்லா குழந்தைகளும் என் குழந்தைகள்தான்.” என்று சொல்லுவாள். ஒப்புக்கு அல்ல. மனதின் அடித்தளத்திலிருந்து, உண்மையான பாசத்துடன் வரும் வார்த்தைகள். அதே மாதிரி, தன் குழந்தை மாதிரிதான் அவர்களிடம் பழகுவாள். எப்போதும் சிரித்தபடி ஏதாவது கருத்துக் கூறுவாள்.
மாமி தன் பிறந்த வீட்டிற்குப் போய் வருவது மிகவும் அபூர்வம். அவர் புகுந்த வீட்டில் ஐக்கியமாகி விட்டதுமல்லாமல், ஓரளவு கேந்திரப் புள்ளியாகவும் சில வருடங்களிலேயே ஆகிவிட்டதும் காரணங்கள்.
அவர் தன்  சொந்தக் கணவருடன் எப்படி நடந்து கொள்வார்? அவர்களுக்குள் எப்போதாவது கோப, தாபம் ஏற்படாதா?    ”ஹும்,உங்களைக் கலியாணம் பண்ணிக் கொண்டேனே...” என்று ஆரம்பித்து குறைகளை அடுக்கி இருக்க மாட்டாரா? ஊஹும். எனக்குத் தெரிந்து கிடையாது. அந்த மாதிரி நடந்திருந்தாலும் வெளியில் துளிக்கூட தெரியாமல் வைத்திருந்தாரோ என்னவோ என்று என்னால் ஒரு கணம் கூட நினைக்க முடியவில்லை. காரணம், மாமி ஒரு ஸ்படிகம். குடும்பத்தின் குத்துவிளக்கு.

(அடுத்த பாகம் 4,5 நாளில் போடுகிறேன்.)

4 comments:

  1. எப்படி கதையைக் கொண்டுபோகப் போகிறீர்கள் என்று அனுமானிக்க முடியவில்லை. இதற்கு கோபுலு அவர்கள், கூரையின் மேலிருந்து வரும் வெளிச்சம் மாமியின் காதுகளில் பட்டு வைரத்தோடு டாலடிக்கிறமாதிரி படம் போட்டிருப்பார் என்று நினைத்துப்பார்த்தேன். தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. கோபுலு இல்லயே.. அவர் படம் போட்டிருந்தால் கட்டுரையே டாலடிக்கும்,..ஹூம்...!

    ReplyDelete
  3. ம்ம்ம்ம்ம், பலருக்கும் இம்மாதிரியான மாமிகள், அத்தைகள், சித்திகளோடு அனுபவம் இருந்திருக்கும்! இப்போல்லாம் மாமி, அத்தை உறவே தெரியாமல் போய்விட்டதே! :(

    ReplyDelete
  4. ஓவ்வொரு குடும்பத்திலும் இப்படி மாமியோ, அத்தையோ,
    சித்தியோ, பெரியம்மாவோ வேராக இருந்து விழுதுகளை வளர்த்திருக்கிறார்கள். இப்போது உறவுகளே அருகிக் கொண்டு வருகின்றதே..!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!